மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம்: 40

ஞானப் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானப் பொக்கிஷம் ( பி.என்.பரசுராமன் )

அபிராமியம்மை பதிகங்கள்!பி.என்.பரசுராமன்

##~##

வராத்திரி நேரம் இது. அம்பிகையைப் பற்றி ஓர் அற்புதமான பாடலைப் பார்க்கலாம். இதை எழுதியவர், அம்பிகையை நேரில் தரிசித்த அபிராமிபட்டர். இவர் பெயரைச் சொன்னதும், அபிராமி அந்தாதிதான் நினைவுக்கு வரும். அபிராமி அந்தாதி உயர்ந்ததுதான். சந்தேகம் இல்லை. ஆனால், அதில் உள்ள பல பாடல்களுக்கு 'விளக்க உரை’ இருந்தால்தான் அர்த்தம் புரியும்.

ஆனால், படிக்கும்போதே எளிமையாகப் பொருள் புரியும் வண்ணம், அதேநேரம் நேருக்கு நேராக அம்பிகையிடம் முறையிடும் விதமாக அமைந்துள்ள பல பாடல்களையும் அபிராமி பட்டர் எழுதியுள்ளார். 'அபிராமியம்மைப் பதிகங்கள்’ என்ற பெயரில் அமைந்துள்ள அப்பாடல்கள், மக்கள் மத்தியில் ஏனோ, பரவவே இல்லை.

அந்தப் பாடல்களில் இருந்து ஒரு பாடலைப் பார்க்கலாம்.

மிகையுந் துரத்தவெம் பிணியுந் துரத்த
வெகுளி யானதுந் துரத்த
மிடியுந் துரத்தநரை திரையுந் துரத்தமிகு
வேதனைகளுந் துரத்த
பகையுந் துரத்தவஞ் சனையுந் துரத்த
பசியென் பதுந்துரத்த
பாவந் துரத்த பதிமோகந் துரத்த
பலகா ரியமுந் துரத்த
நகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த
நாளும் துரத்த வெகுவாய்
நாவறண் டோடிக்கால் தளர்ந்திடும் என்னை
நமனும் துரத்து வானோ?
அகில உல கங்கட்டும் ஆதார தெய்வமே
ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!

ஞானப் பொக்கிஷம்: 40

தன்னந்தனி ஆளாக ஒருவன் ஓடிக்கொண்டிருக்கிறான். ஏராளமானோர் அவனை துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள். யாரந்த மனிதன்? துரத்துபவர்கள் யார்? ஏன் துரத்துகிறார்கள்? இதற்கு, மிக அருமையான விளக்கம் தருகிறார் அபிராமிப்பட்டர்.

ஓடும் மனிதன் 'நாம்’தான். நம்மைத் துரத்துவோர் குறித்து பெரிய பட்டியலே போடுகிறார்!

மனிதனைத் துரத்துவதில் முதல் இடம் பிடித்திருப்பது அகம்பாவம். ''எனக்கு அகம்பாவம் துளியும் கிடையாது. நம்பாவிட்டால், என்னுடன் இருப்பவர்களைக் கேட்டுப்பார்! துளிக்கூட அகம்பாவம் இல்லை எனக்கு - என்பதை அவர்களே சொல்வார்கள்!'' என்று அடக்கத்தைக் குறிக்கும் முகமாகச் சொன்னாலும் கூட, அதிலும் அகம்பாவம் தலை நீட்டிவிடுகிறது. மனிதனை அகம்பாவம் துரத்துகிறது.

'மிகையும் துரத்த’- மிகை என்பதற்கு அகம்பாவம் என்பது பொருள். அத்துடன், மிகை என்பதற்கு தீய செயல்கள், தவறுகள், தண்டனை என்னும் அர்த்தங்களும் உண்டு. அதன்படி பார்த்தால்... தீய செயல்கள் துரத்த, தவறுகள் துரத்த, தண்டனை துரத்த - என விளக்கம் கிடைக்கும். தீய செயல்களும், அதனால் விளைந்த தவறுகளும், அவற்றுக்கு உண்டான தண்டனைகளும் நம்மைத் துரத்துகின்றன. இதிலிருந்து தப்பிப் பிழைத்தால்...

'வெம்பிணியும் துரத்த’ என்கிறார். அதாவது, நோய்கள் துரத்துகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலம் உண்டு. ஆனால், இந்த நோய்களுக்கு மட்டும், காலம் என்பதே கிடையாது. கருவில் இருக்கும் குழந்தை முதல், கடைசி காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் முதியோர்கள் வரை, எல்லோரையும் ஒரு கை பார்த்துவிடும் நோய். ஆண் - பெண், படித்தவன் - படிக்காதவன் என்ற பேதமெல்லாம் நோய்க்குக் கிடையாது. எல்லோரையும் பாதிக்கும்.

தலைவலி போன்ற சாதாரண பிணிகள் மட்டுமல்ல, ஒருமுறை வந்தாலே ஆளையே புரட்டிப் போட்டுப் பாதிக்கும் தற்கால சிக்குன் குன்யா, மருத்துவமே கிடையாது என்று சொல்லக்கூடிய எய்ட்ஸ் வரையிலும் அனைத்து நோய்களும் மனித குலத்தைத் துரத்துகின்றன.

இந்தக் கொடுமையைக் குறிப்பதற்காகவே, 'வெம்பிணியும் துரத்த’ என்றார் அபிராமி பட்டர். உடலுடன் பிணிக்கப்பட்டு நம்மைக் கொடுமைப்படுத்துவதாலும், 'வெம் பிணியும் துரத்த’ எனக் கூறி இருக்கிறார். சரி! இப்படி வியாதி வந்தால் விளைவு? அடுத்தது கோபம்தான்.

சாதாரணமாகவே கோபம் வரும் மனித குலத்துக்கு. வியாதி வந்துவிட்டால்... கேட்கவே வேண்டாம். யாரைப் பார்த்தாலும் 'வள்வள்’ என்று எரிந்து விழுவோம்! வியாதியும் கோபமும் நம்மைத் துரத்துவது மட்டுமல்ல! நம்முடன் இருப்பவர்களையும், நம்மை விட்டுத் துரத்திவிடும். அதையே, வெகுளியும் துரத்த எனக் குறிப்பிடுகிறார் அபிராமிபட்டர். இதன் தொடர்ச்சி 'மிடியும் துரத்த’. அதாவது, வறுமை துரத்துகிறது.

ஞானப் பொக்கிஷம்: 40

வியாதி வந்து, பணமெல்லாம் மருத்துவத்துக்கே போய், கோபம் வந்துவிட்டால், பிறகு... வறுமைதானே? அந்த வறுமையும் நம்மைத் துரத்துகிறது. அது மட்டுமல்ல! நாம் வறுமையில் இருக்கிறோம் என்றால், நம்மை நெருங்கவிடாமல் நம் உறவினர்கள் துரத்துவார்கள். 'எங்கே உதவி கேட்டு வந்துவிடுவானோ?’ என்ற எண்ணமே அதற்குக் காரணம். 'மிடியும் (வறுமை காரணமாக உறவினர்கள் நம்மைத்) துரத்த’ - என அபிராமி பட்டர் அனுபவ பூர்வமாகக் கூறுகிறார்.

இவ்வளவு நேரம் பார்த்த துரத்தல்களில் இருந்து தப்பிப் பிழைத்தாலும், நரை திரை (மூப்பு)களில் இருந்து தப்பிப் பிழைக்க முடியாது. 'நரை திரையுந் துரத்த’ உடம்பில் தோல் சுருங்கி, தலையும் வெளுத்துப் போய், நம்மைத் துரத்துகிறது. எதை நோக்கி?

வேதனைகளை நோக்கித் துரத்துகிறது.

'தலை நரைத்துவிட்டது. கறுப்புச் சாயம் பூசிவிடலாம். ஆனால், முதுமை வந்துவிட்டதே! ஒருவேளை, நம்மை வீட்டை விட்டு வெளியேற்றி முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவார்களோ? நம் குழந்தைகள், மரியாதை கொடுக்காமல், நம்மை அவமானப்படுத்தி விடுவார்களோ?'' என்ற வேதனை புலம்பல் வெளிப்படும்; அக்கம் பக்கமெல்லாம் போய்ப் புலம்பச் சொல்லும். அதையே அடுத்ததாக, 'மிகு வேதனைகளும் துரத்த’ என்கிறார் அபிராமிபட்டர்.

இதன் விளைவு - பகை. வேண்டியவர், வேண்டாதவர் என அனைவரிடமும் பகை மூளும். பக்கத்து வீட்டுக்காரரிடம் போய்ப் புலம்பினால், ''யோவ்! நாம்பாட்டுல ஏதோ இந்த வயசான காலத்துல நிம்மதியா இருக்கேன். எம் பையன் ராஜா மாதிரி, உள்ளங்கையில வெச்சுத் தாங்கறான். நீ உன் வீட்டுக் கதையை வந்து இங்க சொல்லி எம்புள்ள மனசக் கலைச்சி, என்னை முதியோர் இல்லத்துல சேர்க்க ஏற்பாடு பண்ணிடாதே! இனிமேல் இந்தப் பக்கமே வராதே!'' என்று அவர் நம்மை விரட்டுவார். பகைதான்.

அப்போதும் சும்மா இருக்கமாட்டோம். அந்தத் தகவலை, நம் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிப் புலம்புவோம். அவர்கள் சும்மா இருப்பார்களா?

''வயசான காலத்துல வாய மூடிக்கிட்டு சிவனேனு இருக்காம, தெருத் தெருவாப் போய்த் தண்டோரா போட்டா இப்படித்தான். பேசாம இரு! இல்லேன்னா, அப்புறம் நாங்க என்ன செய்வோம்னு, எங்களுக்கே தெரியாது'' என்று வீட்டில் உள்ளவர்கள் கத்துவார்கள். அங்கும் பகைதான்!

அடுத்தது... பகை என்று வந்த பின்னர், கேட்கவே வேண்டாம். வஞ்சனை வெளிப்படும். அடுத்துக் கெடுப்பது, கூடவே இருந்து குழி பறிப்பது, யாருக்கும் தெரியாமல் வேரில் வெந்நீரை ஊற்றுவது என வஞ்சனை பட்டியல் நீண்டுகொண்டே போகும். வஞ்சனை வெளிப்படாத வரையிலும், அது நம்மைத் துரத்தித் துரத்திச் செயல்படச் செய்துகொண்டே இருக்கும். வஞ்சனை வெளிப்பட்டுவிட்டாலோ... அதன் விளைவுகள் நம்மைத் துரத்தும்.

அடுத்து, தொடக்கத்தில் இருந்து பார்த்து வந்த அத்தனையும் நம்மைத் துரத்துகிறதோ இல்லையோ... முக்கியமான ஒன்று, எல்லோரையும் துரத்தும்; எப்போதும் துரத்தும். நாம் நம்புகிறோமோ - இல்லையோ’ அது நம்மை விடாமல் துரத்துகிறது!

அது, பசி! பசி தீர அறுசுவை உணவுதான் வேண்டும் என்பது இல்லை. அப்போதைக்கு ஏதாவது கிடைத்தால் போதும். ஆனால், நம்மைத் துரத்தும் பசியை துரத்துவதற்காக நாம் செய்யும் செயல்களையே, இதன் பிறகு வரும் பாடல் பகுதிகள் சொல்கின்றன.

அதுபற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

- இன்னும் அள்ளுவோம்...