சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

சரணம் கணேசா..!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

- கபிலதேவநாயனார்

பொருள்: செல்வம், செய்தொழிலில் மேன்மை, வாக்கு வளம், உண்மையான பெருமை, உருவப் பொலிவு... இவை யாவும், ஆனைமுகத்தானை உள்ளன்புடன் வணங்கும் அடியாருக்குக் கைகூடும்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!
##~##
ந்தக் காலத்தில் தாத்தா- பாட்டிகள் தங்களுடைய பேரன்- பேத்தியருக்கு பக்தி உணர்வு ஏற்பட, பிள்ளையார் கதைகளைச் சொல்வார்கள். விநாயகர் வணக்கத்தாலும் நம்பிக்கையாலும் இடையூறுகள் யாவும் விலகிப்போகும் என்பதைப் பாடல்களாகப் பாடிக் காட்டுவார்கள்; பேரக்குழந்தைகளைச் சுற்றிலும் உட்காரவைத்து, பிள்ளையார் வழிபாடு பற்றிய கதை களையும் செய்திகளையும் கற்பனை நயம் கலந்து சொல்லுவார்கள்.

'கருணைவள்ளல் கணபதியைத் தொழு’ என்று பாட ஆரம்பிப்பார் தாத்தா. 'சங்கரிக்கு மூத்தபிள்ளை... சங்கரனார் பெற்ற பிள்ளை’ என்று பாட்டி தொடர்ந்து பாடுவாள். 'மகாவிஷ்ணுவுக்கு மாப்பிள்ளை’ என்று உறவுமுறையும் காட்டிப் பாடுவார்கள். அதுமட்டுமா? 'அப்பம், வடை, தோசை என்றால் ஆசைப்படும் பிள்ளை’ என்று பொக்கை வாய் திறந்து பாடிக்கொண்டே, கடைசியில்...'இப்பிள்ளை யார் சொல்?’ என்று ஒரு கேள்வியும் கேட்பார்கள். உடனே பேரக்குழந்தைகள் ''பிள்ளையார்!'' என்று பதில் சொல்லும்.

இப்படியாக, தாத்தாவும் பாட்டியும் கதை சொல்லச் சொல்ல, பிள்ளையாரின் யானை முகமும், பானை வயிறும், வெள்ளைக் கொம்பும், குள்ளத் தோற்றமும் பிள்ளைகளுக்குக் கண்முன் வந்து நிற்கும். பிறகென்ன... 'தொப்பை அப்பனைத் தொழுவோம் நாங்கள்’ என்று அவர்களும் உற்சாகமாகப் பாடுவார்கள்.

பள்ளிக்கூடத்தில், பிள்ளையாரைப் போற்றும் நாட்டுப் புறப் பாடல்களை ஆசிரியர்களும் பாடுவார்கள்.

'எள்ளுப் பொரியும் இடித்த அவலும்
வள்ளிக் கிழங்கும் வாழைப்பழமும்
அள்ளித் தருவோம் ஆனை முகத்தாய்’

என்று அவர்கள் பாடும்போது, தமக்குப் பிரியமான பண்டங்களைத்தானே விநாயகக் கடவுளும் விரும்புகிறார்

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

என்று பிள்ளைகள் இன்புறுவார்கள். 'ஆறு நூறு தேங்காயும் நூறு நூறு மாம்பழமும்...’ என்று நொடிக்குள்ளே அந்த குண்டு வயிற்றுக்குள் ஜீரணமாகிவிடும் என்று அவர்கள் எண்ணமிடும்போது, பிள்ளையாரின் ஜீரண சக்தியைக் கண்டு வியப்பார்கள். ஆக, நம் முன்னோர் பிள்ளையாரின் வல்லமையை... எவ்வளவு எளிமையாக, எத்தகைய நகைச்சுவையுடன் கலந்து பிள்ளையாருக்கு ஊட்டியிருக்கிறார்கள்?!

அடுத்து, குழந்தைகளுக்கு ஓர் ஆசை வரும்.

தினமும் பூக்களைப் பறித்து பிள்ளையாரின் திருமுடியில் சார்த்தி, கை கட்டி வாய் பொத்தி நிற்பார்கள். தலையில் குட்டிக்கொள்வார்கள். விளக்கேற்றி வைக்கவும் விரும்புவார்கள். தங்களைப் பாதுகாக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். 'நல்வாக்கு வேணும்; செல்வச்செழிப்பு வேணும்; கல்வி ஞானம் பெருகவேணும்’ என்றெல்லாம் பிரார்த்திப்பார்கள்.

இப்படிச் சிறுவயதில் ஏற்பட்ட பிள்ளையார் பக்தி, நாளாக ஆக அவர்களது வாழ்வில் விநாயகருடன் இணை பிரியாத உறவை ஏற்படுத்தி, வாழ்வை சிறக்கச் செய்யும். சிறு வயதில் கிராமங்களில் அரசமரத்தடியிலும் ஆற்றங் கரையிலும் பிள்ளையாரைத் தினமும் வழிபட்டுவிட்டு பள்ளிக்குச் சென்றவர்கள், இப்போது அதுகுறித்து நினைத்துப் பார்ப்பதே ஒரு சுகானுபவம் இல்லையா?!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

தெய்வ நம்பிக்கையுடைய நாம், எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபடாமல் தொடங்க மாட்டோம். எடுத்த காரியம் எளிதாக- இன்பமயமாக வெற்றிபெற வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி வைக்கும் கடவுள் விநாயகரே என்ற நம்பிக்கை நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது. ஒரு வேலையைத் துவங்கும்போது, 'பிள்ளையார் குட்டியாச்சி’ என்று சொல்வது வழக்கம். பிள்ளையார் சுழி போட்டாச்சு

என்று கூறி, காரியத்தைத் துவங்கும் வழக்கம், நம்மிடம் காலம் காலமாக இருந்து வருகிறது. எதை எழுத ஆரம்பித்தாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டுவிட்டே எழுத ஆரம்பிக் கிறோம். சுழி என்பது வளைசல் (வளைவு). விநாயகரின் தும்பிக்கை நுனி வளைந்திருக்கிறதல்லவா?! பிள்ளையார் சுழி, கொம்பும் கோடும் சேர்ந்தது. இரண்டுமே விநாயகரின் தந்தத்தின் பெயர். 'ஏக தந்தர்’ என்பதைத் தமிழில் 'ஒற்றைக் கொம்பன்’ என்பார்கள்.

'ஓம்’ எனும் ஓங்கார எழுத்தின் தனித்தமிழ் வடிவம், ஏறத்தாழ யானை முகத்தின் வடிவம் போலக் காணப் படும். ஓங்கார ஒலியைக் காதால் கேட்க லாம்; அதை எழுதினால் கண்ணுக்குப் புலனாகும். காதால் கேட்பது நாதம்; கண்ணுக்குப் புலனாவது விந்து. நாத தத்துவத்தை வரி (கோடு) போலவும், விந்து தத்துவத்தை புள்ளியிலும் அமைப்பது உண்டு. இரண்டும் சேர்ந்ததே, 'உ’ என்கிற  பிள்ளையார் சுழி ஆகும்.

நாதமும் விந்துவும் ஒன்றுக்கொன்று துணை (சான்று) நிற்கவேண்டும். இதில், சான்று எனும் பதத்தைக் 'கரி’ என்றும் சொல்வர். ஆக, உமை வடிவாகிய 'சுழி’ வடிவமும், சிவ சக்தி சான்றாகிய 'கரி’ வடிவமும் கொண்டு நிற்கும்போது, கணபதியின் வடிவாகிய ஓம்காரம் தோன்றும். எனவேதான், ஏதேனும் எழுதத் துவங்குமுன், ஒரு சுழியும் கோடும் இடுகிறோம். தமிழ் உயிர் எழுத்துக்கள் அனைத்தும், சுழியை அடிப்படையாகக் கொண்டவையே! பிரணவத் துக்கும் ஒலி வடிவமும் வரி வடிவமும் உண்டு. வரி வடிவாக விநாயகரின் திருவுருவும், ஒலி வடிவாக அவரது ஆற்றலும் திகழ்கின்றன.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதன்முதலில் எழுதத் தொடங்கியவர் விநாயகரே! எழுத்து வடிவில் தோன்றிய முதல் நூல் வியாச பாரதமே!

'முத்தமிழ் அடைவினை முற்படுகிரி தனில் முற்பட எழுதிய முதலோனே’ என விநாயகர் துதி திருப்புகழில் போற்று

கிறார் அருணகிரிநாதர். மகாபாரத்தை வேதவியாசர் எடுத்துரைத்தபோது, அந்த மகா காவியம் காலாகாலத் துக்கும் அழியாது அனைவரும் படித்துப் பேறுபெறும் பொருட்டு, விநாயகர் தமது தந்தங்களில் ஒன்றை ஒடித்து, அதையே எழுத்தாணியாகக் கொண்டு எழுதினாராம்!  காஞ்சி மகா சுவாமிகள் இதற்கு அற்புதமான விளக்கம் ஒன்றை சொல்வார்...

''தந்தத்தை எழுத்தாணியாக வைத்துக்கொண்டு ஏன் எழுதினார் விநாயகர்? யானையின் பெருமைக்கு முக்கிய காரணம் அதன் தந்தம்தான்.

'யானை இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பது

தந்தத்தின் மதிப்பை வைத்துத்தான். அப்படிப் பட்ட தந்தத்தை 'பிள்ளையார்’ என்கிற யானை முகத்தோன் ஒடித்து... தமது அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்றுதான் பெரியது என்பதை உலக மக்களுக் குக் காட்டினாராம்.

நியாயத்துக்காக, தர்மத்துக்காக, வித்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதற் காகத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறார் விநாயகர்! ஸ்வாமிக்குக் கருவி என்று தனியாக எதுவும் வேண்டியது இல்லை; அவர் நினைத்தால், எதையும் கருவியாக உபயோகித்துக்கொள்வார் என்பதற்கும் இது ஓர் உதாரணம்.''

ஒருமுறை, தந்தத்தாலேயே அசுரனைக் கொன்றார் பிள்ளையார். அப்போது அது ஆயுதம். பாரதம் எழுதும்போது அதுவே பேனா! உலகத்திலேயே பெரிய புத்தகம் எது என்றால் மகாபாரதம்தான் என்று எவரும் சொல்வார்கள். 'பாரதம் பஞ்சமோ வேத:’ ஐந்தாவது வேதம் என்று அதற்குப் பெயர். மற்ற நாலு வேதங்கள் எழுதாக்கிளவி- அதாவது எழுத்தில் எழுதப்படாமல், காதால் கேட்டு மனப்பாடம் பண்ணியே ரக்ஷிக்கப்பட வேண்டியவை. ஐந்தாவது வேதமான மகாபாரதம் எழுதிவைக்கப்பட்டது.

ஆக, எழுத்தைக் கண்டுபிடித்த கருணைக் கணபதிக்கு வணக்கம் செலுத்தும் விதமாக- நன்றி அறிதலைக் காட்டும் விதமாக... நாமும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறோம். ஆனைமுகத்தானின் அளப்பரிய மகத்துவங்களும் கதைகளும் அடுத்தடுத்த இதழ்களில்!

- பிள்ளையார் வருவார்...