Published:Updated:

குருவருள்... திருவருள்!

சித்தமெல்லாம் சிவமயமே... புதிய மினி தொடர்! வி.ராம்ஜி

குருவருள்... திருவருள்!

சித்தமெல்லாம் சிவமயமே... புதிய மினி தொடர்! வி.ராம்ஜி

Published:Updated:
##~##

'மாதா, பிதா, குரு, தெய்வம்!’ மனிதப் பிறப்பெடுத்து இந்தப் பூமிக்கு நாம் வருவதற்குக் காரணகர்த்தாக்களான அம்மாவும் அப்பாவும் தெய்வத்துக்கு நிகரானவர்கள். அவர்களைப் போற்றிப் பாதுகாக்கவேண்டியது நமது கடமை. குழந்தையாக நாம் இருந்தபோது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலே அவர்கள் நம்மைப் போற்றிப் பாதுகாத்தார்கள்; அரவணைத்தார்கள்; அன்பு செலுத்தினார்கள். நம் தேவைகளை நாம் கேட்காமலேயே பூர்த்தி செய்தார்கள். இந்த உலகில் நமக்குக் கிடைத்த முதல் வரம்... நமது பெற்றோர்தான்.

ஒரு குழந்தை பிறந்து, அப்பா- அம்மாவின் அரவணைப்புடன் தவழ்ந்து, நின்று, நடக்கத் துவங்கி, பேச ஆரம்பித்து, பிறகு அக்கம்பக்கத்துக் குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடி வளர்கிறது. அதையடுத்து, அந்தக் குழந்தைக்கு வீட்டைப்போல அடைக்கலமாக, புகலிடமாக ஓரிடம் கிடைக்கிறது. அது, பள்ளிக்கூடம். பெற்றவர்களைப் போலவே அன்பும் அக்கறையும் கொண்டு பேணிக் காக்கக் கூடியவர்களாக அங்கே ஆசான்கள் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆக, ஒரு குழந்தை பெற்றவர்களின் மூலமாகவும் குருநாதரின் மூலமாகவும் தான் இந்த உலகை அறிந்து கொள்கிறார்கள். அவர்களின் வழிகாட்டு தலின்படியே வாழ்க்கை எனும் நெடும்பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்தக் காலத்தில் பாடசாலை இருந்தது. குருகுலம் என்று அது அழைக்கப்பட்டது. குருகுலத்திலேயே தங்கி, குருநாதருக்குப் பணிவிடைகள் செய்து, அவரிடம் இருந்து கல்வியையும் ஞானத்தையும் பயின்றார்கள் மாணவர்கள். நம் உடலுக்குள் இருக்கிற ஒவ்வொரு உறுப்பையும் கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி என்பதில் துவங்கி, மனத்தைக் கூர்ந்து பார்க்கவும், ஆன்மாவைத் தொட்டுப் பார்க்கவும், ஆண்டவனை அறிய முற்படவும் சொல்லிக் கொடுத்தார்கள் குருமார்கள். மிருகங்களின் வருகையையும் பறவைகளின் ஒலிகளையும் கொண்டு, ஏதோ ஆபத்து வர இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்கிற வித்தையைப் பழக்கினார்கள்.

குருவருள்... திருவருள்!

வியூகம் அமைத்துப் போரிடுவதையும், எதிரிகளை வீழ்த்துவதையும், நண்பனுடன் உறவாடுவதையும், இல்லறக் கடமையையும், வேதங்கள் அருளியிருக்கிற சாத்வீக குணங் களைக் கொண்டு வாழ்வதையும் இந்த உலகில் உள்ள மக்களுக்கு எத்தனையோ குருநாதர்கள் அருளியிருக்கிறார்கள்.

அதேபோல், ஞானிகளும் யோகிகளும் வாழ்ந்த புண்ணிய பூமி இது. வேதங்களையும் அதன் சாரங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மனிதர்களை நெறிப்படுத்தி, இனிதே வாழவைக்க மகான்கள் தோன்றினார்கள். மடாலயங்களை உருவாக்கினார்கள். வழிபாட்டு முறைகளையும் சடங்கு சம்பிரதாயங்களையும் வலியுறுத்தினார்கள்.

நமது பாரத தேசத்தில் உள்ள மிகத் தொன்மையான மடங்களில், காஞ்சி ஸ்ரீசங்கர மடமும் ஒன்று. அது, ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாள் எனும் மகான் இந்த உலகுக்கு வழங்கிய கொடைகளில்  ஒன்று! அவர் வழியே வந்த எத்தனையோ மகான்கள், இந்த உலகையும் மக்களையும் நல்வழிப்படுத்தியிருக்கிறார்கள். நிம்மதியாகவும் நிறைவாகவும் மனிதப் பிறப்பைக் கடைத்தேற்ற அருளியிருக்கிறார்கள்.

காஞ்சி சங்கர மடத்தின் 54-வது பீடாதிபதி யாகத் திகழ்ந்தவர் ஸ்ரீவியாஸாஜல மகா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகள். மக்களின்மீது பெருங்கருணையும் கடவுளின் மீது அளவற்ற பக்தியும் கொண்டு நெறியுடன் வாழ்ந்த மிகச் சிறந்த மகான்.

ஹம்பியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த விஜய நகர மன்னர்கள், காஞ்சி சங்கர மடத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் கள். அந்த மடத்தின் துறவிகள் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார்கள். அதையடுத்து, கி.பி.1503 முதல் 1509 வரையிலான காலகட்டத் தில் வீரநரசிம்மன் எனும் அரசன் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தான். அவனும், காஞ்சி காமகோடி பீடத்தின் மீதும், பீடாதிபதிகள் மீதும் மாறாத பக்தி கொண்டிருந்தான். அவனுடைய ஆட்சிக் காலத்தில் சங்கர மடத்தின் துறவியாக இருந்த ஸ்ரீவியாஸாஜல சுவாமிகளின் தீர்க்கதரிசனத்தை அறிந்து சிலிர்த்தவன், காஞ்சிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தையே அவருக்கு எழுதிக் கொடுத்து, வணங்கி மகிழ்ந்தான்.

குருவருள்... திருவருள்!

'இந்தக் கிராமம், இனி உங்களாலும் உங்களுடைய பேரருளாலும் இன்னும் செழித்து வளரவேண்டும். இங்கே உள்ள மண்ணும் நீரும், மரமும் செடியும், பறவைகளும் மனிதர் களும் எழுச்சியுடன் இன்பமாக, நிம்மதியாக வாழவேண்டும். உங்கள் ஆசியுடன் வாழ்வார் கள்’ எனப் பவ்யமாக வேண்டி, கிராமத்தை வழங்கினான். அத்துடன் அந்த ஊருக்கு 'எழுச்சியூர்’ என்றும் பெயரிட்டான்.

பிறகு அந்த எழுச்சியூர், ஸ்ரீவியாஸாஜல சுவாமிகளின் கருணையாலும் அருளாலும் வளர்ந்து செழித்தது. காலப் போக்கில் அது எழுச்சூர் என மருவியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதிக்கு அருகில், எழுச்சூர் எனும் அழகிய கிராமம் இன்றைக்கும் உள்ளது.  இங்கே உள்ள சிவாலயம் மிகச் சாந்நித்தியமானது. இறைவன்- ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர். அம்பாள்- ஸ்ரீதெய்வநாயகி.

ஆனால், இந்த ஆலயம் பல காலமாகச் சிதிலம் அடைந்தே இருந்தது. கண்ணாரத் தரிசிக்க ஆளின்றி, களையிழந்து நின்ற ஆலயத்தை அறிந்த சிவனடியார்கள் பலர் ஒன்று சேர்ந்து, திருப்பணியில் ஈடுபட்டனர். கோயிலின் பெருமைகளை உணர்ந்த ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், இளைய வர் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இந்தக் கோயிலுக்கு வந்து பார்வையிட்டனர். சிவ- பார்வதியை நமஸ்கரித்தனர். 'இவ்வளவு பிரமாதமான, சக்தி வாய்ந்த கோயில், சீக்கிரமே எல்லாருக்கும் தெரியப் போறது’ என அருளினார் கள். சங்கர மடத்தின் சார்பில், திருப்பணிக்கு உதவிகள் செய்யப்பட்டன.

திருப்பணிகள் முடிந்து, பொலிவுக்கு வந்த ஆலயத்தில் விமரிசையாக கும்பாபிஷேகமும் நடந்தது. அந்த விழா, ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையிலும் ஆலோசனையிலும் சிறப்புறக் கொண்டாடப்பட்டது.

குருவருள்... திருவருள்!

இளையவர் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தார். ஒவ்வொரு இடத்திலும் நின்று, தொட்டு, கண்கள் மூடி அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டார். 'இங்கே வந்து யார் தரிசனம் பண்ணினாலும், அவாளுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமா கிடைக்கும்’ என்று கோயில் நிர்வாகிகளிடம் அருளினார்.

காஞ்சி சங்கர மடத்தின் 54-வது பீடாதிபதியான, எழுச்சூரைத் தானமாகப் பெற்ற ஸ்ரீவியாஸாஜல சுவாமிகளின் அதிஷ்டானம் இந்த ஆலயத்தினுள் அமைந்துள்ளது என்பது கோயிலின் சிறப்புகளில் ஒன்று.

எழுச்சூர் வந்து பாருங்கள்... அந்த மகானின் சந்நிதியில் நின்று மனதார வேண்டும்போது, உங்கள் மனத்துள் ஓர் எழுச்சி தோன்றிப் பரவுவதை உணர்ந்து சிலிர்ப்பீர்கள்!

- அருள் சுரக்கும்

படம்: ரா.மூகாம்பிகை

எங்கே இருக்கிறது?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது ஒரகடம். சென்னை தாம்பரத்தில் இருந்து படப்பை வழியே காஞ்சிபுரம் நோக்கிச் செல்லும்போது, ஒரகடம் எனும் ஊரை அடையலாம். அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர் ஆலயம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism