சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீரங்கத்தில்... வேத பாடசாலை!

சேவை செய்யும் ஆதர்ஷ் தம்பதி

நல்லதை விதைப்போம்!

ஸ்ரீரங்கத்தில்... வேத பாடசாலை!
ஸ்ரீரங்கத்தில்... வேத பாடசாலை!

குருகுலங்கள் ஒழுக்கம், வேதங்கள் ஆகியவற்றைக் கற்பித்தன. இதனால், தர்ம சிந்தனைகளும் சாஸ்திர சம்பிரதாயங்களும் தழைத்தோங்கின! இன்றைக்குக் கல்வி என்பதே வியாபாரமாகிவிட்ட நிலையில், தர்ம காரியங்களை  ஒரு கண்ணாகவும் வேதங்களை இன்னொரு கண்ணாகவும் கொண்டு, குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறது, ஸ்ரீமான் டிரஸ்ட்!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள கோதை, கணவர்பத்ரிநாராயண பட்டருடன் இந்த டிரஸ்டை நடத்தி வருகிறார்.

''இன்றைய குழந்தைகளுக்கு ஆன்மிகமும் வேதங்களும் அவசியம் தெரியணும்! எந்த ஒரு விஷயமும் பசுமரத்து ஆணி போல மனசுல பதியறது, இந்தச் சின்ன வயசுலதான்! நல்ல விஷயங் களை இப்பவே போதிச்சோம்னா, அவங்களோட எதிர்காலம் நல்ல விதமா, சிறப்பா அமையும். எங்க குழந்தையை ஸ்கூல்ல சேர்க்கறதுக்கு அலைஞ்சு தவிச்சபோதுதான், 'ஏன் நாமளே அப்படியரு வேத வகுப்பைத் துவங்கக்கூடாது?’ன்னு யோசிச்சோம். ஆரம்பத்துல நாலு குழந்தைங்களோட ஆரம்பிச்ச இந்தப் பாடசாலை, இன்னிக்கி முப்பது குழந்தைங்களுக்கு மேல படிக்கற அளவுக்கு வளர்ந்திருக்கு'' என்று பெருமிதத் துடன் தெரிவித்தார் கோதை.

''இங்கே, இதுதான் படிக்கணுங்கறது இல்லை. அவங்களுக்கு என்ன விருப்பமோ அதைப் படிக்கலாம். வெறும் புத்தகப் படிப்பா மட்டுமே இல்லாம, வாழ்வியல் செயல்முறைப் பயிற்சியும் கொடுக்கறோம். அதுமட்டுமா?! சட்டைக்கு அவங்களே பட்டன் போட்டுக்கறதுல ஆரம்பிச்சு, கோலம் போடுறது, ஜூஸ் தயாரிக்கறதுன்னு பலதும் சொல்லிக் கொடுக்கறோம்.

ஸ்ரீரங்கத்தில்... வேத பாடசாலை!

அப்புறம் ராமாயணம், மகாபாரதம், புராணத் தகவல்கள்னு சொல்லித் தர்றோம். சம்ஸ்கிருதமும் கத்துக் கொடுக்கறோம். பழைமையான, பாரம்பரியமான விஷயங் களைச் சொன்னாலும், அதை இன்னிய காலகட்டத்துக்குத் தகுந்தது மாதிரி எளிமை யாவும் இனிமையாவும் சொல்றதுல கவனமா இருக்கோம்!'' என்கிறார் கோதை.

##~##
'ஸ்ரீமான் பட்டர் குழாம்’ எனும் அமைப்பும் உள்ளதாம்! இதில் எல்.கே.ஜி மாணவர் முதல் கல்லூரி மாணவ - மாணவிகள் வரை உறுப்பினர்கள். இவர்களுக்கு தசாவதாரக் கதைகள், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களின் வரலாறு, இதிகாசங்கள், திவ்ய பிரபந்தம், முகுந்த மாலை, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் ஆகியவையும், மெய் ஞானத்துக்கு யோகாவும், விஞ்ஞானத்துக்கு கம்ப்யூட்டரும் பயிற்சி அளிக்கின்றனர். இங்கே, இசைப் பயிற்சி வகுப்புகளும் உண்டு!

''இந்தப் பயிற்சி வகுப்புகளை, காலையும் மாலையும் நடத்திட்டு வரோம். மத்த நேரங்கள்ல பள்ளிக்குப் போகிற குழந்தைகளுக்கு யூனிஃபார்ம், புத்தகங்கள், ஸ்கூல் ஃபீஸ்னு முடிஞ்ச உதவிகளையும் செஞ்சுக்கிட்டு வரோம். இதுல ஒரு ஆத்மதிருப்தி எங்களுக்கு!'' -நெக்குருகிச் சொல்கிறார்கோதை.

அதுமட்டுமின்றி, அடுத்த தலைமுறைக்கு பட்டாச்சார்யர்களை உருவாக்கும் சீரிய பணியை ஸ்ரீபத்ரிநாராயண பட்டர் சிரமேற்கொண்டு செய்து வருகிறார் (இவர் கூரத்தாழ்வானின் வம்சாவளி என்பது குறிப்பிடத்தக்கது). அதற்கு உறுதுணையாக இருக்கிறார் கோதை. பட்டாச்சார்யப் பயிற்சி, உணவு மற்றும் தங்கும் இடம் ஆகிய அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது என்பதுதான் ஆச்சரியம்!

நல்ல முயற்சி; நல்ல மனசு!

கட்டுரை, படங்கள்: க.ராஜீவ்காந்தி