Published:Updated:

தேவாரத் திருவுலா!

தேவாரத் திருவுலா!

தேவாரத் திருவுலா!

தேவாரத் திருவுலா!

Published:Updated:
தேவாரத் திருவுலா!
தேவாரத் திருவுலா!
தேவாரத் திருவுலா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
ழகுற அமைந்திருக்கிறது சீர்காழிப் பிள்ளையாம் திருஞான சம்பந்தர் ஆலயம். உள்ளே... மேற்றளி கோபுரத்தைக் கைகளைக் குவித்து வணங்கியபடி காட்சி தருகிறார் ஆளுடையபிள்ளை. கையைச் சுட்டியபடி இருக்கும் உற்ஸவத் திருமேனியும் உள்ளதாம். பாதுகாப்பு கருதி உள்ளிருப்பதாகச் சொன்னார்கள்.

திருஞானசம்பந்தரின் பாடலைக் கேட்டு உருகி, திருமால் சிவ சாரூபம் பெற்றார் என்கிற வரலாறு சொல்லப்பட்டாலும், ஞானசம்பந்தரின் குறிப்பிட்ட பாடல்கள் கிடைக்கப் பெறவில்லை. ஞானசம்பந்தர் கோயிலிலிருந்து மேற்றளியைக் காணும்போது, சற்று எட்டத்தில், இடப்புறம் மற்றொரு கோயிலும் தெரிகிறது. அது என்ன?

அங்கு எழுந்தருளியிருப்பவர், அருள்மிகு உற்றுக்கேட்ட முக்தீசர். திருஞானசம்பந்தப் பெருமான் கிழக்குக் கோடியில் நின்று பாடினாராம்; சின்னக் குழந்தையன்றோ! அதனால் அவர் குரல் சரியாகக் காதில் விழவில்லையாம். அதனால் சிவனார், மேற்றளி விட்டு அருகாக எழுந்தருளி உற்றுக்கேட்டாராம். ஆகவே, உற்றுக்கேட்ட முக்தீசர் ஆகிவிட்டார்.

சின்னஞ்சிறிய கோயில். மூலவர் சந்நிதியைச் சுற்றி சிறிய பிராகாரம்; விநாயகர், சுப்ரமணியர், கால பைரவர், சூரியன் சந்நிதிகள். அற்புத தரிசனம்!

தேவாரத் திருவுலா!

இனி, மேற்றளி ஆலயத்தைத் தரிசிக்கலாம். கோயிலுக்குள் நுழைந்தால், விசாலமான இடம். ஏதோ கிராமத்துக்குள் வந்துவிட்டது போன்ற அசாத்திய அமைதியுடன், அழகாக இருக்கிறது. இன்னும் உள்ளே செல்ல... பலி பீடம், நந்தி. நமக்கு வலப் புறத்தில் வில்வ மரம், நாகர்கள். எதிரே நோக்கினால், இடப் புறத்தில் ஒரு மண்டபம்; சொற்பொழிவு மண்டபம்

என்றே பெயரிடப்பட்டிருக்கிறது. வலப் பக்கம் திரும்பினால், நவக்கிரக சந்நிதி. இதற்கும் மேற்காக ஒரு தனிக்கோயில் தெரிகிறது. வலமாகச் சென்று காண்கிறோம்.

ஆஹா! இதுதான் திருமேற்றளீஸ்வரர் சந்நிதி.  மேற்குப் பார்த்ததாக உள்ள இதுவே, ஆலயத்தின் மூலட்டானம். மூலவருக்கு முன்னால், பலிபீடம், நந்தி உள்ளன. சிறிய முகப்பு மண்டபமும், அர்த்த மண்டபமும் அமைந்த சிறிய சந்நிதி. மூலவர் திருமேற்றளீஸ்வரர். வட்ட வடிவ ஆவுடையாரோடு அழகுற மிளிர்கிறார்.

செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றைசூடிக்
கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே

- என்று அப்பரால் போற்றப்பெற்ற சிவனார் இவர்.

கச்சி ஏகாம்பரேஸ்வரரை தரிசித்த பின்னர், இங்கு வந்த அப்பர் பெருமான், இவரைப் பாடினார். 'வேதங்களைப் பாடிக்கொண்டே போய்ப் பிச்சை ஏற்பவர்; காஞ்சியில் உறைபவர்; ஓயாது ஆடல்பாடல் செய்பவர்’ என்று சிவனைப் பாடுகிறார்.

மறையது பாடிப் பிச்சைக்கு என்றகம் திரிந்து வாழ்வார்
பிறையது சடைமுடிமேல் பெய்வளையாள் தனோடும்
கறையது கண்டம் கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே

சுந்தரரும் இந்தத் தலத்துக்கு வந்தார்...

உற்றார் சுற்றமெனும் அதுவிட்டு நுன் அடைந்தேன்
எற்றால் என்குறை என் இடரைத் துறந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலும் திருமேற்றளி உறையும்
பற்றே நுன்னை அல்லால் பணிந்தேத்த மாட்டேனே

- என்று இறைவனைப் போற்றினார்.

அடியார்கள் அடிபணிந்த மேற்றளீஸ்வரரைக் கண்ணாரக் கண்டு நிற்கிறோம். இந்தச் சந்நிதியின் கோஷ்டங்களில் ஸ்ரீதுர்கை, ஸ்ரீபிரம்மன், ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிநாயகர் ஆகியோரைத் தரிசிக்கலாம். மேற்கு நோக்கிய சந்நிதி என்பதால், கோஷ்ட மூர்த்தங்களின் நிலைகளில் சிற்சில மாறுபாடுகள். தட்சிணாமூர்த்தி வடிவம், சிறியதென்றாலும் கொள்ளை அழகு!

சொற்பொழிவு மண்டபத்தின் உள்பகுதியில், அம்மன் சந்நிதி. பராசக்தி அம்மன். நின்ற திருக்கோலத்தில் உயரமான மூலத் திருவுருவம். அருள்மிகு திருமேற்றளி நாயகி என்றும் திருநாமம் வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களுக்கும் தனித்தனியே அம்பாள் கிடையாது. அம்பிகை காமாக்ஷியே மூலத் திருவாட்டி. இந்த மண்டலம் முழுமையும் அவளுடைய ஆட்சியே! ஆகவே, இந்தக் கோயிலில் அம்மனின் திருமேனி பிற்காலப் பிரதிஷ்டையாக இருக்க வேண்டும்.

தேவாரத் திருவுலா!

இந்த அம்மன் சந்நிதிக்கு முன்பாக இருக்கும் சொற்பொழிவு மண்டபத்தில் தான்... அருள்மிகு கச்சபேசர் திருக்கோயில் பெருவிழாவின் 5-ஆம் நாள் நிகழ்ச்சிகளில், உற்ஸவ அம்பாள் எழுந்தருள்வாளாம்; வீதியுலாவும் இங்கிருந்து புறப்படும். அருகிலேயே சிறிய அலுவலகம்.

அம்மன் சந்நிதிக்கும் மூலட்டானத் துக்கும் இடையில் ஓர் உள் வாயில். இதன் அருகில், வடக்கு நோக்கியவாறு சைவ நால்வர். உள்வாயிலுள் புகுந்தால், பெரியதான கோயில். அடடா, இதென்ன கோயில்?! இது அருள்மிகு ஓதவுருகீசர் சந்நிதி. இவர் யார் என்கிறீர்களா?

சிவ சாரூபம் வேண்டி திருமால் தவம் செய்தார் இல்லையா? அவருக்குக் காட்சி தந்த சிவனார், 'ஞானசம்பந்தர் அவ்வழி வரும்போது, அவர் பாடலைக் கேட்டால் சிவ சாரூபம் கிடைக்கும்’ என்று அருளினார். அதை ஏற்றுக்கொண்ட திருமால், அங்கேயே தங்கி தவத்தைத் தொடர்ந்தார். காலம் கனிய, திருஞான சம்பந்தரும் அவ்வழி வந்தார். அவருடைய பாடல்களைக் கேட்ட திருமால், அப்படியே உருகிப் போனார். வடிவமெல்லாம், உள்ளமெல்லாம் உருக உருக... நீலமேக சியாமள வண்ணனான திருவடிவம் மாறி, பொன்னார்மேனியனாம் சிவலிங்கத் திருவடிவம் பெற்றார். தேவாரப் பாடல்களை ஓதியதைக் கேட்டு உருகியவர் என்பதால், ஓதவுருகீசர்.

இது கிழக்கு நோக்கிய சந்நிதியாகத் திகழ்கிறது. வலம் வருவோமா? தென்மேற்கு மூலையில் ஸ்ரீசெல்வ விநாயகர்; வடமேற்கு மூலையில் ஸ்ரீசுப்ரமணியர். முன்னர் இந்தச் சுற்றில் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் சந்நிதியும் இருந்ததாம். கிழக்குச் சுற்று வாயிலருகே, சூரியன். இந்தச் சந்நிதியைக் கிழக்குச் சுற்று வழியாக அடையமுடியாது. அங்கு ஒரு சாளரம் மட்டுமே உள்ளது. சாளரத்துக்கு முன்பாகச் சிறிய நந்தி, பலிபீடம். அதன்வழியாக உள்ளிருக்கும் தெய்வத் திருமேனி யைக் காணலாம். ஆனால், முழுமையாக வழிபட, தெற்குச் சுற்றின் பக்கவாட்டு வாயில் வழியாக உள்நுழைகிறோம்.

தேவாரத் திருவுலா!

உள்ளே மகாமண்டபத்தில், நேர் எதிரே உற்ஸவ சபை. ஒருகாலத்தில் இதுவே நடராஜ சபை என்பதை, சுவரில் தீட்டப்பட்டுள்ள நடராஜத் திருவுருவம் சொல்லாமல் சொல்கிறது. ஆனால், ஸ்ரீநடராஜர் திருமேனியை அருள்மிகு கச்சபேசர் ஆலயத்தில் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இடதுபுறமாகத் திரும்பி, அர்த்த மண்டபம் அடைந்து, உள்ளே நோக்க... அருள்மிகு ஓதவுருகீசர். பெரிய சிவலிங்க மூர்த்தம்; வட்ட வடிவ ஆவுடையார்; முன்னால், திருவடிகள் மாத்திரம் காணப்படுகின்றன. உருகி உருகியோடிய திருமாலின் திருவடிகள் மட்டும் உருகாமல் நின்றதாக ஐதீகம்!

ஆணாகிப் பெண்ணாகி, மண்ணாகி விண்ணாகி, முதலாகி முடிவாகி நடுவுமாகி நிற்கும் இறைவனின் அற்புத விளையாடல்கள் எப்படியெல்லாம் நம்மை ஆட் கொள்கின்றன என்று வியந்து கொண்டே, மீண்டும் வலம் வருகிறோம். கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர்.

மேற்றளி அதிசயத்தை எண்ணியபடியே வெளியில் வருகிறோம். 'செம்பவள வாயனை அம்புயக் கண்ணனைச் சிவ லிங்கமாக்கி வைத்தாய்’ என்று இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி, சமீபகாலங் களில் அடியார் ஒருவர் பாடி வைத்திருக் கிறார். அதை ரசித்தபடியே ஆலயத்திலிருந்து வெளிவருகிறோம்.

மேற்றளீஸ்வரர் தெருவில் நின்றபடியே மேற்றளி, உற்றுக் கேட்டவர் கோயில், ஆளுடையபிள்ளையார் கோயில் ஆகிய மூன்றையும் ஒருசேரக் காணும்போது, நம்முடைய உள்ளமும் உருகித்தான் போகிறது. அடியார்களை உயர்த்துவதில் ஆண்டவனுக்குத்தான் எத்தனை ஆனந்தம்!

கச்சி ஏகம்பனைத் துதித்துவிட்டு இங்கு வந்த நாவுக்கரசர், இந்தப் பகுதியிலேயே திருமடம் அமைத்து, தினந்தோறும் மேற்றளி வந்து வழிபட்டதாகச் சொல்கிறார்கள். அதற்கேற்ப, நாவரசர் திருமடம் ஒன்று அருகிலேயே உள்ளது. சைவ நால்வர் பெரு மக்களின் திருவுருவங்களும் விநாயகர், ஸ்ரீதண்டபாணி திருவுருவங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நாள்படி பூஜைகள் வழுவில்லாமல் நடைபெறுகின்றன.

'மேற்றளிவாழ் ஆனந்த வீட்டுறவே’ என்று வள்ளல் பெருமான் அழைத்தது நெஞ்சில் மேலோங்க, அந்த நினைப்புகளுடனே பிள்ளையார்பாளையம் விட்டு அகல்கிறோம்.  

(இன்னும் வரும்)
படங்கள்:  பு.நவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism