சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

ஆர்.கே.பாலா

இறையருளைத் தேடி..!

திருப்பட்டூர் அற்புதங்கள்!
##~##
தி
ருப்பட்டூர்! திருச்சி, சமயபுரத்துக்கு அருகில் உள்ள இந்தத் தலத்தை அறிந்திராதவர்களே இருக்க முடியாது. குறிப்பாக, சக்தி விகடன் வாசகர்கள் பலருக்கும் பரிச்சயமான அற்புதத் தலம், திருப்பட்டூர்.

''சக்தி விகடன்ல எங்க கோயிலைப் பத்தி வந்ததைப் படிச்சுட்டு பெங்களூரு, சென்னை, திருநெல்வேலின்னு எங்கிருந்தெல்லாமோ ஜனங்க திரண்டு வர்றாங்க. சக்தி விகடனுக்கு நன்றி!'' என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஆலயத்தின் அர்ச்சகர்களும் ஊழியர்களும் தெரிவித்தனர்.

''நம்ம சக்தி விகடன்ல திருப்பட்டூர் கோயிலைப் பத்திப் போட்டிருந்ததைப் படிச்சுட்டுத்தான், அப்படி யரு கோயில் இருக்கிறதே எங்களுக்குத் தெரிஞ்சுது. உடனே போய்த் தரிசனம் பண்ணிட்டு வந்தோம்!'' என்று வாசகர்களில் பலரும் கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் தெரிவித்திருந்தனர்.

திருப்பட்டூர்... அற்புதங்கள் கொட்டிக் கிடக்கிற தலம்; ஆச்சரியங்களும் பரவசங்களும் நிறைந்திருக்கிற பூமி! இதை அறிந்தவர்கள் வியந்து சொல்ல... மகிழ்ந்து போனோம்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

அந்த ஆச்சரியங்களில் அமானுஷ்யங்களும் உண்டு; இறை அற்புதங்களும் உண்டு! திருப்பட்டூர் திருத்தலத்தின் மகிமை, லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் சென்றடையும் வகையில்... இதோ, ஒரு இனிய மினி தொடர்!

தன்னை அறிவதும் தனக்குள் இருப்பதைத் தேடுவதுமே இறைவனை அடைவதற்கான பாதைகள்,  வழிமுறைகள் என விவரிக்கின்றன இந்து தர்மசாஸ்திரங்கள். உலகில் உள்ள ஞானிகளும் முனிவர்களும் அப்படி, தங்களை அறிந்து, தங்களுக்குள் மூழ்கி, இறைவனை அடைவதற்கான பாதையில் பீடுநடை போட்டனர்; இறையருளையும் பெற்றனர்.

அந்த முனிவருக்கு, சிவனார் மீது கொள்ளைப் பிரியம்! சிவலிங்கத்துக்கு பூஜைகள் செய்வதென்றால், தன்னையே மறந்துவிடுவார். வில்வங்களைப் பறித்து லிங்கத்திருமேனியில் அள்ளி அள்ளி அர்ச்சித்துக் கொண்டே இருப்பார்.

அடர்ந்த வனத்தில் நடந்த பூஜை அது. அந்த முனிவர் தன் கைக்கு எட்டிய கிளைகளில் இருந்த வில்வத்தையெல்லாம் பறித்து ஸ்வாமிக்குப் போட்டு விட்டார்.

ஆனாலும், ஆசை தீரவில்லை. 'இன்னும் ஏழெட்டு கை அளவுக்கு வில்வம் பறித்து அர்ச்சித்தால் நன்றாக இருக்குமே’ என்று யோசித்தார்.

''ஸ்வாமி, என் சிவனே! உன்னைச் சரணடைந்து, சிவலோகத்தில் ஐக்கியமாகிற நாள் எந்நாளோ? ஆனால், அதற்கு முன்னதாக எனக்கொரு வரம் தாயேன்! வில்வ மரத்தில் ஏறி, போதும் போதும் என்கிற அளவுக்கு வில்வம் பறித்து, உன்னை அர்ச்சிக்கவேண்டும். மரத்தின் உச்சி வரை ஏறி, வில்வம் பறிப்பதற்கு வசதியாக, என் கால்களைப் புலிகளின் கால்களைப் போன்று மாற்றி விடு!'' எனக் கண்ணீருடன் வேண்டினார்.

பக்தனின் கோரிக்கையைக் கேட்டுச் சும்மா இருப்பாரா, சிவபெருமான்?! அதுவும், 'அந்தப் பக்தன் தனக்காகவா கேட்கிறான்?! குளிரக் குளிர வில்வத்தை எனக்குச் சமர்ப்பிப்பதற்காகத்தானே கேட்கிறான்’ என மகிழ்ந்தவர், அந்த நிமிடமே வரம் தந்தார். அந்த முனிவரது கால்கள் புலியின் கால்களைப் போன்று உருமாறின! இதில் மனமுருகினார் அவர். 'தென்னாடுடைய சிவனே போற்றி!’ எனச் சொல்லிவிட்டு, விறுவிறுவென மரத்தின் மீது ஏறினார். அவரால் மரத்தின் உச்சி வரை சுலபமாகச் செல்லமுடிந்தது. சந்தோஷமாகவும் குதூகலமாகவும் வில்வத்தைப் பறித்தார்; இறைவனுக்குப் படைத்தார். மெள்ள மெள்ள, அந்த முனிவரின் நிஜப் பெயர் மறைந்து, ஊர்மக்கள் அனைவரும் அவரை 'வியாக்ரபாதர்’ என்றே அழைத்தனர். வியாக்ரபாதர் என்றால், 'புலியின் கால்களைக் கொண்டவர்’ என்று அர்த்தம்.  

திருப்பட்டூர் அற்புதங்கள்!

அடேங்கப்பா... இறைவனை அடைவதற்கு, எத்தனை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்?! 'தவமாய் தவமிருந்து’ என்று சொல்வார்களே... அதுபோல், கடும் தவமிருந்து சிவானுபூதியைப் பெற்ற முனிவர், இவர்.  

பாரத பூமியில், குறிப்பாக தெற்கேயுள்ள பல தலங்களுக்கும் சென்று ஈசனைத் தரிசித்தவர், வியாக்ரபாதர். அடர்ந்த வனப்பகுதிகளில் மரங்களினூடே பர்ணசாலை அமைத்துக் கடும் தவம் புரிந்தார்.

தமிழகத்தில், புலியூர் என்ற பெயரில் அமைந்த திருத்தலங்களுக்கும் வியாக்ரபாதருக்கும் தொடர்பு உண்டு என்பார்கள். இவர் அந்தத் தலங்களில் மகேஸ்வரனை வழிபட்டதால், அந்த ஊருக்கு இவரது நினைவாகப் புலியூர் என்றே அமைந்துவிட்டதாகக் ஸ்தல புராணங்கள் பலவும் தெரிவிக்கின்றன.

மனம் முழுவதும் சிவநாமத்துடனும் சிவ பக்தியுடனும் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி தவம் செய்த அற்புதமான தலம், திருப்பட்டூர். இங்கே ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோயில் உள்ளது. இந்த ஆலயத்தின் திருக்குளம் விசேஷமானது; வினைகள் யாவற்றையும் தீர்க்கக்கூடியது. குறிப்பாக, வியாக்ரபாத முனிவரால் உண் டாக்கப்பட்டது, இந்தத் தீர்த்தக் குளம்! பறவைப் பார்வையில், அதாவது மேலிருந்தபடி பார்க்கும்போது, தீர்த்தக் குளத்தின் வடிவம், கிட்டத்தட்ட புலியின் கால்களைப் போலவே, வியாக்ரபாதரின் திருப்பாதத்தின் அமைப்பைப் போலவே இருக்கும்.

ஏன் இப்படி..? அதற்கும் சுவாரஸ்யமான ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது.

திருப்பட்டூர், அன்றைக்கு வில்வ மரங்கள் சூழ்ந்த அடர்ந்த வனமாக இருந்தது. சிவபூஜை செய்வதற்கு உகந்த இடம் இது எனக் கருதிய வியாக்ரபாதர், வனத்தின் வடக்கில், அழகிய சிவலிங்கத்தை வைத்துப் பூஜைகள் செய்து வந்தார்.

தினமும் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து, வில்வங்களால் அர்ச்சனை செய்து, தவத்தில் இறங்கி விடுவார் அவர். ஆனால் ஏனோ, சில நாட்களாகவே அவர் மிகுந்த வருத்தத்துடனும் வாட்டத்துடனும் இருந்தார்.

அந்த வனத்தின் நாலாதிசையிலும் தண்ணீர் வற்றிக் கொண்டே வந்தது. 'இந்த நிலை நீடித்தால், சிவனாருக்கு எப்படி அபிஷேகம் செய்வது?’ என்பதுதான், வியாக்ரபாதரின் பெருங்கவலை!

ஒருநாள், விடிந்ததும் பார்த்தால்... வனப்பகுதிகளில் ஓரிடத்தில்கூட, ஒருசொட்டுத் தண்ணீரைக் காணோம். 'அட ஈஸ்வரா... இதென்ன சோதனை!’ என்று தலை கவிழ்ந்து பூமியைப் பார்த்தார்; 'மழை ஏதும் வந்தால் தேவலை’ என்று வானத்தைப் பார்த்தார். சட்டென்று மலர்ந்தார்; பரவசம் பொங்க எழுந்தார்!

'என் சிவனே... என் சிவனே’ என சிவலிங்கத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டார்; கண்ணீர் பெருக்கெடுக்க அண்ணாந்து பார்த்தபடியே இருந்தார் வியாக்ரபாதர்!

அங்கே... வானத்தில், கங்கை நீரை எடுத்துக்கொண்டு, வேகவேகமாகப் பறந்து வந்துகொண்டிருந்தது யானை ஒன்று!

- பரவசம் தொடரும்
படங்கள்: மு.நியாஸ் அகமது