சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

கலகலப் பக்கம்!

பாக்கியம் ராமசாமி

 
கலகலப் பக்கம்!
...........
கலகலப் பக்கம்!
##~##
''சே
ச்சேச்சே! ஒரு மனுஷன் நிம்மதியா ஒரு அரை மணி நேரம் பூஜை ரூம்ல உட்கார்ந்து ராம நாமம் ஜபிக்கலாம்னா முடியலையே!'' என்று வரும்போதே அலுத்துக்கொண்டு வந்தார் என் நண்பர். ''என்ன சார் விஷயம்?'' என்று விசாரித் தேன்.

''உங்க கிட்ட சொல்றதுக்கென்ன... எங்க வீட்ல நிம்மதியா உட்கார்ந்து, ஜபம் செய்றதுக்கு இடமே கிடையாது. கஷ்டப்பட்டு விடியற்காலை எழுந்து ஜபம் செய்ய முயற்சி பண்ணேன். ஆனா, நிம் மதியா ஜபிக்க முடியலை. அப்போ பார்த்துதான், பால்காரம்மா வந்து குரல் கொடுக்கிறா. இன்னொரு வயிற்றெரிச்சலைக் கேளுங்க... காலைல எழுந்ததுமே சில பேருக்குப் பசி ரொம்பக் கொடூரமா இருக்கும்போல! அதைத் தணிக்க, 'இடியாப்பேம்... இடியாப்பேம்!’ என்று சைக்கிளில் இடியாப்ப சப்ளைக்காரர்கள் நாலு தெருவுக்குக் கேக்கும்படி கர்ண கடூரமா குரல் கொடுத்துட்டுப் போறாங்க. கோல மாவு விற்கிற ஆட்களுக்கும் எனது ஜப நேரம்தான் குறி!

இதெல்லாமாவது அவங்க வயிற்றுப் பிழைப் புன்னு சொல்லலாம். இன்னொரு பெரிய இம்சை, கார் ஹாரன். நான் ஜபம் பண்ற நேரமா பார்த்துதான் பக்கத்து வீட்டுக்காரர் தனது அரதப் பழசுக் காரை ஷெட்டிலிருந்து வெளியே எடுப்பார். மியூஸியத்தில் இருக்கவேண் டிய அந்த யந்திரம், 'அய்யய்யோ... அப்பப்பா’ என்று ஒப்பாரி வைக்கிற மாதிரி பயங்கரமா அலறும். ஒரு பத்து நிமிஷம் ஆகும், அது ஆடி அடங்க! நீங்களே சொல்லுங்க சார், இத்தனை சத்தங்களுக்கு நடுவே ஒரு மனுஷன் எப்படி சார் நிம்மதியா ஜபம் பண்ண முடியும்?'' -  நண்பர் அழாக் குறையாகக் கூறி முடித்தார்.

அமைதியான சூழ்நிலை என்பது நகர வாழ்க்கையில் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது. ஆனால், ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சர் தான் ஓர் அருமையான முறையைக் கையாண்டு, ஜப முயற்சியில் வெற்றி பெற்றதைக் குறிப்பிட் டிருக்கிறார். அவர் ஆரம்ப நாளில் தட்சிணேஸ்வரத்தில் ஜபம் செய்யும்போது, அருகில் இருந்த ஆலையின் சங்குகள் மணிக்கொரு தரம், மாறி மாறி ஊளையிட்டபடி இருக்குமாம். ஆனால், ஆழ்ந்து ஜபம் செய்துகொண்டிருக்கும் ஸ்ரீராம கிருஷ்ணரின் கவனம் மட்டும் சிதையவே சிதையாது.

எப்படி என்கிறீர்களா?

சங்கின் ஊளைச் சத்தத் திலேயே தனது ஜபத்தை இணைத்துவிடுவார் அவர். ஒரு சங்கின் ஊளைச் சத்தம் முடியும் வரை அவர் மனமும் ஜபம் சொல்லிக்கொண்டு இருக்கும். அது ஓய்ந்ததும், அவரது மனம் அடுத்த சங்கின் ஓசைக்காகக் காத்திருக்கும். அது கேட்டதும், பரமஹம்சரும் ஜபத்தைத் தொடங்கிவிடுவார். இப்படியாக எது கவனத்தைச் சிதறச் செய்கிறதோ, அதன்மீதே கவனம் வைத்து ஜபம் செய்தால், கவனம் கெடுகிறதே என்ற எரிச்சலோ அதிருப்தியோ ஏற்படாது என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

கீதையில் பலவகையான ஜப யக்ஞங்கள் கூறப்பட்டிருக் கின்றன.

ச்ரோத்ராதீனீந்த்ரியாண்யன்யே
ஸம்யமாக்னிஷ§ ஜுஹ்வதி
சப்தாதீன் விஷயானன்ய
இந்த்ரியாக்னிஷ§ ஜுஹ்வதி

'சிலர் சப்தம் முதலிய விஷயங்களைப் பொறிகளாகிற அக்னியில் ஹோமம் செய்கின்றனர். அதாவது- ஜபத்தின் போது எந்தச் சத்தம் எங்கிருந்து வந்தாலும், அதைச் சட் டென்று பிடித்து, உனது காதாகிய ஹோம குண்டத்தில் அர்ப்பணமாகப் போட்டுவிடு!’

ஆலைச் சங்கின் சத்தத்திலேயே தூங்கிப் பழக்கப்பட்டவர் கள், ஸ்ட்ரைக் நடந்து ஆலைச் சத்தம் நின்றுபோனால், அந்த அமைதியில் தூக்கமே வராமல் தவிப்பதுண்டு. அது மாதிரி, சத்தங்களையே பின்னணி இசையாகக் கொண்டு மனம் ஒன்றி ஜபம் செய்யப் பழகிக்கொண்டுவிட்டால், பின்பு அமைதி, அமைதி என்று மனம் அமைதியின்றி அலைபாயாது!