Published:Updated:

காலக் கணிதத்தின் சூத்திரம்!

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்!

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
##~##

'புனர் பூ’ என்ற சொல்லானது, 'மனம் ஒருவனைக் கணவனாக ஏற்று, பிறகு சிந்தனை மாற்றத்தில் அவனைத் துறந்து, வேறொருவரைக் கணவனாக ஏற்பவள்’ என்ற கருத்தை வெளியிடும். திருமணத்தில் இணைந்து உடலுறவையும் சந்தித்து, அதன் பிறகு முதல் கணவனைத் துறந்து மற்றொருவரை ஏற்பவள் என்கிற கருத்தில் 'புனர் பூ’ என்ற சொல் வராது. கணவனாக இணையவோ உடலுறவோ இருக்கக் கூடாது என்று ஜோதிடம் விளக்கம் அளிக்கும் (ஸாசேத் அக்ஷத யோனி...). 'அக்ஷத யோனி’ என்ற சொல், பெண்ணின் உறுப்பு பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்ற கருத்தை விளக்கும். க்ஷதம் என்றால் பாதிப்பு; அக்ஷதம்- பாதிப்பில்லை என்று பொருள்.

சிந்தனை மட்டத்தில் கணவன் பரிமாற்றம் இடம்பிடித்துள்ளது. மனப் போராட்டம், தடுமாற்றம், விவேகமின்மை, ஆசைகளின் உந்துதல், விரும்பியதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வேட்கை ஆகிய காரணங்களால், மனத்தில் இடம்பிடித்திருந்த முதல் கணவனைத் துறக்கத் துணிந்தது. அல்லது, மடை திறந்த வெள்ளம்போல் தடங்கல்களையும் தாண்டி எழும்பிய ஆசையால், ஆடவனைக் கண்டதும் ஆராயாமல் முடிவெடுத்து அவனை மனத்தில் ஏற்றிக்கொள்வது; அதன்பிறகு கசப்பான தகவல்கள்- அனுபவங்களால் மறுசிந்தனை வெளிப்பட, அவனை மனத்தில் இருந்து இறக்கிவிட்டு, புதுக்கணவனில் ஈடுபடுபவளுக்கு 'புனர் பூ’ என்று பெயர். இது, ஜோதிட சாஸ்திரத்தில் கையாளப்படும் தனிச்சொல்; டெக்னிக்கல் வேர்டு எனச் சொல்லலாம். ஆகையால், விருப்பப்படி விளக்கமளிக்க இயலாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேரடியான தகவலை ஆராயும்போது, அதன் எதிரிடைத் தகவலும் மனத்தின் அடித்தளத்தில் ஒளிந்திருக்கும். அறுவைச் சிகிச்சையில் நுழையும்போது வெற்றி உண்டு என்று நினைத்தாலும், ஒருபுறம் 'தோல்வியைத் தழுவ நேரிடுமோ’ என்ற எண்ணமும் அதோடு ஒட்டிக் கொண்டிருக்கும். பத்துப் பொருத்தங்களில் ஒன்பது நிறைவாக இருந்தாலும், இல்லாத ஒரு பொருத்தம் எதிரிடையான விளைவைத் தருமோ என்ற எண்ணம் தோன்றும். பாதுகாப்பான தொடர் வண்டியிலும் ஆபத்துக் காலத்தில் வெளியேறுவதற்கான ஜன்னல் ஒவ்வொரு பெட்டியிலும் பொருத்தப்பட்டிருக்கும். போர் விமானத்தில், பாராசூட்டுடன் இணைந்திருப்பான் போராளி. அறுவைச் சிகிச்சையில் இறங்கும் மருத்துவர், 'தோல்விக்கு நான் பொறுப்பில்லை’ என்ற ஒப்பந்தத்துடன் இறங்குவார். ஆக, தன்னிச்சையாகச் செயல்படும் தகுதியை இழந்த மனம், பாதுகாப்பை எதிர்பார்க்கும். தக்க தருணத்தில் பாதுகாப்பாக இருந்து நல்வழிப்படுத்தும் ஆசான் 'ஜோதிடம்’ என்பதை மறுக்க இயலாது. அடிக்கடி விபத்தில் சிக்க நேர்ந்தால், அது அசட்டையால் ஏற்பட்ட விளைவு என்று தெரிந்தும், தொடர் விபத்துக்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்ற நோக்கில், விருப்பம் இல்லாவிட்டாலும் ஜோதிடரை அணுகவைக்கும். அமைதி கிடைத்தால், ஜோதிடத்தை நம்பும்; தனது அனுபவத்தின் முடிவுக்கு முன்னுரிமை அளித்துவிடும்.

காலக் கணிதத்தின் சூத்திரம்!

பெண்ணின் மனப்போராட்டமானது, ஏற்றுக்கொண்ட கணவனைத் துறந்து மற்றொருவரை ஏற்க வைக்கிறது. அதை விளக்க 'புனர் பூ’ சொல்லை சுருக்கமாகக் கையாளும் ஜோதிடம். பண்டைய நாட்களில் வாக்குறுதியை மீறும் துணிவு இருக்காது. வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காகக் கசப்பான அனுபவத்தையும் மனம் ஏற்றுக்கொண்டுவிடும். இவர்தான் கணவர் என்று பெரியோர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தபிறகு, அவரைத் துறந்து மற்றொருவரைத் தேர்ந்தெடுத்தது இல்லை. முதல் கணவனின் நினைவு மனத்தில் பதிந்திருப்பதால், இரண்டாவது கணவன் அவளை ஏற்க மறுப்பான். பண்டைய நாட்களில் ஒருதலைப்பட்சமாக, ஆசையின் உந்துதலில் ஒருவன் ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டால், அவளை அவனுக்கே மணமுடித்து வைக்கும் தீர்ப்பை, இன்றைய தலைமுறை ஏளனம் செய்யும். அந்தப் பெண்ணை ஏற்க வேறு எவரும் முன்வராத நிலையில், அவளது பாதுகாப்பை எண்ணி அந்த முடிவை அன்றைய சமுதாயம் ஏற்றது. காலப்போக்கில் அவர்களின் மனம் இணைந்து தாம்பத்தியம் சிறக்கும்; அவமானம் மனத்தைவிட்டு அகன்றுவிடும் என்கிற எண்ணம்.

இன்றையச் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. ஆணும் பெண்ணும் பல நேர்காணல்களைச் சந்திக்கின்றனர். ஒருகட்டத்தில் சலித்துப் போய், ஏதாவது ஒன்றைக் கட்டாயமாக ஏற்கவேண்டி வருகிறது. வேறுவழியின்றி, கசப்பான உணர்வுகளையும் ஏற்கத் துணிந்துவிடுகின்றனர். விவாகரத்து ஆன ஆணோ- பெண்ணோ... புதியவருடன் இணையும் தருணத்தில், பழைய கணவன் அல்லது மனைவியை நினைக்க வைக்கும். இருவருக்குமே நெருடல் இல்லாத இன்பம் இருக்காது. இரண்டாவது திருமணம் இரண்டாந்தரம். செகண்ட் சேலுக்கு விலை குறைவுதான்! புனர் பூவில் பின் விளைவுகளை ஆராய்ந்த ஜோதிடம், அந்தப் பெண்மணிக்குப் புனர் பூ என்ற அனுபவம் தொடாத வகையில், கணவனைத் தேர்ந்தெடுக்கப் பரிந்துரைக்கிறது. இப்படி உயர்வான தாம்பத்தியத்தை எட்டவைக்கும் ஜோதிடத்தின் பரிந்துரை, மனித சிந்தனைக்கு இலக்காகாத வழியை நமக்கு அளிப்பதால், அதன் பங்கு பெருமைக்கு உரியது.

பெண் அழகாக இருக்கிறாள். ஆனால், படிப்பில்லை; வேலையில்லை. அதனால் வேண்டாம். பெண்ணுக்குப் படிப்பு, பதவி, சம்பாத்தியம் எல்லாம் இருக்கு; ஆனால், அழகு இல்லை. அதனால் வேண்டாம். அழகு, பட்டம், பதவி, பெருமை, பொருளாதாரம் எல்லாவற்றிலும் சிறந்தவள்; ஆனால், எனக்கு அடிபணிய மாட்டாள்; சுதந்திரமாகச் செயல்படுவாள்; எனவே வேண்டாம் என்று ஆண் மனம் மறுக்கும். அதேபோன்று பட்டம், பதவி, அழகு, கம்பீரம், ஆற்றல், பகுத்தறிவு, எல்லாம் இருக்கிறது; ஆனால், அவன் என் கைக்கு அடங்கமாட்டான். ஆகவே, அவன் வேண்டாம் என்று பெண் மனமும் ஏற்பதில்லை. அவசர காலம் நெருங்கும் தறுவாயில் இருவரது தேர்வும் குறையுடன்தான் இருக்கும். இருவரும் தோல்வியைத் தழுவுவர். ஜோதிடத்தின் பரிந்துரையில் நம்பிக்கை வைத்து தேர்வை ஏற்றுக் கொண்டால், தேவையில்லாத மனப்போராட்டங்களில் சிக்கித் தவிக்காமல் மனமுவந்த இணையைப் பெற்று மகிழலாம்.

தாம்பத்தியம், குடும்பச் சூழல், குழந்தைச் செல்வங்கள், பந்துக்கள் மற்றும் பங்காளிகளை வாழ்வாதாரமாக எண்ணும் பண்பு நம்மில் உண்டு. பிற நாட்டவர்களிடம் இவற்றுக்கு முன்னுரிமை இல்லை. ஆகையால், அவர்களுக்கு ஜோதிடப் பரிந்துரை தேவைப்படாது. நாமும் அவற்றைத் தூக்கி எறிந்தால், ஜோதிடத்தை ஒதுக்கலாம். பாரத மண், பண்போடு இணைந்தது. பிறக்கும்போது பண்பு மனத்தில் இணைந்திருக்கும்; துறக்க இயலாது. ஜோதிடம் வேண்டும். பண்பு பாரதத்தின் உயிர். ஒழுக்கம் அதன் சொத்து. மூடநம்பிக்கை என்று முத்திரை குத்தப்பட்டாலும், நிமிர்ந்து சிலிர்த்து நிற்கிறது அது. தூய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை என்ற கோட்பாட்டில் வாழ்ந்த முனிவர்களுடைய மூளையில் இருந்து வெளிவந்த தகவல்கள், பண்பையும் ஒழுக்கத்தையும் பாதுகாப்பத்தில் விழிப்பு உணர்வோடு இருக்கும்.

காலக் கணிதத்தின் சூத்திரம்!

சிறந்த வல்லுநர்கள் குழாம் தீட்டிய திட்டங்கள்கூடச் சீரழிவைச் சந்திப்பதைப் பார்க்கிறோம். நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கிறது. தெய்வம் என்பது கர்ம வினை. அதை அறிந்தவன் ஜோதிடன். நெருடல் இல்லாத வருங்கால விளைவுகளை வரையறுப்பதில், மனித சிந்தனையைவிட ஜோதிடம் சிறந்தது. 'கடந்த காலம் முடிந்துவிட்டது. அதை அசைபோடுவதில் பலன் இருக்காது. வருங்காலம் பற்றிய சிந்தனை நிகழாத ஒன்று. அதை அசைபோட்டும் பலன் இருக்காது. நிகழ்கால சிந்தனையை பிரச்னைகளைச் சந்திக்கும் தறுவாயில் செயல்படுத்தி முன்னேறு’ என்று கர்காசாரியர் கூறுவார். ஆணையோ பெண்ணையோ தேர்வு செய்யும் நேர்காணலில், 'நிகழாத’ வருங்காலச் சிந்தனைகள் அலசி ஆராயப்படுகின்றன. அதில் எட்டப்படும் முடிவுக்கு ஆதாரம் இல்லை. ஆகவே, கடைசியில் துன்பத்தைச் சந்திக்க வைக்கிறது. ஜோதிடம் நிகழக்கூடியதைச் சுட்டிக்காட்டி, ஆதாரத்துடன் இணையப் பரிந்துரைக்கும். தேவையோ, தேவையில்லையோ... மனக் கலக்கத்தைத் தெளியவைக்க அது பயன்படுவது உண்மை.

வெப்ப கிரகம் தவறான கணவனைத் தேர்ந்தெடுக்க உதவியது; தட்ப கிரகத்தின் கலப்படம் இடைமறித்து, மறு சிந்தனைக்கு வழி வகுத்து, சரியான கணவனைத் தேர்ந்தெடுக்க ஒத்துழைத்தது. இப்படியும் சொல்லலாம்... பாவ கிரகம் தவறான முடிவைச் சுட்டிக்காட்டியது; சுப கிரகம் மறு சிந்தனைக்குக் காரணமாகச் செயல்பட்டு நல்ல முடிவை எட்ட வைத்தது. சுப - அசுப கிரகங்களின் சேர்க்கை, தத்தமது பங்கை இழக்காது. சேர்க்கையால், ஒன்று மற்றொன்றை அழிக்காது. குரு பார்வையில் கோடி பாவங்கள் மறையும் என்ற வாதம், பாமரர்களின் மனநெருடலுக்கு முதலுதவியாக இருக்குமே தவிர, உண்மையாகாது. ராகுவுடன் இணைந்த குரு தகுதியிழப்பைச் சந்திப்பதாக ஜோதிடம் சொல்லும். 'குரு சண்டாள யோகம்’ என்ற தலைப்பில் குருவின் தகுதி மங்கலாகிறது. லக்னத்தில் இருந்து 8-ல் இருக்கும் குரு, அவன் (ஜாதகனின்) ஆயுளை முடிவுக்குக் கொண்டுவரும் கிரகமாக மாறுவார். துன்பத்தை விரட்ட வேண்டிய குரு அவனையே மாய்த்துவிடுகிறார். புராணத் தகவல்களையும் செவிவழி வந்த வழக்குகளையும் ஆதாரமாக்கி, ஜோதிடத்தில் கலப்படம் செய்து மகிழ்வதால் பலன் இல்லை.

சிந்தனை வளம் பெற்றவன், ஜோதிடத்தில் நுழையும் தகுதியைப் பெறுகிறான். சிந்தனைக்கு வழிகாட்டுவது, வெப்ப தட்பம் கலந்த கிரகங்களின் குழாம். கர்மவினையானது சிந்தனையின் வாயிலாக தனது பலனை நடைமுறைப்படுத்தும். ஜோதிடம் மனம் சார்ந்த சாஸ்திரம். மனம் தெளிவானால் சுகம் எளிதாகிவிடும். வறண்ட கோளங்கள் சிந்தனை மாறுதலுக்கு இலக்காகின்றன. குளிர்ந்த கோளங்கள் அதை நடைமுறைப்படுத்த விளைகின்றன. சந்திரன் நீரோடு இணைந்த கிரகம். வெப்ப கிரணங்களைச் சூரியனிடம் இருந்து பெற்று, தனது நீரின் சேர்க்கையில் அமுத கிரணமாக வெளியிடுகிறான். இரண்டில் ஒன்றைத் தனியாக வைத்து, இறுதிப் பலனை நிறைவு செய்ய இயலாது.

ஒவ்வொரு ராசியிலும் 9 கிரகங்களின் பங்கு உண்டு. ஒவ்வொரு தசையிலும் 9 கிரகங்களின் பங்கு இருக்கும். ஒவ்வொரு புக்தியிலும் 9 கிரகங்களின் பங்கு இருக்கும். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஏதாவது ஒரு வகையில் 9 கிரகங்களின் தொடர்பு இருக்கும். பயணப்பாதையாக மட்டுமே கிரகங்களுடன் நட்சத்திரங்கள் இணையவில்லை. அதன் 9 தசைகளிலும், கேந்திர த்ரிகோண ராசிகளிலும் நட்சத்திரங்களின் தொடர்பு ஊடுருவி இருக்கும். காலத்துடன் இணைந்த நட்சத்திரம் இடம் மாறி மாறிப் பயணிக்கும் கிரகங்களுடன் இணைந்துவிடும்.

ஆகாசம் என்ற பூதத்தில் தனது சைதன்யத்தை முழுமையாகப் பரப்பி எங்கும் நிறைந்திருப்பது கிரகங்களின் சைதன்யம். பாலில் நெய் ஒளிந்திருப்பதுபோல், பாரில் பரவியிருப்பவை கிரகங்கள். கிரகங்களின் தனித்தன்மையை விளக்கும்போது, வெப்ப அம்சத்தின் சாயல் தென்படும். சூரியன் வெப்ப கிரகம். அதன் சாரமாக சனியைச் சித்தரிக்கும். அதுவும் வெப்பம். செவ்வாயை பூகோளத்துடன் இணைத்துச் சொல்லும். பூமி வெப்பத்துடன் இணைந்தது; தோண்டித் தோண்டி ஆழமாகச் சென்றால், வெப்பம் தோன்றும். விதை முளைப்பதற்கு பூமியின் வெப்பம் ஒத்துழைக்கும்.

ராகு, கேது நீரில்லா இடைவெளி என்பதால், அதுவும் வெப்பத்தில் அடங்கிவிடும். கேதுவை 'சிகி’ என்று சொல்லும். அதாவது, ஜுவாலை உடையது. அது நெருப்பை சுட்டிக்காட்டும். அதுவழி அதன் இயல்பு வெப்பம் என்று சொல்லும். இப்படி மனத்தில் சிந்தனை தோன்றுவதற்கும், புத்தி வாயிலாக அதை ஆராய்வதற்கும், அதுவழி மாற்றத்தை அடைந்து செயல்படுவதற்கும் பரம்பரையாக 9 கிரகங்களின் பங்கு வழிவகுக்கிறது. உடலில் 9 ஓட்டைகள் உண்டு. உடலில் சமமாக இயங்கும் வெப்ப தட்பங்கள் நல்ல முறையில் இயங்கி, அதன் கழிவுகளை 9 வழிகளின் வாயிலாக வெளியேற்றும். 9 கிரகங்களும் இணைந்து வாழ்க்கையை நிறைவு செய்து குறைகளை வெளியேற்றும்.

- சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism