Published:Updated:

வாஷிங்டனில் பிள்ளையார் சதுர்த்தி!

சரணம் கணேசா!சண்முக சிவாச்சார்யர்

வாஷிங்டனில் பிள்ளையார் சதுர்த்தி!

சரணம் கணேசா!சண்முக சிவாச்சார்யர்

Published:Updated:
##~##

உலக அளவில் எல்லோருக்கும் பிடித்த இஷ்ட தெய்வம்... பிள்ளையாரப்பன்தான்!

அமெரிக்காவில், வாஷிங்டன் நகரில் லான்ஹம் என்றொரு ஊர். அங்கே, வெகு அழகாக அமைந்துள்ளது ஸ்ரீசிவா- விஷ்ணு கோயில். அந்தக் கோயிலின் ஆஸ்தான சிவாச்சார்யர் என்ற முறையில், என்னை இந்த முறை விநாயக சதுர்த்தி விழாவுக்கு அழைத்திருந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை, அங்கே ஸ்ரீமகா கணபதி மகோத்ஸவம் சிறப்புற நடைபெற்றது. குடும்பம், சமூகம், நாடு மற்றும் உலகம் என சகல ஒற்றுமைக்காகவும் ஸ்ரீவிநாயகர் ஜபம் செய்வது, குடும்ப ஒற்றுமை தழைக்க பூஜை செய்வது, விசேஷ வாகனங்களில் விநாயகர் திருவீதியுலா வருவது என ஏற்பாடுகள் நடந்தன. முக்கியமாக விநாயகர் சம்யோஜனம் செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது, கூடுதல் சிறப்பு!

அதாவது, நம்மூரில் மாசு விளைவிக்கக்கூடிய கெமிக்கல் வகையால் தயாரிக்கப்பட்ட ஸ்ரீவிநாயகரின் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பொம்மையைக் கடலில் கரைக்கிறோம். இதை விசர்ஜனம் என்கிறோம். விசர்ஜனம் என்றால், விட்டுவிடுதல் என்று அர்த்தம். இறைவனை விட்டுவிட்டு நாம் எப்படி வாழ முடியும்?  எனவே,  இதனை சம்யோஜனம் என்று சொல்லலாம் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் தமிழர்களிடையே உரை நிகழ்த்தினேன். சம்யோஜனம் என்றால், நன்றாகச் சேர்த்தல் என்று அர்த்தம். இப்படி, நான் சொன்னதை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.  

வாஷிங்டனில் பிள்ளையார் சதுர்த்தி!

முன்னதாக, வட அமெரிக்காவில் உள்ள பல கோயில்களைச் சேர்ந்த அன்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, முழு ஈடுபாட்டுடன் விநாயகர் ஜபத்தில் ஈடுபட்டார்கள்.

'ஓம் வக்ரதுண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரபா
அவிக்னம் குரு மே தேவ ஜக்ய பாவம் விவர்தய:’

அதாவது, 'குடும்பத்திலும் சமூகத்திலும் நாடு முழுவதிலும் கருத்து வேறுபாடுகள் அறவே குறைந்து, ஒற்றுமை உணர்வு மேலோங்கட்டும்’ என்று இதற்கு அர்த்தம். இந்த மந்திரத்தை, கடந்த இரண்டு மாதங்களாக சத்சங்க அன்பர்கள் பலரும் ஜபித்து வருகிறார்கள். இதுவரை, 42 லட்சத்தைக் கடந்துள்ளது. வருகிற டிசம்பருக்குள் இந்த எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டிவிடும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்கள்.

பிறகு, இந்தியக் குடும்பத்தினர் குழந்தைகளுடன் வந்திருந்து, சிவா- விஷ்ணு கோயிலில் நடைபெற்ற பூஜைகளில் தினமும் பங்கேற்றனர். 16 அஷ்டோத்ர நாமாக்களால் அர்ச்சனை செய்து வழிபாடு துவங்கியது. அங்கே வந்திருந்த தம்பதியை நிற்க வைத்து, அவர்களின் குழந்தைகளை அழைத்து, பெற்றோரையே சிவ-பார்வதியாக பாவித்து, மூன்று முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பிறகு அந்தக் குழந்தைகளுக்கு மாம்பழம் வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்தில், ஒரு குழந்தையோ மூன்று குழந்தையோ... எல்லாருக்கும் சேர்த்து ஒரே ஒரு மாம்பழம் வழங்கி, அதைப் பகிர்ந்து சாப்பிடச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது. அதை, உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் ஏற்றுச் செயல்பட்டார்கள், குழந்தைகள். குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தவே இந்த பூஜை அனுஷ்டிக்கப்பட்டது.

கோயில் நிர்வாகிகள் மற்றும் அங்கே உள்ள பக்தர்களின் கூட்டு முயற்சியால், இந்தியாவில் வெகு அழகாகத் தயார் செய்யப்பட்ட வெள்ளி மூஷிக வாகனம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மூன்று நாட்கள் நடந்த திருவீதியுலாவை மெய்சிலிர்க்கத் தரிசித்தார்கள், பக்தர்கள்.

அப்போது, நம்மூரைப் போலவே மேள தாளங்கள் வாசிக்கப்பட்டன. நாகஸ்வரம் முழங்கின. அமெரிக்கச் சாலையில், இந்தியப் பாரம்பரிய இசை வாசிக்க, எட்டுத் திசையிலும் சிதறுகாய் உடைத்துக்கொண்டே வர, பூசணிக் காய் உடைக்க, ஆண்களும், பெண்களுமாகச் சேர்ந்து, கோலாட்டம் கும்மியாட்டம் எனச் சாலையில் ஆடிப்பாடி வந்ததைப் பார்க்க... இது அமெரிக்காவா, சென்னை அமிஞ்சிக் கரையா என்று ஒரு கணம் குழப்பம் மேலிடத்தான் செய்தது.

நிறைவுநாளில், ஸ்ரீவிநாயகரின் சம்யோஜன வைபவம். இதுதான் இந்த முறை மிக ஹைலைட்டான, ஆச்சரியமான விஷயம்! நம்மூரைப் போலவே நீர்நிலைகளில் பிள்ளையார் உருவத்தைக் கரைக்க, முதன்முறையாக அமெரிக்க அரசு அனுமதி அளித்திருந்தது.

வாஷிங்டனில் பிள்ளையார் சதுர்த்தி!

அந்த அனுமதிக்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு, தீபாவளித் திருநாளில் இங்கிருந்து பிரசாதம் மற்றும் தீபங்கள் எடுத்துச் செல்லப் படும் என்பதைப் பெருமிதத்துடன் சொல்கிறார்கள், பக்தர்கள்.

ஹரிதாஸ் லஹரி எனும் வாஷிங்டன் வாழ் பக்தர் ஒருவர், ஆறடி உயரம் உள்ள கம்பீரமான விநாயகரின் உருவச் சிலையை விசேஷமாகச் செய்திருந்தார். பத்து நாள் விழாவிலும் இவருக்குத்தான் ராஜமரியாதை; சிறப்பு பூஜைகள்!

வாஷிங்டனில் பிள்ளையார் சதுர்த்தி!

திறந்த வாகனம் ஒன்றில் பிள்ளையார் வீற்றிருந்தார். இவர், நம்மூரில் செய்வது போல், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பிள்ளையார் அல்ல. முழுக்க முழுக்கக் களிமண்ணால் தயாரான பிள்ளையார். கோயிலில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள ஆர்டிமீஷியா (Artemesia) என்ற பிரமாண்டமான ஏரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே பக்தர்கள் குழுமியிருக்க, ரப்பர் டியூப்களால் தாங்கப்பட்ட மிதக்கும் மணைப்பலகையில் ஏற்றப்பட்டார் விநாயகர். என்னுடன், லண்டன் முருகன் கோயில் செல்லப்பா பட்டர் மற்றும் சிவா- விஷ்ணு கோயில் அர்ச்சகர்கள் வேறொரு படகில் ஏறிக்கொண்டு, பிள்ளையார் இருக்கும் ரப்பர் டியூப் மிதவையைக் கயிற்றால் கட்டி இழுத்துக்கொண்டே நடுப்பகுதிக்கு வந்தார்கள்.

அப்போது, விநாயகரை கரையில் உள்ள பக்தர்களைத் திரும்பிப் பார்த்துத் திருக்காட்சி தரச் செய்தார்கள் அர்ச்சகர்கள். பக்தர்கள் அனைவரும் 'கணபதிக்கு ஜே!’ என்று முழங்கினார்கள். 'பிறந்த ஊரையும் சொந்த மண்ணையும் விட்டுட்டு அமெரிக்காவுக்கு வந்து பல வருஷமாச்சு! ஆனா, இந்த விழாவின் மூலமா, நம்ம காவிரிக்கரைப் பக்கமோ, சென்னையிலோ, நெல்லை பக்கமோ இருக்கற மாதிரி ஓர் உணர்வு!’ என்று புளகாங்கிதத்துடன் நெக்குருகிச் சொன்னார்கள் பலரும்.

எனக்கும் அதே உணர்வு! அதே மகிழ்ச்சி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism