சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
...............
ஆலயம் தேடுவோம்!
##~##
கா
சியம்பதியில், ஓர் அதிகாலைப் பொழுது! கங்கையில் முங்கி எழுந்தவரின் கைகளில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. என்ன என்று அதிர்ச்சியும் குழப்பமுமாக கைகளால் துழாவி, அதனை அப்படியே வெளியில் எடுத்தவர், ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் திளைத்து நின்றார். அது, பாணலிங்கம். உள்ளங்கை அளவே இருந்த அந்த லிங்கத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்டார்; சிரசில் வைத்துக் கொண்டார்; நெஞ்சில் வைத்துக் கொண்டாடினார்; இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவில் வைத்து, சிட்டுக்குருவியை ஏந்துவது போல் ஏந்திக் கூத்தாடினார். அவர் பெயர் கோவிந்தன். உள்ளங்கை அளவிலான சிவலிங்கத் திருமேனியைக் கண்டெடுத்ததால், 'உள்ளங்கை லிங்கம் கொணர்ந்த நாயனார்’ எனப் போற்றப்பட்டார் அவர்!

உடையவர் எனப் போற்றப்படும் ஸ்ரீராமானுஜருக்குச் சகோதர உறவு, இந்தக் கோவிந்தன். இவர், திடீரென சைவத்துக்கு மாறினார். காசிக்குச் சென்று, கங்கையில் நீராடி, ஸ்ரீவிஸ்வநாதரைத் தரிசித்து, பாண லிங்கமும் கையில் கிடைக்க... அகம் மகிழ்ந்தார்; பூரித்தார்.

அவர் அந்தப் பாணலிங்கத்தை காளஹஸ்தி கோயிலில் வைத்து, பூஜித்ததாகச் சொல்வர்.

காலங்கள் ஓடின. கோவிந்தன் திரும்பவும் தன்னை வைஷ்ணவ சம்பிரதாயத்தில் இணைத்துக் கொண்டார். ஸ்ரீராமானுஜர், கோவிந்தனைத் தனது சிஷ்யர்களுள் ஒருவராக ஆக்கிக்கொண்டார். எம்பார் எனும் திருநாமத்தையும் சூட்டி, அவருக்கு உபதேசித்து அருளினார். அன்று முதல், எம்பார் சுவாமிகள் என அவர் போற்றப்பட்டார்.

ஆலயம் தேடுவோம்!

எம்பார் என்கிற கோவிந்தனுக் காக, ஸ்ரீராமானுஜரின் உத்தரவுப்படி, சந்திரகிரி அரசர் கட்டித்தேவன் யாதவராயன் என்பவன், அழகிய சிவாலயம் ஒன்றை எழுப்பினான் என்கிறது ஸ்தல வரலாறு.

வேங்கி தேசத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்தது சந்திரகிரி. இங்கே, ஊத்துக்காடு எனும் கோட்டம் இருந்தது. இந்த ஊத்துக்காடு எல்லைக்குள், வடதில்லை எனும் கிராமத்தைத் தோற்றுவித்த மன்னன், அங்கேதான் எம்பார் சுவாமிகளுக்காக அழகிய சிவாலயத்தை எழுப்பினான். தில்லையம்பதி எனப்படும் சிதம்பரம் திருத்தலத்துக்கு இணையாக இந்த வடதில்லைத் தலமும் போற்றப்பட வேண்டும் எனும் நோக்கத்துடன், கோயிலுக்கு நிலங்களையும் நிவந்தங்களையும் வாரி வழங்கினான் மன்னன்.

ஆலயம் தேடுவோம்!

நந்தியாறு எனும் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்த இந்தக் கோயில்- காசிக்கு நிகரான தலமாகவும், ஆரணி ஆறு- கங்கைக்கு இணையான தீர்த்தமாகவும் போற்றப்பட்டது. ஆற்றில் நீராடி, இறைவனைத் தொழுதால், பாவங்கள் யாவும் தொலையும்; தோஷங்கள் அனைத்தும் கழியும் என்பது ஐதீகம்! எனவே, இங்கேயுள்ள சிவலிங்கத் திருமேனிக்கு ஸ்ரீபாபஹரேஸ்வரர் என்றே திருநாமம் அமைந்ததாகச் சொல்கின்றனர் மக்கள்.

ஊத்துக்காடு கோட்டம் இன்று ஊத்துக்கோட்டை என மருவியுள் ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது ஊத்துக்கோட்டை. இந்த ஊரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது வடதில்லை கிராமம். இங்குதான், அழகுற அமைந்துள்ளது ஸ்ரீபாபஹரேஸ்வரர் ஆலயம். அம்பாள் - ஸ்ரீமரகதாம் பிகை. ''அற்புதமான கோயில்; சாந்நித்தியமான இறைவன். மூலவருக்கு அருகிலேயே, கருவறையில் உள்ளங்கை லிங்கம் கொணர்ந்த நாயனாருக்குக் கிடைத்த லிங்கத் திருமேனியும் உள்ளது. ஒருகாலத்தில், மகா சிவராத்திரியும் திருக்கார்த்திகை தீபமும் இங்கே அமர்க்களப்படும். ஆற்றில் நீராடி, பாபஹரேஸ்வரரைத் தரிசித்து, தங்களது பாவங்களைப் போக்கிக் கொள்வதற்காக எங்கிருந்தெல்லாமோ ஜனங்கள் திரண்டு வருவார்கள். ஆனால், இன்றைக்குத் தனது மொத்த அழகையும் தொலைத்துவிட்டு நிற்கிறது ஆலயம்!'' என்று வருத்தத்துடன் சொல்கிறார் கார்த்திகேய குருக்கள்.

ஆலயம் தேடுவோம்!

உண்மைதான். ஆலயத்தின் திருப்பணிகள், போதிய நிதி இல்லாததால், ஆமை வேகத் தில் நடந்து வருகின்றன.உள்ளே நுழைந்ததும், அந்தப் பிரமாண்டப் பிராகாரம் நம்மை பிரமிக்க வைக்கிறது. குறுகிய புத்தி உள்ளவர்கள், அதாவது தனக்கென மட்டுமே சிந்தித்து, தனக்காகவே வாழ்கிறவர்கள் இந்த ஆலயத்தின் விஸ்தாரமான பிராகாரத்தில் வலம் வந்தால், சுயநலம் மொத்தமும் சுக்குநூறாகிவிடும்; பொது நலனுடன் செயல்படுவதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ ஆரம்பித்து விடுவார்கள். அத்தனை அழகான, பெரிய பிராகாரம்!

பாபஹரேஸ்வரர் மட்டும் என்னவாம்?! அடேங்கப்பா... பிரமாண்டத் திருமேனி. பலி பீடமும் பிரமாண்டம்தான்! கோபுரம் இல்லாத நுழைவாயிலையும், பிரமாண்ட இறைத் திருமேனிகளையும் பார்க்கும்போது, 'இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகளும் கும்பாபிஷேகமும் சிறப்புற நடந்தால் நன்றாக இருக்குமே?! பூஜைகளும் வழிபாடுகளும் குறையின்றி நடக்கத் துவங்கினால்தானே, நம் பாவங்கள் எல்லாம் பஸ்பமாகும்!’ என்கிற சிந்தனை உள்ளுக்குள் ஓடியது.

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

''பக்தர்கள் வருகிறார்களோ இல்லையோ... அனுதினமும் ஒரு கால பூஜையேனும் செய்தால்தான் எனக்கு நிம்மதி. பள்ளிகொண்ட நிலையில் காட்சி தரும் சிவனாரின் கோயில் (சுருட்டப்பள்ளி), இதோ... இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. அந்தக் கோயிலுக்கு வருகிற எத்தனையோ பக்தர்கள், இந்தக் கோயிலைப் பற்றி அறிந்து, இங்கேயும் வந்து செல்கின்றனர். கோயிலின் திருப்பணிகள் சீக்கிரமே நிறைவுற்று, கும்பாபிஷேகமும் நடந்து விட்டால், எங்கள் வடதில்லை கிராமமே செழித்துவிடும்'' என்று சொல்லிச் சிலிர்க்கிறார் சண்முக குருக்கள்.

இங்கே ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபால தண்டாயுதபாணி, ஸ்ரீஆறுமுகர், ஸ்ரீதுர்கை என அனைத்து மூர்த்தங்களும் பின்னம் அடைந்துவிட்டதால், புதிய இறைத் திருமேனிகளைச் செய்து வைத்துள்ளனர். ஆக, கடவுளர் அனைவரும் திருப்பணிக்காகத்தான் காத்திருக்கின்றனர். நம் பாவங்களைப் போக்கி அருளும் ஸ்ரீபாபஹரேஸ்வரருக்கு நம்மால் முடிந்ததைச் செய்தால், சாந்நித்தியம் மிகுந்த ஆலயத்துக்குக் கைங்கர்யம் செய்த புண்ணியம் நம்மை வந்தடையும்! அது, நூறாக இருந்தாலும் சரி, ஆயிரக்கணக்கில் வழங்கினாலும் சரி... இப்படியரு கைங்கர்யம் செய்யவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நம் சந்ததியினருக்குச் சொத்துக்களை மட்டுமே சேர்த்துப் பலனில்லை; இப்படியான புண்ணியங்களையும் சேர்க்கச் சேர்க்கத்தான் சந்ததி சிறக்கும்; செழிக்கும்.      

''பாவங்களையும் தோஷங்களையும் தீர்த்தருளும் ஸ்ரீபாபஹரேஸ்வரா! தாங்கள் குடி கொண்டிருக்கும் ஆலயத்தைக் கவனிக்காமல் இத்தனை காலம் இருந்ததற்கு, முதலில் எங்களை மன்னித்து அருளுங்கள்'' என்று மனதாரப் பிரார்த்தித்தபடியே வெளியே வந்தோம்.மனதினுள்ளே, அந்தப் பிரமாண்டத் திருமேனி அழுத்தமாக வியாபித்திருந்தது.

நமசிவாய வாழ்க; நாதன்தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க!

  படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்