சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

உடையவர் ஆராதித்த எம்பெருமாள்!

உடையவர் ஆராதித்த எம்பெருமாள்!

உடையவர் ஆராதித்த எம்பெருமாள்!
உடையவர் ஆராதித்த எம்பெருமாள்!
................
உடையவர் ஆராதித்த எம்பெருமாள்!
உடையவர் ஆராதித்த எம்பெருமாள்!

ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் மற்றும் திருநாராயணபுரம் ஆகியவை வைணவ திருத்தலங்களில் குறிப்பிடத்தக்கவை. இவற்றில், ஸ்ரீரங்கம்- போக மண்டபம், திருப்பதி- புஷ்ப மண்டபம், காஞ்சிபுரம்- தியான மண்டபம் என அழைக்கப்படுகின்றன. திருநாராயணபுரம் எனப்படும் மேலுக்கோட்டை, 'ஞான மண்டபம்’ எனும் பெருமை பெற்றது.

பெங்களூருவில் இருந்து சுமார் 160 கி.மீ. தொலைவிலும், மாண்டியாவில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும் உள்ள மேலுக்கோட்டை திருத்தலம், கடல்மட்டத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில், ஓங்கி உயர்ந்து காணப்படும் அற்புதத் தலமாகத் திகழ்கிறது.

அனுதினமும் வணங்கு வதற்கு திருமூர்த்தம் வேண்டும் எனத் தவமிருந்த பிரம்மனுக்கு, திருநாராயணமூர்த்தியின்  விக்கிரகம் கிடைத்தது. ஒரு கட்டத்தில், தனது மகன் ஸனத்குமாரனுக்கு அந்த மூர்த்தத்தைக் கொடுக்க... ஸனத்குமாரன் திரு நாராயணபுரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான் என் கிறது ஸ்தல புராணம்.  

இதையடுத்து, 'இன்னொரு விக்கிரகம் தரக்கூடாதா?’ என விஷ்ணுவிடம் பிரம்மன் முறை யிட, ஸ்ரீதேவி- பூதேவியுடன் கூடிய அழகிய விக்கிரகத் திரு மேனியில் எழுந்தருளினார், திருமால். அதுவே, செலுவ ராயன் (செல்வ நாராயணர்) எனும் உத்ஸவ மூர்த்தமானது.

##~##
பட்டாபிஷேகத்தின்போது, அனைவருக்கும் பரிசுகள் வழங்கிய ஸ்ரீராமன், விபீஷணருக் குத் தான் ஆராதித்த ஸ்ரீரங்க நாதரையே அளித்தார். இதையடுத்து ஸ்ரீராமர் தினமும் ஆராதிப்பதற்காக, செல்வ நாராயணரின் விக்கிரகத் தைத் தந்தார் ஸ்ரீபிரம்மா. பிறகு, ஸ்ரீராமரின் மகனான குசனது மகள் கனக மாலினிக்குச் சீதனமாக அந்த விக்கிரகத்தை வழங்கினர். இதனை, யதுகுல மன்னன் யதுசேகரன் பெருமையுடன் பெற்றுக் கொண்டு பூஜித்தான். ஆக, சூரியவம்சத்தில் இருந்து யதுகுல வம்சத்தை அடைந்தார் ஸ்ரீசெல்வநாராயணர்.  

ஒருமுறை, யாதவகிரிக்கு யாத்திரையாக வந்த பலராமன், திருநாராயணரைத் தரிசித்தார். தனது அரண்மனையில் உள்ள ஸ்ரீசெல்வநாராயணரைப் போலவே இருக்கிறாரே இவர் என வியந்தார். துவாரகையில் இருந்த ஸ்ரீகண்ணனிடம் இதுகுறித்துத் தெரிவித்தார். பிறகு இரண்டுபேரும் செல்வ நாராயணரை திருநாராயணபுரத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கினர். ஆக, திருநாராயணரும் ஸ்ரீசெல்வநாராயணரும் திருநாராயணபுரத்தில் அருள்பாலிக்கத் துவங்கினர்.

உடையவர் ஆராதித்த எம்பெருமாள்!

யாதவாத்ரி, யதிசைலம், தக்ஷிண பத்ரிகாச்ரமம் என் றெல்லாம் அழைக்கப்படும் திருநாராயணபுரத்தின் மூலவர், ஸ்ரீதிருநாராயணன்; தமிழில், ஸ்ரீசம்பத்குமார். உத்ஸவர்- ஸ்ரீசெல்வப்பிள்ளை; தமிழில், செலுவராயர் எனப்படுகிறார். தாயாரின் திருநாமம்- ஸ்ரீயதுகிரிநாயகி; உத்ஸவர்- ஸ்ரீகல்யாண நாயகி, செல்வநாயகி என அழைக்கப்படுகிறாள். ஸ்தல தீர்த்தம்- கல்யாணி தீர்த்தம். விருட்சம்- பதரி (இலந்தை).  சப்த ரிஷிகளின் பிரார்த்தனை யால், கிருத யுகத்தில் திருமால் அவதரித்ததாகவும் நான்கு யுகங்களிலும் அவருக்கு பூஜைகள் நடைபெற்று வருவதா கவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

இங்கே, ஸ்ரீசுதர்சன ஆழ்வார், தனிச்சந்நிதியில் எட்டுக் கரங்களுடன் காட்சி தருகிறார். தனிக்கோயில் நாச்சியாராக அருளும் யதுகிரி நாச்சியார், சகல செல்வங்களையும் வாரி வழங்கும் செல்வநாயகியாகத் திகழ்கிறாள். ஸ்ரீவராகர், பூதேவியை மீட்டெடுத்து வந்தபோது, அவரது மேனியில் பொங்கி வழிந்த வியர்வையே, இங்கே கல்யாணி தீர்த்தமானதாம்! மாசி மாதம், இந்தத் தீர்த்தத்தில், கங்காதேவி வசிப்பதாக ஐதீகம்! குளத்தைச் சுற்றிலும் ஸ்ரீபிந்து மாதவன், ஸ்ரீகாருணிக நாராயணன், ஸ்ரீலட்சுமி  நரசிம்மர், ஸ்ரீமாருதி ஆகியோரையும் தரிசிக்கலாம். குளத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீகஜேந்திர மோட்ச மண்டபம். கஜேந்திர மோட்ச நாளில், ஸ்ரீசெல்வ நாராயணர் முதலையை அழிக்க அம்பு போடும் நிகழ்ச்சி, சிறப்புற நடைபெறுகிறது.

உடையவர் ஆராதித்த எம்பெருமாள்!
உடையவர் ஆராதித்த எம்பெருமாள்!

பங்குனி உத்ஸவ விழாவில், 4-ஆம் நாள் பூச நட்சத்திர நாளில், செல்வப்பிள்ளைக்கு வைரமுடி சேவை சாதிப்பார்கள். முன்ன தாக, அரசு கஜானாவில் இருந்து சிறப்புற எடுத்து வரப்பட்டு, ஸ்வாமிக்கு அணிவிக்கப்படும். அதையடுத்து, நான்கு வீதிகளிலும் வைர முடியுடன் அழகுற உலா வருவார் செல்வப்பிள்ளை. மைசூர் ராஜ பரம்பரையில் வந்த மும்மடி கிருஷ்ணராஜ உடையார், வைரமுடிக்கு இணையாக கிரீடம் மற்றும் ஆபரணங்களை வழங்கினாராம்! இதனை, கிருஷ்ணராஜமுடி என்கின் றனர். ஆனி மற்றும் ஆடி மாதத்தில், கிருஷ்ணராஜ முடி பிரம்மோத்ஸவம், 10 நாள் கொண்டாடப்படுகிறது.

கலியுகத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ...

ஸ்ரீராமானுஜர், கர்நாடக மாநிலம் தொண்டனூரில் வசித்தார். அவரது கனவில் தோன்றிய பெருமாள், திருநாராயண புரத்தில் புற்று ஒன்றில் இருக்கும் தன்னை வெளிக்கொணரும்படியும் தெரிவிக்க... ராமானுஜரும் ஊர் மக்கள் உதவியுடன், பால் மற்றும் தீர்த்த நீரைக்குடம் குடமாக ஊற்றி, புற்றைக் கரைத்தார்.

உடையவர் ஆராதித்த எம்பெருமாள்!

பிறகு, அங்கே நூறு கோடி சூரிய பிரகாசத்துடன் திருநாராயணரின் திரு விக்கிரகம் தென்பட்டது! ஊர் மக்களின் உதவியைக் கண்டு நெகிழ்ந்த ஸ்ரீராமானுஜர், மலைவாழ் மக்களை 'திருக்குலத்தார்’ என அழைத்துக் கௌரவித்தார். இன்றும், உத்ஸவத்தின்போது வாத்தியங்களை இசைக்கிற உரிமை, பட்டியல் வகுப்பைச் சேர்ந்த செலுவய்யனுக்கே உள்ளது.

உடையவர் ஆராதித்த எம்பெருமாள்!

உத்ஸவர் ஸ்ரீசெல்வநாராயணரின் திருமேனி, டில்லி பாதுஷாவின் மகளுடைய அந்தப்புரத்தில் இருப்பதை தனது ஞான திருஷ்டியால் அறிந்த ஸ்ரீராமானுஜர், டில்லி சென்று, பாதுஷாவிடம் விவரம் தெரிவித்தார். 'நீங்களே தேடி எடுத்துக் கொள்ளுங்கள்’ என பாதுஷா தெரிவிக்க... உடனே ஸ்ரீராமானுஜர், 'யதிராஜ சம்பத் குமாரா... என் செல்லப்பிள்ளையே... ஓடி வா, ஓடி வா!’ என்று அழைத்தார். உடனே, ஓடோடி வந்து அவரது மடியில் உட்கார்ந்துகொண்டாராம் எம்பெருமான். அன்று முதல், ஸ்ரீசெல்வநாராயணர், யதிராஜ சம்பத்குமாரன் என அழைக்கப்பட்டார். அதையடுத்து, பாதுஷாவின் மகள் தாம் ஆசை ஆசையாக வைத்திருந்த விக்கிரகத்தைக் காண, திருநாராயணபுரத்துக்கு வந்தாள். கோயில் வாசலுக்கு வந்த நிமிடம்... இறைவன் அவளை ஆட்கொண்டான். வரநந்தி எனும் திருநாமத்துடன், மேலுக்கோட்டை மலையடிவாரத்தில் காட்சி தருகிறாள், இன்றைக்கும்! இவளை 'பீபீ நாச்சியார்’ என்றும் அழைக்கின்றனர்.  

தீர்த்தக்குளத்தின் கிழக்கில், மலையுச்சியில் ஸ்ரீயோக நரசிம்மர் கோயில் உள்ளது. பிரகலாதனுக்கு திருக்காட்சி தந்த இடம் இது; இங்கேயுள்ள நரசிம்ம மூர்த்தம், பிரகலாதனால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்டது என்பர். ஒருமுறை, பெரும் படையுடன் திருநாராயணபுரம் நோக்கி வந்தான் ஹைதர் அலி. அப்போது, அவன் படையிலிருந்த யானைகள், திடீரென நோய்வாய்ப்பட்டன; அப்படியே துவண்டு சுருண்டன.  பிறகு, அங்கே இருந்தவர்களின் ஆலோசனைப்படி, ஸ்ரீயோக நரசிம்மரைப் பிரார்த்திக்க, யானைகள் உடனே குணம் அடைந்தனவாம். இதில் மகிழ்ந்த ஹைதர் அலி, பெரும் பறைக் கருவி ஒன்றை,  நரசிம்மர் கோயிலுக்கு வழங்கினான். பூஜையின்போது, இன்றைக்கும் அந்தப் பறை ஒலிக்கப்படுகிறது. அந்த முழக்கம் சுற்றுப்பட்டு கிராமங்களுக்கெல்லாம் கேட்குமாம்.

மேலுக்கோட்டை பெருமாளை, ஒருமுறையேனும் தரிசியுங்கள்; உங்கள் வாழ்க்கை உயரும்!

படங்கள்: கே.கார்த்திகேயன்