சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஜெகம் புகழும் ஸ்ரீராமன்!

அக்காரக்கனி ஸ்ரீநிதி

ஸ்ரீராம ஜெயம்

ஜெகம் புகழும் ஸ்ரீராமன்!
ஜெகம் புகழும் ஸ்ரீராமன்!
ஜெகம் புகழும் ஸ்ரீராமன்!

ஸ்ரீராமன்- இப்படியும் கூட ஒருவன் வாழ்ந்து காட்ட முடியுமா என இன்றுவரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் பாரத தேசத்தின் ஒப்பற்ற கதாபாத்திரம்.

ஒரு பெண்ணிடம் 'உனக்கு எத்தகைய வரன் கணவனாக அமைய வேண்டும்?’ என்று கேட்டால், அடுத்த கணம் அவள் மனதில் நிழலாடுவது, ஸ்ரீராமனின் திருவுருவமாகத்தான் இருக்கும். சொல் கேளாத பிள்ளைகளைப் பார்க்கும்போதெல்லாம், ஒவ்வொரு தந்தையும் எண்ணுவதும் ஏங்குவதும் தன் பிள்ளை ஸ்ரீராமனைப் போல் இல்லையே என்பதாகத்தான் இருக்கும். இப்படி, அடுக்கிக்கொண்டே போகலாம் ஸ்ரீராமனைப் பற்றி!

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

அறுபதினாயிரம் ஆண்டுகள் பிள்ளை இல்லாமல் தவித்த தசரத மன்னவன், கௌஸல்யா தேவியாரிடத்து ராமனைப் பெற்றார். சாட்சாத் நாராயணனே ராமனாகப் பிறந்தான் என்பது வரலாறு. வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே... (வேதத்தால் அறியப்படும் பரம்பொருளே ராமனாகத் தோன்றினான்) எனும் வரியே  இவ்விஷயத்தில் சான்றாகும்.

ஸ்ரீராமன் எதற்காக அவதரித்தான் என்பது குறித்து அழகான விளக்கம் தருகிறார்கள் வைணவப் பெரியோர்கள்; பித்ரு வாக்ய பரிபாலனம்- இதுவே ஸ்ரீராம அவதாரத்தின் முக்கிய காரணம் என்கிறார்கள். அதாவது, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை உலகில் நிலைநாட்டுவதே அவதாரத்தின் முக்கிய நோக்கமாம். இல்லையென்றால்... ஒரு தவறும் செய்யாதிருந்தும், 14 ஆண்டுகள் பூழி வெங்கானம் (காடு) நடந்திருப்பானா?!

##~##

தந்தை வரட்டும்; கல்யாணம் முடிக்கலாம்...

இன்னொரு சுவையான நிகழ்ச்சியையும் பார்ப்போம். தாடகை வதத்தின் பொருட்டு ராமனையும், இலக்குவனையும் அழைத்துச் செல்கிறார் ஸ்ரீவிஸ்வாமித்ர முனிவர். அவர்கள் மிதிலா தேசத்தை அடைந்தபோது, சீதைக்கு சுயம்வர ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்துகொண்டிருக்கிறார் ஜனகர்.

பெரிய சபையில் சிவ தனுசு வைக்கப்பட்டிருந்தது. அதை நாணேற்றி முறிப்பவருக்கே தன்னுடைய மகள் சீதையை கொடுக்க இருப்பதாக அறிவிக்கிறார் ஜனகர். அரசர்கள் சிலர் முயற்சி செய்து தோற்ற பிறகு, வில்லை சற்றுப் பார்த்துவிட்டு வரும்படி ராமனிடம் சொல்கிறார் விஸ்வாமித்திரர். 'வில்லை நன்கு பார்’ என்று முனிவன் சொன்ன தற்கான உட்கருத்தை அறிந்த ராமன், நாணேற்றி சிவதனுசை முறிக்கவும் செய்தான். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சீதை, மண மாலையோடு ராமனை நெருங்குகிறாள்.

அப்போது, ராமன் உரைக்கிறான்... ''வில்லைப் பார் என்றார் விஸ்வாமித்திரர். நான் பார்த்தேன்... அவ்வளவுதான். மற்றபடி இந்த கல்யாணமெல்லாம் என் தகப்பனார் வந்து தீர்மானிக்கவேண்டிய விஷயங்கள். அப்பா வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்'' என்றான். சீதையை மணக்கும் காலத்திலும் தசரதனது முடிவையே ஸ்ரீராமன் எதிர்நோக்கி இருந்தான் என்றால், அவன் தன் தந்தையின் மீது எவ்வளவு மரியாதை கொண்டிருந்தான் என்பதை நாம் உணரலாம்.

அவ்வளவு ஏன்... ராவண வதம் முடித்து, புஷ்பக விமானத்தில் அமர்ந்து அயோத்தியை நெருங்கும்போதும், தனது தந்தையின் ராஜ்ஜிய பூமி வந்துவிட்டது என்றே சீதையிடம் கூறுகிறான்; தன்னுடைய ஊர் என்று சொல்லிக் கொள்ளவில்லை!

மனிதனை, விலங்கினத்தில் இருந்து பிரித்துக் காட்டுவது அவனது பண்புகளே. நற்பண்புகளே மனிதனை செதுக்குகின்றன. ஸ்ரீராமனிடம் எதிரிகளும் போற்றும் குணநலன்கள் உண்டு.

ஜெகம் புகழும் ஸ்ரீராமன்!


தர்மமே வடிவெடுத்து வந்தது!

சீதையை அபகரிக்கத் திட்டம் தீட்டுகிறான் ராவணன். அதற்காக மாயாவியான மாரீசனது உதவியை நாடுகிறான். தனக்கு உதவாவிட்டால் மாரீசனை தீர்த்துவிடுவதாகவும் மிரட்டுகிறான் ராவணன். ஏற்கெனவே, தாடகை வதம் நிகழ்ந்தபோது, ஸ்ரீராமனால் அடித்து விரட்டப் பட்டவனே இந்த மாரீசன். எனவே, சீதையை அபகரிக்கும் திட்டத்தைக் கைவிடும்படி, ராவணனிடம் மன்றாடுகிறான். அப்போது, முன்பு ஸ்ரீராமனிடம் அடிபட்டதை நினைவு கூர்ந்தான். அவனது உடல் நடுங்கியது. ஆனால் வார்த்தைகள் தெளிவாய் வந்து விழுந்தன.

''முன்பு ராமன் என்னை அடித்தபோது, பிரம்மச்சாரி பிள்ளையாக இருந்தான். அப்போதே அவன், நெருங்க முடியாத திறன் உடையவனாக, தேஜஸ் உடையவனாக இருந்தான். இப்போது ஜனகன் மகளை- சாட்சாத் ஸ்ரீமகாலட்சுமியைக் கைப்பிடித்திருக்கிறான். எனவே, இன்னும் ஒளிமிக்கவனாக; நெருங்க ஒண்ணாத வடிவுடையவனாகத் திகழ்வான்'' என்றான். 'அப்ரமேயம் ஹி தத் தேஜா யஸ்ய ஸா ஜநகாத்மஜா’ என்பது மாரீசன் வாக்கு.

மேலும், தர்மமே வடிவெடுத்தவன் ஸ்ரீராமன் என்பதையும் ராவணனுக்கு உணர்த்தத் தவறவில்லை மாரீசன். 'ராமோ விக்ரஹவாந் தர்ம:’ எவ்வளவு உயர்ந்த வாக்கு இது. நம்முடைய நண்பர்களே நம்மைப் பாராட்டத் தயங்குவர். ஆனால், எதிரியான மாரீசனும் ராமனை 'தர்மமே வடிவெடுத்தவன்’ என்று கொண் டாடுகிறான் என்றால், ஸ்ரீராமன் எத்தகைய பண்பாளன் என்பதை நீங்கள் உணரலாம்.

குணத்தில் தோற்ற விபீஜணன்;
வீரத்தில் தோற்ற ராவணன்!

யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; 'சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை:’ என்று போற்றுகிறான். அதாவது, தனது பராக்கிரமத்தைக் காட்டி எதிரியை வியக்கச் செய்பவன் என்று ஸ்ரீராமனைக் கொண்டாடுகிறான்.

ராமனின் வீரத்தில் தோற்றான் ராவணன். ராமனின் அழகில் தோற்றாள் சூர்ப்பணகை. ராமனின் குணத்தில் தோற்றான் விபீஷணன். இது, ஸ்ரீராமனின் தனிப் பெருமை அல்லவா? 'குகனோடும் ஐவரானோம்’ என்று படகோட்டி குகனையும் தன்னுடைய சகோதரனாக ஏற்றுக்கொண்ட தன்மை... இன்றளவும் நாம் போற்றும் ஸ்ரீராமனின் சிறப்பல்லவா?

திருப்புட்குழி விஷயராகவன்

ஜெகம் புகழும் ஸ்ரீராமன்!

பெற்றெடுத்த தந்தைக்கே ஈமச்சடங்குகளைச் செய்ய பலபேர் இன்று தயங்குகிறபோது, பறவை யான ஜடாயுவை தன் தந்தையாகவே பாவித்து, அந்திம க்ரியைகளைச் செய்தான் ராமன். இன்றைக்கும் காஞ்சிபுரம் அருகில், திருப்புட்குழி தலத்தில், ஜடாயு மகாராஜாவுக்கு ஈமச்சடங்கு கள் செய்தவனாக, ஸ்ரீவிஜயராகவனாக தரிசனம் தந்தருள்கிறான் ஸ்ரீராமன்.

எண்ணிறந்த குணநலன்கள் ஸ்ரீராமனிடம் இருந்தாலும், அடுத்தவரது துன்பத்தை, தனது கஷ்டமாகக் கருதி, அவற்றைத் தீர்க்க முற்படுவது, ஸ்ரீராமனின் தலையாய பண்பாகும். 'வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி து:க்கித:’ என்ற பிரமாணத்தின் மூலம் இதை நாம் அறியலாம். அடுத்தவர் நலனை கருத்தில்கொண்டு, அத்தனை துன்பங்களையும் தானே எவனொருவன் ஏற்றுக் கொள்கிறானோ, அவனையே உத்தமன் எனப் போற்றுகிறோம். எனவேதான் ஸ்ரீராமன் தான் முடிசூட்டிக் கொள்ளாமல், கொடிய கானகம் சென்றான். தன் உடன்பிறவாத்  தம்பிகளான சுக்ரீவனுக்கும் விபீஷணனுக்கும் முடிசூட்டிய பிறகே, தனது முடிசூட்டு விழா நடைபெற வேண்டும் என்பது ராமனின் அபிப்பிராயமாம். ஆகவேதான், முதல் தடவை

பட்டாபிஷேகம் தடைப்பட்டது. விபீஷணனுக்கு முடிசூட்டிய பிறகு, தான் செய்யவேண்டி யதை செய்து முடித்ததாக திருப்தி கொண்டானாம். சீதையைப் பிரிந்து துன்பக் கடலில் மூழ்கியிருந்தபோதிலும், விபீஷணன் முடிசூட்டிக் கொண்டதும், மகிழ்ச்சியில் திளைத்தானாம்!

புல்  பூண்டுக்கும் மோட்சம் தந்தவன்

அதேபோல், தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுந்தம் புறப்படும்போது, அயோத்தி வாழ் மக்கள் அனைவரையும் தன்னுடன் மேலுலகத்துக்கு அழைத்துச் சென்றான். அதோடு நில்லாமல் அயோத்தியில் இருந்த செடி, கொடி, புல், பூண்டு முதலிய வற்றுக்கும் முக்தியை நல்கினான் எனில், ஸ்ரீராமனின் பெருமையை என்னவென்பது?!

பரமசிவனாரும் எப்போதும் தியானித்துக் கொண்டிருப்பது ஸ்ரீராமனைத்தானே! பார்வதிதேவிக்கு அவர் உபதேசித்தது ஸ்ரீராம நாமத்தைத்தானே!

இன்றைக்கும் காசியில் ஒரு நம்பிக்கை உண்டு. எவர் ஒருவர் காசியில் மரித்தாலும், அவர் நற்கதி அடையும் பொருட்டு, அவருடைய செவி யில் ஸ்ரீராம தாரக மந்திரத்தை பரம சிவனே உபதேசிக்கிறார் என்பர்.

எனவேதான் ஸ்ரீநம்மாழ்வாரும் 'கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ’ - என்று போற்றுகிறார்.

எனவே, நாமும் ஸ்ரீராமநவமி தினத்தில் ஸ்ரீராமனைத் துதித்து இவ்வுலக இன்பங்களை குறைவில்லாமல் பெறுவதோடு மறுமைக்கும் நன்மையைச் சேர்த்துக் கொள்வோம்.