சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ராமேஸ்வரத்தில் திருவிளக்கு பூஜை

ராமேஸ்வரத்தில் திருவிளக்கு பூஜை

ராமேஸ்வரத்தில் திருவிளக்கு பூஜை
##~##
பா
வங்களைப் போக்கி, புண்ணியங்களை அருளக்கூடிய அற்புதத் தலமான ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதஸ்வாமி திருக்கோயிலில், சக்தி விகடனின் 56-வது திருவிளக்கு பூஜை, கடந்த 15.3.11 அன்று விமரிசையாக நடந்தேறியது.

''மூணு மாசத்துக்கு முன்னாடிதான் என் பையனுக்குக் கல்யாணமாச்சு. கண்ணுக்கு லட்சணமா நல்லா வாழ்ந்துட்டிருந்த வேளை யில், பையனுக்குத் திடீர்னு கண்பார்வை மோசமாயிடுச்சு. இப்ப என் பையன், ஒரு கண்ணாலதான் இந்த உலகத்தைப் பாக்கறான். பையனுக்குக் கண்பார்வை சரியாகணும், அந்த ராமநாத ஸ்வாமிதான் அருளணும்'' என்று சொல்லும்போதே, பெங்களூரு வாசகி ரத்னாவின் கண்களிலிருந்து கரகரவென வழிகிறது, நீர்!

''என் பையன் டில்லில பைலட்டா தற்காலிகப் பணியில இருக்கான். அவனோட வேலை நிரந்தரமாகணும்; சென்னையிலேயே அவன் பைலட் ஆகணும். என் கணவர், நோய் நொடியில்லாம நல்லாருக்கணும். இந்தப் பிரார்த்தனையோடதான் விளக்குபூஜைல கலந்துக் கிட்டேன்'' என்கிறார் சென்னை வாசகி ஜெயலட்சுமி.

''எங்க மூத்த பொண்ணுக்கு கல்யாணமாகி 16 வருஷமாகியும் குழந்தை பாக்கியம் மட்டும் கிடைக்கலை. அவளுக்கு ஒரு குழந்தை வரத்தைக் கொடுப்பா சாமின்னு தான், பூஜைல கலந்துக்கிட்டேன்'' என்று நெகிழ்ந்தபடி சொல்கிறார் ராமநாதபுரம் வாசகி சேதம்மாள்.

''துறுதுறுன்னு சுத்திக்கிட்டிருக்கிற என் தம்பி, பைக் விபத்துல அடிபட்டு, இப்ப வீட்டோடயே முடங்கிட்டான்.  அவன் சீக்கிரமே குணமாகணும்; பழையபடி ஆட்டமும் பாட்டமுமா உற்சாகமா இருக்கணும். அதாங்க என் வேண்டுதல்!'' பாம்பன் வாசகி மகாலட்சுமியின் வார்த்தை களில் தெறிக்கிறது சகோதர வாஞ்சை!  

''எனக்கு மூணு தங்கச்சிங்க. ஏனோ தெரியலீங்க... என் கல்யாணம் தள்ளிப்போயிக்கிட்டே இருக்கு. மூத்தவளுக்கு கல்யாணம் நடந்தாத்தானே, அடுத்தடுத்தவங்களுக்கு நடத்த முடியும்?! பாவம்... அப்பாவும் அம்மாவும் மனசு உடைஞ்சு போயிட்டாங்க. பெத்தவங்களோட விருப்பம் நிறைவேறணும். சக்தி விகடன் விளக்கு பூஜைல கலந்துக் கிட்டதுல, சீக்கிரமே எல்லாம் நல்லவிதமா அமையும்னு நம்பிக்கை வந்திருக்கு!'' என்று கண்களில் நீரும், முகத்தில் நம்பிக்கையுமாகச் சொல்கிறார் ராமேஸ்வரம் வாசகி மங்களேஸ்வரி.  

ஸ்ரீராமன் வணங்கிய பூமி; அவர் வழிபட்ட சிவனார்... அப்புறமும் எதற்குக் கவலை?! விரைவில் கவலைகள் யாவும் காணாமல் போகும், பாருங்களேன்!

- பூ.ஜெயராமன், படங்கள்: உ.பாண்டி