மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

##~##

விஞ்ஞான வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பின் காரணமாக, நமது பொக்கிஷமான வேதங்கள், புராணங்கள், ஜோதிட சாஸ்திரங்கள் ஆகியவை நமக்குச் சுட்டிக்காட்டிய அற விஷயங்களைப் புறக்கணிப்பது சரியா?

- ம.வேதநாராயணன், கோவில்பட்டி

'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற சொல்வழக்கு, பண்பின் அடிப்படையில் வெளிவந்தது. உலக மக்கள் அத்தனைபேரும் ஒரு குடும்பம் என்கிறது வேதம் (வஸீதை வகுடும்பகம்). 'பிறப்பை அளித்த சக்தி, தாய்; என்னை இயக்கும் சக்தி, தகப்பன்; தென்படும் மனித இனம், எனது பந்துக்கள்; மூவுலகமும் எனது பிறப்பிடம்!’ என்கிறது புராணம் (மாதாச பார்வதீதேவீ பிதாதேவோ மஹேச்வர: பாந்தவா: சிவபக்தாச ஸ்வதேசோபுவனத்ரயம்). 'இயற்கையின் அன்பளிப்பை எல்லோரும் பகிர்ந்து உண்டு மகிழ வேண்டும்; தான் மட்டும் தனியாக உணவருந்தக் கூடாது’ என்கிறது வேதம் (தேவலா கோபவதிகேவலாதீ). பசித்தவனுக்கு உணவளிப்பது அறமாகக் கருதப்படும்.

சங்கிலித் தொடர்போல் மனித இனம் அறுபடாமல் வளர அன்பும், பண்பும், அறமும் அரணாகப் பாதுகாப்பு அளித்தன. அறத்தின் பரிந்துரையில் உருவெடுத்தது திருமணம். அறப் பின்னணியில் நிகழும் இனப்பெருக்கம் மகிழ்ச்சியான வாழ்வுக்குத் துணைபுரியும். வாழ்வின் நுழைவாயில் திருமணம். பரிணாம வளர்ச்சியில் மனத்தில் மலர்ந்த எண்ணங்களை இருவரும் பரிமாறிக்கொண்டு நிறைவை எட்டும்போது, அதன் அடையாளமாக மழலைச் செல்வம் உருவாகும். அன்பு, பண்பு, அறம் ஆகியவற்றுடன் இணைந்து வளரும் வாரிசுகள், நாகரிக வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி பிறருக்கும் உணர்த்தும். ஆறறிவு பெற்ற இனம் அறப் பின்னணியில் திருமணத்தைச் சந்தித்து, இனப்பெருக்கம் நிகழ வேண்டும் என்று வேதம் வலியுறுத்தும்.

கேள்வி - பதில்

ஐம்பெரும்பூதங்களை தேவதாத்மாவாக பாவித்து வணங்கும் பண்பைப் பெற்றது நம் நாடு. அக்னியை வணங்கச் சொன்னது ரிக் வேதம். காற்றை வணங்கச் சொன்னது யஜுர் வேதம். சூரியனை வணங்கச் சொன்னது ஸாம வேதம். நீரை வணங்கச் சொன்னது அதர்வ வேதம். நீரும், நெருப்பும், காற்றும் உலகுக்கு ஆதாரம்; உடலுக்கும் ஆதாரம். ஆண்- நெருப்பு; பெண் நீர். சுக்லம் அதாவது ஆணின் பீஜம் நெருப்புக்குச் சமானம்; பெண்ணின் சோணிதம் நீருக்குச் சமானம். நெய் போன்றவள் பெண்; தணல் போன்றவன் ஆண் என்கிறது புராணம் (கிருதகும்ப சமா நா நீ தப்தாங்காரசம: புமான்). வெப்பம் நெய்யை உருக்கும். இருவரது மனமும் இணைவதைத் திருமணம் என்போம். அந்த இணைப்பின் இறுக்கத்துக்கு ஜோதிடம் உதவுகிறது.

9 கிரகங்களும், நட்சத்திரங்களும் அவர்கள் பிறக்கும் வேளையுடன் இணைந்திருக்கும். அவற்றின் தாக்கம் அவர்களது மனப் போக்கை வரையறுக்கும். அறவழி செயல்படும் மனப்பாங்கைக் கண்டறிந்து இணையை இணைப்பதற்கு ஜோதிடம் பரிந்துரைக்கும். லோகாயத வாழ்க்கை அவர்கள் குறிக்கோள் அல்ல. அறத்தோடும் ஒழுக்கத்தோடும் இன்பத்தைச் சுவைத்து, ஆன்மிக அறிவில் ஆனந்தம் பெற வேண்டும். அதற்கு மனம் தூய்மை பெற வேண்டும். மனிதப் பிறவியின் தகுதியை இழக்காமல், சிறந்த செயல்பாட்டில் தெய்வீகத் தன்மையை எட்டி, பேரறிவு பெற்று ஓங்க வேண்டும்.

இளமையில் தோன்றும் எண்ணங்களை இணையோடு இணைந்து அனுபவித்து மனப்பக்குவம் பெற்றால் மட்டுமே, பேரறிவைத் தடங்கலின்றி எட்ட முடியும். பாரத மண்ணில் தோன்றியவனின் பெருமை அது. ஆகவே, பாரதத்தில் பிறந்தவனுக்கு மற்றவர்களிடம் தென்படாத தனி அறம் உண்டு. ஆகையால், அவனுக்கு வேதம், புராணம், சம்பிரதாயம், சாஸ்திரம், ஜாதகம், பொருத்தம், ஜோதிடம் என எல்லாமும் வேண்டும். முனிவர்கள் குழாம் முன்னெச்சரிக்கையாக பாரதத்தின் தனித் தன்மையை உணர்ந்து, அதற்கேற்ப ஆண்- பெண் இணைப்பின் பெருமையை உணர்ந்து, 'திருமணம்’ என்ற சட்டதிட்டத்தை அறிமுகம் செய்தனர். அதைச் செழிப்பாக்க, அவர்கள் மனத்தின் பக்குவத்தை அறிய, ஜோதிடத்தின் வாயிலாக அவர்கள் இணைப்பின் இறுக்கத்தை வரையறுத்தார்கள். வாழ்வின் ஸ்திரத் தன்மைக்கு, ஜோதிடப் பரிந்துரைகள் வரப்ரசாதம். ஸ்திரமான வாழ்க்கை, நிலையான இன்பத்தை எட்ட வைக்கும். அத்துடன், அறவழியில் செயல்படும் நல்ல குடிமகனை ஈன்றெடுத்து நாட்டுக்கும் செழிப்பூட்டும். நாட்டையும் வீட்டையும் இரண்டாகப் பார்க்காமல், 'வஸீதைவ குடும்பகமும்’ என்று உலகையும் ஒரு குடும்பமாக- வீடாகப் பார்த்தது பாரதம்.

ந்தக் கருத்தை ஏற்க முடியாது!

கேள்வி - பதில்

அறப் பின்னணியை பாரதத்தின் பெருமையாக சித்திரித்து, பிறப்புரிமையான சுதந்திரத்தைச் சுவைக்கமுடியாத அளவுக்குக் கட்டுப்பாட்டைச் சுமத்துவது சிறப்பல்ல. ஆறறிவு அற்ற விலங்கினமும் ஆறறிவு பெற்ற இனமும் விருப்பப்படி இணையைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. அதில், அது மகிழ்ச்சியைச் சந்தித்துவிடும். பாரதத்தில் மட்டும் ஜோதிடம், திருமணம் என்ற கட்டுப்பாடு அவர்களுக்கு உதவவில்லை; இடையூறையே விளைவிக்கிறது. பிறநாடுகளில் வாழும் மக்களும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அவர்களில் ஜோதிடமோ நம்மைப் போன்ற திருமணமோ இல்லை. குறிப்பாக, ஜாதகப் பொருத்தம் பார்க்கும் நடைமுறையும் இல்லை. வேதம், புராணம், இதிகாசம், சம்பிரதாயம் போன்றவை அவர்கள் வாழ்க்கைக்குத் தேவைப்படவில்லை.

அவர்களது சிந்தனை விஞ்ஞானத்தின் எல்லையை எட்டி, இதுவரை சுவைத்திராத பல இன்ப உணர்வுகளைச் சுவைத்து மகிழ்ந்து, நமக்கும் அளித்து மகிழ்கிறார்கள். பாரதமும் அவர்கள் சிந்தனையில் மெய்ம்மறந்து, அவர்களது நடை, உடை, பாவனை, இலக்கு ஆகியவற்றைப் பின்பற்றி, அவர்களுக்கு இணையாகத் தன்னை உயர்த்திக்கொள்ளத் துடிக்கிறது. இயற்கை அளித்த இனப்பெருக்கத்துக்குச் செயற்கையான திருமணம், ஜோதிடம், ஜாதகம் போன்ற அரண்கள் நிலைத்து நிற்கமுடியாது. இயற்கையை எதிர்த்து வெற்றி கண்டவன் இல்லை; இனியும் இருக்கமாட்டார்கள்.

பிறப்பு, செல்வம், பெருமை, பதவி ஆகியவை, விரும்பிய திருமணத்தை தடுத்துப் பார்த்துத் தோல்வியுற்றன. விருப்பத் திருமணத்துக்கு உயர்வு ஊட்டும் வகையில், கற்பும் காகிதப்பூவாக மாறிவிட்டது. புனிதமான கங்கை நதி கடலில் கலந்து, தனது இனிப்பை இழந்து உப்பாக மாறுவதுபோல், இனிப்பான அறத்தைத் துறந்து, கசப்பான விஞ்ஞானத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது மனம். அறம் என்ற கட்டுப்பாடு ஒன்றைத் துறக்க வைத்து, மற்றொன்றை ஏற்க வைத்திருக்கிறது. இப்போது அறம் கசக்கிறது. விஞ்ஞானம் இனிக்கிறது. மனம் கட்டுப்பாடு இல்லாத வாழ்வை ஏற்க வைக்கும். கட்டுப்பாட்டை மனம் விரும்பாது. உலகத்துடன் ஒத்து வாழவேண்டும். இதுவரையிலும் அறத்தை ஆனந்தமாக எண்ணிச் சுதந்திரத்தையும் விருப்பத்தையும் இழந்தோம். உலகத்தை நேரில் பார்த்து உண்மையை உணர்ந்தோம். ஆக, ஜோதிடம், ஜாதகம், பண்பு, ஒழுக்கம் ஆகிய அனைத்தையும் மகிழ்ச்சிக்கு இடையூறாகவே அனுபவத்தில் உணர்கிறோம்.

நாமும் விருப்பத் திருமணத்துக்கு முன்னுரிமை அளித்து, பல விவாகரத்துகளைச் சந்தித்துவிட்டோம். அறம் அகன்றதும், நமது மன நெருடலும் மறைந்துவிட்டது. முதுமையை எட்டியவனும் திருமணம் செய்துகொள்கிறான். திருமணத்துக்கு வயது, பக்குவம், நேரம், காலம் பார்ப்பது இல்லை. பால்யத்திலும், இளமையிலும், முதுமையிலும் திருமணம் உண்டு. அறம் தோல்வியடைந்து, ஏட்டில் ஒன்றிவிட்டது. கற்புக்கரசி என்ற சொல் புதிய தலைமுறைக்குப் புரியாத புதிர். புதுச் சிந்தாந்தத்தில் மூளைச் சலவை பெற்ற மக்களுக்கு ஜாதகம், ஜோதிடம் என்பதில் விருப்பம் இராது. இப்படி முற்றிலும் மாறுபட்ட சூழலில் ஜோதிடமும் ஜாதகமும் வியாபார நோக்கில் வளைய வருகின்றன. அவை, மனத்தெளிவை உண்டுபண்ணவில்லை.

ஆகவே, கைநழுவிப் போன பிறகு ஒப்புக்காக அறத்தை கட்டிக்கொண்டு அழுவது எவருக்கும் பயன்படாது. விருப்பப்படி செயல்படும் மக்களுக்கு ஜாதகம் அல்லது அறத்தால் முட்டுக்கட்டை போட இயலாது. அப்பாவிகளின் அறியாமையால் வியாபாரத்தில் வேண்டுமானால் வெற்றி அடையலாம்.

இந்த வாதம், அறியாமையின் ஆழத்துக்கு எடுத்துக்காட்டு. பண்பட்ட சிந்தனையாளர்களிடம் தோன்றாத ஒன்று. மனித இனத்தின் இயல்பு, அதில் தென்படவில்லை. பிறப்பில் உயர்ந்த மனித இனத்தை விலங்கினமாகத் தரம் தாழ்த்துகிறது.

பிறரது சுதந்திரத்துக்கு வில்லங்கம் இல்லாமல் தனது விருப்பத்தைச் செயல்படுத்துவதே சுதந்திரம். கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் விலங்கினங்களில் சிறக்கும். 6-வது அறிவு இல்லாததால், இயற்கை யின் கோட்பாட்டுக்கு அடங்கி வாழும் இனம் விலங்கினம். ஆறறிவு பெற்றவன், தனக்கு சுயக் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டுவிட்டான். கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை இனிக்காது. கட்டுப்பாடுதான் அறம். மனிதப் பிறவி எடுத்தால், அறத்தோடு வாழ்வது கட்டாயமாகும்.

பிறரின் மனைவியைக் கவருவதை தண்டனைக்கு உரியதாகப் பார்ப்பது அறம். மாட்டு மந்தையில் காளை மாடு விருப்பப்படி பசுவுடன் இணையும். அப்படியான வழக்கத்தை, நாம் ஏற்க இயலாது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு அதாவது அறம், கட்டுக்கோப்பான மனித வாழ்வின் சிறப்பை நிறைவு செய்யும். குலம் அறுபடாமல் வளர, 'ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கட்டுப்பாடு துணை புரியும். விஞ்ஞானத்தில் முன்னேறிவிட்டதாக எண்ணும் மனமானது, மனித இயல்பை இழந்து விலங்கினமாகத் தாழ்ந்துவிட்டதை எண்ணிப்பார்க்காது. விஞ்ஞானம் தந்த விவாகரத்து ஒட்டுமொத்த மனித இனத்தையும் விலங்கின இயல்பை ஏற்கவைக் கிறது. ஒருதலைப்பட்சமான இன்பத்தில் போலி மகிழ்ச்சி அடைந்து பழக்கப்பட்டுவிட்டான். இருதலைப்பட்ச இன்பம் அவனை முழுமையாக்கும். ஒருதலைப்பட்சமான இன்பத்துடன் திருப்தியடையும் இயல்பு விலங்குகளுக்கு உரியது. ஆக, இயல்பிலும் அவனை விலங்கினமாக மாற்றிவிட்டது விஞ்ஞானம். பிறர் மனைவியை, அவர்களது முந்தைய திருமணத்தைச் சட்டத்தால் ரத்து செய்யவைத்து, ஒருதலைப்பட்சமாக இன்பத்தை நிறைவேற்றிக் கொள்பவர்களும் உண்டு.

கேள்வி - பதில்

உருவத்தில் மனிதனாகத் தென்பட்டாலும், இயல்பில் விலங்கினமாகத் திகழ்பவர்களும் உண்டு. அறம் அறுந்துபோனதும் விலங்கின இயல்பு தலைதூக்கும். அறமே ஒருவனை விலங்கினத்திலிருந்து மாறுபட்டவனாக உயர்த்துகிறது. அறத்திலிருந்து விடுபட்ட இனம் கட்டுப்பாட்டை இழந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி ஆகியவற்றில் ஈடுபடுவதை நம் நாட்டிலேயே பார்க்கிறோம். அறம் தொடாத எந்தச் செயலும் பயனற்றதாக மாறிவிடும்.

விஞ்ஞானத் தாக்கத்தால் மன அமைதியை இழந்த வெளிநாட்டவர், நம் நாட்டைச் சரணடை கிறார்கள். விழித்துக்கொண்ட அவர்கள் ஆன்மிக அறிவைப் பெற, பாரதம் வருகிறார்கள். நமது சிந்தனைகள், அவர்களின் வாழ்வாதரமாக மாறிவிட்டது. 'வேதத்திலும், சாஸ்திரங்களிலும் மனித சிந்தனையின் கொடுமுடியைக் கண்டேன். மகிழ்ந்தேன். ஆனால், நான் பாரதத்தில் பிறக்க வில்லையே என்ற குறை நெருடலாக இருக்கிறது’ என்று மாக்ஸ்முல்லர் தனது அனுபவத்தை, காலத்தால் அழியாதவண்ணம் ஆழமாகப் பதித்திருக்கிறார்.

நாம் வழிபடும் தெய்வங்கள் வெளிநாடுகளில் குடிகொண்டிருக்கின்றனர். ஆன்மிக அறிவு குறித்த ஆராய்ச்சிகள், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் உண்டு. நமது கொண்டாட்டங்கள் அத்தனையும் அந்த நாடுகளில் வாழும் நம்மவர்களால் நடத்தப்படுகின்றன. அந்த நாட்டவரும் அதைக் கண்டுகளிக்கிறார்கள். அங்கெல்லாம் ஜோதிடமும், ஜாதகமும், நம் நாட்டுத் திருமணமும் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவற்றை அந்நாட்டு மக்கள் முழுமையாக ஏற்று, தங்களையும் இணைத்துக்கொள்கிறார்கள். நாம் அறிந்திராத வேதத் தகவல்கள் மற்றும் அறக்கோட்பாடுகளை 'இண்டியா ஆபீஸ் லைப்ரரி’யில் வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள்.

இங்கேயோ... அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாக, விஞ்ஞானத்தை நம்பி அறப்பொக்கிஷங்களை இழந்ததுதான் உண்மை. இந்த பாரதத்தில் பிறந்தவனிடமிருந்து உலகத்தில் இருக்கும் அத்தனை பேரும், அத்தனை தேசத்த வர்களும் அறக் கோட்பாடுகளைக் கற்கவேண்டும் என்று மனு கூறுவார் (ஏதத்தேசப்ரஸ¨தஸ்யஸகாசாத் அக்ரஜன்மன: ஸவம் ஸ்வம் சரித்ரம்சிஷேரன் ப்ருதிவ்வ்யாம் ஸர்வமானவா:).

உடலுறவில் ஈடுபடுபவன் சுக்லத்தின் இழப்பில் பலம் குன்றுவதை அறியாமல், மகிழ்ச்சியைப் பெற்றதாக எண்ணுவான். அதேபோன்று, அறப்பொக்கிஷங்கள் பறிபோவதை அறியாமல், மகிழ்ச்சி அடைவதாக நினைப்பது அறியாமை. மனப்போக்கை அறிய விஞ்ஞானம் கைகொடுக்காது. கால மாற்றம் விஞ்ஞானத் தகவல்களையும் பொய்யாக்குவது உண்டு. அது நிரந்தரமில்லை. விஞ்ஞானமானது, புலப்படும் பொருளுக்குக் காரணத்தைத் தேடும் பணியில் வெற்றி பெறும்; அவ்வளவே! பொருளின் மாற்றத்துக்கான காரணத்தை வரையறுத்துச் சொல்லாது; புலப்பட்டதைச் சொல்லும். புலப்படாத காரணத்தையும் ஆராய்ந்து வெளியிடும் தகுதி, பாரதத்தில் வளைய வரும் சாஸ்திரங்களுக்கு உண்டு! இரு மனங்களின் போக்கை உணர்ந்து அதன் இணைப்பில் மகிழ்ச்சி பெறலாம் என்கிற தகவலை ஜோதிடம் வெளியிடும். கண்ணுக்குப் புலப்படாத வருங்கால அட்டவணையை ஜோதிடம் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம். மனித சிந்தனை ஆசாபாசங்களோடு இணைந்திருப்பதால், உண்மையைக் கண்டறிவதில் தடங்கலாக மாறிவிடும். ஜோதிடத்தின் துணையில் தடங்கலைத் தாண்டி, உண்மையை எட்டிவிடும்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

சிறப்பான தாம்பத்திய வாழ்க்கைக்கு ஜாதகமும் வேண்டும்; ஜோதிடமும் வேண்டும். பண்பும் ஒழுக்கமும் வேண்டாம் என்று எண்ணுபவர்களுக்கு எதுவும் வேண்டாம். விலங்கின வாழ்க்கை அவர்களுக்குத் திருப்தி அளித்துவிடும். உலகுக்கே வழிகாட்டும் அளவுக்குப் பெருமையைத் தேடித் தரும் அறமும், அதோடு இணைந்த ஜோதிடம், ஜாதகம் போன்றவையும் நிச்சயம் வேண்டும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.