Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 27

சித்தம் அறிவோம்...இந்திரா சௌந்தர்ராஜன்

சித்தம்... சிவம்... சாகசம்! - 27

சித்தம் அறிவோம்...இந்திரா சௌந்தர்ராஜன்

Published:Updated:
##~##

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ?
இங்குமங்கு மாயிரண்டு தேவரே இருப்பரோ...
அங்கும் இங்குமாகி நின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ?
வங்க வாரம் சொன்ன பேர்கள் வாய்புழுத்து மாள்வரே

- சிவவாக்கியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

னந்தமய கோசம் என்றால் என்ன என்பதை எனக்குப் புரிய வையுங்கள் என்று சிவவாக்கியர் கேட்டதற்கு,

''அது அவ்வளவு சுலபம் அல்ல. பசியோடு மோதி வைராக்கியத்துடன் அதை வெல்ல வேண்டும்'' என்று பதில் தந்தார், செருப்பு தைக்கும் அந்த மனிதர்.

''உணவு இல்லாவிட்டால் உடம்பு எப்படி இயங்கும்?'' என்று சிவவாக்கியர் அடுத்த கேள்வியைக் கேட்க, ''நீரிலும் காற்றிலும் உள்ள பிராண சக்தியை உட்கொள்ளப் பழகிவிட்டால், மண்ணில் விளைவதை உண்ணத் தோன்றாது!'' என்றார் அவர்.

''அது எப்படி?''

''அதற்கு திடசித்தம் மிக முக்கியம்.''

''என்னிடம் அது இருக்கிறது.''

''அதை நான் எப்படி நம்புவது?''

''என்னை எப்படி வேண்டுமானாலும் சோதித்துக் கொள்ளலாம்.''

சித்தம்... சிவம்... சாகசம்! - 27

சொல்லிவிட்டு, தன் வசம் இருந்த தோல் பைக்குள் கையை விட்டுச் சில தங்க நாணயங்களை எடுத்து சிவவாக்கியரிடம் தந்தார் செருப்புத் தைப்பவர்.

''எதற்கு இது?''

''தங்க நாணயமப்பா!''

''அதுதான், எனக்கு எதற்கு என்கிறேன்?''

''வேண்டாமா உனக்கு?''

''நான் உங்களிடம் கேட்பது ஞானத்தை; இது போன்ற செல் வத்தை அல்ல..!''

''சரி, இதை நான் தந்தேன் என்று கங்கை யிடம் கொடுத்துவிட்டு வா..!''

''உத்தரவு!''

சிவவாக்கியர் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தங்க நாணயங்களுடன் கங்கையை நோக்கி நடந்தார். அவரை சோதிக்கத் தொடங்கி விட்ட அந்த மனிதருடைய முகத்தில் மெல்லிய ஆச்சரிய ரேகைகள்!

கங்கையும் பாய்ந்து சென்று கொண்டிருந்தாள்.

இந்த உலகத்தில் ஆயிரமாயிரமாய் நதிகள். அவற்றில், கங்கைக்கு மட்டும் விசேஷமான இடம்! உயரமான இடத் தில் பிறப்பது முதல் நீண்ட தூரம் பயணிப்பது வரை கங்கையிடம் எவ்வளவோ சிறப்புகள்! அவற்றில், அவள் மானுடர்களின் பாவங்களைச் சேர்த்துக் கழுவுபவள் என்பதுதான் உச்சபட்ச நிலை. இதனால் அந்த கங்கையில் ஆயிரமாயிரம்

பேர் மூழ்கி எழுந்தவண்ணமிருக்க, சிவவாக்கியரும் கங்கையை அடைந்தார். கையில் தங்க நாணயங்களுடன் கங்கையைப் பார்த்தார்.

வேறு எவராக இருந்தாலும், அல்லது நாமேகூட தங்கத்தைத் தூக்கிக் கங்கையில் போடுவதா... இது என்ன முட்டாள்தனம் என்றுதான் நினைப்போம். காரணம்... நம் வரையிலும் தங்கம் விலைமதிப்பற்றது! உலகுக்கே அது பொதுப் பணமாகவும் திகழ்கிறது. புராணக் கதைகளில் கிடைத்த தகவல்களின்படி பார்த்தால், இறை உலகிலும் அது மதிப்புக்கு உரிய ஒன்றுதான். அப்படிப்பட்ட ஒரு வஸ்துவைத் தூக்கியெறிய மனம் வருமா? அதுவும் பாய்ந்து செல்லும் வெள்ளத்தில்! இதைவிட ஆச்சரியம், அதை வாங்கிக்கொள்ள கங்கையே வருவாள் என்று அந்தச் செருப்பு தைக்கும் மனிதர் சொன்னதுதான்!

சித்தம்... சிவம்... சாகசம்! - 27

'செருப்பு தைக்கும் ஒருவரது பேச்சை இந்த உலகம் என்றைக்கு மதித்திருக்கிறது? தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரது பேச்சை அவரைப் போலத் தாழ்ந்த நிலையில் உள்ள

இன்னொருவரே மதித்துக் கேட்பாரா என்பதே சந்தேகம்தான். இந்த நிலையில், கங்காதேவி கேட்பாள் என்பது எத்தனை பெரிய பூச்சுற்றல்?!’ - இப்படித்தான் எல்லோருக்குள்ளும் கேள்விகள் எழும்.

ஆனால், இதில் ஒரு கேள்விகூட சிவவாக்கி யருக்கு எழவில்லை. காரணம்... செருப்பு தைக்கும் அந்த மனிதரை ஒரு கர்மயோகியாக அவரால் பார்க்க முடிந்ததுதான்! அப்படிப்பட்டவர் ஒரு செயலைச் சொல்வதன் பின்புலத்தில், நிச்சய மாக பெரும் பொருள் இருக்கும்; அதை, அந்தச் செயலைப் புரிந் திடும்போது மட்டுமே உணர முடியும் என்ற எண்ணத்துடன் கங்கைக்கு வந்த சிவவாக்கியர், தங்க நாணயங்களை எடுத்து ஓடும் கங்கையில் போடத் தயாரானார். அப்போது,  'அவசியம் இல்லை, நானே கேட்டு வாங்கிக் கொள் கிறேன்’ என்பதுபோல், கங்கை யின் வளைக் கரம் மட்டும் நீர்ப் பரப்பின் மேல் எழும்பியது. சிவ வாக்கியர் அந்தக் கரத்தில் தங்க நாணயங்களை வைத்தார். அந்தக் கரம் திரும்ப உள் மூழ்கியது. சிவவாக்கியர் திரும்பி வந்தார். 'கங்காதேவி தன் கையாலேயே கேட்டு வாங்கிக் கொண்டாள்’ என்று செருப்புத் தைப்பவரிடம் தகவல் சொன்னார். உடனேயே செருப்பு தைக்கும் அந்த அன்பரின் முகத்தில் ஒரு சிந்தனை.

''என்ன யோசனை சுவாமி?''

''இல்லை! அந்த நாணயம் திரும்ப வேண்டும்''

''அதனாலென்ன... போய்க் கேட்டு வாங்கி வந்துவிடவா?''

''இதற்காக கங்கைக்கு போக தேவையில்லை.

கேட்டால், அவள் இந்த தோல் பைக்குள் இருந்தும்

சித்தம்... சிவம்... சாகசம்! - 27

வெளிப்பட்டுத் தந்துவிடுவாள்'' என்றவர், அவ்வாறே சிவவாக்கியரின் எதிரில் தோல் பையைப் பார்த்து கொடுத்ததைக் திருப்பிக் கேட்கவும், கங்கையில் முளைத்த கை இங்கேயும் முளைத்து, திருப்பித் தந்தது!

ஆனால், 'ஏன் இப்படிக் கொடுக்கிறீர்கள்? திரும்பக் கேட்கறீர்கள்?’ என்று சிவவாக்கியர் கேட்கவில்லை. அவர் அந்தச் சம்பவத்தைப் பார்த்துத் துளிக்கூட வியப்பு காட்டவில்லை.

அந்த மனிதருக்கும் சிவவாக்கியரின் ஸ்திர மான மனது புரியத் தொடங்கியது.

''அப்பனே... எனது செயல் உன்னைப் பாதிக்கவில்லை என்பது உன்னைப் பார்க்கும் போது நன்றாகத் தெரிகிறது. தங்கமும் மயக்க வில்லை. கங்காதேவியின் அருட்கரமும் உன்னை வியப்பில் ஆழ்த்தவில்லை. நீ உலகின் மாயைக்குள் உழலப் பிறந்தவன் இல்லை; அந்த மாயையை வெல்லப் பிறந்தவன். உனக்கு நான் யோக ரகசியங்களை உபதேசிக்கிறேன். அவற்றை சிக்கெனப் பிடித்துக்கொள். நம்மிடம் தங்கம் இருப்பது பெரிதில்லை. நாமே தங்கமாகத்

திகழ்வதுதான் பெரிது! உன்னாலும் அப்படி திகழ முடியும்...'' என்றார்.

அத்துடன், சிவவாக்கியருக்கு யோக ரகசியங்கள் அனைத்தையும் உபதேசித்தார்.

உடம்பை ஆட்சி செய்யும் தசவாயுக்களைப் பற்றிக் கூறி, அவை செய்யும் வினைகளையும் கூறி, அனைத்துக்கும் மூலம் நாம் உள் வாங்கும் பிராணக்காற்று என்பதை எல்லாம் விளக்கி, அந்த யோகப் பயிற்சிகளை எல்லாம் சிவவாக் கியருக்கு அளித்தார். கூடவே, ஒரு குடலை அளவு ஆற்று மணலையும், பேய்ச் சுரைக்காய் ஒன்றையும் தந்தார்.

''சுவாமி, இது எதற்கு?'' என்று கேட்டார் சிவவாக்கியர்.

''அப்பா... மண்ணில் இடப்படும் விதை நெல் விளையும்; அது பசியாற்றும். ஆனால், மண்ணே ஆற்றுமா?''

''அது எப்படி சுவாமி?''

''இந்த மண் ஆற்றுமப்பா.... இதை நெல்லாக மாற்றும் கரம் இதைத் தீண்டும்போது...''

''அது எப்படி சுவாமி?''

''பெண்ணும் ஒரு வகையில் மண்தானப்பா. அதனால்தான் பூமியை பூமாதேவி என்கிறோம். பெண்ணையும் மண்ணோடு பொருத்தி, மண் விளைவிப்பதுபோல நீயும் உயிர்களை விளைவிக்கிறாய் என்கிறோம்.''

''பெண்ணிடம் மண் குணம் இருப்பதற்கும், நீங்கள் இதை எனக்கு அளிப்பதற்கும் என்ன தொடர்பு சுவாமி?''

''தன் ஆற்றலால் இந்த மண்ணை உயிர்ப்பிக்க

முடிந்த ஒரு பெண்ணரசி உனக்கு மனைவி யாகத்தான்...''

''என்னை சம்சாரியாகச் சொல்கிறீர்களா?''

''இல்லையப்பா... சிவத்தோடு சக்தி சேர்ந்தால், அந்த சிவசக்திதான் பூரணமானதாகும்.''

''இந்தக் கசப்பான சுரைக்காய்?''

''கசப்பு இதன் தன்மை. இதை நீக்க முடிந் தால், இது உண்ணப் பயன்படும். தான் பிறந்த நோக்கம் இதற்கு ஈடேறும்!''

''மணலை அரிசியாக்க முடிந்த கரத்தால் சுரைக்காயின் கசப்பைத்தானா நீக்க முடியாது?''

''சரியாகச் சொன்னாய்..!''

சித்தம்... சிவம்... சாகசம்! - 27

''ஆனாலும் கேட்கிறேன்... நான் சிவசக்தி சமேதனாகி என்ன செய்யப் போகிறேன்?''

''நல்ல கேள்வி! அப்படி ஆகாமல்தான் என்ன செய்துவிட முடியும் உன்னால்?''

''எதைச் செய்வதும் எனது நோக்கம் இல்லை

சுவாமி! எதைச் செய்தும் எவருக்கும் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. அவரவர் கர்மப்படி அவரவரும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடிந் திடப் போகின்றனர்.''

''அந்த அவரவர் கர்மத்தின்படியே உனது கர்மத்துக்கு நான் வருகிறேன். எங்கோ பிறந்த நீ, இங்கே என்னை அடைந்து, யோக ரகசியங்களை அடையப் பெற்றாய் அல்லவா?''

''ஆமாம்...''

''எல்லோரும் தங்கள் செருப்புகளை என் வசம் விட்டு, தேய்ந்து போன அதைத்தான் தேய்த்துக் கொண்டனர். உனக்கு மட்டும்தானே அப்பா

நான் பரமாத்மா- ஜீவாத்மா எனும் இரண்டை யும் இணைத்து தைப்பவன் என்பது தெரிந்தது.''

''அதனால்..?''

''உனக்கும் ஊருக்குச் சொல்லும் கடமை இருக்கிறதப்பா!'' என்றார் செருப்பு தைப்பவர்.

சிவவாக்கியர் அதை ஒப்புக்கொண்டாரா?

- சிலிர்ப்போம்...