சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

வீட்டில் ஸ்ரீராமாயணம் படிக்கும்போது பட்டாபிஷேகத்துடன் முடித்துக்கொள்கிறார்கள். உத்தர காண்டம் படிப்பதில்லையே... ஏன்?

- ஏ.சுந்தரம், சென்னை-78

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஸ்ரீராம பட்டாபிஷேகம் கைகேயியின் தலையீட்டால் தடைப்பட்டது. அதன்பிறகு 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீராமபட்டாபிஷேகம் நடந்தேறியது. பட்டாபிஷேகம் என்ற இலக்கு முடிந்ததால், கதையை முடித்து விடுகிறார்கள்.

கதாநாயகன், கதாநாயகியைச் சந்திப்பான்; காதல் முளைக்கும்; அவர்களுக்கு இடையூறாக வில்லன் தோன்றுவான்; அவனை முறியடித்து வெற்றி பெற்று, காதலியைக் கைப்பிடிப்பான் காதலன். திருமணம் நடைபெறும். அதோடு 'சுபம்’ என்று திரையில் தென்படும். நாமும் கதை முடிந்துவிட்டதாக எண்ணி, வீடு திரும்புவோம். திருமணத்துக்குப் பிறகு, அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று கேள்வி எழுப்பமாட்டோம்.

பட்டாபிஷேகத்துக்குப் பிறகு அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று அறிய விருப்பமுள்ளவர்கள், உத்தரகாண்டம் படிக்கலாம். அதைப் படிக்கக்கூடாது என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. பட்டாபிஷேகத்துக்குப் பிறகு படிக்கவில்லை எனில், அவர்களின் விருப்பமின்மையே அதற்குக் காரணம்.

ராவணனின் இடையூறு, ஸ்ரீராமனிடமிருந்து சீதையைப் பிரித்தது. ராவணனை அகற்றி சீதையோடு இணைந்தார் ராமர். பட்டாபிஷேகத்துக்கு பிறகு, சலவைத் தொழிலாளியின் இடையூறால் சீதையைப் பிரிந்தார். பிறகு, தன்னுடைய மகன்களான லவ-குசர்களின் சந்திப்பால் நிம்மதி பெற்றார் என்கிற பகுதியையும் படிப்பதில் எந்தத் தடையும் இல்லை. ஸ்ரீராமனின் உயர்ந்த குணங்கள் உத்தர காண்டத்தில் விளக்கப்படுவதால், அவரை முழுமையாக அறிந்துகொள்ள அதையும் படிக்கலாம்.

சம்பிரதாயமாக ஏற்படும் சில நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது சரிதான். பட்டாபிஷேக கோலத்துடன் திகழும் ஸ்ரீராமனை மனதில் இருத்தி அவரோடு இணைந்துவிடலாம். அதுவும் சிறப்புதான். ஆனாலும், ராமாயண காவியத்தை முழுமையாகப் படித்துதான் மகிழுங்களேன்.

வெண்கலத் தட்டு ஒன்றில் அரிசி பரப்பி, அதன் மீது காமாட்சியம்மன் விளக்கை ஏற்றி வைத்து வழிபடுகிறேன். சிலர், மஞ்சள்- குங்குமம் கரைத்த ஆரத்தியில்தான் விளக்கை வைக்கவேண்டும் என்கிறார்கள். இதில் சரியான நடைமுறை என்ன?

- தேஜஸ்வி, ஈக்காட்டுத்தாங்கல்

தரையில் மெழுகிக் கோலம் இட்டு, விளக்கை அதில் வைத்து தீபமேற்றி வழிபடுவது சிறப்பு. குத்துவிளக்குக்குப் பாதம் உண்டு. அதற்கு மேல் தண்டு; அதற்கும் மேல் இலை. அதில் எண்ணெய் மற்றும் திரி போட்டுத் தீபம் ஏற்றுவோம்.

இப்படியிருக்க, விளக்கை எதில் இருத்துவது என்பது குறித்துப் பலவாறு சித்திரித்துக் குழப்புவதும் குழம்புவதும் வேண்டாமே! இன்றைய நாட்களில், மனம் போனபடி பரிந்துரை அளிப்பவர்கள் ஏராளம். அவர்கள் சொல்வதை யெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

எனவே, வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். விளக்கு வைக்கும் விதத்தில் சிந்தனையைத் திருப்பிவிடாதீர்கள். கோலத்தில் விளக்கை வைத்து வழிபடுங்கள்.

திதிகளில் எட்டாவதான அஷ்டமியை நல்ல காரியங்களுக்குத் தவிர்ப்பது ஏன்? கோகுலாஷ்டமியைப் போன்று அஷ்டமியில் கொண்டாடவேண்டிய வழிபாடுகள், விரதங்கள், தெய்வங்கள் என்னென்ன?

- ப.கந்தகுரு, திருப்பரங்குன்றம்

நல்ல காரியங்களுக்கு அஷ்டமியைத் தவிர்ப்பது, கெட்ட காரியங்களுக்கு சேர்ப்பது என்கிற பாகுபாடு சாஸ்திரத்தில் இல்லை. தேய்பிறை அஷ்டமியில் திருமணம் ஆகலாம் என்று கூறுகிறது முஹூர்த்த பதவி (இஷ்டா : கிருஷ்ணாஷ்டமீ...). கடவுள் வழிபாடு வேறு. நமது விருப்பத்தை செயல்படுத்தும் சடங்குகள் வேறு. ஸ்ரீகிருஷ்ணர் அஷ்டமியில் தோன்றினார். ஆகையால் அவரது பிறந்த நாளை அன்றுதான் கொண்டாட வேண்டும்.

##~##
கேட்டை நட்சத்திரத்தில் ஒருவர் பிறந்திருக்கிறார் எனில், அவரது அறுபதாவது கல்யாணம், செவ்வாயுடன் சேர்ந்த கேட்டையில் நிகழும். அதற்காக, அந்த வைபவத்தைத் தவிர்க்கமுடியாது; அன்றுதான் செயல் படுத்தியாக வேண்டும்.அம்பாளை ஆராதனை செய்வதற்கு, அஷ்டமி சிறப்பு என்று புராணங்கள் சொல்லும். நவராத்திரியின்போது, அஷ்டமி துவங்கி மூன்று நாட்கள் கலைமகள் ஆராதனை உண்டு. இதில், நல்ல காரியங்களுக்கு வேண்டாம் என்று நாம் விலக்கி வைக்கும் நவமியும் சேர்ந்து வரும். எண்ணிக்கைக்கு நல்லது- கெட்டது என்கிற பாகுபாடு இல்லை; நம் மனம்தான் நல்லது- கெட்டதை நிர்ணயிக்கிறது!

சாஸ்திரமே  அதன் தரத்தை நிர்ணயித்து, அஷ்டமியை எந்த விஷயத்துக்கு சேர்க்கலாம், சேர்க்கக்கூடாது என்பதைச் சொல்லும். அதைக் கேள்வி கேட்கக்கூடாது. அதற்குப் பெயர்தான் சாஸ்திரம். ஸ்ரீராம நவமியும் மஹாநவமியும் கொண்டாடுவோம். அஷ்டமியில் முன்னோர் ஆராதனை உண்டு. ஆனால், அஷ்டமியில் வேதம் ஓதமாட்டார்கள்.

எல்லாத் திதிகளிலும் விரதங்களும் தேவதாராதனமும் உண்டு. 15 திதிகளிலும் வரும் வழிபாட்டு முறைகளையும் தேவதாராதனைகளையும் தர்மசாஸ்திர நூல்கள் விளக்கிக் கூறுகின்றன. அந்த நூல்களைப் பார்த்து அந்தந்த திதியில் வரும் வழிபாடுகள், விரதங்கள் அத்தனையும் தெரிந்து கொள்ளலாம். பூஜா-வழிபாடுகள் குறித்த புத்தகங்களும் கிடைக்கும். கேள்வி - பதிலில் பட்டியலிட்டுக் கூற இடம் போதாது!

எட்டுக்கு தனிச்சிறப்புகள் பல உண்டு. செல்வம்- எட்டு; திக் கஜங்கள்-8; ஈசனும் எட்டு வடிவில் தோன்றுவான்; அவருக்கு அஷ்டமூர்த்தி என்று பெயர்; ஒரு தினத்தின் எட்டாவது பகுதியை குதபகாலம் என்பார்கள். 8-வது வயதில் பூணூல் கல்யாணம். எட்டு வயதை எட்டிய கன்யகை, 'கௌரீ’ என்ற சிறப்பைப் பெறுகிறாள். காயத்ரியின் எழுத்து எட்டு. நாராயண மந்திரத்தின் எழுத்து எட்டு. ஒரு நாளைக்கு எட்டு யாமங்கள் உண்டு. திக்கும் எட்டு, அதன் காவலர்களும் எட்டு. இப்படி எட்டில் அடங்கும் விஷயங்கள் ஏராளம். எட்டாவது திதியான அஷ்டமியும் சிறப்பே!

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சுபகாரியங்கள் நடைபெறும் வேளையில், மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்? மாவிலையின் மகத்துவத்தை அறிந்துகொள்ள விரும்புகிறேன்!

- வி.ரவிச்சந்திரன், சென்னை-18

  தோரணத்தில் மாவிலை மட்டுமே இடம்பெறும் என்று சொல்ல முடியாது. தென்னங்கீற்று கொண்டும் தோரணம் கட்டுவார்கள். அதன் இடை இடையே மாவிலையைச் சேர்ப்பார்கள். வசந்த காலத்தில் மாம்பூ பூத்துக் குலுங்கும். அதன் இளந்தளிர், பூக்கள், அதிலிருந்து பெருகும் மது ஆகியவற்றை பறவைகள் உண்டு மகிழும். குறிப்பாக, குயிலினம் அதை உட்கொண்டு தனது குரல்வளத்தைப் பெருக்கிக்கொள்ளும் என்று கவிகள் கூறுவார்கள்.

அதன் நறுமணம், சுற்றுச் சூழலை ரம்மியமாக்கும். இறைவனைக் குடியிருத்தும் கும்பத்தில் மாவிலைக் கொத்து இருக்கவேண்டும். அதற்கு, மரங்களில் அரசன் என்ற பெயர் உண்டு (விருஷ ராஜஸமுத்பூதசாகாயா:...). வேள்வியின்போது, நெய்யை அக்னியில் சேர்க்க மாவிலையைப் பயன்படுத்துவார்கள். மந்திரத்தில், புனிதமான நீரை மாவிலையால் தெளிப்பதுண்டு. கும்பாபிஷேகத்தின்போதும், பந்தல் கால் நாட்டும் விழாவிலும்... கோபுர கலசம் மற்றும் பந்தல்காலில் மாவிலைக் கொத்தைக் கட்டுவார்கள். திருமணத்தில் நுகத்தடியிலும் மாவிலை இருக்கும். பெண்களின் சௌளத்தில் மாவிலைக் கொத்தைப் பயன்படுத்துவார்கள்.

பண்டையநாளில் பல் துலக்குவதற்கு மாவிலை பயன்படுத்தப்பட்டது. பெரிய அண்டாவில் நீரைப் பிடித்து, வெயிலில் சுட வைத்து, அதில் மாவிலையைக் கிள்ளிப்போட்டு, அந்த வெந்நீரில், பிணி அகன்ற ரோகிகள் நீராட வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். வாடிப்போன மாவிலைகள் பயிரினங்களுக்கு உரமாக மாறுவதுண்டு. வனஸ்பதியில் சிறந்தது மா. முக்கனிகளில் ஒன்று மாம்பழம். ஜீவராசிகளுக்கு இருப்பிடம் அளித்து உதவும்; வெப்பத்தைத் தாங்கி நமக்கு நிழல் தந்து உதவும்; இயற்கை வளமான மாவிலை, மனித வாழ்க்கைக்குப் பயன்படும் பொருளாகத் திகழ்கிறது. இத்தனையும் தெரிந்த பிறகும், பிளாஸ்டிக் மாவிலைத் தோரணம் கட்டும் பண்பாடு வளர்வதுதான் அதிசயமாக இருக்கிறது!

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

2012-ல் உலகம் அழியும் என்கிறார்களே... எனில், கலியுகம் முடியப்போகிறதா?

- ப.வினோத், புதுச்சேரி

கலியுகம் முடிவடைய இன்னும் பல்லாயிரம் வருடங்கள் காத்திருக்க வேண்டும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பொய், புனைசுருட்டி ஆகியன தற்போது தாராளமாக அரங்கேறி வருகின்றன. அது முழு வளர்ச்சியை எட்டுவதற்குப் இன்னும் பல காலம் பிடிக்கும். உண்மை, நேர்மை, பண்பாடு ஆகியன முழுமையாக இன்னும் மறையவில்லை; அதற்கும் காலம் எடுக்கும். காற்றிலும், நீரிலும், பயிரிலும் நச்சுப்பொருளைப் பரப்பும் செயல்பாடுகள் இன்னும் முழுமை பெறவில்லை. அதற்கும் காலம் பிடிக்கும்!

நீர் வளம், நில வளம் முற்றிலுமாக அழியவில்லை. கலாசாரம்- பண்பாடு ஆகியனவும் இன்னும் அங்குமிங்குமாகத் தலைகாட்டிக்கொண்டிருக்கிறது. இயற்கை வளத்தைத் தாறுமாறாக்கும் சிந்தனை வளம் இன்னும் உச்ச கட்டத்தை அடையவில்லை. உணவின்றி உயிரினங்கள் மடிய ஆரம்பிக்க வில்லை. மனிதனை மனிதன் உணவாக ஏற்கும் நிலை இன்னும் தலைகாட்டவில்லை! உலகையே விழுங்கும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் இன்னும் அரங்கேறவில்லை.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உச்ச கட்டத்தை அடையும்போது, நொடியில் உலகை அழிக்கும் நிலை ஏற்படும். தற்போது, அணு உலைகள் மட்டுமே கண்சிமிட்டுகின்றன. பல விளைவுகளைச் சந்தித்தபிறகு முடிவுக்கு வரும். அதுவரை பொறுத்துக்குங்களேன்!

எனது பிறந்த நேரம் சரியாகத் தெரியாத நிலையில், ஜாதகத்தின் அடிப்படையிலான விஷயங்களை எப்படித் தெரிந்துகொள்வது? எனக்கு ஜாதகம் கணிக்க இயலுமா?

- மணி பரமேஸ்வரன், பெங்களூர்

  தான் பிறந்த கால நேரம் தெரியாத ஒருவனின் ஜாதகத்தைக் கணிக்க, 'நஷ்ட ஜாதகம்’ என்ற தலைப்பில் அதைக் கண்டுபிடிக்கும் முறையை அறிமுகம் செய்திருக்கிறது ஜோதிடம். ஜோதிடர்கள், அந்த முறையில் ஜாதகம் கணித்துத் தருவார்கள். தமிழில், 'நஷ்ட ஜாதக கணிதம்’ என்ற தலைப்பில் ஒரு நூலை, சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றியிருக்கிறார். பல மொழிகளில் ஜோதிடநூல்கள் உண்டு. காப்பாற்றும் எண்ணம் இல்லாததால் மறைந்துபோய்விட்டன. சிந்தனை மாற்றமானது, சிறப்பான ஜோதிட தகவல்களை அலட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ளிவிட்டது!

தவிர, 'பிரச்னம்’ என்ற பகுதியின் மூலம் வருங்கால பலன்களையும், நிகழ்கால பலன்களையும் துல்லியமாகத் தெரிந்துகொள்ள வழி இருக்கிறது. மனிதனில் நற்குணங்களை மிளிர வைத்து, தெய்வ நிலைக்கு எட்டவைக்கும் வழிமுறைகளை உள்ளடக்கிய ஏராளமான ஜோதிட நூல்களை காலம் விழுங்கிவிட்டது. தற்போது, வியாபார நோக்கம் உட்புகுந்து அதன் உருவத்தை சிதைத்துவிட்டது. மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் பொருட்டு,  முக்காலத்தையும் படம்பிடித்துக் காட்டும் ஜோதிட நூல்களை இயற்றி உதவி புரிந்திருக்கிறார்கள் முனிவர்கள். நாம் முயற்சி செய்து அவற்றைப் பெற்றுப் பயன்பெற வேண்டும்.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்