சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தேவாரத் திருவுலா!

டாக்டர் சுதா சேஷய்யன்

தேவாரத் திருவுலா!
தேவாரத் திருவுலா!
தேவாரத் திருவுலா!

வேத வித்தாய் வெள்ளைநீறு பூசி வினையாயின
கோதுவித்தாய் நீறெழக்கொடி மாமதிலாயின
ஏதவித்தாயின தீர்க்குமிடம் இரும்பைதனுள்
மாதவத்தோர் மறையோர் தொழுநின்ற மாகாளமே!

##~##
- என திருஞானசம்பந்தர் பாடிப் பரவுகிறார். எங்கே இருக்கிறது இந்த மாகாளம்? சோழநாட்டில் அம்பர் மாகாளம் என்றொரு தலம் உண்டு; இது அதுவல்ல; இரும்பை மாகாளம்!

தொண்டை நாட்டின் 32 பாடல்பதிகளில் 32-வது பதி; மாகாளர் வழிபட்ட திருவூர்; திண்டிவனம்- புதுச்சேரி பாதையில், கிளியனூர் தாண்டி, திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டை அடைந்து, அங்கிருந்து இரும்பைக்குப் பிரிகிற பாதையில் சென்றால், சுமார் 3 கி.மீ தொலைவில் கோயிலை அடையலாம். தற்போது புதிதாகப் போடப்பட்டிருக்கும் புறவழிச் சாலை, இரும்பையைக் குறுக்காகக் கடந்து செல்கிறது; இரும்பை எனும் பெயர்ப்பலகையைக் கடந்ததும், சாலையின் வடக்குப்பக்கத்தில் பிரியும் உள்பாதையில் சென்று ஆலயத்தை அடையலாம். கோயில் முகப்பு வரை வாகனங்கள் செல்லும்.

சிறிய கோயில்; நெடுங்காலத்துக்குப் பிறகு, திருப்பணி கண்டு, இப்போது வண்ணமயமாக மிளிர்கிறது. கோயிலின் பிரதான வாயிலாக இருப்பது, தெற்கு நுழைவாயில். கோபுரமில்லை. கோயிலுக்குத் தென்கிழக்காகக் குளம்; மாகாள தீர்த்தம். குளக்கரையிலிருந்து கோயிலுக்குள் வருவதற்கு கிழக்கு வாயிலும் உண்டு. எல்லோரும் பயன்படுத்துகிற தெற்கு வாயில்வழியே நாமும் நுழைகிறோம். விசாலமான பிராகாரம். தென்மேற்கில் ஸ்ரீவிநாயகர், வடமேற்கில் ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீமுருகர் சந்நிதிகள். கிழக்குப் பார்த்தபடி ஸ்ரீஅனுமன் விக்கிரகமும், வடகிழக்குப் பகுதியில் பைரவர் மற்றும் நவக்கிரகச் சந்நிதிகளும் உள்ளன. கிழக்கு வாயிலுக்கு இருபுறங்களிலும் சூரியன், சந்திரன். நேர் எதிரில், பலிபீடம், கவசமிட்ட கொடிமரம், நந்தி. இங்கே, உள்வாயில் வழியே சென்றால், மூலவர் சந்நிதிக்கும் அம்மன் சந்நிதிக்கும் முன்பாக உள்ள மண்டபத்தை  அடையலாம். தெற்கு வாயிலுக்கு நேர் எதிரில், அம்பிகையின் சந்நிதி. அந்த வாயில் வழியே நேரே வந்தாலும், இந்த மண்டபத்தை அடையலாம்.

தேவாரத் திருவுலா!

மூலவர், அழகிய லிங்கத் திருமேனி; கிழக்கு நோக்கிய இவர்தாம், ஸ்ரீமாகாளேஸ்வரர். லிங்க பாணம் ஏதோ பிளவுபட்டதுபோல் தெரிகிறது. சிவாச்சார்யரிடம் கேட்டால், இதற்கான காரணக் கதையைச் சொல்கிறார்.

குலோத்துங்க சோழனின் ஆட்சிக் காலத்தில், இங்கு கடுவெளிச் சித்தர் தவம் செய்து வந்தார். அப்போது நாட்டில் திடீரெனப் பஞ்சம்; அதற்கான காரணத்தை அறிந்து, அதைத் தீர்க்க விரும்பிய மன்னன், முரசறைவித்தான். அந்த ஊரில், வள்ளி எனும் தாசிப் பெண் ஒருத்தி இருந்தாள். கோயிலில் நாட்டியமாடுபவள் அவள். பஞ்சத்துக் கான காரணத்தைக் கடுவெளிச் சித்தரிடம் கேட்கலாம் என அவள் எண்ணினாள். அவரோ பழுத்துக் கீழே விழும் அரசிலையை மாத்திரம் உணவாக உண்டுவந்தார். வள்ளி அவரருகே வந்த நேரம், அவர் கையை நீட்டினார்; அவள், அவர் கையில் அரசிலையை இட்டாள். தவம் கலைந்து எழுந்தவரிடம், பஞ்சம் தீர்க்கும்படி வேண்டினாள். ஆலயத்துக்குள் வந்து அதற்கான பூஜையைச் செய்வதாகக் கூறி, உள்ளே வந்தார் சித்தர். அவர் பூஜை செய்ய, வள்ளி தன் பங்கிற்குக் கோயிலில் நாட்டியமாடி உபாசனை செய்தாள். ஆடும்போது அவளது கால் சிலம்பில் ஒன்று கழன்றது. சித்தர் அதை எடுத்து, அவளுடைய காலில் பூட்டினார். மக்கள் அதைக் கண்டு பரிகசித்து, அவதூறு பேசினர்.

தேவாரத் திருவுலா!
தேவாரத் திருவுலா!

இதில் சினம் கொண்ட சித்தர், 'மனப்பக்குவம் இல்லாத மக்களுக்கு மழை எதற்கு’ என எண்ணினார்.  பின்பு, 'இறைவனேகூட எதற்கு’ என்று ஆவேசமாகி, இறைவனை நோக்கிப் பாடினார்...

வெல்லும்பொழுது விடுவேன் வெகுளியை
செல்லும்பொழுது செலுத்துவேன் சிந்தையை
அல்லும் பகலும் உன்னையே தொழுவேன்
கல்லும் பிளந்து கழுவெளியாமே

'கல்லும் பிளந்து’ என்று அவர் பாடியதுமே சிவலிங்கம் பிளந்தது. மக்கள் அதைக் கண்டு பதறினர். தங்கள் குற்றத்தை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டனர்.

'எட்டும் இரண்டும் அறிந்த எந்தனை
எட்டும் இரண்டும் அறிந்த உந்தனை
எட்டும் இரண்டும் ஒன்றதாகுமே’

என மீண்டும் சித்தர் பாட, உடைந்து சிதறிய மூன்று சில்லுகளில், இரண்டு மாத்திரம் மீண்டும் வந்து சிவலிங்கத்தில் ஒட்டிக் கொண்டன. மூன்றாவது சில்லு, ஊருக்கு வெளியே விழுந்தது. அந்த இடமே இப்போது கழுமலம் எனப்படுகிறது.

தேவாரத் திருவுலா!
தேவாரத் திருவுலா!

மூலவரை வழிபட்டு, அம்பாள் சந்நிதியை அடைகிறோம். நின்ற திருக்கோலம்; ஸ்ரீகுயில்மொழியம்மை எனும் ஸ்ரீமதுரசுந்தர நாயகி பாசாங் குசம் தாங்கி, அபயமும் வரமும் காட்டுகிறார். ஆலயத்தின் தல மரம், புன்னை; ஆனால், இப்போது இல்லை. கோயில் மிக அழகாகத் திருப்பணி செய்யப்பட்டு, பல்வேறு கவசங்களுடன் மின்னுகிறது. மீண்டும் வலம் வந்தால், கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர். மூலவர் சந்நிதிக்கு நேர் பின்புறம், மற்றொரு சந்நிதி. ஆறுமுகர் எழுந்தருளியிருக்கிறார்.

சிறிய கோயில்; ஆனாலும், கம்பீரம். வடக்குச் சுற்றைத் தாண்டி நந்தவனம். அதிகப் பராமரிப்பில்லை. நீளமான மண்டபம் போன்ற இடத்தில், வாகனங்களை வைத்துள்ளனர். கடுவெளிச் சித்தர் தவம் செய்த அரச மரத்தடி, குளத்தின் அக்கரையில்தான் இருந்ததாம்.

கோயிலின் ஆறுமுகர் சந்நிதி வெகு விசேஷம். பங்குனி உத்திரப் பெருநாள், கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சுற்று வட்டாரங்களிலிருந்து காவடி எடுத்து வருவார்கள். கார்த்திகை சோமவாரம் (திங்கட்கிழமை) தோறும் உற்ஸவம் நடைபெறும்.

குறைவதாய குளிர்திங்கள் சூடிக்குனித்தான் வினை
பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை
இறைவன் எங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள்
மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே
  

வேத விற்பன்னர்கள் தொழுகின்ற மாகாள நாதரையும் குயில்மொழியம்மையையும் வணங்கி, வெளியில் வருகிறோம்.

(இன்னும் வரும்)
படங்கள்: ஜெ.முருகன்