Published:Updated:

42 அடி உயரம்... 20 லட்சம்... 3 மாதங்கள்... திருவொற்றியூரில் விஸ்வரூப முருகர் திருமேனி! #Video

கும்பாபிஷேக தினத்தன்று குடமுழுக்கு வேளையில் சேவல் ஒன்று ஒருமணி நேரத்துக்கும் மேலாக யாகசாலை சுவரில் அமர்ந்திருந்து, பின் பறந்து மறைந்தது. இது முருகப்பெருமானின் பிரசன்னமே என்று கருதி நெகிழ்ச்சியோடு பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வணங்கியுள்ளனர்.

பஞ்சாயதனேஸ்வரர்
பஞ்சாயதனேஸ்வரர்

சென்னையில் இருக்கும் திவ்ய திருத்தலம் திருவொற்றியூர். இங்குதான் புகழ்மிக்க தியாகராஜ ஸ்வாமி, வடிவுடையம்மன் திருக்கோயில், பட்டினத்தார் ஜீவசமாதி ஆகிய புண்ணிய தலங்கள் உள்ளன. இந்தத் தலத்துக்குக் கூடுதல் புகழ் சேர்க்கிறது புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விஸ்வரூப முருகன் திருமேனி.

பஞ்சாயதனேஸ்வரர்
பஞ்சாயதனேஸ்வரர்

சென்னை திருவொற்றியூர், ஜோதி நகரில் அமைந்துள்ளது பால சுப்பிரமணியர் திருக்கோயில். இந்த ஆலயத்தில்தான் தற்போது `பஞ்சாயதனேஸ்வரர்' என்ற திருநாமத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். கடந்த 15.12.2019 அன்று இந்தக் கோயிலின் வெளிப்புறத்தில்தான் இந்தத் திருமேனி பிரதிஷ்டை நடைபெற்றது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகப் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டு குடமுழுக்கு நடந்தபோது காஞ்சிப்பெரியவர் கலந்துகொண்டு அதைச் சிறப்பாக நடத்தி வைத்தார். அதன்பின்பு இந்த பாலசுப்பிரமணிய சுவாமி பலருக்கும் இஷ்ட தெய்வமானார். இந்த ஆலயத்தில் சிவா - விஷ்ணு சந்நிதிகள் அமைந்துள்ளன.

பஞ்சாயதனேஸ்வரர்
பஞ்சாயதனேஸ்வரர்
``சபரிமலைக் கோயில் நடை திறந்தபோது கண்டகாட்சி..!" - வீரமணிராஜூவின் அனுபவம்! #Video

மேலும் விநாயகர், ஆஞ்சநேயர், துர்கை மற்றும் ஐயப்பன் ஆகியோரும் சந்நிதி கொண்டு அருள்கின்றனர். அனைத்து கடவுள்களின் சந்நிதிகளும் இங்கு உள்ளமையால் எல்லா கிழமைகளிலுமே இந்த ஆலயம் பக்தர்கள் நிரம்பக் காணப்படுகிறது. கேட்டவரம் அருள்பவராக விளங்கும் இந்த ஆலயத்து பாலசுப்பிரமணிய சுவாமியின் விஸ்வரூபமாகவே புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பஞ்சாயதனேஸ்வரரை பக்தர்கள் கருதுகிறார்கள்.

மலேசியாவில் உள்ள பத்துமலை முருகரைவிட உயரமான ஒரு திருமேனி சமீபத்தில் சேலம் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதே முருகனின் தோற்றத்திலேயே 42 அடி உயரத்தில் இந்த பஞ்சாயதனேஸ்வரரும் தோற்றமளிக்கிறார். விஸ்வரூப தரிசனம் தரும் முருகப்பெருமானின் முகம் மிகவும் அழகுடன் அமைந்துள்ளது. கையில் வேல் தாங்கி, கண்டதும் பக்தர்களின் கவலைகள் தீர்ப்பதாக அமைந்துள்ளது இறைவனின் திருவடிவம்.

இதை வடிவமைக்கும் எண்ணம் உருவானது குறித்து அந்தக் கோயில் நிர்வாகி சஞ்சய் சர்மாவிடம் பேசினோம். "முதலில் 6 அடியில் முருகர் சிலை அமைக்கத் திட்டமிட்டோம். அப்போது பணம் இல்லாமையால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டோம். ஆனால், திடீரென்று இறைவன் திருவுளம் கொண்டார். ஏன் முருகனை விஸ்வரூபத் திருமேனியாகப் படைக்கக் கூடாது என்று எண்ணினோம். மூன்றே மாதத்தில் 42 அடியில் அமைக்கத் திட்டமிட்டோம். 12 அடி பீடத்தில் 30 அடி சிலை என வடிவமைத்தோம். இந்த முறை அனைத்தும் சிறப்பாகக் கைகூடிவர விரைவில் பணிகள் முடிந்தன" என்றார்.

ஆலய நிர்வாகத்தினரின் முயற்சியோடு திருவொற்றியூர் பகுதி பொதுமக்களும் இந்தப் பணியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்தப் பணியை ஸ்தபதி கும்பகோணம் உதயகுமார் ஏற்று சிறப்பாகச் செய்துமுடித்தார். மொத்தம் 20 லட்சம் ரூபாய் செலவில் மிகக் குறுகிய கால அளவில் இந்தப் பிரமாண்ட சிலை தயாராகியுள்ளது. திருப்பணிகள் நிறைவு பெற்று யாகசாலை பூஜைகள் நடந்தன. அதன் முடிவில் 15.12.19 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முருகன்
முருகன்
சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாளின் பெருமை பேசும் ஶ்ரீவில்லிப்புத்தூர் சிறப்புகள்!

கும்பாபிஷேக தினத்தன்று குடமுழுக்கு வேளையில் சேவல் ஒன்று ஒருமணி நேரத்துக்கும் மேலாக யாகசாலை சுவரில் அமர்ந்திருந்து, பின் பறந்து மறைந்தது. இது முருகப்பெருமானின் பிரசன்னமே என்று கருதி நெகிழ்ச்சியோடு பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வணங்கியுள்ளனர். 42 அடி உயர முருகரை தரிசிக்க சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் திருவொற்றியூர், ஜோதி நகர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய பஞ்சாயதனேஸ்வரர் ஆலயத்துக்கு வந்த வண்ணமாக இருக்கின்றனர். இந்தப் பகுதியின் புதிய அடையாளமாக பஞ்சாயதனேஸ்வரர் திகழ்கிறார்.