சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீயோகராமருக்கு விளக்கேற்றுவோம்!

ஸ்ரீயோகராமருக்கு விளக்கேற்றுவோம்!

ஸ்ரீராமஜெயம்
ஸ்ரீயோகராமருக்கு விளக்கேற்றுவோம்!
.....
ஸ்ரீயோகராமருக்கு விளக்கேற்றுவோம்!

ந்தத் தம்பதி, கைகோத்தபடி நடந்தே ஒவ்வொரு ஊராகக் கடந்தனர். ஒவ்வொரு ஊரிலும் அவர்களின் திருப்பாதம் படும் போதெல்லாம், அந்தப் பூமி சில்லென்று குளிர்ந்தது; நெகிழ்ந்தது. செடிகளும் மரங்களும் தழைத்தன; பச்சைப் பசேலெனக் காட்சி தந்து, தங்களது வரவேற்பைத் தெரிவித்தன.

##~##
அவர்களின் ஊர் வெகு தொலைவில் உள்ளது. ஆனாலும் என்ன... அவர்கள் மெள்ள நடந்தனர். அந்த நடையில் நிதானம் தெரிந்தது. 'இதுவரை பிரிந்திருந்தது போதும் கண்மணி; ஊருக்குச் சென்றால், அங்கே நம் உறவுக்காரர்களும் மக்களும் ஒன்றுகூடுவார்கள்; ஒன்றாக இருக்கும் நமக்குள் புகுந்து அன்பு பாராட்டுவார்கள். அவை சுகம்தான் என்றாலும், இந்த இப்பிறவியில் பிரிந்தது போதும் கண்ணம்மா!’ என்று கணவன் சொல்லாமல் சொல்ல... அதைப் புரிந்துகொண்ட பெருமிதத்தோடு அவனுடன் நடந்தாள் மனைவி. அவர்களுடன், கணவனின் தம்பியும் உடன் இருந்தான். தவிர, தோழனுக்குத் தோழனாக, மந்திரிக்கு மந்திரியாக, சேவகனுக்குச் சேவகனாக, உடன்பிறவாச் சகோதரனாகத் திகழ்கிற ஒருவனும் கூடவே வந்தான்.

வழியில், தீர்க்காஜல மலை எனும் பகுதியை அடைந்தனர். அங்கே, ஊரின் எல்லையில் அவர்கள் கால் வைத்ததும், மலையின் உச்சியில் தவத்தில் ஆழ்ந்திருந்த சுகப்பிரம்ம ரிஷி, சட்டென்று கண்களைத் திறந்தார். அங்கே, மெல்லியதாக நறுமணம் சூழ்ந்திருந்தது. 'வந்திருப்பவர் சாதாரண மனிதர் அல்ல; அவரிடம் இருந்து வருகிற நறுமணம், துஷ்ட தேவதைகளை விழுந்தடித்து ஓடச் செய்கிறதே..!’ என்று யோசித்தபடி, மலையில் இருந்து இறங்கினார்; ஊரின் எல்லை நோக்கி ஓடினார். அங்கே, அந்தத் தம்பதியைக் கண்டு நெடுஞ்சாண்கிடை யாக விழுந்து நமஸ்கரித்தார். 'சிவ தரிசனத்துக்காக தவம் கிடக்கிறேன். அந்த ஈசனின் பேரருள் கிடைக்கப் போவதை முன்கூட்டியே தெரிவிக்கிற விதமாகத் தங்களின் தரிசனம் அமைந்து விட்டது!'' என்று சொல்லிக் கண்ணீர் பெருக்கெடுக்க, மீண்டும் வணங்கினார்.

ஸ்ரீயோகராமருக்கு விளக்கேற்றுவோம்!
ஸ்ரீயோகராமருக்கு விளக்கேற்றுவோம்!

அந்தத் தம்பதியிடம், சுகப்பிரம்மர் ஒரு வேண்டு கோளையும் வைத்தார். ''ஸ்வாமி! இந்த மலையும், மலையின் உச்சியில் உள்ள சுனையில் இருந்து வருகிற ஜலமும் அற்புதமானவை! இந்த இடத்தில் தாங்கள் ஒருநாள்- ஒரேயரு நாளாவது தங்கிச்செல்ல வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தார். அந்தத் தம்பதி, சந்தோஷத்துடன் ஏற்றனர்.

அங்கே, தீர்க்காஜல மலைச் சுனையில் நீராடினர்; சிவ பூஜையில் ஈடுபட்டனர். பிறகு, அந்தக் கணவர் தன் மனைவி, சகோதரன், சேவகன் ஆகியோருக்கு ஞானங்களை யும் யோகங்களையும் அருளி னார். அதில் நெகிழ்ந்தார்கள். அந்தக் கணவரும் சூழலில் நெக்குருகிப் போனார். 'இந்த சந்தோஷம், மலையிலும் ஊரிலுமாக மாபெரும் சக்தியாக வியாபித்திருக்கக் கடவது!’ என அருளினார். மறுநாள்... அனைவரும் சொந்த ஊருக்குக் கிளம்பினர்.

அவர்களது சொந்த ஊர், அயோத்தி. யுத்தத்தில் ராவணனை அழித்துவிட்டு, கையில் கோதண்டம் இன்றி, சீதை ஒரு பக்கமும், ஸ்ரீலட்சுமணர் இன்னொரு பக்கமும் நடந்து வர, பின்னே ஸ்ரீஅனுமன் பின்தொடர, அயோத்திக்குப் பயணம் மேற் கொண்டிருந்தவர் அவதார புருஷர் ஸ்ரீராமரேதான்!

வழியில்... சுகப்பிரம்ம ரிஷி யின் வேண்டுகோளின்படி ஸ்ரீராமர் தங்கிய இடம்தான் இன்றைக்கு 'நெடுங்குணம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தில் பிரமாண்ட கோபுரம் மற்றும் மதிலுடன், பஞ்சப் பிராகாரத் தலமாகத் திகழ்கிறது ஆலயம்!

உள்ளே, கருவறையில்... கையில் கோதண்டமின்றி, சின் முத்திரையுடன் ஸ்ரீயோக ராமராகக் காட்சி தருவதை தரிசித்தபடியே இருக்கலாம்; அத்தனை அழகுத் திருமேனி! அருகில் சீதாதேவி, ஸ்ரீலட்சுமணர். இங்கே, ஸ்ரீஅனுமன் தனது திருக்கரங்களில் தர்மசாஸ்திர நூலினை வைத்திருக்கிறார். இத்தனை அழகு கொஞ்சுகிற, மிக விநோதமான விக்கிரகத் திருமேனியைக் காண்பது அரிது எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.

கிருஷ்ணதேவராயர் கட்டிய திருக்கோயில். விஸ்தா ரமான மண்டபம்; ஊஞ்சல் மேடை; அழகிய நீண்ட பிராகாரம்; ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஅனுமன், ஸ்ரீசக்கரத் தாழ்வார் முதலானோருக்கான திருச்சந்நிதிகள்... என அமைந்துள்ள கோயிலுக்குள் நுழைந்தால், வெளியே வரவே மனசு வராது நமக்கு. அத்தனை அதிர்வுகள் கொண்ட அற்புதமான திருத்தலம்! தாயாரின் திருநாமம் - ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார்.  

ஸ்ரீயோகராமருக்கு விளக்கேற்றுவோம்!

ஆடியில் பவித்ரோத்ஸவம், பொங்கலில் மலைப் பிரதட்சிணம், வைகாசி விசாகத்தின்போது கருடசேவை, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி என விழாக்களுக்குக் குறைவில்லாத இந்த ஆலயத்தில், ஸ்ரீராமநவமி நன்னாளின்போது பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது பிரம்மோத்ஸவ வைபவம்! பத்து நாள் விழாவில் திருத்தேர், திருக்கல்யாணம், தீர்த்தவாரி என மூன்று நாட்கள் விழா நடந்தேறும். அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து பங்கேற்பார்கள்.

ஸ்ரீயோகராமருக்கு விளக்கேற்றுவோம்!

ஸ்ரீராமநவமியின் பத்து நாள் விழாக்களில் ஏதேனும் ஒருநாள் இங்கு வந்து, ஸ்ரீயோகராமரைத் தரிசித்தால், கணவனும் மனைவியும் அன்புடனும் ஆதரவுடன் கருத் தொருமித்து வாழ்வார்கள் என்பது ஐதீகம்!

மற்றபடி, செவ்வாய்க்கிழமை, சுவாதி மற்றும் சித்திரை நட்சத்திர நாட்களில், இங்கேயுள்ள ஸ்ரீசக்கரத் தாழ்வாருக்கு திருமஞ்சனம் செய்து வழிபட, விரைவில் கல்யாண மாலை தோள் சேரும்; மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் என்பர்! அதேபோல், உடலில் ஏதேனும் நோய் தாக்கி அவதிப்படும் அன்பர்கள், பிரம்மோத்ஸவத்தின் தீர்த்தவாரித் திருநாளில், மாவிளக்கேற்றி ஸ்ரீயோகராமரை வழிபட்டுப் பலன் பெற்றுச் செல்கின்றனர்.

தவிர, தர்மசாஸ்திரப் புத்தகத்தைத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீஅனுமனுக்கு, ஸ்ரீராமஜெயம் எழுதியோ அல்லது வடைமாலை சார்த்தியோ வணங்கி வழிபட்டால்... குழந்தைகள் கல்வி- கேள்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிள்ளை வரம் கேட்டுப் பிரார்த்தனை நிறைவேற... இங்கே துலாபாரம் வழங்கும் சம்பிரதாயமும் உண்டு. பிறந்த குழந்தையின் எடைக்கு எடை நாணயங்கள், பழங்கள், வெல்லம், சர்க்கரை ஆகியவற்றில் ஒன்றை வழங்கி, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகிற அன்பர்களை அதிகம் காணலாம்.

புனர்பூச நட்சத்திர நாளில், ஸ்ரீயோகராமருக்கு நெய் விளக்கேற்றி, மனதார வழிபட... வழக்கில் வெற்றி உறுதி; வாழ்வில் இனி தங்குதடையே இல்லை என்கின்றனர்.

அருகில் ஸ்ரீதீர்க்காஜலேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கே, ஸ்ரீசுகப் பிரம்மருக்குச் சந்நிதி அமைந்துள்ளது. இவர்தான், இரண்டு திருத்தலங்கள் அமைவதற்கும் காரணமாக இருந்தவர். எனவே, இவரைத் தரிசித்து, மனதாரப் பிரார்த்திப்பதும் விசேஷம்!

இதோ... ஸ்ரீராமநவமி நெருங்கும் வேளையில்...நெடுங்குணம் ஸ்ரீயோகராமரைத் தரிசியுங்கள்; உங்களுக்கு யோகமும் ஞானமும் நிச்சயம்!

- வி.ராம்ஜி
படங்கள்: பா.கந்தகுமார்