சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

அரம்பையர் வழிபடும் அரனே போற்றி!

பூசை ச. அருணவசந்தன்

அரம்பையர் வழிபடும் அரனே போற்றி!
...........
அரம்பையர் வழிபடும் அரனே போற்றி!
##~##
ரம்பையர்கள்- அஷ்ட மங்கலங்களுக்கும் உறைவிடம் இந்த தேவ மங்கையர்கள். ஸ்ரீமகாலட்சுமி, தன்வந்திரி, சந்திரன் ஆகியோரைப் போன்றே இவர்களும் பாற்கடலில் தோன்றியவர்களே!

அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, 60,000 அப்சரஸ் பெண்கள் தோன்றினார்கள். இசைக் கருவிகளை இசைத்துத் தேவகானம் பாடி வந்த இந்த அழகுப் பெண்கள், சிவபெருமானை வலம் வந்து வணங்கி, தாங்கள் என்றென்றும் நித்யகன்னியர்களாக இருக்குமாறு அருளும்படி

வேண்டிக்கொண்டனர். சிவபெருமானும் அவர்கள் விரும்பிய வரத்தைத் தந்து, அவர்களுக்கென தனியரு உலகையும் படைத்துத் தந்தார். அதற்கு அப்சரலோகம் என்று பெயர்! அவர்களின் தலைவி 'அரம்பை’ ஆவாள். எனவே, அந்த உலகம் அரம்பையர் உலகம் என்று அழைக்கப்பட்டது.

'அப்ஜம்’ என்றால் தாமரை; 'சரஸ்’ என்றால் நீர்நிலை. இரண்டு சொல்லும் சேர்ந்து அப்ஜசரஸ்- அப்சரஸ் ஆனது. தாமரை மலர் நிறைந்த குளம் போல மனதுக்கு மகிழ்ச்சியும் இதமும் தரும் தேவ மங்கையர் என்பதால், இவர்கள் அப்சரஸ் என்று அழைக்கப்பட்டனர்.

அரம்பையர் வழிபடும் அரனே போற்றி!

இவர்கள் வேண்டியபோது வேண்டிய வடிவம் எடுப்பார் களாம். ஆடல் பாடல்களிலும், இசைக்கருவிகளை இயக்கு வதிலும் வல்லவர்கள். எங்கும் எளிதில் செல்லும் ஆற்றல் பெற்றவர்கள்.

அரம்பையர் வழிபடும் அரனே போற்றி!

இவர்களிடத்தில் 14 வகையான பிரிவுகள் உண்டு. இவற்றை 'அப்சர சதுர்த்தச கணம்’ என்பார்கள். இந்தக் கணத்தொகுதிகளில் குறிப்பிடத் தக்கவர்கள் அரம்பை, அலம்புசை, மனோகரை, ஊர்வசி, சுனகை,

மேனகை, திலோத்தமை, சந்திரகலை, கலாநிதி, மோகினி, சந்திரலேகை ஆகியோர்.

சிவாலயம் வரும் அன்பர்களை வரவேற்பவர்களாகவும் திகழ்கிறார்கள் அரம்பையர்கள். இதனைக் குறிக்கும் வகையில் ராஜகோபுரத் துவாரங்களில் துவாரபாலகர்களுக்குப் பக்கத்தில் அரம்பையர்களின் வடிவங்களை அமைக்கும் வழக்கம் உள்ளது. சென்னை, மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலய ராஜகோபுரத்தில் இந்தக் காட்சியைக் காணலாம்.

அரம்பையர் எனும் பெயரில் வேறு சில தெய்வ மங்கையர்களும் உண்டு. திருமால் நர-நாராயணனாக இருந்தபோது, அவருடைய தொடையில் இருந்து தோன்றிய ஊர்வசி என்பவள் குறித்தும், பிரம்மனால் உருவாக்கப்பட்ட ஊர்வசி, திலோத்தமை, மேனகை முதலான பெண்கள் குறித்தும் புராணத் தகவல்கள் உண்டு.

சகல சௌபாக்கியங்களுடன் மிக்க மகிழ்ச்சியாக வாழும் இந்த மங்கையரை வழிபட்டால், இன்பமும் செல்வமும் சுகமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனி மாதம் வரும் ரம்பா திருதியை- இவர்களைப் போற்றும் வழிபாடு ஆகும். இந்த நாளில் இவர்களை மனதில் கொண்டு பூஜித்து, வழிபட அஷ்ட ஐஸ்வரியங்களும் ஸித்திக்குமாம்.

அரம்பையர் வழிபடும் அரனே போற்றி!

அரம்பையருக்கான தனி வழிபாடுகள் வேறு இல்லை என்றாலும், சிவபூஜையின் ஓர் அங்கமாக இவர்களைப் பூஜிப்பது உண்டு. கும்பாபிஷேகம் முதலான பெருஞ்சாந்தி விழாவில் யாகமேடையைச் சுற்றிலும் எட்டுமங்கலங்களை ஏந்தியுள்ள அரம்பையர்கள் பூஜிக்கப் படுகின்றனர்.

அரம்பையர் வழிபடும் அரனே போற்றி!

சிவாலய பூஜையின் ஓர் அங்கமாக நிகழ்த்தப்படும் 'ஸ்ரீபலி’ எனும் நிகழ்ச்சியில், மற்றைய தேவர்களுடன் இவர்களும் பூஜிக்கப்படுகின்றனர்.

அதுமட்டுமா?

உமாதேவியருக்குத் தோழியர் களாகத் திகழும் இந்த அரம்பையர்கள், சிவபூஜையில் சிந்தை மகிழ்பவர்கள். இவர்கள் வழிபட்டு வரம் பெற்ற சிவத்தலங்களை நாமும் தரிசித்து வழிபட, அதனால் மகிழ்ந்து, பொருள்கோடி சேர வரம்வாரி வழங்குவார்களாம்.

இவர்கள் கூட்டமாகவும் தனித் தனியாகவும் வழிபட்ட தலங்கள் நிறைய உண்டு. இவற்றை அரம்பேஸ்வரங்கள் எனப் போற்றுவர். அவற்றுள் குறிப்பிடத்தக்க எட்டுத் தலங்களை இங்கே காண்போம்.

கோட்டூர் அரம்பேசுவரம்

அரம்பை சிவபூஜை செய்த தலங் களில் முதன்மையானது கோட்டூர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி சாலையில், மன்னார்குடியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம். அரம்பை தனது சேடிகளோடு இங்கு வழிபட்டதை, தனது பாடல் களில் குறிப்பிட்டுள்ளார் திருஞான சம்பந்தர்.

ஒருமுறை இந்திரசபையில் அரம்பை, திலோத்தமை, மேனகை, ஊர்வசி, கெற்பை, பரிமளை, சுகேசி என்னும் ஏழு அரம்பையர்கள் நடனமாடினர். ஆட்டம் முடிந்ததும் அவர்களின் தலைவி யான ரம்பை, அருகிலிருந்த பூஞ்சோலைக்குச் சென்று களைப்பு மிகுதியால் உறங்கிப் போனாள். காற்றில் அவளது ஆடைகள் விலகிவிட்டன. அவ்வழியாக வந்த நாரதர், பொது இடத்தில் ரம்பை அலங்கோலமாக உறங்குவது கண்டு கோபித்தார். அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்துவிட்டுச் சென்றார். விழித்தெழுந்த ரம்பை, சாபம்

குறித்து அறிந்தாள். நாரதரை தேடிச் சென்று, விமோசனம் வேண்டினாள். 'பூலோகம் சென்று சிவபூஜை செய்து மேன்மை பெறுவாய்’ என்று அருளினார் நாரதர்.

அதன்படியே, பூலோகத்தில் பாலியாற்றங் கரையில் உள்ள பாதிரி வனத்தில் தவம் செய்தாள் ரம்பை. ஆனாலும், எளிதில் அவளுக்கு சிவனருள் கிடைக்கவில்லை. எனவே, ரோமரிஷி முனிவரை தரிசித்து, விரைவில் இறையருள் கிட்ட வழிகூறும்படி வேண்டினாள். அந்த முனிவரும், ''பெண்ணே... நீ இங்கிருந்து காவிரிக்குத் தெற்கே சென்று வன்னிவனத்தில் விளங்கும் சிவபெருமானை வழிபடு! உனக்கு விரைவில் சிவதரிசனம் கிடைக்கும்'' என்றார்.

அதன்படி வன்னிவனம் வந்து, தீர்த்தம் ஏற்படுத்தி, அதன் கரையில் தன் ஆன்ம பூஜைக்காக ஸ்ரீஅரம்பேசுவரர் எனும் சிவலிங்கத்தை அமைத்து வழிபட்டு வந்தாள்.

அரம்பையர் வழிபடும் அரனே போற்றி!

நாட்கள் நகர்ந்தன. அவள் இல்லாததால் இந்திரலோகம் பொலிவிழந்தது. அவள் பூலோகத்தில் இருப்பதை அறிந்த இந்திரன், அவளை அழைத்து வருமாறு சித்திர சேனன் என்பவனை ஏவினான். ஆனால், ரம்பா தேவியோ சிவ பூஜையை விடுத்து, தேவலோகம் வர மறுத்துவிட்டாள்.

கோபம் கொண்ட இந்திரன், ஐராவதம் யானையை அனுப்பினான். தனது கொம்புகளால் (தந்தங்களால்) தரையை அகழ்ந்து, சீற்றத்தோடு ஓடி வந்தது யானை. ரம்பாவைக் காக்க எண்ணிய பரம்பொருள், லிங்க மூர்த்தத்திலிருந்து தோன்றி, ஆணவம் கொண்ட யானையை காலால் உதைத்தது. அத்துடன், ரம்பைக்கு பல்வேறு வரங்களை அள்ளித் தந்தது!

ஐராவதத்தின் கொம்புகளாகிய கோட்டால் அகழப்பட்ட அந்தத் தலமே கோட்டூர். அரம்பைக்கு அருள் செய்ததால், இறைவனுக்கு ஸ்ரீஅரம்பேஸ்வரர் என்று பெயர். இந்நாளில் ஸ்ரீகொழுந்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அம்பிகை- ஸ்ரீமதுரபாஷிணி. இங்குள்ள ஆலயத்தில் தவம் செய்யும் கோலத்தில் அமைந்த அரம்பையின் வடிவம் உள்ளது. அவள் உண்டாக்கிய அரம்பை தீர்த்தம், கருப்புட்டியான் குளம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வந்து வழிபட, சகல செல்வ நலன்களையும் பெறலாம்.

மல்லிகைவனத்தில் சிவனார்!

சென்னை அல்லது காஞ்சி புரத்தில் இருந்து செல்பவர்கள், செல்லம்பட்டிடை எனும் ஊரை அடைந்து, அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரம் பயணித்தால், இலம்பையங்கோட்டூரை அடையலாம்.

இங்குள்ள இறைவனும் அரம்பைக்கு அருள்புரிந்தவரே என்பதால், ஸ்ரீஅரம்பேஸ்வரர் எனப் போற்றுவர். ஸ்ரீதெய்வ நாயகர், ஸ்ரீசந்திரசேகரர் என்றும் அழைக்கின்றனர். அம்பிகையின் திருப்பெயர் ஸ்ரீகோடேந்துமுலையம்மை. இங்கு அரம்பையர்கள் மல்லிகை வனத்தில் ஈஸ்வரனைப் பூஜித்தனராம். இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சமும் மல்லிகை என்பது விசேஷம்! இங்குள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி, அரம்பையருக்கு ஆன்ம ஞானத்தைத் தருபவராகக் காட்சி அளிக்கிறார்.

பெண்ணும்... பசுவும்... ஒரு யானையும்!

பெண்ணாகடம்- அற்புதமான சிவத்தலம். சிவபெருமான், அப்பருக்குத் தோளில் இடபமும் சூலமும் பொறித்த தலம். பெண்- அரம்பையர்; ஆ- காமதேனு; கடம்- யானை ஆகியோர் வழிபட்டதால் 'பெண்ணாகடம்’ எனும் பெயர் அமைந்தது. தற்போது வழக்குச் சொல்லில் பெண்ணாடம் என்கின்றனர்.

ஒருமுறை தேவலோகத்தில், சிவபூஜைக்குப் போதுமான மலர்கள் கிடைக்கவில்லை. அதனால், 'பூலோகம் சென்று பூக்கள் பறித்து வருக’ என அரம்பையரைப் பணித்தான் இந்திரன். அவர்களும் பூலோகத்தில், புஷ்பவனமாகிய  கடந்தைக்கு வந்துசேர்ந்தனர். அந்தத் தலம் அவர்களுக்குப் பிடித்துப்போக, அங்கிருந்த ஜோதிலிங்கத்தை வணங்கி, அங்கேயே தங்கி வழிபடத் துவங்கினர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால் இந்திரன் காமதேனுவைப் பூவுலகம் அனுப்பினான். அதுவும் இங்கேயே தங்கிவிட்டது. பிறகு வந்த ஐராவதமும் இந்தத் தலத்திலேயே தங்கிவிட்டது.

இதையறிந்து கோபம்கொண்ட இந்திரன், தானே புறப் பட்டு வந்தான். இந்தத் தலத்தின் தெய்வீகச் சூழலில் மெய்ம்மறந்து அவனும் நெடுநாள் இங்கு தங்கி வழிபட்டதாகச் சொல்கிறது புராணம். இங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீபிரளயகாலேஸ்வரரையும், அம்பிகை ஸ்ரீஆமோதனாம்பாளையும் வழிபட, இன்னல்கள் நீங்கி இந்திரபோகம் பெறலாம் என்பர்.

  படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

பசுக்கள் வழிபட்ட திருநீலக்குடி!

கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறைக்கு மேற்கில் உள்ள திருத்தலம் திருநீலக்குடி. அம்பிகை பசு வடிவாக வந்து, சிவனாரை பூஜித்துப் பேறு பெற்றாள். அவளுடன் அரம்பையரும் பசுக்களாக வந்து சிவனாரை வழிபட்டு அருள்பெற்றதாக விவரிக்கின்றன புராணங்கள்.

திலோத்தமை வழிபட்ட கழுக்குன்றம்

திருக்கழுகுன்றத்தில் அப்சரஸ்களில் ஒருத்தியான திலோத்தமை பூஜித்துப் பேறு பெற்றதாக திருக்கழுக்குன்றத்தின் தலபுராணம் சொல்கிறது.

சாபம் தீர்த்த பந்தணைநல்லூர்

ஒருமுறை, பார்வதிதேவி தோழிக ளுடனும் அரம்பையருடனும் பந்து விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த இறைவனாரை, விளையாட்டில் கவனமாக இருந்த பார்வதியாள் கவனிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட இறைவன், அவளையும் அவளுடைய தோழி யரையும் பசுக்களாகும்படி சபித்தார்.

அவர்கள் அனைவரும் பசு வடிவம் தாங்கி, பூவுலகம் வந்து பந்தணைநல்லூர், கோழம்பம் முதலான தலங்களில் வழிபட்டனராம். பந்தணைநல்லூரில் அம்பிகையின் சாபம் விலகியபோது, அரம்பையரின் சாபமும் விலகி, அவர்கள் தங்களின் பழைய வடிவைப் பெற்றனர். ஆகவே, இவ்வூரில் குடியிருக்கும் இறைவனையும் அரம்பேஸ்வர் என்று அடியார்கள் போற்றுவர்.

காசிநகர் அரம்பை, மேனகை, ஊர்வசீஸ்வரர்

காசியின் பெருமைகளை விளக்கும் நூலான காசிக் கண்டம், அப்சரஸ்களான அரம்பையர், காசி மாநகரில் பல சிவலிங்கங்களை நிறுவி வழிபட்ட தகவல்களை விவரிக்கிறது. அப்படி அவர்கள் அமைத்த சிவலிங்கங்கள் அப்சரேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றன. காசியில் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயிலின் வடக்கு வாயிலுக்கு அருகில், அரம்பை அமைத்த ஸ்ரீஅரம்பேஸ்வர லிங்க மூர்த்தத்தை தரிசிக்கலாம். அதேபோல் அரம்பையரில் ஒருத்தியான ஊர்வசி வழிபட்ட லிங்கம் ஊர்வசீஸ்வரர் என்ற பெயரிலும், தவிர, மேனகை பூஜித்த லிங்கமும் காசியில் உள்ளதென்று கூறுவர்.

அஷ்டமங்கலம்... அஷ்ட அரம்பையர்!

சைவ சமயத்தில் கூறப்படும் எட்டு மங்கலப் பொருள்கள் கண்ணாடி, பூரணகும்பம், இடபம், இரட்டைக்கவரி, ஸ்ரீவத்சம், சுவஸ்திகம், சங்கு, அடுக்குத் தீபம் என்பனவாகும். பூஜையின் போது இவற்றை உரிய மந்திரங்களால் பூஜிக்கின்றனர்.

சிவாலயங்களில் யாகவேதிகையினைச் சுற்றிலும் அரம்பையர்கள் அஷ்டமங்கலங்களை ஏந்தியவாறு நிற்கின் றனர். இதன்படி, ஊர்வசி கண்ணாடியையும், மேனகை பூரண கும்பத்தையும் ஏந்தியவாறு கிழக்கிலும், ரம்பை இடபக்கொடி யையும், திலோத்தமை இரட்டை சாமரங்களையும் ஏந்தி தெற்கிலும், சுமுகி ஸ்ரீவத்சத்தையும், சுந்தரி சுவஸ்திகத்தையும் ஏந்தி மேற்கிலும், காமுகி சங்கையும், காமவர்த்தினி அடுக்கு தீபத்தையும் ஏந்தியவாறு வடக்கிலும் நிற்கின்றனர் என்று பூஜாபத்ததி நூல்கள் கூறுகின்றன. இவர்கள் அஷ்ட கன்னியர், அஷ்ட ரம்பையர் என்று பலவாறு அழைக்கப்படுகின்றனர்.