மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்! 14

சேதி சொல்லும் சிற்பங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சேதி சொல்லும் சிற்பங்கள் ( குடவாயில் பாலசுப்ரமணியன் )

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

##~##

திருச்சிராப்பள்ளி என்றாலே, அந்த நகரத்தின் அடையாளச் சின்னமாக நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது... மலைக்கோட்டைதான்!

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, குறுங்குடி மருதனார் எனும் புலவர் அகநானூறு எனும் அருந்தமிழ் இலக்கியத்தில், 'உறைந்தைக் குணாது நெடும்பெருங்குன்றத்து அமன்ற காந்தட் போதவிழ்’ என்று குறிப்பிட்டுள்ளார். உறையூர் நகருக்குக் கிழக்கே அமைந்த குன்றாகிய மலையில் காந்தள் மலர்கள் மலர்ந்திருந்த காட்சியைத்தான் அந்தப் புலவர் அப்படிப் பாடியுள்ளார்.

இந்த மலையை, 'சிராமலை’ என்றார்கள் அந்தக் காலத்தில். இந்தச் சிராமலையில் ஐந்து முக்கியமான கோயில்கள் உள்ளன என்பது தெரியும்தானே உங்களுக்கு?!

மலையடிவாரத்து ஸ்ரீவிநாயகர் கோயில், மலையின் தென் பாரிசத்தில் உள்ள பெரிய குடைவரைக் கோயில், மலையின் நடுவே உள்ள ஸ்ரீதாயுமானவ ஸ்வாமி கோயில், அதற்கு மேலாக லலிதாங்குர பல்லவ ஈஸ்வர கிருஹம் எனப்படும் சிறிதான குடைவரைக் கோயில், மலை உச்சியில் ஸ்ரீஉச்சிப் பிள்ளையார் கோயில் என ஐந்து ஆலயங்கள் இந்த மலையில் அமைந்துள்ளன. மலையடிவாரத்தில் உள்ள விநாயகர், ஸ்ரீமாணிக்க விநாயகர் என அழைக்கப்படுகிறார். இவரை வணங்கிவிட்டு, சில படிகள் ஏறிச் சென்றால், யானை நிற்கும் இடத்தை அடையலாம். அங்கே, நீண்ட தெரு ஒன்று, மலையையட்டி இருக்கிறது.

சேதி சொல்லும் சிற்பங்கள்! 14
சேதி சொல்லும் சிற்பங்கள்! 14

அந்தத் தெருவில், மேற்கு நோக்கி சிறிது தொலைவு சென்றால், மலைக்கோட்டை மலையின் அடிவாரத்தில், குடைவரைக் கோயில் ஒன்று இருப்பதைக் காணலாம். உள்ளே நுழைந்தால், மிகப் பெரிய மண்டபம். அங்கே, கிழக்கு நோக்கியபடி ஒரு சிறிய கோயிலும், மேற்கு நோக்கியபடி ஒரு சிறிய கோயிலும் அமைந்துள்ளன. காண்பதற்கு அரிதான, அழகான அமைப்பை அங்கே கண்ணாரத் தரிசிக்கலாம். கோயிலும், அங்கே இருக்கிற துவார பாலகர்களும் கொள்ளை அழகு!

கருவறைக்கு முன்னே, நான்கு நான்கு தூண்களுடன் சிறிய முகமண்டபங்கள், படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளன. கோயிலுக்குப் பக்கவாட்டில், குகைச் சுவரில் இரண்டு அடியார்கள் ஒரு கரத்தை இடுப்பில் வைத்தபடி, இன்னொரு கரத்தை உயர்த்திக்கொண்டு, அங்கே குடிகொண்டிருக்கும் சிவனாரைப் போற்றிய நிலையில் இருப்பார்கள். பார்த்தால் சிலிர்த்துப் போவீர்கள். மேற்குப் புறத்தில் உள்ள சிறிய கோயிலின் கருவறைக்கு உட்புறச் சுவரில், சங்கு - சக்கரம் ஏந்தியபடி அமைந்துள்ள திருமாலின் திருவுருவமும், அடியவர்கள் இரண்டு பேர் விண்ணில் இருந்தபடி போற்றி வணங்குகிற நிலையிலான சிற்பமும் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோயில், திருமாலுக்காக அமைக்கப்பட்ட கோயில்.

எதிர்த்திசையில், கீழ்ப்புறம் இருக்கும் சிறிய கோயில். கயிலைநாதன் சிவபெருமானுக்காகக் கட்டப்பட்ட கோயில். ஆனால், உள்ளே இருந்த சிவபெருமானை பிற்காலத்தில் அகற்றிவிட்டார்கள்.   உட்புற மண்டபச் சுவரின் வடக்குப் புறத்தில், மிக பிரமாண்டமான ஐந்து தெய்வ உருவங்கள் அணி செய்து நிற்கின்றன. நடுவே, நான்கு முகங்களுடன் பிரம்மதேவர் காட்சி தருகிறார்.

அவருக்கு இரண்டு பக்கத்திலும் இரண்டு அடியார்கள் அமர்ந்துள்ளனர். தலைக்கு மேலாக இரண்டு பக்கமும் இரண்டு கணங்கள், விண்ணில் பறந்தவாறு ஸ்ரீபிரம்மாவை வணங்கும் சிற்பம் வெகு அழகு!

சேதி சொல்லும் சிற்பங்கள்! 14

ஸ்ரீபிரம்மாவுக்கு வலது பக்கத்தில், முருகப் பெருமான் நான்கு திருக்கரங்களுடன் நின்றவாறு அருளுகிறார். அவருக்கு இருபுறமும் இரண்டு குள்ள பூதங்கள் நிற்கின்றன. விண்ணிலே இரண்டு  கந்தர்வர்கள் பறந்தபடி, அவரது திருமுடியைப் போற்றுகின்றன.

முருகப் பெருமானுக்கு வலதுபுறம், ஸ்ரீபிள்ளையார் நின்றவாறு அருள்பாலிக்கிறார். காலடியில் இரண்டு பூதகணங்களும், விண்ணில் கந்தவர்கள் இரண்டு பேருமாக வணங்குகின்றனர்.

பிரம்மதேவனுக்கு இடப்புறம் சூரிய தேவன் நின்றவாறு அருள்பாலிக்கிறார். தலைக்குப் பின்புறம் சூரிய வட்டம் திகழ, மேலிரு கரங்களில் உருத்திராட்ச மாலையும் தாமரையும் ஏந்தியவாறு, ஒரு கரத்தை இடுப்பில் அணைத்தபடி, மறு கரத்தால் வரத முத்திரை காட்டுகிறார், சூரிய பகவான். அவரின் திருவடியில் இரண்டு பேர் குத்திட்டு அமர்ந்தவாறு, ஆதவனைப் போற்றுகின்றனர். விண்ணிலே கந்தர்வர் இருவர் மிதந்தவாறு கையுயர்த்தி வாழ்த்துகின்றனர்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! 14

சூரிய தேவனுக்கு இடப்புறம் ஆழியும் சங்கும் ஏந்திய கொற்றவை தேவி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அவளின் காலடியில் அமர்ந்துள்ள ஒருவர் மலர் கொண்டு வணங்க, மற்றொருவர் தன் சிகையை இடக்கரத்தால் பற்றியவாறு வலக்கரத்தில் ஏந்தியுள்ள வாளால் தன் கழுத்தை அரிகிறார். இதனை நவகண்டம் என்பர். கொற்றவைக்கு பலியாக உறுப்பரிந்து தரும் வீரர்கள் பற்றி சயங்கொண்டாரும், ஒட்டக்கூத்தரும் தம் பரணி நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கோயிலுக்கு இன்னுமொரு தனிச்சிறப்பு உண்டு.  வேதங்களும் திருமுறைகளும் வைதீக சமயத்தின் அறுவகைச் சமயப் பிரிவுகள் பற்றி விவரிக்கின்றன. சிவபெருமானைப் போற்றும் சைவம், திருமாலைத் துதிக்கும் வைணவம், கணபதியைப் பரவும் காணாபத்தியம், முருகனை ஏற்றும் கௌமாரம், சூரியனைப் போற்றும் சௌரம், தேவியைத் துதிக்கும் சாக்தம் என்பவையே அந்த அறுவகைச் சமயங்கள்.

இந்தச் சமயக் கோட்பாடுகள் அடிப்படையில் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பெற்றதே திருச்சிராப்பள்ளி குடைவரைக் கோயிலும், அங்கே திகழும் அரிய சிற்பத் திருமேனிகளும் எனும்போது வியக்காமல் இருக்கமுடியவில்லை.

- புரட்டுவோம்