சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

கோயில் நகரம் கும்பகோணம்!

அருள் தரும் ஆலயங்கள் - 8

 
கோயில் நகரம் கும்பகோணம்!
கோயில் நகரம் கும்பகோணம்!
##~##
கு
ம்பகோணம்- திருக்குடமூக்கு, திருக்குடந்தை, சிவ விஷ்ணுபுரம், சாரங்கராஜன் பட்டணம், உபயபிரதான திவ்யதேசம் என்றெல்லாம் போற்றப்படுகிறது இந்த கோயில் நகரம். மகாமக புண்ணிய க்ஷேத்திரமான இங்கு, திரும்பும் திசையெல்லாம் கோயில்கள்தான்! அவை அத்தனையையும் தரிசித்து வழிபட, நம் முன்வினை கர்மமெல்லாம் தொலையும்; இப்பிறவி வாழ்க்கை வளமாகும் என்கின்றன புராணங்கள்.

குடந்தை கோயில்கள் எல்லாவற்றையும் தரிசிக்க இயலவில்லை எனில், மிக முக்கியமான எட்டு கோயில் களையாவது தரிசித்துவர வேண்டும் என்பார்கள் பெரியோர்கள். நாமும் தரிசிப்போமா?

உலகின் ஆதியாய் ஆதிகும்பேஸ்வரர்!

பிரளயம் முடிந்து மீண்டும் உலகையும் உயிர்களையும் படைக்க விரும்பிய பிரம்மன், சிவனாரை வழிபட்டார். சிவபெருமானின் ஆணைப்படி படைப்பு வித்துகளை ஒரு குடத்தில் இட்டு வணங்கிவந்தார். பிரளயம் வந்தபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடம், ஓரிடத்தில் தங்கியது. சிவனார் வேடனாக வந்து அம்பு தொடுத்து குடத்தின் மூக்கை உடைத்து, மீண்டும் படைப்புத் துவங்க பேரருள் செய்தார். அந்தத் தலமே திருக்குடந்தை; இங்கே கோயில் கொண்ட ஈஸ்வரனின் திருநாமம் ஸ்ரீஆதிகும்பேஸ்வரர். இவரை அமுதேஸ்வரர் என்றும் போற்றி வழிபடுவர். ஸ்ரீமங்களாம்பிகையாக அருள்பாலிக்கிறாள் அம்பிகை.

கோயில் நகரம் கும்பகோணம்!

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல்பெற்ற இந்தத் தலத்தில் சிவனார், சுயம்புவாக அருள்வது விசேஷம். அம்மை - அப்பனையே உலகமாகக் கருதி வலம் வந்து பிள்ளையார் ஞானக் கனியைப் பெற்றதுபோல, அடியவர்களும் ஆதிகும்பேஸ் வரர்- மங்களாம்பிகையை வலம் வந்து பேரருள் பெறும் விதம் பிராகாரம் அமைந்திருப்பது சிறப்பு. ஈஸ்வரனும் அம்பிகையும் வருவதற்கு முன்னரே இங்கு வந்து காத்திருந்ததால், இந்தக் கோயிலில் அருளும் பிள்ளையாருக்கு ஸ்ரீஆதி விநாயகர் என்று பெயர்.

மகாமக தீர்த்த மகத்துவம்தான் உங்களுக்குத் தெரி யுமே? 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமகத்தன்றும், வருடம்தோறும் மாசிமகத்தன்றும் புண்ணிய நதிகள் பல சங்கமிக்கும் இந்தத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவதால் நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

கல்வியில் சிறந்து விளங்க, தொழில் துவங்க, திருமணத் தடை விலக, புத்திரபாக்கியம் கிடைக்க, குபேர சம்பத்துகள் கைகூட, ஸ்ரீமங்கள நாயகியை வேண்டி வழிபடுகிறார்கள் பக்தர்கள். ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த அம்பிகைக்கு செம்பருத்தி மாலை சார்த்தி, மனமுருகிப் பிரார்த்தித்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. புகழ்பெற்ற கல் நாகஸ்வரம், ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயிலின் சிறப்பம்சம்.

கோயில் நகரம் கும்பகோணம்!


ஆதிசேஷன் வழிபட்ட ஸ்ரீநாகேஸ்வரர்!

நாகராஜன் பூஜித்து அருள்பெற்றதால், இந்தக் கோயில் ஈஸ்வரனுக்கு ஸ்ரீநாகேஸ்வரர் என்று பெயர்.

பூமியை தாங்கிக்கொண்டிருந்த ஆதிசேஷன்...மக்களின் பாவ பாரம் அதிகமானதால், பூமியைச் சுமக்க முடியாமல் வருந்தினார். உடல் சோர்வு நீங்கவும், புது  சக்தி பெறவும் சர்வேஸ் வரனை வேண்டினார் அவர். அதையேற்று, ஆதிசேஷனுக்கு... அவரின் ஒரு தலை யாலேயே பூவுலகைத் தாங்கும் பேராற்றலைத் தந்தாராம் சிவனார். ஆதிசேஷன் களிப்புற்றார்; பிரம்ம

தேவன் வேதவித்துகளை இட்டுவைத்த கும்பம், வெள்ளத்தில் மிதந்து வந்ததல்லவா? அதிலிருந்த வில்வம் விழுந்த இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். அம்பாளின் திருநாமம் ஸ்ரீபெரியநாயகி.

சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய தேதிகளில், சூரியக் கதிர்கள் ஸ்ரீநாகேஸ்வரரின் மீது விழுந்து வழிபடுவதைக் காணலாம். ஞாயிற்றுக் கிழமைகளில், ராகு கால நேரத்தில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால், சகல நோய்களும் தீரும். மரணவாதை நெருங்காது. ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வழிபட, தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும் என்கிறார்கள்.

கோயில் நகரம் கும்பகோணம்!


வளரும் லிங்கம்... அருளும் விசாலாட்சி!

காமகக் குளத்தின் வடகரையில் அமைந்துள்ளது ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயம். நவகன்னியர் வழிபட்ட ஆலயம். பிரளயத்தின் போது, ஆன்மாக்களை ஆட்கொண்டு தனக்குள் ஐக்கியப்படுத்தி, இறைவன் அருள்பாலித்த ஆலயம். அம்பாள்- ஸ்ரீவிசாலாட்சி; வினைகள் யாவற்றையும் நீக்கியருளும் நாயகி.

கோயிலின் வடக்கு மூலையில் ஸ்ரீராமன் வழிபட்ட லிங்கத்தையும் தரிசிக்கலாம். உயர்ந்த பாணத்துடன் காட்சிதரும் இந்த மகாலிங்கம் நாளுக்குநாள் வளர்வதாக ஐதீகம். இந்தக் கோயிலில் காட்சி தரும் நவகன்னியரை வழிபடுவதால், சகல தோஷங்களும் விலகும்.

கோயில் நகரம் கும்பகோணம்!


சந்திரன் வழிபட்ட சோமேஸ்வரர்!

ந்திரனும் வியாழனும் வழிபட்ட இறைவனை இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம். சந்திரன் வழிபட்டதால் இந்தச் சிவனாருக்கு ஸ்ரீசோமேஸ்வரர் என்று திருநாமம். சுயம்புலிங்கமாக அருள்கிறார். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த ஸ்வாமியை தரிசிப்பதும் வழிபடு வதும் சிறப்பு. இதனால், ஜாதகத்தில் சந்திரன் மற்றும் குருவால் ஏற்படும் குறைபாடுகள் நீங்கி, எதிர்காலம் சிறக்கும். இங்கு அருள்புரியும் அருள்மிகு கல்யாண விநாயகர், கல்யாண வரம் தரும் நாயகர். இவரை, தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் வழிபட்டு, மனமுருகப் பிரார்த்தித்தால், கன்னிப் பெண்களுக்கு மனதுக்கினிய கணவன் வாய்ப்பான் என்பது நம்பிக்கை. அம்பாள்- தேனார்மொழியாள். சகல சௌபாக்கியமும் அருளும் இந்த நாயகியை சோமசுந்தரி என்றும் போற்றுவர்.

ஸ்ரீசோமேஸ்வரர் கோயிலுக்கு 3 வாயில்கள். இந்த ஆலயத்தில் அருளும் முருகனும் வரப்ரசாதியே! மயில் மீது அமர்ந்த கோலத்தில், ஒற்றைக்காலில் பாத ரட்சையுடன் அருள்கிறார். முருகப் பெருமானை இது போன்று வேறெங்கும் தரிசிப்பது அரிது!  

கோயில் நகரம் கும்பகோணம்!


கோரைக்கிழங்கு நைவேத்தியம்!

பிரளயகாலத்துக்கு முன்பே இந்தத் தலத்தில் கோயில் கொண்டுவிட்ட மூர்த்தி, ஸ்ரீஆதிவராகர். சாளக்கிராம மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தாயாரின் திருநாமம் ஸ்ரீஅம்புஜவல்லி.

ராகு- கேது தோஷம் உள்ளவர்கள், ஸ்ரீஆதிவராகர் கோயிலுக்கு வந்து ஸ்வாமிக்கு தீபமேற்றி வழிபட, தோஷங்கள் நீங்குமாம். திருமணத் தடை அகலவும், புத்திரபாக்கியம் பெறவும், கல்வியில் சிறக்கவும், நிலம்-வீடு தொடர்பான பிரச்னைகள் தீரவும் இவரை வழிபடலாம்.

கருவறையில், பூமாதேவியை இடது  மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீஆதி வராகர். பூமியைக் காத்த இந்த சாமிக்கு, தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, கோரைக்கிழங்கு- மாவுருண்டையை நைவேத்தியம் செய்கிறார்கள். மறுநாள் பக்தர்களுக்கும் பிரசாதமாகத் தருகிறார்கள். ஸ்வாமியின் முன்பாக... வராக சாளக்கிராமம் உள்ளது. இதில் சங்கு- சக்கர ரேகைகள் உள்ளன. தினமும் இதற்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது.

வீணையுடன் ஸ்ரீராமதூதன்!

கோயில் நகரம் கும்பகோணம்!

சீதாதேவியுடன் ஸ்ரீராமன் திருமணக்கோலம் காட்டும் கோயில் இது. அவருடன் சகோதரர்களும் அருள்வதை காணக் கண்கோடி வேண்டும். மகா மகத்தன்று ராமரும் சீதையும் மகாமக குளத்தில் எழுந்தருளி தீர்த்தம் வழங்குகின்றனர்.

ஸ்ரீராமனும் சீதையும் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருப்பது இங்கு மட்டும்தான் என்றும், அயோத்தியை அடுத்து ஸ்ரீராமரின் பட்டா பிஷேக கோலத்தை இங்கு மட்டுமே காணலாம் என்றும் பக்தர்கள் சிலாகிக்கிறார்கள். அதேபோல் ஸ்ரீராம தூதனான அனுமன், ஒரு கையில் வீணை யுடனும், மற்றொரு கையில் ராமாயணத்துடனும் காட்சி தருவது விசேஷம்.

இந்தத் தலத்துக்கு வந்து வழிபட, திருமணத் தடைகள் நீங்கி, தியாக மனப்பான்மை கொண்ட வாழ்க்கை துணையைப் பெறலாம். பங்குனி உற்ஸவமும் (இந்த ஆண்டு, 12.4.11 அன்று தேர் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது), வைகாசி- சீதா கல்யாண வைபவமும் இங்குப் பிரசித்தம்.

சகலமும் அருளும் சார்ங்கபாணி!

கோயில் நகரம் கும்பகோணம்!

நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று. வைதீக விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி சயனக் கோலத் தில், ஹேமரிஷியின் மகளான கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் அருள்பாலிக்கிறார் மூலவர்.

வேறெங்கும் இல்லாத வகையில், இந்தக் கோயிலில்  வில்லுடன் காட்சி தருகிறார் பெருமாள். எனவே அவருக்கு சார்ங்கபாணி என்று திருநாமம்!  நாலாயிர திவ்ய பிரபந்தத்தை, நாதமுனிகள் மீட்க காரணமானவர் ஆதலால் 'ஆராவமுதன்’ என்றும் போற்றப்படுகிறார்.

கோமளவல்லி தாயாரை மணக்க, சார்ங்கபாணி தேரில் வந்ததால், சந்நிதியும் தேர் போன்ற அமைப் பில் அமைந்துள்ளது. கருவறைக்கு முன்பாக உள்ள சந்தான கிருஷ்ணனை வழிபட, நினைத்தது நிறைவேறும்; குழந்தை வரம் கிடைக்கும். இந்தத் தலத்து பெருமாள் நேரே வைகுண்டத்திலிருந்து வந்ததால், தனியாக சொர்க்கவாசல் கிடையாது. ஸ்வாமியை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைக்குமாம்.

திருமணத்துக்கு வந்த பெருமாள், தாயாருக்கு விளையாட்டு காட்ட எண்ணி, பாதாளத்தில் ஒளிந்துகொண்டாராம். அதன்பிறகு, தாயார் முன் தோன்றி திருமணம் செய்துகொண்டார். திருமால் ஒளிந்த இடம் பாதாள ஸ்ரீநிவாசன் சந்நிதியாக திகழ்கிறது. மேட்டு ஸ்ரீநிவாசன் சந்நிதியில் திருமணக்கோலம் காட்டுகிறார். இன்னொரு சிறப்பம்சம் என்ன தெரியுமா? பெருமாள் வீட்டோடு மாப்பிள்ளையாக மாம னார் வீட்டில் வசிப்பதாக ஐதீகம். எனவே, இங்கு தாயார் வழிபாடே பிரதானம்!

சக்ரபாணி திருக்கோயில்!

லந்தரன் எனும் அசுரனை அழிக்க, ஸ்ரீசார்ங்கபாணியிடம் இருந்து வெளிப்பட்ட சக்ராயுதம், அசுரனை அழித்த பின்னர், தனிச் சந்நிதி கொண்ட இடம் இது. ஸ்ரீசக்ரத்தாழ்வாரே மூலவராகவும் உற்ஸவராகவும் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு இரண்டு வாசல்கள். சூரியனின் அமைவுக்கு ஏற்ப, ஆறு மாதங்களுக்கு உத்ராயன வாசல் வழியாகவும்; அடுத்த ஆறு மாதம் தட்சிணாயன வாசல் வழியாகவும் செல்ல வேண்டுமாம்.

இங்கு வன்னி மற்றும் வில்வத்தால் அர்ச்சனை நடைபெறுவது விசேஷம். ஸ்ரீசக்ரத்தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம் நடத்தி, திருமஞ்சனம் செய்து வழிபட்டால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

- க.ராஜீவ்காந்தி,
  படங்கள்: ந.வசந்தகுமார்