Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'எ
ன் கடன் பணி செய்து கிடப்பதே!’ எனும் வாக்கியத்தை உள் ளுக்குள் வாங்கி வாழ்பவர் எத்தனை பேர்? காரும் வீடும் கௌரவம் தரும்; அந்தஸ்தை உயர்த்தும் என்று ஆசைப்பட்டு வாங்குகின்றனர்; பிறகு அல்லாடுகின்றனர். 'இன்னிக்கி இங்கிலீஷ், இந்தி தெரியாம பசங்க இருந்துட்டா, அவங்களுக்கு எதிர்காலமே இல்லீங்களே!’ என அலுத்துக்கொள்கின்றனர்; பிள்ளைகளைக் கசக்கிப் பிழிகின்றனர்.

வெறும் வீடும் வாசலும் போதுமா? காரும் கரன்ஸியும் சந்தோஷத்தைத் தந்துவிடுமா? மொழிகளைக் கற்றால் மட்டும் போதுமா? மௌனம் எனும் பாஷையை, அது எழுப்புகிற ஒலியை அறியவேண்டாமா? உள்ளுக்குள் இருக்கிற இறைவனை, அவனது பேரொளியைக் கண்டு ரசிக்க வேண்டாமா? அதனை உணர்ந்தால்தான் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்குமான பிணைப்பை அறிய முடியும். அந்தப் பிணைப்பை அறிந்தால்தான், வியக்க முடியும்; வியந்து வியந்து அந்த இடம் நோக்கி நகர முடியும்; அப்படி நகருவதற்கும் பரமாத்மாவை அடைவதற்குமான அமைதி, பொறுமை, நிதானம், ஆழ்ந்த ஈடுபாடு ஆகியன கைவரப் பெறும்.

ஆக, இறைவனை அடைவதை, அவனுக்குத் தொண்டு செய்து, அவனது பேரருளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு வாழ்வதையே 'என் கடன் பணி செய்து கிடப்பது’ என்றார்கள் பெரியோர். ஆம்... கடன்தான். இந்தப் பிறவி என்பதே கடன்தான். கடவுளைப் பற்றிச் சிந்திப்பதும், அவருக்குப் பூஜைகள் செய்வதும், அவர் குடியிருக்கும் ஆலயங்களுக்குத் தொண்டுகள் செய்வதுமே பிறவிக் கடன் தீர்ப்பதற்கான வழிகள். சொல்லப் போனால், கடனுக்கான வட்டிகள். ஆக, பிறவி எடுப்பதைக் கடன் என்கிறது இந்து மதம். அதுமட்டுமா? பிறவியைப் பிணி என்றும் சொல்கிறது. ஆமாம், பிறவி என்பது நோய்தான். நோயிலிருந்து விடுபட, இறைவன் எனும் மருத்துவனின் தயவு வேண்டுமே?!

ஆலயம் தேடுவோம்!

பிறவிக் கடனை அடைக்க வேண்டும்; பிறவிப் பிணியைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று அந்தச் சிலந்தி நினைத்ததா, தெரியவில்லை. அதற்காகத்தான் அப்படிச் செயல்பட்டதா, புரியவில்லை. ஆனால், அந்தச் சிலந்தி மெள்ள சிவலிங்கத்தின் மீது ஊர்ந்து வந்தது. ஆவுடையாரில் ஏறி, பாணத்தையும் தொட்டு, அந்தச் சிவலிங்கத்தின் மேல் எதுவும் விழுந்து விடக்கூடாது என தனக்குத் தெரிந்த அளவுக்கு, தன்னால் முடிந்த அளவுக்கு வலையைப் பின்னியது. சிவலிங்கத் திருமேனிக்கு மேலே, உச்சியில் இருந்து எதுவும் அதன் மீது விழுந்துவிடக்கூடாது எனும் நோக்கத்தில், மிகுந்த கவனத்துடனும் பொறுமையுடனும் ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் வலை பின்னியது சிலந்தி. எந்த ஜென்மத்துக் கடனோ... வேறு சிந்தனைகளின்றி அந்தப் பணியை இடையறாது செய்துகொண்டே இருந்தது அது.

சின்னஞ்சிறிய சிலந்தி மட்டுமா சிவபூஜை செய்தது?! உருவத்திலும் உறுதியிலும் மிகப் பெரிதான யானையும் லிங்கத் திருமேனியை வழிபட்டது; ஆராதித்தது. அப்போது 'அடடா... லிங்கத் திருமேனி மேலே என்ன நூலாம்படை!’ என்று பதறி, அத்தனை நாளும் சிலந்தி கஷ்டப்பட்டுப் பின்னிய வலையைத் தன் துதிக்கையால் ஒரே நொடி யில் உருத்தெரியாமல் அழித்தது. பிறகு சிலந்தி, வேறு வலை பின்னுவதும், யானை அதை அறுப்பதும் தொடர... ஒருநாள், கடுங்கோபம் கொண்ட சிலந்தி யானையின் துதிக்கைக்குள் ஆவேசத்துடன் புகுந்தது. இறுதியில், யானை இறந்தது; துதிக்கையில் சிக்கிக்கொண்ட சிலந்தியும் இறந்தது.

அதுவரை, சிலந்தி செய்திருந்த பணியில் திளைத்த சிவனார், சிலந்திக்கு உயிர் தந்தார்; திருக்காட்சியும் தந்தார். ஈசனின் அருளால், இன்னொரு வரமும் கிடைத்தது சிலந்திக்கு. அதன்படி, சிலந்தியானது மனித உருவெடுத்துப் பிறந்தது; மன்னரானது. அந்த மன்னரின் பெயர்... கோச்செங்கட்சோழன். அந்தப் பிறவியிலும், மன்னன் இறை பக்தியில், குறிப்பாக சிவபக்தியில் திளைத்தான். யானை புகமுடியாத அளவுக்கு, எழுபது மாடக் கோயில்களை உருவாக்கினான். எண்ணற்ற ஆலயங்களுக்கு திருப்பணிகள் செய்தான்; சிவனடியாருக்கு வாரி வழங்கினான்.

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

பிறவிக் கடலில் தத்தளிப்பவரைக் கரை சேர்க்கும் ஈசனுக்கு, கோச்செங்கட்சோழன் கட்டிய கோயில்கள் பல உண்டு. அவற்றுள், பெரணமல்லூர் தலமும் ஒன்று. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் வந்த வாசிக்கு அருகில் உள்ளது பெரணமல்லூர்.  மிகப்பெரிய சோழப் படையினர் இங்கு வந்து தங்கி, போர் புரிந்ததால், பேரணிநல்லூர் என்று பெயர் அமைந்ததாம்! பனையாற்றின் குறுக்கே பெரிய அணை கட்டப்பட்ட பகுதி என்பதால், பேரணைநல்லூர் எனும் பெயர் பெற்று, பிறகு பெரணமல்லூர் என மருவியதாகவும் சொல்வர். இங்கே, குடிகொண்டிருக்கும் ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீகரையீஸ்வரர். அம்பாள்- ஸ்ரீதிரிபுரசுந்தரி.

''அற்புதமான கோயில். இங்கேயுள்ள ஜேஷ்டாதேவியின் விக்கிரகம் விசேஷம். ஜேஷ்டாதேவிக்கு சின்னதாகக் குடிசையில் சந்நிதி அமைத்து, வழிபட்டு வருகிறோம். புரளுகிற கூந்தல், கழுத்தில் ஆரம், இடுப்பில் அட்டிகை, பெருத்த வயிறு, பாதத்தில் கொலுசு, கைகளில் காக்கைக் கொடி, துடைப்ப ஆயுதம் எனச் சுகாசனத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறாள் தேவி. இவளுக்கு, மூன்று வெள்ளிக்கிழமைகள் பொங்கலிட்டு,  தேங்காயில் நெய் அல்லது எள் தீபமேற்றி வழிபட்டால்... சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். தொழிலில் முன்னேற்றம், தம்பதி ஒற்றுமை, குழப்பங்களில் இருந்து விடுதலை ஆகியன கிடைக்கப் பெறலாம்'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் புலவர் பெரியசாமி. நல்லாசிரியர் விருது பெற்ற இவர், திருப்பணிக் குழுவின் தலைவரும் கூட!

ஆலயம் தேடுவோம்!

எல்லாம் சரி... கோச்செங்கட்சோழன் கட்டிய கோயில், உருக்குலைந்தும் களையிழந்தும் கிடப்பதுதான் கொடுமை. கோயிலில், சிலந்தியும் யானையும் சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம், கஜபிருஷ்ட அமைப்பில் உள்ள சந்நிதியைக் கொண்ட ஆலயம் என சிறப்புகள் மிக்க ஆலயம், இன்றைக்குச் சின்னாபின்னமாகக் கிடக்கிறது. நந்திதேவரும் பின்னம் அடைந்த நிலையில் காட்சி தருகிறார்.

இன்னொரு விஷயம்... நந்திதேவர், சிவலிங்கத் திருமேனியைச் சாளரம் வழியே தரிசிக்கும் தலங்களில், இதுவும் ஒன்று. இத்தனைப் பெருமைமிகு ஆலயத்தின் நுழைவாயிலே கிட்டத் தட்ட ஒரு சாளரம் போலத்தான் இருக்கிறது. ஓங்கி உயர்ந்த கோபுரமோ, அதற்கு நிகரான கதவுகளோ இல்லை. சின்னச் சின்ன தட்டிகளை ஒன்று சேர்த்துக் கதவாக்கியிருக்கின்றனர், திருப்பணிக் குழுவினர்.

ஆலயம் தேடுவோம்!

இங்கு, தீபஸ்தம்பம் உள்ளது. ஒருகாலத்தில், திருக்கார்த்திகை தீபத்திருநாளின்போது,  திருவண்ணா மலையில் தீபமேற்றியதும், இங்கேயுள்ள தீபஸ்தம்பத்துக்கு விளக்கேற்று வார்களாம். இந்த விழாவில் பங்கேற்று, ஸ்ரீகரையீஸ்வரரின் பேரருளைப் பெற... பக்கத்துக்  கிராமத்தில் இருந்தெல்லாம் திரண்டு வருவார்களாம், பக்தர்கள்!

ஆனால், இப்போது, திரளாக பக்தர்கள் வருவதில்லை; தீபஸ் தம்பத்தில் தீபம் ஏற்றுவதும் இல்லை. தற்போது, மெள்ள மெள்ள வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இறைவனை வழிபட்டுவிட்டுப் பலனுக்குக் காத்திருக்கும் பக்தர்களைப் போல், பாலாலயம் செய்த பிறகு கும்பாபிஷேகத்துக்காகக் காத்திருக்கிறது கோயில்.

ஆலயம் தேடுவோம்!

பிறவிக் கடலில் தத்தளிக்கும் பக்தர்களைக் கரை சேர்க்கும் கரையீஸ் வரரின் ஆலயம், கரையேறுவது எப்போது? சகல தோஷங்களையும் தீர்க்கும் ஜேஷ்டாதேவியும், மண்டபத்தை இழந்து நிற்கிற நவக் கிரகங்களும் அழகிய சந்நிதிகளில் குடியேறுவது என்றைக்கு?

சிலந்திக்குக் கோச்செங்கட் சோழனாக மறுபிறவி அருளிய மகேசனின் ஆலயத் திருப்பணிக்கு நம்மால் ஆன கைங்கர்யத்தைச் செய்தால், இந்த இப்பிறவியிலேயே நமக்கு அருள்வான் ஈசன்; தத்தளித்துத் தவிக்கும் தருணங்களில், கைகொடுத்துக் கரை சேர்ப்பான் ஸ்ரீகரையீஸ்வரன்!

படங்கள்: பா.கந்தகுமார்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism