Published:Updated:

பயணம்... பரவசம்! - 20

லதானந்த்

பயணம்... பரவசம்! - 20

லதானந்த்

Published:Updated:
##~##

நாங்கள் தேவப்பிரயாகைக்கு வந்து சேர்ந்தபோது காலை சுமார் 11 மணி இருக்கும். இந்தப் பிரயாகையே, பத்ரிநாத்தில் இருந்து ரிஷிகேஷ் செல்லும் வழியில் இருக்கும் 5 பிரயாகைகளில் கடைசிப் பிரயாகை. அலஹாபாத்தின் திரிவேணி சங்கமத்துக்கு இணையாக வழிபடப்படும் புண்ணிய சங்கமம் இது.

திபெத் எல்லை அருகில் ஸடோபந்த் பனிப் பாறையில் உருவாகும் அலகநந்தா ஆறும், கங்கோத்ரியின் அடிவாரத்தில், கௌமுக் பனிப்பாறையில் உருவாகும் பாகீரதி நதியும் இங்கு ஒன்று சேர்கின்றன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,723 அடி உயரத்தில் தேவப்பிரயாகை அமைந்திருக்கிறது. ரிஷிகேஷில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பண்டைய காலத்தில், 'சுதர்சன க்ஷேத்திரம்’ எனவும் அழைக்கப்பட்டிருக்கிறது. இங்கே, ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்து வரும் பாகீரதியும், அமைதியாக நகர்ந்து வரும் அலக நந்தாவும் சங்கமிக்கும் காட்சி நம்மைப் பரவசப்படுத்துகிறது. சங்கமத்துக்குப் பிறகு அது புனித நதியாம் 'கங்கை’ எனப் பெயர் மாறுகிறது. ஆதி கங்கை எனவும் போற்றப்படுகிறது.

சுமார் 300 படிகள் கீழே இறங்கிச் சென்றால், சங்கமத்தை அடையலாம்.  அங்கிருந்து வந்த வழியிலேயே சிறிது பாதை விலகி 200 படிகள் அளவுக்கு மேலே ஏறினால், ஸ்ரீரகுநாதர் ஆலயத்தை அடையலாம். இது, திவ்யதேசங்களில் ஒன்றாகும். 'திருக்கண்டம்’ என்கிறார்கள். 'கண்டமென்னும் கடிநகர்’ என்று பெரியாழ்வார் பாடிப் பரவசப்பட்ட தலம் இது; 11 பாசுரங்களால் பாடியிருக்கிறார்.

பயணம்... பரவசம்! - 20

இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருப்பவர் ஸ்ரீராமன். இவரை ரகுநாத்ஜீ என்றும் அழைக்கிறார்கள். சுமார் 72 அடி உயரத்துடனும், உச்சியில் கூம்புவடிவத்துடனும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.ராவணனைக் கொன்ற பாவம் நீங்குவதற்காக ஸ்ரீராமன் இங்கே தவம் செய்ததாக ஐதீகம். பிரம்மன், தசரதன் ஆகியோரும் இங்கு தவமியற்றியிருக்கிறார்கள். ஸ்ரீராமன் திருவடி பதித்த பாறை ஒன்றும் இங்கிருக்கிறது. ஸ்ரீராமன் இந்த இடத்தில் தசரதருக்கு பிண்டதானம் கொடுத்தாராம். ஸ்ரீரகுநாதரின் ஆலயத்துக்கு அருகில் பத்ரிநாதர், கால பைரவர், ஹனுமான் ஆகியோரின் திருவுருவங்களும் இருக்கின்றன.

இந்த ஆலயத்தில் மூலவர்- புருஷோத்தமன். தாயார்- சீதா பிராட்டியார், தீர்த்தம்- கங்கை நீர், விமானம்- மங்கள விமானம். பரத்வாஜ முனிவருக்கு இங்கே திருக்காட்சி அருளப்பட்டிருக்கிறது. நின்ற திருக்கோலத்தில், கிழக்கே திருமுக மண்டலம் காட்டி, சதுர் புஜங்களோடு தரிசனம் தருகிறார் ஸ்வாமி. கர்ப்பக்கிரகத்தில் வில்லும் அம்பும் வைக்கப்பட்டு இருக்கின்றன. அமைதியான இடத்தில் அற்புதமான தரிசனம்!

வெளிச் சுற்றில் விநாயகருக்கும், புவனேஸ்வரி தாயாருக்கும் சந்நிதிகள் உண்டு. சஞ்சீவ பர்வதம் தாங்கிய ஹனுமனும் காட்சி அளிக்கிறார். எதிரில், பலியின் தலையில் திருவடி பதித்த வாமனக் கோலத்தையும் காணலாம். வடநாட்டுக் கோயில்களில் காண்பதற்கரிய ஒரு விஷயம்... பெரியாழ்வாரின் 11 பாசுரங்களையும் அச்சடித்து சுவரில் மாட்டி இருக்கின்றனர்.

இந்தத் தலத்திலிருந்து சுமார் 2 மணி நேர பயணத்துக்குப் பிறகு, ஹரித்வார் வந்துசேர்ந்தோம். வழியிலேயே கருடன் தவம் செய்த 'கருட் கங்கா’ எனும் இடத்தில் புனிதக் கற்களைச் சேகரித்துக் கொண்டோம். கங்கோத்ரி பனியாற்றின் கௌமுக் பகுதியில் உற்பத்தியாகி, சுமார் 253 கி.மீ. பயணம் செய்து, வட இந்தியாவின் சமவெளியில் கங்கை பாய ஆரம்பிக்கும் இடம்தான் ஹரித்வார். இந்த நகரின் புராதனப் பெயர் கங்காத்வாரா.

அமுதத்தைக் கருடன் சுமந்து சென்றபோது, கலசத்தில் இருந்து அமுதம் சிந்திய நான்கு இடங்களில் ஹரித்வாரும் ஒன்று என்பது ஐதீகம். ஏனைய மூன்று இடங்கள் உஜ்ஜயினி, நாசிக் மற்றும் அலகாபாத் சங்கமம். இதையட்டியே, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நான்கு இடங்களிலும் அடுத்தடுத்து கும்பமேளா கொண்டாடப்படுகிறது (ஓரு தலத்தில் கொண்டாடப்படும் விழா அடுத்து அதே தலத்தில் கொண்டாடப்பட 12 ஆண்டுகள் ஆகின்றன). ஹரித்வார் கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் கூடி, கங்கையில் நீராடி பாவத்தைப் போக்கிக்கொள்கின்றனர். அமுதத் துளி விழுந்த இடம், 'பிரம்ம குண்டம்’ எனப்படுகிறது. இதை, 'ஹர்கி பௌரி’ என்கிறார்கள். இதற்கு, இறைவனின் பாதம் என்று பொருள்.

'ஹரி’ என்றால் விஷ்ணு. துவார் என்றால் நுழைவாயில். ஆக, விஷ்ணுவின் திருவடி சேரும் நுழைவாயில் என்று ஹரித்வாருக்கு பொருள் சொல்கின்றனர். பத்ரிநாத் பயணத்தின் நுழைவாயிலாகத் திகழ்வது இதுவே. அதேபோன்று, 'ஹர’ என்பது சிவனின் திருநாமம். எனவே, சிவபெருமானை அடையும் நுழைவாயில் என்றும் பொருள் சொல்கிறார்கள். கயிலாச யாத்திரையின் நுழைவாயிலாகவும் இத்தலம் திகழ்வது சிறப்பு.

பயணம்... பரவசம்! - 20

அகத்தியர் தவம் செய்த ஸ்தலம் இது. மௌரியர்கள் மற்றும் குஷாண வம்சத்தவர்கள் ஆண்ட இடம். கபிலஸ்தான் என்றும் மாயாபுரி என்றும் ஹரித்வாருக்குப் பெயர்கள் உண்டு. சீன யாத்ரீகரான யுவான் சுவாங் ஹரித்வாரை 'மோயுலோ’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். கடல் மட்டத்தில் இருந்து, சுமார் 314 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. வடக்கு மற்றும் வடமேற்கில் சிவாலிக் குன்றுகளுக்கும், தெற்கே கங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கிறது.

மதிய உணவுக்குப் பிறகு சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு ஹரித்வாரில் மானசாதேவி ஆலயம் மற்றும் மாலையில் நடைபெறும் கங்கா ஆரத்தி தரிசனம் செய்யப் புறப்பட்டோம்.

பில்வ பர்வதம் என்ற சிறு குன்றின் மேல் அமைந்திருக்கிறது மானசாதேவி ஆலயம் நாங்கள் 'ரோப் வே’ மூலம் சென்றோம்.  படிகள் மூலமும் மேலே செல்லலாம். 1770 அடி நீளம் கொண்ட சரிவான 'ரோப் வே’ பாதையில் 10 நிமிடம் பயணித்து, ஆலயத்தை அடைந்தோம். இந்தக் கோயிலுக்கு பில்வ தீர்த்தம் என்றும் பெயர் உண்டு. 'மானசா’ என்பது சக்திதேவியின் ஒரு வடிவம். வாசுகி எனும் நாகத்தின் சகோதரி என்று சொல்கிறார்கள். மானசா என்ற சொல்லுக்கு, 'நம்பிக்கை’ என்றும் ஒரு பொருள் உண்டு. பக்தர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதாலும் இப்பெயர் ஏற்பட்டு இருக்கலாம். தங்களது வேண்டுதலை நிறைவேற்றித் தருமாறு ஆலய வளாகத்தில் இருக்கும் மரங்களின் கிளைகளில் கயிறுகளைக் கட்டி வழிபடுகிறார்கள் பக்தர்கள். வேண்டுதல் நிறைவேறியதும் மீண்டும் வந்து கயிற்றை அவிழ்க்கிறார்கள். இங்கு, பக்தர்களது காணிக்கைகளில் தேங்காய் முக்கியமானது.

ஆலயத்தினுள் இரண்டு திருவுருவங்கள்... எட்டுக் கரங்களோடு ஒன்றும், ஐந்து கரங்களோடு ஒன்றும் அருள்பாலிக்கின்றன. இங்கிருந்து  கங்கையின் எழில் தோற்றத்தைக் காணலாம். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். மதியம் 12 முதல் 2 மணி வரை உணவு இடைவேளைக்காக ஆலயம் மூடப்படும். கோயில் பூசாரி நம் முதுகில் ஓங்கித் தட்டி ஆசீர்வதிக்கிறார். நவராத்திரி மற்றும் கும்பமேளா நேரங்களில் ஆலயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட வருகின்றனர்.

பயணம்... பரவசம்! - 20

மானசாதேவியிடம் மனமுருக வேண்டிக்கொண்டு மீண்டும் ரோப்வே மூலம் அடிவாரத்தை அடைந்தோம். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து கங்கைக்கரையில் நடைபெறும் கங்கா ஆரத்தி நிகழ்சியைக் காணச் சென்றோம்.

புனிதமான ஆரத்தி நடைபெறும் குறிப்பிட்ட பகுதி, கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் விக்கிரமாதித்தனால் அவரது சகோதரரின் நினைவாக அமைக்கப்பட்டதாம். ஒவ்வொரு நாளும் மாலையில் கங்காதேவிக்கு நடைபெறும் ஆரத்தி நிகழ்ச்சி, ஹரித்வார் செல்லும் அனைவரும் கண்டுகளிக்க வேண்டியதாகும். பக்தர்கள், தங்கள் முன்னோரின் நினைவாக... சிறிய தெப்பங்களில் தீபங்களையும், மலர்களையும், வாசனைப் பொருட்களையும் வைத்துக் கங்கையில் மிதக்கவிடுகிறார்கள். ஆற்றில் அவை ஒளிர்ந்துகொண்டே அசைந்து அசைந்து மிதக்கும் அழகை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.  கங்கா ஆரத்தியைக் காணச் செல்லும் பக்தர்கள் இந்த இடத்துக்கு  மாலை 5 மணிக்கே சென்று, ஆற்றின் படிக்கட்டுகளில் அமர்ந்துகொள்வது அவசியம். மாலை 7 மணிக்குத்தான் ஆரத்தி என்றாலும், முன்கூட்டியே சென்று அமர்ந்தால்தான் ஆரத்தி நிகழ்ச்சியை நன்கு பார்க்க முடியும்.

பயணம்... பரவசம்! - 20

ஆயிற்று... 'பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை’ பல புண்ணிய க்ஷேத்திரங்களையும் தரிசித்துவிட்டு ஊர் திரும்ப ஆயத்தம் ஆனோம். இரவு உணவை ஹரித்வாரில் முடித்துக்கொண்டோம். எங்களது வாகனம் இரவு முழுக்கப் பயணம் செய்து விடியற்காலையில் டெல்லியில் எங்களை இறக்கிவிட்டது. உடன் வந்த பயணிகளிடம் விடைபெற்றுக்கொண்டு ஒரு விடுதியில் அறை எடுத்துக் குளித்து, பக்கத்திலேயே இருந்த கடைவீதியில் ஷாப்பிங் செய்தோம். டாக்ஸி பிடித்து டெல்லி விமான நிலையம் வந்தோம். ஸ்பைஸ் ஜெட் மூலம் டெல்லியில் பிற்பகல் 1.50-க்குப் புறப்பட்டு மாலை 4.40-க்கு நலமாக சென்னை விமானநிலையம் வந்தடைந்தோம்.

உள்ளம் பரவசத்தில் ததும்ப பூலோகத்தில் தரிசிக்க வேண்டிய அரும்பெரும் புண்ணிய தலங்களை எல்லாம் தரிசிக்கும் வாய்ப்பு அளித்த இறைவனுக்கு நன்றி சொன்னோம். 'புண்ணியம் மிகுந்த இந்த பரத கண்டத்தில் உன் அருள்சுரக்கும் தலங்கள் அனைத்தை யும் தரிசிக்கும் வாய்ப்பையும், அதற்கான உடல் வலுவையும் தந்தருள வேண்டும்’ என்று மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டோம். அவனருளால் அவன் தாள் வணங்க, நிச்சயம் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது மீண்டும் நாம் சந்திக்கலாம்!

(பயணம் நிறைவுற்றது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism