கர வருட ராசிபலன்கள்
தொடர்கள்
Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஃப்ரிஜ்ஜில் வைத்த பூக்களை பூஜைக்கு பயன்படுத்தலாமா?

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பழைமையான பித்தளை விக்கிரகங்கள், தெய்வ யந்திரங்களை வழிபட முடியாத நிலையில் நீர்நிலைகளில் சேர்க்கலாமா? அல்லது, கடையில் கொடுத்துவிட்டு, பதிலுக்கு புதிதாய் ஒரு விக்கிரகம் வாங்கலாமா?

- கே.வி.கே.மூர்த்தி, புனே

குழந்தைகள் பொம்மைகளைச் சேமிப்பதுபோல், உங்களுடைய விருப்பத் துக்கு இணங்க விக்கிரகங்களைச் சேமிப்பது தவறு. கடையிலிருந்து வெளிவந்த விக்கிரகங்களையும் யந்திரங்களையும் கடையில் சேர்த்துவிடலாம். ஆனால், மீண்டும் ஒரு விக்கிரகத்தை வாங்காதீர்கள். பிறகு, அதையும் கடையில் கொடுக்க நேரிடும்! அன்றாடம் வாழ்க்கையே சுமையாக இருக்கும் நிலையில், தெய்வ விக்கிரகங்கள் சேர்ந்துபோனால், வாழ்க்கைச் சுமை இன்னும் கடினமாகி

விடுமே! விரும்பிய பலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தெய்வ விக்கிரகங்களைச் சேர்த்துவைப்பது தவறு. விக்கிரகங்களும் யந்திரங்களும் வீட்டில் இருந்தால் மட்டுமே விருப்பம் ஈடேறிவிடாது. விக்கிரகங்களும் யந்திரங்களும் நமது படைப்பு. அவை இடத்தை அடைக்குமே தவிர, இல்லத்தைச் செழிப்பாக்காது. மனதை ஒருநிலைப்படுத்த ஒரு விக்கிரகம் போதும். மனம் ஒரு நிலைப்படுவது பழக்கப்பட்டு விட் டால், அந்த ஒரு விக்கிரகமும் தேவையில்லை.

விக்கிரகம் ஒரு கருவி. கடவுளிடம் மனம் லயிக்க அது உதவும். வழிபட முடியாத நிலையில் விக்கிரகம் சுமைதான். சிந்தித்துச் செயல்படுங்கள்.

முதல் நாள் மாலையில் பூக்களை வாங்கி ஃபிரிஜ்ஜில் வைத்திருந்து, மறுநாள் காலையில் பூஜைக்குப் பயன்படுத்தலாமா?

- கே.பார்வதி, வந்தவாசி

முன்பெல்லாம்... அன்றைக்குக் காலையில் கறந்த பாலை பயன்படுத்தி வந்தோம். காலப்போக்கில், கறந்து பல நாட்கள் ஆன பாலை, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்துப் பயன்படுத்தப் பழகிவிட்டோம். அதைப் போலவே, காய்கறி மற்றும் சமைத்த உணவுகளையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்துகிறோம்; சிறந்த உணவு, மாற்றுக் குறைந்த உணவாக மாறினாலும், ஏற்றுக்கொள்கிறோம்.

சிறந்த புஷ்பம் மாற்றுக் குறைந்த புஷ்பமாக மாறினாலும் ஏற்கிறோம்; தலையில் சூடுகிறோம். அதையே கடவுளுக்கு அளிக்கிறோம். அப்படி, மாற்றுக் குறைந்த பூக்களே கிடைக்கும் எனும் நிலை வரும்போது, வேறு வழியின்றி அவற்றைப் பயன்படுத்தும் நிர்பந்தம் ஏற்படுகிறது. மாற்று வழியைத் தேட மனம் இருக்காது. ஒருவேளை, அப்படிப்பட்ட பூக்களைப் பயன்படுத்த முடியாது என்றால், பூஜையையே இழப்பதற்கு மனம் துணிந்துவிடும். இதுபோன்ற நிலையைத் தவிர்க்க, 'குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் பூக்களையும் பயன்படுத்தலாம்’ என்று சொல்லும் நிர்பந்தம் வந்துவிடுகிறது. பிற்பாடு நமது இந்த விருப்பமே சாஸ்திரமாக சித்திரிக்கப்பட்டுவிடும்! ஆனால் இந்த நடைமுறை, சமுதாயத்துக்குத் தவறான தகவல்களை அளித்து, திசைதிருப்பும் செயல். முதல் நாள் பறிக்கப்பட்ட புஷ்பம் இரவு தாண்டினால் பழசாகவே மதிக்கப்படும். பழையதைப் பயன்படுத்துவதை சாஸ்திரம் ஏற்காது.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
##~##
செயற்கை முறையில் பூக்களை வாடாமல் வைத்திருக்க முடிந்தாலும், காலம் கடந்துவிட்டபடியால் அது பழைமை அடைந்துவிடும். பழைமை தகுதி இழக்கச் செய்யும். அதேநேரம் வாடினாலும், சருகாகத் தென்பட்டாலும், பொடிப் பொடியாக உதிர்ந்தாலும், வில்வம், துளசி போன்றவற்றை பழைமை தொடாதபடியால், அர்ச்சனைக்கு உகந்ததாக சாஸ்திரம் சொல்கிறது. ஆக, பிரிஜ்ஜில் வைக்கப்பட்ட பழைய பூக்களைப் பயன்படுத்துவதைவிட, என்றென்றும் பழைமை தொடாத வில்வம், துளசி போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.தாமரைப்பூவிலும் பழைமை தொடாது. குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல், மறுநாள் பயன்படுத்தலாம்.

அடுக்குமாடிக் கட்டடங்கள் எனில், தொட்டிகளில் பூச்செடிகள் வளர்க்கலாம். தனி வீடுகள் எனில், முகப்பில் அலங்கார பூச்செடிகளுடன் பூஜைக்கு உகந்த பூச்செடிகளையும் சேர்த்து வளர்க்கலாம். அதாவது, அன்றாட பூஜைக்குத் தேவையான பூக்களைப் பெறுவது, இன்றைய சூழலிலும் சாத்தியமான ஒன்றுதான். மாற்று வழியைத் தேடும் எண்ணம் வலுத்துவிட்டால், நல்ல நடைமுறைகள் பறிபோய் விடும். பூக்களே கிடைக்காது எனும் ஒரு சூழலை நாமே வலுக்கட்டாயமாக அமைத்துக்கொண்டு, நமது விருப்பத்துக்கு சாஸ்திரம் இடமளிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. தாய்ப் பாலுக்கு பதிலாக பால் பொடியை அறிமுகம் செய்தார்கள். இப்போது, 'தாய்ப் பாலுக்கு ஈடாக மற்றொன்று இல்லை’ என்கிறார்களே! அன்று பறித்த மலரின் தகுதியும் தரமும், முதல் நாள் பறித்து வைத்த பூக்களுக்குக் கிடையாது. என்னதான் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பராமரித்தாலும், அந்தக் குளிர்ந்த சூழல் பூக்கள் வாடுவதைத் தடுக்குமே தவிர, பூக்கள் பழைமை ஆவதை, தரம் குறைவதைத் தடுக்காது. புஷ்பம் கிடைக்காவிட்டால் பதிலாக அட்சதையை அளிக்கலாம்; அல்லது, பூக்களை அளிப்பது போல் மானசீகமாகக் கருதி வழிபடலாம். மானசீக பூஜைக்குப் பூக்கள்தேவையில்லை. அடிபணிந்து வணங்கினால் போதும் நல்ல பூக்கள் கிடைக்கும்போது அர்ச்சனையில் ஈடுபடுங்கள். ஆறிப் போன பதார்த்தங்களை உட்கொள்ளமாட்டோம்; தரமில்லாததை ஏற்கமாட்டோம். கடவுளுக்குச் சமர்ப்பணம் செய்யப்படுபவையும் தரமானவையாக இருக்கட்டும்.

புதுமணத் தம்பதி, பங்குனி மாதத்தில் பால் காய்ச்சி தனிக் குடித்தனம் செல்லலாமா?

- சி.கதிரவன், துவரங்குறிச்சி

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

நெருக்கடி இல்லை எனில், பங்குனியில் திருமணத் தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறது தர்மசாஸ்திரம் (சைசிரௌ மாஸெள பரிஹாப்ய). கணவன் வீட்டுக்கு மணப்பெண்ணின் முதல் வருகை, கிரகப்பிரவேசம். பங்குனியில் திருமணத்தை ஏற்றபிறகு, அந்த மாதத்தில் பால் காய்ச்சி குடித்தனம் போவது சரியா என்ற கேள்வி பொருத்தமாக இல்லை. ஒன்று சுயவிருப்பத்தின்படி செயல்பட வேண்டும்; அல்லது, சாஸ்திரத்தின் நடை முறையைப் பின்பற்ற வேண்டும்.

அன்றாட அலுவல்களையே அவசர அவசரமாகப் பரபரப்போடு செய்யும் இன்றைய சூழலில், பங்குனியில் திருமணத்தைத் தவிர்ப்பதோ, புதுக்குடித்தனத்தைத் தள்ளிப் போடுவதோ இயலாத காரியம் ஆகலாம். மணமக்களின் விருப்பம்- சௌகரியம் ஆகியவையே திருமண நாளையும், புதுக்குடித்தனம் போகும் தினத்தையும் நிர்ணயம் செய்கிறது. சாஸ்திரத்தையும் நல்ல நடைமுறைகளையும் விட்டு வெகுதூரம் விலகியவர்கள், அறிவுரையை ஏற்பது கடினம். கடவுளை வணங்கி, தவற்றை மன்னிக்கும்படி வேண்டி செயலில் இறங்குங்கள். மனத் தெளிவு, எதிர் விளைவை ஏற்படுத்தாது.  தங்கள் சிந்தனைக்கு ஒரு விஷயம்... ஆடம்பரத்தை விரும்பும் நாம், திடீர் கல்யாணத்தை அரங்கேற்ற மாட்டோம். ஆக, கால அவகாசம் நிறைய இருக்கும்போது, திருமணத்தையும் தனிக்குடித்தனத்தையும் பங்குனியில் தவிர்ப்பது மணமக்களின் உயர்வுக்குத் துணை புரியும்.

ஏழு பிறவிகள் உண்டு என்பது உண்மையா?

- ஏ.எஸ்.செல்வராஜு, டி.தேவனூர்

 'பல பிறவிகளைத் தாண்டி அறிவை எட்டியவன் என்னுடன் இணைகிறான்’ என்கிறான் கண்ணன். அதேபோல், 'பல பிறவிகளைத் தாண்டி, தற்போது மனிதனாகப் பிறந்த நான்...’ என்று சங்கல்பத்தின்போது சொல்வது உண்டு (கேனாபி புண்யகர்மவிசேஷணஇதானீம்தனமானுஷ்யே) பல பிறவிகளை ஏற்று, எந்தப் பிறவியில் அம்பாளின் வழிபாட்டில் அக்கறை செலுத்துகிறானோ, அதுவே அவனது கடைசிப் பிறவி’ என்கிறார் பாஸ்கரராயர் (தத்சரமம் ஜன்ம...). 'பிறப்பு-இறப்பு; இறப்பு-பிறப்பு எனும் சங்கிலித் தொடரில் சிக்கித் தவிக்கும் மனிதனைப் பார்த்து, அதிலிருந்து விடுபட கோவிந்தனை நாடுக’ என்று பிரார்த்திக்கிறார் ஆதிசங்கரர்.

நமது செயல்பாடுகளால் நாம் சேமித்த பாவம் அல்லது புண்ணியம்  இருக்கும் வரை,  அதை அனுபவித்துத்  தீர்க்க பிறவி எடுக்க நேரிடும். புண்ணியம்- பாவம் முற்றிலும் அகன்று விட்டால், பிறவி முடிந்துவிடும். ஆக, நமது செயல்பாடுகளே பிறவியின் எண்ணிக்கையை வரையறுக்கின்றன. ஆன்மிக வாசனையின்றி, உலகவியலில் வாழ்க்கையை இணைத்துக் கொண்டவன், பெரும்பாலும் துயரத்தையே சந்திக்க நேரிடும். இன்பத்தைச் சந்திக்க நேர்ந்தாலும் அந்த இன்பம் மின்னல் போல் மறைந்துவிடும். ஒருவேளை, அந்த இன்பம் தொடர்ந்தாலும், துயரத்திலேயே முற்றுப்பெறும். இந்த உண்மையை அறிந்த அறிஞர்கள், பிறவித் தளையைக் களையுமாறு பரிந்துரைப்பார்கள்.

ஏழு தலைமுறை என்பது ஒரு வம்சத்தின் (குலத்தின்) எல்லைக்கோடு. இதையே ’ஏழு பிறவிகள்’ என்று சொல்லும் வழக்கமும் உண்டு. பல பிறவிகள் எடுத்தாலும் ஒவ்வொரு பிறவியிலும் மனிதனாகவே பிறப்பான் என்று சொல்ல முடியாது. பாவ-புண்ணியத்துக்கு ஏற்ப விலங்கினமாகவும், ஊர்வனவாகவும், ஏன் தேவனாகவும்கூட பிறப்பு அமையும். 'பல பிறவிகளுக்குப் பிறகு, அஹிம்சையைப் போதிக்கும் புத்தனாக வடிவெடுத்தார்’ என்று புத்தரின் முற்பிறவிகளை விவரிக்கிறது, பௌத்த ஜாதகம். ஸஹஸ்ர கவசன், கர்ணனாகப் பிறந்தான் என்கிறது புராணம். அதேபோல், சாபத்தின் காரணமாக மரமாகவும் பாம்பாகவும் பிறந்தவர்கள் பற்றிய தகவல்களும் புராணத்தில் உண்டு.

ஒருவன் ஒவ்வொரு பிறவியிலும் எப்படி இருப்பான் என்பதை அறிய இயலாது. பிறவியின் எண்ணிக்கையையும் வரையறுக்க இயலாது. நல்லவற்றைச் செய்து நல்லபடியாக வாழ்ந்தால் பிறவியில் இருந்து விடுபடலாம். கனவு காணும் வேளையில் அதை உண்மை என எண்ணும் மனம், விழித்தபிறகு அது பொய் என்பதை அறிந்துகொள்ளும். அதேபோல், உலகவியலைச் சுவைக்கும் வேளையில், அறியாமையில் இருப்பதால்... நீண்ட சுவையான வாழ்க்கையை உண்மை என்று எண்ணும். அறிவு வந்து அறியாமை விலகும்போது, நமது வாழ்க்கையே பொய் என்று தோன்றும். அப்போது பிறப்பு முடிந்து விடும்.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்