சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

சிந்தை மகிழும் சித்திரை மாதம்!

சித்திரை தரிசனம்!

 
சிந்தை மகிழும் சித்திரை மாதம்!
சிந்தை மகிழும் சித்திரை மாதம்!
சிந்தை மகிழும் சித்திரை மாதம்!

சைத்ர விஷூ புண்ணிய காலம் என்பார்கள் சித்திரை மாதப் பிறப்பை. ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது, சித்திரை முதல் நாள்; சூரியன் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலம் சித்திரை. பல்குண-சைத்ர மாதமாகிய சித்திரையை வசந்த ருது என்பார்கள். அற்புதமான இந்த மாதத்தில் உரிய வழிபாடுகளும் திருக்கோயில் தரிசனமும் செய்து நம் வாழ்வையும் வசந்தமாக்கிக் கொள்ளலாம்!

சித்திரை முதல் நாளன்று பஞ்சாங்கம் படிப்பது சிறப்பு. இந்த தினத்தில் வீடுகளில் மட்டுமல்ல கோயில்களிலும் பஞ்சாங்கம் படிப்பார்கள். திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம். திதியை அறிவதால் திருமகள் அருள் கிட்டும்; நட்சத்திரத்தை அறிவதால் வினைகள் தீரும்; அனுதினமும் அன்றைய யோகம் என்ன என்பதை அறிவதால் நோயற்ற வாழ்வு கிட்டும்; கரணம் அறிவதால் காரிய ஸித்தி உண்டாகும். அனுதினமும் கடைப்பிடிக்க வேண்டிய இந்தப் பழக்கத்தை, சித்திரை முதல் நாளே துவங்குவது விசேஷம்!

##~##
சித்திரை முதல் நாளில், திறந்தவெளியில் சூரியக் கடவுளுக்கு பூஜைகள் செய்வர். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சித்திரை முதல் நாளை புனித தினமாகக் கொண்டாடுகின்றனர். பிரம்மன் உலகைப் படைத்தது சித்திரை முதல்நாளில் என்கின்றன சில ஞான நூல்கள்.

சித்ரா பௌர்ணமி அன்றுதான் மீனாட்சியம்மை சொக்கநாதரை மணந்து கொண்டாள். அதேபோல் காஞ்சி ஸ்ரீகாமாட்சிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நிகழ்ந்ததும் சித்ரா பௌர்ணமியில்தான்.

சித்திரை சுக்லபட்ச பஞ்சமியில்தான் ஆதிசங்கர ஜயந்தி. ஸ்ரீராமானுஜர் அவதார வைபவமும், ஸ்ரீரமணர் ஆராதனையும் சித்திரையில்தான்.

சித்திரை சுக்லபட்ச திருதியை அன்றுதான் அட்சய திருதியை கொண்டாடப் படுகிறது. எமதருமனின் கணக்கரான சித்திரகுப்தன் தோன்றியது சித்ரா பவுர்ணமி அன்றுதான்.

சித்திரை- சுக்லபட்ச அஷ்டமியில், அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் திருநாளில் அம்பிகையை மனமுருகி பூஜிப்பதும், நதி நீராடலும் சிறப்பாகும். சித்திரை திருவோணத்தில் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு வசந்தகால அபிஷேகம் நடைபெறும்.

அப்பப்பா... சித்திரைக்குதான் எவ்வளவு சிறப்புகள்? இந்தப் புண்ணிய மாதத்தில், ஆல யங்களில் நடைபெறும் பல்வேறு வைபவங் களைத் தரிசிப்பதும் பெரும் புண்ணியம்!

சிந்தை மகிழும் சித்திரை மாதம்!

திருநெல்வேலி- அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது பாபநாசம். இங்கு கோயில் கொண் டிருக்கும் அருள்மிகு பாபநாசரை, சூரியன் தனது கிரணங்களால் வழிபடும் வைபவம் சித்திரை மாதத்தில் (தொடர்ந்து 12 நாட்கள்) நிகழ்கிறது.

இந்த நாட்களில் இங்கு வந்து, காலைக் கதிரோனின் ஒளி உடம்பில் படும்படி நின்று தியானித்து வணங்கும் பக்தர் களுக்குத் துயரங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோயிலில், சித்திரை மாதப்பிறப்பன்று விஷ§ புண்ணிய காலத்தில், அகத்தியருக்கு இறைவன் திருமணக் கோலம் காட்டியருளும் வைபவம் வெகு சிறப்பாக நடை பெறுகிறது. சித்திரை மாதம் முதல் நாளன்று இங்கு வந்து பாபநாச தீர்த்தத்தில் நீராடி, சூரியன் வழிபடும் காட்சியையும் திருக் கல்யாண காட்சி வைபவத்தையும் தரிசிப்பது பெரும் புண்ணியம் சேர்க்கும்.

காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் உள்ள தங்கத் தேர், சித்திரை முதல் நாளன்று மட்டுமே நான்கு ராஜ வீதியிலும் உலாவரும். முன்னதாக சந்நிதித் தெருவில் உள்ள சித்திரை மண்டபத்தில் எழுந்தருள் கிறாள் அம்பாள். அங்கிருந்து தேரில் ஏறி, வீதியுலா வருகிறாள். வெள்ளிக்கிழமைகள், மாதப் பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி,

காஞ்சி மகாபெரியவாளின் பிறந்தநாள் போன்ற தினங்களில், கோயிலின் வெளிப்பிராகாரத்தில் மட்டுமே தங்கத் தேர் பவனி நடைபெறும்!

கோவை- பாலக்காடு மார்க்கத்தில் உள்ள ஊர் நவக்கரை. இங்கு கோயில் கொண்டிருக்கும் அம்பாள் ஸ்ரீதுர்கா பகவதியம்மன். இங்கே பிரமாண்டமான நந்தி சிலையை தரிசிக்கலாம். இதன் உயரம் 31 அடி; நீளம் 41 அடி; அகலம் 21 அடி!

சித்ரா பௌர்ணமியை ஒட்டி 3 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த நாட்களில் மன நோயாளிகளுக்காக சிறப்பு வழிபாடுகள் செய்கிறார்கள். சித்ரா பௌர்ணமி அன்று மலர் அலங்காரத்துடன், கோயிலைச் சுற்றி அம்மன் உலா வரும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்!

சேலத்திலிருந்து 27 கிமீ தூரத்தில் உள்ளது ராசிபுரம். இங்குள்ள ஸ்ரீகயிலாசநாதர் கோயிலில் பஞ்சலிங்க மூர்த்திகளுக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள சிவனாருக்கு ஐந்து முகங்கள் இருப்பது விசேஷம். அம்பாள்- ஸ்ரீஅன்னபூரணி. இவள் சந்நிதி அருகேயுள்ள கிளி மண்டபம் சித்ரா பௌர்ணமியன்று திருக்கல்யாண வைபவம் களைகட்டும். இந்த வைபத்தைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு மண வாழ்க்கை இனிதாகும். சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலமும், கன்னிப் பெண்களுக்கு கல்யாண வரமும் கைகூடும் என்பர்.

சிந்தை மகிழும் சித்திரை மாதம்!

சென்னை அருகில் பொன்னேரியில் அமைந்துள்ள ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் ஆலயம். கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில், நின்ற கோலத்தில் அருளும் கண்ணன், வலக்காலை நன்றாக ஊன்றியும் இடக்காலை சற்றே மடித்துவைத்த நிலையிலும் காட்சி தருகிறார்.

இந்தக் கோயிலுக்கு அருகிலேயே அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயமும் உள்ளது. இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அரனும் அரியும் சந்திக்கும் வைபவம் (ஹரிஹரன் பஜார் வீதியில்) நடைபெறுகிறது!

கும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேஸ்வரரும் ஸ்ரீமங்களாம்பிகையும், சித்திரை மாதம் நடைபெறும் சப்தஸ்தான விழாவுக்காக பல்லக்கில் புறப்பட்டு, சுமார் 20 கி.மீ தூரம் பயணித்து... சாக்கோட்டை, திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய ஏழு திருத்தலங்களுக்கும் சென்று திரும்புகிறார்கள். மிக அற்புதமான விழா வைபவம் இது!

கோவை சிங்காநல்லூரில், சித்திரகுப்தருடன் எமதருமன் சேர்ந்து அருளும் தனிக்கோயில் உள்ளது. இங்கே, சித்ரா பௌர்ணமியன்று 101 வகை படையல்கள் படைத்து, பொங்கலிட்டு வெகுச் சிறப்பாக வழிபாடுகள் நிகழும். வராத கடன்பாக்கி வந்துசேரவும், மரண பயம் நீங்கவும் பக்தர்கள் இங்கு வந்து வேண்டி பலனடைகிறார்கள்.

சிவகங்கை அருகே, கண்டமாணிக்க தலத்தில் உள்ள ஸ்ரீமாணிக்க நாச்சியம்மன் ஆலயத்தில் புதுமையாகக் கொண்டாடப்படுகிறது சித்திரைத் திருவிழா.

இதன் நிறைவு நாளன்று, அம்மன் வீதியுலா வரும்போது ஆண்களும் பெண்களுமாக கூடி நின்று குடம்குடமாக பன்னீர் அள்ளித் தெளித்து வழிபடுகின்றனர். விழாவோடு விழாவாக மாப்பிள்ளை, பெண் பார்க்கும் படலமும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் பத்து- பதினைந்து திருமணங்களாவது நிச்சயமாகி விடுமாம்!

ன்னியாகுமரி மாவட்ட ஆலயங்களில் சித்திரகுப்த பூஜை சிறப்பாகக் கொண் டாடுவார்கள். இந்த மாவட்டத்தில், வீர நாராயணமங்கலம் என்ற ஊரில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீமுத்தாரம்மன். இவளது ஆலயத்தில்,  உடற்சூடு தணிக்கும் காய்கனிகள், எலுமிச்சை, சர்க்கரை, சுக்கு கலந்த பானம் செய்து அம்மனுக்குப் படைத்து வழிபடுகிறார் கள். பிறகு பக்தர்களுக்குப் பிரசாதமாகவும் விநியோகிப்பர்.

சித்ரா பௌர்ணமி தினத்தில் குமரி கடலில் சூரிய அஸ்தமனமும், சந்திரோதயமும் ஒரே நேரத்தில் தரிசிப்பது விசேஷம்.

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி எனும் ஊருக்கு மேற்கே சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது ஸ்ரீஅத்ரிபரமேஸ்வரர் மலைக்கோயில்.

இங்கே, ஸ்ரீருத்ர விநாயகர் சந்நிதிக்கு பின்புறம் நெடிதுயர்ந்து நிற்கும் மரத்தை, அம்ருதவர்ஷிணி மரம் என்கின்றனர். சித்திரை மாதம் முழுவதும் இதன் கிளைகளில் இருந்து பன்னீர் துளிகள் போல தண்ணீர் சொட்டுவது, கலியுக அற்புதம்தான்!

- இரா.இராதாபாய், புதுவை