##~##

கராதி, நிகண்டு என்றெல்லாம் சொல்லுகிறார்களல்லவா? ஸம்ஸ்கிருதத்தில் இருக்கிற பிரசித்தமான அகராதிக்கு 'அமரகோசம்’ என்று பெயர். 'அமரம்’ என்று சுருக்கிச் சொல்வார்கள். அதைப் பற்றியும், அதை எழுதினவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். இதில் பல ரசமான விஷயங்கள் இருப்பதால்தான் சொல்கிறேன். இதில் நம் பகவத்பாதாளின் பெருமை, மதங்களில் ஒன்றுக் கொன்று இருக்கப்பட்ட உறவுகளின் போக்கு எல்லாம் வெளியாவதால் சொல்கிறேன்.

இந்த அகராதிக்குப் பேர் 'அமரகோசம்’ என்றேன். 'கோசம்’ என்றால், 'பொக்கிஷம்’ என்று அர்த்தம். சப்தக் கூட்டங்கள், சொற்களின் சமூகம் பொக்கிஷமாக இருக்கிற புஸ்தகத்துக்குக் 'கோசம்’ என்று பெயர் வந்தது. இம்மாதிரி ஸம்ஸ்கிருதத்தில் பல கோசங்கள் (அகராதிகள்) இருந்தாலும், ரொம்பவும் பிரசித்தமானது 'அமரகோசம்’தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமரசிம்மன் என்பவனால் செய்யப்பட்டதால், அதற்கு 'அமர கோசம்’ என்று பெயர்.

அமரசிம்மன் மகா புத்திமான். இந்த நிகண்டுவைப் பார்த்தால், அறிவில் அவனுக்கு ஈடு உண்டா என்று பிர மிப்பு உண்டாகும். ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்துக்கொண்டு அர்த்தம் சொல்கிறான். அமரசிம்மன் ஹிந்து அல்ல; ஜைனன்.

அமரகோசம்

இந்த அமரசிம்மன் ஒருமுறை ஆசார்யாளிடம் வாதப்போருக்கு வந்தபோது, ''நான் ஒரு திரைக்குப் பின்னாலிருந்துதான் உம் கேள்விகளுக்குப் பதில் சொல் வேன்'' என்றான்.

ஆசார்யாளும் இதில் உள்ள ரகசியத்தை ஆராய்ச்சி செய்து பார்க்காமல் ஒப்புக் கொண்டார்.

ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களுக்கும் அமரசிம்மனுக்கும் வாதப் போர் ஆரம்பித்தது.

அமரகோசம்

அமரசிம்மன் ஒரு திரையைக் கட்டிக்கொண்டு, அதற்கு உள்ளேயிருக்கிறான். ஆசார்யாள் வெளியே இருந்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார். அத்தனைக்கும் அமரசிம்மன் பளிச் பளிச்சென்று பதில் சொன்னான்.

அவன் என்னதான் மகா புத்திமானாக இருந்தாலும்கூட, இத்தனை சாமர்த்தியமாக எப்படிப் பிரதிவசனம் கொடுக்கிறான் என்று ஆசார்யாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. க்ஷண காலம் யோசித்தார். உடனே பரமேசுவர அவதாரமும், ஸர்வக்ஞருமான அவருக்கு ரகசியம் புரிந்துவிட்டது.

அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொன்னது அமர சிம்மனே இல்லை! ஸாக்ஷ£த் சரஸ்வதிதேவியே அவன் மாதிரி பேசியிருக்கிறாள் என்று தெரிந்தது. இவன் அவளை ரொம்ப நாளாக உபாஸித்திருக்கிறான். நியாயமாகப் பார்த்தால், இவன் அப்படிச் செய்திருக்கவேகூடாது. ஏனென்றால், இவனுடைய ஜைன மதம் ஒரு கடவுளைப் பற்றியே சொல்லவில்லை; அதைப் பல ரூபத்தில், ஸரஸ்வதி மாதிரி பல தெய்வ வடிவங்களில், ஆராதிப்பதை ஜைன தத்துவம் ஒப்புக்கொள்ளாது. அப்படியிருந்தும், இவன் ஜைன மதத்துக்கு ஆதரவாகப் புஸ்தகம் எழுதுவதற்கே ஸரஸ்வதியின் அநுக்கிரகம் வேண்டுமென்று கருதி, அவளை உபாஸனை பண்ணியிருக்கிறான். உள்ளன்று வைத்துப் புறமொன்றாக இருந்திருக்கிறான்.

இப்போதுகூட நாஸ்திகர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்களில் ரொம்பப் பேர் வியாதி வெக்கை வந்து ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டால், வேங்கடரமண ஸ்வாமிக்கு வேண்டிக்கொள்கிறார்கள்; மாரியம்மனுக்குப் பிரார்த்தனை செலுத்துகிறார்கள். கேட்டால், 'வீட்டில் இப்படி அபிப்ராயம்; சம்ஸாரத்துக்கு இதிலே நம்பிக்கை; அவர்களுக்காக விட்டுக் கொடுத்தேன். அவர்கள் உணர்ச்சி(feeling)க்கு மதிப்பு (Respect) கொடுத்தேன்’ என்று ஜம்பமாகச் சொல்லிக் கொள்வார்கள்.

இந்த ரீதியில்தான், ரொம்பக் காலம் முந்தியே ஹிந்து மதத் தைக் கண்டனம் பண்ணும் கிரந்தங்களை எழுதிய அமர சிம்மன், அவை நன்றாக அமையவேண்டும் என்று ஹிந்து மதத்தின் வாக்குத் தேவதையையே உபாஸனை செய்தான். ஒருவன் எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் - அது நல்லதாகத்தான் இருக்கட்டும், கெட்டதாகத்தான் இருக்கட்டும், அதிலே பூரண சிரத்தையுடன் இறங்கிவிட்டான் என்றால், அதற்குண்டான பலனை பகவான் தரத்தான் செய்கிறான். அப்படியே இவனுடைய உபாஸனையின் சிரத்தையை மதித்து இவனுக்கும் ஸரஸ்வதி அநுக்கிரகம் செய்துவிட்டாள்.

- புனல் பெருகும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism