மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தி.தெய்வநாயகம்

தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
ந்தப் பிறப்பில் மட்டுமல்ல, ஏழேழு பிறவிக்கும் நமக்குக் காப்பு, ஸ்ரீமந் நாராயணனின் பாதாரவிந்தங்களே! மனைவி-மக்கள், உற்றார்-உறவுகள், சொத்து-சுகங்கள் ஆயிரம் இருந்தாலும், இந்த ஜென்மம் முடிந்தபின், நம்மைப் பற்றித் தொடர்வது, எம்பெருமானின் திருவருள் ஒன்றுதான்.

கோதை ஆண்டாளும், 'இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்முடையவன் நாராயணன் நம்பி...’ என்று நாச்சியார் திருமொழியில் குறிப்பிடுகிறாள். ஆமாம்...

இறைவனுக்கும் நமக்குமான உறவு ஒன்றே நிலையானது.

இந்த சூட்சுமத்தை அறிந்துகொண்டதால்தானே ரிஷிகளும், மகான்களும், ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும்... இவர்களுக்கெல்லாம் முன்னதாக கிருத யுகத்தில் பக்த பிரகலாதனும் பரந்தாமனின் பாத கமலங்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டார்கள். அதற்கு, அவர்களுக்கு உறுதுணை புரிந்தது... 'ஓம் நமோ நாராயணாய’ எனும் எட்டெழுத்து மந்திரம்!

மந்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய ரிஷி, தேவதை, சந்தஸ் எனத் தனித்தனியே உண்டு. ஆனால், எல்லா உயிர்களிலும் உயிராகவும் உடலாகவும் திகழும் பரம்பொருளே அஷ்டாட்சர மந்திரத்தின் தேவதையாகவும் ரிஷியாகவும் சந்தஸாகவும் திகழ்கிறாராம்! எனில், இதை உச்சரிப்பதால் கிடைக்கும் நன்மையைச் சொல்லவும் வேண்டுமா?! 'மலைகளின் அருகில் அல்லது மனித நடமாட்டம் இல்லாத அமைதியான சூழலில் தனித்திருந்து, இதயத்தில் என்னை இருத்தி, அஷ்டாட்சர மந்திரம் ஜபிக்க... சகல சௌபாக்கியங்களும் தருவேன்’ என்று பகவானே அருளியிருப்பதாகச் சொல்வார்கள் ஆன்மிக ஆன்றோர்கள்.

நாமும் அனந்தனை மனதில் இருத்தி, அஷ்டாட்சர மந்திரத்தை உதட்டில் வைத்து, பரம்பொருள் சொன்னது போலவே மலைகளை நாடிச் செல்வோம்! எட்டெழுத்தால் தன்னைக் கட்டிப்போட்ட பாலகன் பிரகலாதனுக்காக அவதரித்த நரசிம்மப் பரம்பொருளின் மலைக்கோயில்கள் சிலவற்றைத் தரிசித்து வருவோம்!

திருவருள் தரும் திருக்கடிகை

தசாவதாரம் திருத்தலங்கள்!

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது சோளிங்கர். ஒரு கடிகைப் பொழுது அதாவது சுமார் அரை மணி நேரம் (ஒரு கடிகை - 24 நிமிடம்) தங்கியிருந்தாலே மோட்சம் தரும் அற்புதத் தலம் இது. எனவே, திருக்கடிகை என்று திருப்பெயர்! ஆதி அந்தம் இல்லாத பரம்பொருளின் பிரமாண்டத்தை உணர்த்துவது போல் ஓங்கியுயர்ந்து திகழ்கிறது சோளிங்கர் மலை. அடிவாரத்தில் இருந்து சுமார் 1305 படிகள் ஏறிச் சென்று ஸ்ரீயோக நரசிம்மரை தரிசிக்க வேண்டும்.

இரண்யகசிபுவை அழித்தும் ஆக்ரோஷம் தணியாத நரசிம்மருக்கு, பிரகலாதனின் பால்வடியும் முகம் கண்டு கோபம் தணிந்தது. பிறகு, உலக மக்கள் யாவருக்கும் அருளும் விதம் கோயில் கொண்டு, யோகத்தில் ஆழ்ந்த தலமே இந்த சோளிங்கர். சோளிங்கரின் மேன்மை அறிந்த சப்த ரிஷிகள், பிரகலாதனுக்கு அருளிய ஸ்ரீநரசிம்மரின்

தரிசனத்தை காண விரும்பி இங்கே வந்து தவம் செய்தனராம். அப்போது, கும்போதரர், காலகேயர் ஆகிய அசுரர்களின் கொட்டம் இங்கு அதிகம். இவர்களால் முனிவர்களின் தவத்துக்கு பங்கம் நேரக்கூடாது என்று விரும்பிய இறைவன், அனுமனிடம் சங்கு- சக்ராயுதத்தைக் கொடுத்து அசுரர்களை அடக்கும்படி பணித்தார். அதன்படியே இந்திரத்யும்னன் எனும் மன்னனின் சைனியத்துடன் சென்று அசுரர்களை அழித்தார் அனுமன். அதன் பிறகு, முனிவர்களுக்கும் அனுமனுக்கும் காட்சி தந்தார் ஸ்ரீநரசிம்மர். அதுமட்டுமா? ஸ்ரீநரசிம்மரின் ஆணைப்படி அனுமனும் சங்கு- சக்கரத்துடன் அருகில் உள்ள சின்ன மலையில் யோக நிலையில் கோயில் கொண்டாராம்!

மலையின்மீது அழகிய ராஜகோபுரத்துடன் திகழும் கோயிலில், ஸ்ரீயோக நரசிம்மருக்கும் அமிர்தபலவல்லித் தாயாருக்கும் தனித்தனி சந்நிதிகள். கருவறையில், ஹேம கோட்டி விமானத்தின் கீழ், சதுர்புஜநாயகராக கிழக்கு திருமுக மண்டலமாக அருள்கிறார் ஸ்ரீநரசிம்மர்.

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே

- எனத் திருமங்கையாழ்வார் போற்றும் இந்தத் தலத்தின்

ஸ்ரீயோக நரசிம்மர், வருடத்தில் 11 மாதம் யோகத்தில் ஆழ்ந்திருப்பாராம். அவர் கண் விழித்திருக்கும்  கார்த்திகை மாதத்தில்... ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்வாமியை வழிபடுவது விசேஷம். தை மாதம் 3-ஆம் நாள் ஸ்வாமியே கிரிவலம் வருவது இந்தத் தலத்தின் சிறப்பு.

இங்கு வந்து அடிவாரத்தில் இருக்கும் தக்கான் குளத்தில் நீராடி, விரதமிருந்து, மலைக்கு மேல் ஏறி ஸ்வாமியைத் தரிசித்து வழிபட்டால், பில்லி-சூனியம் போன்ற சகல தீவினைகளும், பிணிகளும் நீங்குமாம்!

திருமார்பில் திருமகள்!

நாமக்கல்- கம்பீரமாக அமைந்திருக் கும் கோட்டை- கொத்தளங்கள் வரலாற் றுச் சிறப்பையும், திருக்கோயில்கள் ஆன்மிக மகிமையையும் பறைசாற்றும் அற்புதத் திருத்தலம் இது.

லட்சுமணனுக்காக சஞ்சீவி மூலிகை எடுக்கச் சென்ற அனுமன், வழியில் கண்டகி நதிதீரத்தில் அற்புதமான சாளக்கிராம கல் ஒன்றைக் கண்டு, எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டார். அவர் திரும்பி வரும் வழியில், பூமியில் கமலாலயக் குளத்தைக் கண்டு தரையிறங்கி, சற்றே களைப்பாறினார். அது, லட்சுமிதேவியின் தபோவனமாக இருந்தது. சாளக்கிராமத்தைக் கீழே வைத்துவிட்டு, எம்பெருமானை தியானித்து தவம் செய்யும் தாயாரை வழிபடச் சென்றார் அனுமன். அவர் திரும்பி வருவதற்குள், சாளக்கிராமம் பெரும் மலையாக வளர்ந்து விட்டதாம்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

அதேபோல்... களைப்பாறத் தரை இறங்கிய அனுமன், அங்கு திருமகள் தவமிருந்து வழிபடுவதைக் கண்டார். தேவியை வணங்கி தவத்துக்கான காரணம் கேட்க, திருமாலை ஸ்ரீநரசிம்ம வடிவில் தரிசிக்க வேண்டி தவமிருப்ப தாகச் சொன்னார் அன்னை. பிறகு, சாளக்கிராமத்தை அவரிடம் தந்த அனுமன், தான் நீராடிவிட்டு வந்து பெற்றுக் கொள்வதாகச் சொன்னார். 'குறிப்பிட்ட நேரத்துக்குள் வராவிட்டால் சாளக்கிராமத்தை தரையில் வைத்துவிடு வேன்’ எனும் நிபந்தனையுடன் அதைப் பெற்றுக்கொண்டார் லட்சுமிதேவி. அனுமன் வரத் தாமதமாகவே, லட்சுமி தேவி சாளக்கிராமத்தை தரையில் வைத்த தாகவும், அது பெரும் மலையாக வளர, அந்த மலையின் மீது ஸ்ரீநரசிம்மர் தோன்றி திருமகளுக்கு அருளியதாகவும்  ஒரு வரலாறு சொல்வர்.

கோட்டையில் பிரமாண்ட திருவுருவத்துடனும், குளக்கரையில் சிறிய வடிவின ராகவும் அருள்புரிகிறார் அனுமன். அனுதினமும் தன்னைத் தேடி வரும் அடியவர்களுக்கு வரம் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீஆஞ்சநேயர், தனக்கு அருள் வேண்டி எதிர்நோக்கி இருப்பது, ஸ்ரீயோக நரசிம்மரின் திருக்கோயிலை!

அனுமனை எதிர்நோக்கியபடி அமைந்துள்ளது ஸ்ரீநரசிம்மர் சந்நிதி. மலை யைக் குடைந்து சந்நிதி அமைத்திருக் கின்றனர். திருமகள் இவர் திருமார்பில் உறைந்திருப்பது விசேஷ அம்சம்! குடைவரை மூர்த்தி என்பதால், ஸ்வாமிக்கு அபிஷேகம் கிடையாது; உற்ஸவருக்கே திருமஞ்சனம் நடைபெறுகிறது.

இவரது சந்நிதிக்கு வடக்கே ஸ்ரீவைகுண்ட நாராயண  மூர்த்தியைத் தரிசிக்கலாம். ஸ்வாமி நரசிம்ம அவதாரம் எடுப்பது குறித்து, மும்மூர்த்தியரும் கூடி ஆலோசித்தது இங்குதான் என்கிறார்கள்.  இந்தத் தலத்தில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீநாமகிரி தாயாரும் வரப்பிரசாதியே! கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்க இந்தத் தாயாரை வழிபடுவது சிறப்பு.

மலைக்கு இடப்புறம் பேட்டையில் ஸ்ரீரங்கநாதர் கோயில் கொண்டிருக்கிறார். தந்தை காசியப முனிவரிடமே சாபம் பெற்ற கார்க்கோடகன், விமோசனம் வேண்டி இங்கு தவம் செய்தான். அவனுக்குக் காட்சி தந்த பெருமாளிடம், தன் மீது சயனித்து அருளும்படி வேண்டிக்கொண்டான். அதன்படியே கார்க்கோடகன் மீது சயனித் திருக்கிறார் இந்த ரங்கநாதர்.

நினைத்தது நிறைவேறவும்; தொழில் சிறக்கவும், உயர்பதவி வாய்க்கவும், எதிர்காலம் வளமாகவும் சனிக்கிழமை களில் நாமக்கல் அனுமனையும் ஸ்ரீநரசிம்ம ரையும் ஸ்ரீநாமகிரி தாயாரையும் வழிபட்டுச் செல்கின்றனர் பக்தர்கள்!

- அவதாரம் தொடரும்...