சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ரமணத் தாமரை

ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

கவான் ஸ்ரீரமண மகரிஷியால் உற்றுப் பார்க்கப்பட்ட, நாயனா என்று அன்புடன் அவரால் அழைக்கப்படும் காவிய கண்ட கணபதி சாஸ்திரி, நயன தீட்சையை மட்டும் பெறவில்லை; பகவான் தன்னுள்ளே பொங்குகிற அந்தப் பெரும் சக்தியை, கண்களின் மூலம் காவிய கண்ட கணபதி சாஸ்திரியின் கண்களை நோக்கி, உள்ளுக்குள்ளே செலுத்துவதோடு நின்றுவிடவில்லை; 'என்ன செய்ய வேண்டும்’ என்பதை மிகத் துல்லியமாக, எளிதான இரண்டு வாக்கியங்களில் தெளிவுபடுத்தினார்.

'நான் நான்’ என்பது எங்கிருந்து புறப்படுகிறதோ, அதை கவனித்தால், மனம் அங்கே லீனமாகும். அதுவே தபஸ்.

லீனம் என்கிற வார்த்தைக்குக் கரைதல் என்று அர்த்தம். கரைந்து காணாமல் போகுதல் என்று அர்த்தம். அந்த வாக்கியத்தை ஆழ்ந்த குரலில் மெல்லியதாக, பகவான் ஸ்ரீரமண மகரிஷி, சாஸ்திரிக்கு எடுத்துச் சொன்னார். ஒரு மந்திரத்தை ஜபம் செய்தால், அந்த மந்திர ஜபம் எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால், மனம் அங்கே லீனமாகிறது. அதுதான் தபஸ். மீண்டும் சொன்னார்.

இங்கே விஷயம் மந்திரத்தில் இல்லை; அந்த வாக்கியத்தில் இல்லை; அந்த வாக்கியம் சொல்லப்படுகிறபோது, உங்கள் மனம் என்ன செய்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். வாய் அந்த வாக்கியத்தை சொல்லிக் கொண்டிருக்கிறபோது, மனம் நாலாபக்கமும் அலைந்து கொண்டிருந் தால், மனம் அலைதலும் நின்றபாடில்லை; வாக்கியத்துக்கும் அர்த்தமில்லை.

''என்ன மந்திரம் ஜபிக்கவேண்டும்?'' என்று வேடன் கேட்டான். என்ன சொல்வது என்று முனிவருக்குத் தெரிய வில்லை. அருகே இருந்த மரத்தைப் பார்த்தார். அது மரா மரம். 'மரா மரா என்று சொல்லு’ என்று அந்த வேடனுக்குச் சொல்லிக் கொடுத்தார். அவன் உடனே உட்கார்ந்து 'மரா, மரா, மரா’ என்று சொல்ல ஆரம்பித்தான். இப்போது 'மரா’ என்ற சொல்லில் அர்த்தம் ஏதுமில்லை. ஆனால், அது உள்ளே மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தியது. சொல்லை உற்று நோக்கி, சொல்லின் வழியாக மனம் அடைந்து, மனதையும் உற்று நோக்கி, மனதைக் காணாமல் அடிக்கின்ற மிகப் பெரிய வித்தை அங்கு நடந்தது. மனம் லீனமாகும் என்கிறார் பகவான். மெள்ள மனம் படிந்து, அமைதியாகி, அசையாமல் நின்று, பிறகு உறைந்து, அதன் பிறகு காணாமல் போகும்.

ஸ்ரீரமண மகரிஷி

இப்படிச் செய்வதற்கு வேறு என்ன தகுதிகள் வேண்டும்? பணிவு வேண்டும். முழுநம்பிக்கை வேண்டும். பணிவும் முழுநம்பிக்கையும் அடுத் தடுத்து வருவன. தனக்கு ஏதோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்று பணிவுடன் அதை ஏற்பது  மிகச் சிறந்தது எனக்கு சொல்லிக் கொடுத்ததை, நான் முழு நம்பிக்கையோடு இடைவிடாது சொல்வேன் என்று ஏற்பது இன்னும் சிறந்தது.

பப்பா ராமதாஸ் அவர்களிடம், 'நான் என்ன செய்யவேண்டும் குருவே’ என பகவான் யோகி ராம்சுரத்குமார் மனமுருகிக் கேட்டார். 'இடைவிடாது இருபத்து நாலு மணி நேரமும் ராம நாமம் சொல்லிக்கொண்டிரு’ என்று பப்பா ராமதாஸ், யோகி ராம்சுரத்குமாருக்கு உத்தரவிட்டார். அந்த க்ஷணமே ஜபம் துவங்கியது. இடைவிடாது தொடர்ந்தது. மனம் முற்றிலும் அங்கே ஜபத்தின்மீது படிந்தது; கரைந்தது; காணாமல் போயிற்று. பல கால இல்லற வாசியாக இருந்த ராம்சுரத்குமார், யோகி என்ற உன்னத நிலையை அடைந்தார். எந்நேரமும் கடவுளோடு இருந்தார். பலரின் குறைகளை எளிதாகக் களைந்தார்.வாழ்வின் உய்தலைக் கொடுக்கும் இந்தத் தந்திரத்தை பகவான் ஸ்ரீரமண மகரிஷியைத் தவிர, இத்தனை எளிதாக வேறு எவரும் சொல்லித் தரவில்லை.

பூஜைகளும், பிரார்த்தனைகளும், ஜபதபங்களும், மூச்சுப் பயிற்சியும், யோக நிஷ்டையும், ஹோமமும், யாகமும், யாவை யும் துறந்துவிட்டு ஊர் ஊரான பயணமும், இந்த வித்தையை சொல்லித் தரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் செய், தவறு இல்லை. ஆனால், இவையெல்லாம் எதற்கு? மனம் ஒரு மந்திர ஜபத்தைப் பற்றி, அதை இறுகப் பிடித்துக் கொள்வதன் மூலம் 'நான்’ என்கிற எண்ணம் எங்கு தோன்றுகிறது என்பதைக் கண்டுபிடித்து, எங்கு தோன்றுகிறதோ அங்கே உட்கார்ந்து, உறைந்து போய், பிறகு கரைந்து காணாமல் போகிற வித்தை தானாக ஏற்படும்.

##~##
ஒரு தள்ளு, உள்ளுக்குள் போய் விழுந்துவிட வேண்டும்; அங்கேயே கிடக்கவேண்டும். ஆனால், வாழ்வின் சுகபோகங்கள் தள்ள விடாது. மனதின் அடியில் அதைப் பற்றிய நாட்டம் இருக்கும். அப்படி ஜபம் செய்தால் என்ன செய்யலாம்; பெரிய சாமியாராகலாம்; சாமியாராகி விட்டால் என்ன செய்யலாம்; பல ஏக்கர் நிலம் வாங்கலாம்; பலவிதமான கட்டடங்கள் கட்டலாம்; உலகம் முழுதும் இருக்கிற மக்களைக் கவரலாம்; பேச்சு சாமர்த்தியத்தில் ஜெயிக்கலாம்; தன்னில் ஒருமுகப்படுவதன் மூலம் வருகின்ற ஸித்தியால் சில நோய்களை குணம் செய்யலாம்; அல்லது, குணம் செய்வது போலக் காட்டலாம்; காசு பறிக்கலாம்; 'என் வயிற்று வலி ஒரே தடவையில் தீர்ந்துவிட்டது’ என்று இரண்டு பேர் சொன்னால் போதும், இரு நூறு பேர் கேட்பார்கள். இரண்டாயிரம் பேர் நாடி வருவர். அப்போது உலகம் முழுவதும் நிலம் வாங்க வேண்டியதுதான் வேலையாகப் போய்விடும். இது பேய் ஆட்டம்; அரக்க குணம்; மாயையில் சிக்கிச் சீரழியும் வரலாறு.

உள்ளே கனிந்து கரைந்து காணாமல் போன மனம் என்ன செய்யும்? திகைத்துக் கிடக்கும். ஒரு வேளை சோறு, குடிநீர், உடுத்த ஒரு கோவணம், படுக்கக் கட்டாந்தரை போதுமே என்று அசையாது நின்றுவிடும். ஆனால், அப்படிப்பட்டவரின் காலடியில் சகலமும் கொட்டப்படும். உலகில் உள்ள எல்லாச் செல்வங்களும் அவருக்கு அருகே வந்து நிற்கும். கைகட்டிச் சேவகம் செய்யும். ஆனால், அவற்றின் மீது அந்த ஞானிக்கு நெல்முனையளவும் ஈடுபாடு இருக்காது. அந்தச் செல்வம் அவருக்கு அருகே இருக்கும்; ஆனால், அவருக்குப் பயன்படாது. பயன்பட வேண்டிய அவசியம் இருக்காது. அவருக்கு நிலம் இருக்கும், கட்டடம் இருக்கும். ஆனால்... இருந்தா லும் இல்லாது போனாலும் ஒன்றுதான் என்ற நிலை இருக்கும். கையேந்தி உணவு வாங்கி உண்ட நினைப்பிலேயே, இலையில் சோறு போட்டு, குழம்பு பிசைந்து சாப்பிடுவார். 'பகவான், பேரீச்சைப் பழம்’... 'அப்படியா, ஒன்று கொடு’, 'பகவான், கடலைப் பருப்புப் பாயசம்’... 'ஆஹா! ஒரு டம்ளர்’...கொடுப்பவரின் சந்தோஷத்துக்குத்தான் அவை உண்ணப்படுகிறதே தவிர, உண்ணப்பட வேண்டும் என்ற ஆசையில் அந்த ஞானி ஒருபோதும் இல்லை. ஒரு நாளைக்கு ஒரு கவளம் உணவு என்ற நிலையிலேயே மனம் அடங்கிய பின்னும், அந்த ஞானி இருக்கிறார். இதுவே உண்மையான அடக்கம். இதுவே ஞானியின் லட்சணம்.

பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் வாழ்க்கை, சம்பவங்கள் நிறைந்தது அல்ல; சம்பவங்களின் அடுக்கு அல்ல; வெறும் சம்பவங்களும் அல்ல; அந்த சம்பவங்களுக்குள்ளே புகுந்து, அவர் வாழ்க்கை என்ன சொல்கிறது என்பது நமக்குப் புரியவேண்டும். அந்த வாழ்க்கையின் மெல்லிய வாசனையாவது, மெல்லிய தன்மையாவது நம் மீது பரவ வேண்டும். தவம் செய்தலைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். எது தபஸ் என்று கேட்க வேண்டும். அந்தத் தபஸை பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும். கதை படித்து முடித்ததுபோல, பகவான் ஸ்ரீரமணரின் வாழ்க்கை வரலாறு அமையாது. அது உள்ளே உங்கள் நெஞ்சுக்குள் தைத்து, உங்கள் புத்தியை மாற்ற வேண்டும். உங்கள் எண்ணத்தில் ஒரு வளர்ச்சி ஏற்பட வேண்டும்.

சநாதன தர்மம் என்று அழைக்கப் படும் இந்து தர்மம், சாதாரண விஷயம் அல்ல; அப்படி மனதை ஒருமைப் படுத்துவதற்கே பல்வேறு கால கட்டங் களில், பல்வேறு ஞானிகள், பல்வேறு உத்திகளைக் கையாண்டு அந்த இடம் நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். பஜனையும் பக்தியும், தேரும் திரு விழாவும், பண்டிகையும் விக்கிரக ஆராதனையும், இதிகாச புராணங்களும், வேத கோஷங்களும், ஹோம யக்னங்களும் நமது மனதை ஒருநிலைப்படுத்துவது குறித்தே செய்யப்படுகின்றன.

விதம்விதமாக பட்டுப்புடவை உடுத்தியாகிவிட்டதல்லவா, போதும் என்ற ஒரு நிலை வரவேண்டும். 'எனக்கு இப்போதைக்குப் போதும் என்கிற நிலையே வராது. எனக்கு இருக்கிறதே நாலு பட்டுப் புடவை, இது போதும் என்று எப்படிச் சொல்வது?’ என்கிறீர்களா? கவலைப்படாதீர்கள், அடுத்த ஜென்மத்தில், இந்த போதும்

என்ற நிலை நிச்சயம் வந்துவிடும். உங்கள் தபஸ் இந்த ஜென்மாவோடு முடிவது அல்ல என்றுதான் சநாதன தர்மம் என்கிற இந்து மதம் சொல்கிறது. இது ஜென்ம ஜென்மமாய்த் தொடருகிற விஷயம் என்கிறது.

ஸ்ரீரமண மகரிஷி

பதினாறு வயது பாலகனான வேங்கடராமனுக்கு, மதுரையில் மல்லாக்கப் படுத்துக்கொண்டிருக்கும்போது உள்ளே ஏற்பட்ட அந்த அற்புதமான மாற்றம், கற்றுக் கொண்டு வந்தது அல்ல; யாரோ கொண்டு வந்து கையில் கொடுத்ததும் அல்ல; அது ஜென்ம ஜென்மாந்திரத் தொடர்பு. போன ஜென்மத்து தபஸின் விளைவு. ஸ்ரீரமணரைப் படிக்கிற மாத்திரத்திலேயே உள்ளுக்குள் மாற்றம் ஏற்பட்டுவிட வேண்டும். ஸ்ரீரமணரின் கண் களைப் பார்க்கின்ற மாத்திரத்திலேயே, உள்ளுக்குள் அசைவு ஏற்பட்டுவிட வேண்டும்.

ரமண ஆஸ்ரமத்தில் கைகூப்பி நிற்கிறபோது தன்னந் தனியனாய் எவர் துணையும் இன்றி உள்ளே மனம் கனிந்து, கசிந்து, உருகி கண்களில் நீர் வர வேண்டும். எவர் உறவு; யார் நண்பர்; யார் துணை; யார் வழிகாட்டி; எவருமிலர். நான் தனி. என்னுள் இருக்கின்ற பரப்பிரம் மமே எனக்கு வழிகாட்டி; எனக்குத் துணை, அதுதான் நான்; நான்தான் அது என்று அடைந்துவிட வேண்டும். ஒரு ஆனந்த அழுகையில் திளைக்க வேண்டும். அளவற்ற அமைதியில் உட்கார்ந்துவிட வேண்டும். மாற்றத்தை உபதேசத்தால் இன்னொருவருக்குக் கொண்டுவர முடியாது; ஞானிகளால்தான் கொண்டுவர முடியும். ஞானியர் உடலானவர்கள் அல்ல; உடலாக இருக்கும் போதே, உடலைத் தாண்டி, உள்ளுக்குள் இருக்கிற அதி அற்புத சொரூபத்தைக் கண்டு, அதன் ரூபமாகவே இருப்பவர்கள். அவர்களுக்கு மரணம் என்பது இல்லை. மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்கிறவர் கள். எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் இருப்பவர்கள். ஜோதி வடிவானவர்கள். ஜோதி வடிவு என்றவுடன் விளக்கை நினைத்துக் கொள்ளக் கூடாது. அந்த நினைப்பே நமக்கு ஒளியைத் தரும்; அந்த நினைப்பே நமக்கு வழிகாட்டும். அந்த நிலையே நமக்கு அகல் விளக்கு; இருளைக் கிழித்துக் கொண்டு, அந்த அகல்விளக்கு வழிகாட்ட, நாம் நடக்க வேண்டும். குரு என்ற வார்த்தைக்கு இருளை விலக்குபவர் என்று அர்த்தம்.

காவியத்தில் கரை கண்டவர் கணபதி முனி.

ஆனால், அவர் பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் பாதங்களைப் பற்றிக் கொண்டதால் உள்ளுக் குள் மாற்றம் ஏற்பட்டது. ஆனால், கணபதி முனிக்குச் சைவ சித்தாந்தம் பற்றி எதுவும் தெரியாது. திருவண்ணாமலையில் உள்ள சைவ சித்தாந்தக் குழுவினர், அவரை சைவ சித்தாந்தம் பற்றிப் பேச அழைத்தனர். அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால் தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாதே என்று, பகவான் ஸ்ரீரமணரிடம் முறையிட் டார். பகவான், 'சிவஞான போதம்’ என்கிற ஒரு நூலை கொடுத்து, அதில் உள்ள செய்யுள்களை படிக்கச் சொல்லி, அதைப் பற்றி கணபதி முனிக்கு விளக்கி னார். கூர்மையான புத்தியும், விசாலமான படிப்பும் உள்ள கணபதி முனிக்கு  சைவ சித்தாந்தம் முற்றிலும் புரிந்தது. அவர் மேடை ஏறி, தன்னை மீறிய சக்தியில் சைவ சித்தாந்தம் பற்றி மிக விளக்கமாக உரையாற்றி, கைதட்டல்கள் பெற்றார்.

ஸ்ரீரமண மகரிஷி

தன்னால் நடந்தது அல்ல என்பதை உணர்ந்தார். தன்னை மறந்து, ஆழ்ந்து, தனக்குள் அமிழ்கிறபோது, சில சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அசைந்து நடக்கவேண்டிய உடம்பு, அசையாது இருப்பதில், சில வேதனைகள் வர சாத்தியம் இருக்கிறது. மனம் எதுபற்றியும் நிற்காமல், ஓரிடத்திலேயே நிலைத்து நிற்பதில், மூச்சு சம்பந்தமானதாகவும் ரத்த ஓட்டம் சம்பந்தமானதாகவும், வேதனைகள் வரக் காரணங்கள் இருக்கின்றன. வேகமாக யோசித்தால், வேகமாக மூச்சு வரும். கோபத்தில் ஒரு விதமாகவும், காமத்தில் ஒரு விதமாகவும், ஆத்திரம்- அசூயையில் ஒருவிதமாகவும், புலம்ப லில் ஒரு விதமாகவும் மூச்சு திசைமாறும். எதுவுமற்று மௌனமாகி விட்டால் மூச்சு மெல்லியதாகிவிடும். சுவாசம் ஒரு இழை போல ஓடும். நுரையீரல்களில் அசைவு மிகக் குறைவாக இருக்கும். அப்போது, ரத்த ஓட்டம் தளர்வாக இருக்கும். விறுவிறுப்பாக ஓட வேண்டிய ரத்த ஓட்டம், தளர்வாக ஓடுகிறபோது, ரத்தம் உச்சிக்குப் போய் திரும்பி வருவதில் சிக்கல் ஏற்படும். ரத்தம் திரும்பாது; மெள்ளத் தயங்கித் தயங்கிக் கீழிறங்கும். அப்போது தலைக்குள் மிகப் பெரிய வேதனை ஒன்று தோன்றும்.

உடல் வேறு, மனம் வேறு என்று உற்றுப் பார்ப்பவர்கள் இதைப் புரிந்துகொள்வர். ஆனாலும், இந்த வேதனையைத் தாங்கமுடியாது தவிப் பார்கள். காவிய கண்ட கணபதிமுனி, தன் தவத்தின் உச்சியில் தவித்தபோது, என்ன செய்வது என்று தெரியாமல், தன் அன்பர் ஒருவரை, பகவான் ஸ்ரீரமண மகரிஷியிடம் அனுப்பினார். தன் வேதனையை அவர் மூலம் விளக்கினார்.

பகவான் ஸ்ரீரமண மகரிஷி உடனே கிளம்பி, கணபதி முனிவரின் இடத்துக்குப் போய், அவர் உச்சியில் தன் வலது கையை வைத்து அழுத்தினார். கணபதி முனியின் வேதனைகள் உள்ளேயிருந்து அகன்றன. நாடிகள் தெளிவாயின. மூச்சு ஆழ்ந்து வெளிப்பட்டது. துவண்ட உடல் நிமிர்ந்தது. இருட்டு நகர்ந்து முகம் மலர்ந்தது. இதுவொரு சிடுக்கு; சின்னச் சிக்கல். வேகமாக நடந்து போகின்ற போது ஏற்படுகிற இடறல். தெரிந்து தெளிவான வல்லவர் ஒருவர், உள்ளுக்குள்ளே தன் மனதை நுழைக்கும்போது இது சீர்படுகிறது.

தன் விஷயத்தை உள்ளே செலுத்து கிறபோது, அசைவு அதிகமாகிறது. காவிய கண்ட கணபதி முனி சுயத் துக்கு வந்தார். இதுபற்றி இன் னொரு சந்தர்ப்பத்தில் பகவான் ஸ்ரீரமண மகரிஷி பேசும்போது, ''இவர் என்னிடம் முறையிட்டார். நான் யாரிடம் போய் முறையிடுவது?'' என்று மெல்லிய குரலில் பேசினாராம்.

பகவான் ஸ்ரீரமண மகரிஷி, தானே பற்றி எரிந்த தழல்; தன்னையே குருவா கக் கொண்டிருந்த குணக்குன்று; தானே பொங்கி, தானே அமைதியாகி, தன்னையே பற்றிக்கொண்டு மலர்ந்த தாமரை. பகவான் ஸ்ரீரமண மகரிஷி ஒரு அவதாரம்!

- தரிசிப்போம்...