சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தருமமிகு தருமபுரி

தருமமிகு தருமபுரி

தருமமிகு தருமபுரி

ருமமிகு தருமபுரி நகரம், கடையேழு வள்ளல்களில் ஒருவனான அதியமான் ஆட்சி செய்த பூமி! வள்ளல் தன்மைக்குப் பெயர் பெற்றவன் கோலோச்சிய தேசத்தில், கோயில்களுக்கும் பஞ்சமில்லை! அவற்றில் எட்டுத் திருத்தலங்களைப் பார்ப்போமா?!

நவக்கிரக தோஷம் விலக்கும் ஸ்ரீகாலபைரவர்!

##~##
தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் வழியில், நல்லம்பள்ளி - அதியமான்கோட்டை உள்ளது. இங்கே, காசியம்பதிக்கு அடுத்தாற் போல், தனிக்கோயிலில் இருந்தபடி அனைவருக்கும் அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் ஸ்ரீகாலபைரவர்! இங்கே, உன்மத்த பைரவராகக் காட்சி தரும் அழகே அழகு!

அதியமான் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் விதானத்தில், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான நவக்கிரகச் சக்கரங்கள் உள்ளன என்பது சிறப்பு. எனவே, 27 நட்சத்திரக் காரர்களும் வணங்கி வழிபட்டால், நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்! தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் தேய்பிறை அஷ்டமி ஆகிய நாட்களில், மாணவர்கள் விளக்கேற்றி வழிபட, கல்வி - கேள்வியில் சிறந்து விளங்குவார்கள்; தடைப்பட்ட திருமணத்தால் கலங்குவோர், மஞ்சள்கிழங்கு மாலை அணிவித்து வேண்டிக்கொள்கின்றனர். குடும்பத்தில் கடனும் கஷ்டமும் தீரவேண்டும் என்று சாம்பல் பூசணி விளக்கேற்றி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டுப் பலன் பெறலாம்; நினைத்தது நிறைவேறும் எனப் போற்றுகின்றனர் தருமபுரி வாழ் மக்கள்!

தருமமிகு தருமபுரி


செல்வம் தரும் ஸ்ரீசென்றாய பெருமாள்!  

நல்லம்பள்ளியில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீசென்றாய பெருமாள் கோயில். இதுவும் மன்னன் அதியமான் காலத்தில் கட்டப் பட்ட கோயில் தான்!

மத்திய தொல்லியல் துறை யினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில், சிற்ப வேலைப்பாடுகள் கொண்டு திகழ்கிறது. ராமாயணம் மற்றும் மகாபாரதக் காட்சிகளும் உள்ளன. புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை என்றில்லாமல் தினமும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் திரண்டு வருவார்களாம்! இவரை வணங்கினால், சகல செல்வங்களும் கிடைக்கப் பெறலாம் என் கின்றனர், பக்தர்கள்!

   சுபிட்சம் அருளும் ஸ்ரீசோமேஸ்வரர்!

அதியமான்கோட்டை யின் மேற்குப் பகுதியில், பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீசோமேஸ்வரர் கோயில். வால்மீகி முனிவர்,  நெடுங்காலம் தவம் இருந்து சிவனருளைப் பெற்ற ஒப்பற்ற திருத்தலம் இது! அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசோமாம்பிகா!

இந்தத் தலத்தில், மாசி மக நட்சத்திர நாளில் சூரிய ஒளி, சிவலிங்கத் திருமேனியில் விழுமாம்! இதனைத் தரிசிக்க தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக அன்றைய நாளில், மகம் நட்சத்திரக்காரர்கள் வந்து வணங்கிட,  வீட்டில் சுபிட்சம் தங்கும்; துக்கங்கள் பறந்தோடும் என்பது ஐதீகம்!  

தருமமிகு தருமபுரி


கவலை தீர்ப்பாள் ஸ்ரீகாளி!

அதியமான்கோட்டை யில், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் அமைந் துள்ள அற்புதமான ஆலயம். சுமார் 500 வருடங்கள் பழைமை வாய்ந்த அம்மனின் ஆலயத் தில், பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாகக் கொண் டாடப்படுகிறது. கருணையும் உக்கிரமும் கலந்து காட்சி தரும் ஸ்ரீகாளியை வணங்கினால், எதிரிகள் தொல்லை ஒழியும்; எலுமிச்சை மாலையை அம்மனுக்குச் சார்த்தி, நெய் விளக்கேற்றி வணங்கினால், திருமணத் தடை அகலும்; பெண்களின் பிரச்னைகள் விலகும் என்பது நம்பிக்கை.

வீட்டில் எந்த சுபகாரியம் நடந்தாலும், முதல் பத்திரி கையை காளியம்மனுக்கு வழங்கிவிட்டே, அனைவருக் கும் பத்திரிகை கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர், பக்தர்கள்!

பொருள் கோடி தரும் ஸ்ரீலக்ஷ்மி நாராயணா!  

தருமபுரி- பென்னாகரம் சாலையில் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது அதக்கப் பாடி. இங்கே, மெயின் சாலைக்கு அருகிலேயே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள்!

தினமும் நான்கு கால பூஜை, புதன் மற்றும் சனிக்கிழமைகளில்   பக்தர்கள் திரளாக வர களைகட்டி நிற்கிறது திருக்கோயில். புரட்டாசி மாதத்தில், சர்வ அலங்காரத்தில் காட்சி தரும் ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாளைத் தரிசிக்க இரண்டு கண்கள் போதாது!

அழகு கொஞ்சுகிற பெருமாள், அருளையும் பொருளையும் அள்ளித் தருகிறார்! ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியில்லாத அன்பர்கள், இங்கு வந்து வழி பட்டால், தொழில் சிறக்கும்; வியாபாரத்தில் லாபம் கொழிக் கும் என்பது ஐதீகம்!

ஸ்ரீபிரசன்ன வேங்கடேசா!

தருமபுரியிலிருந்து பென்னாகரம் செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது இண்டூர். இந்த ஊரின் மையப்பகுதியில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்.

சுமார் 700 வருடங்கள் பழைமை மிக்க இந்த ஆலயத் தில், தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. உயர்ந்த கோபுரமும் நீண்ட மதிலுமாகத் திகழும் இந்தக்  கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால், நினைத்ததை விரைவில் நிறைவேற்றித் தருவாராம் ஸ்ரீவேங்கடேச பெருமாள்.  இங்கு வந்து ஒருமண்டல காலம் (48 நாட்கள்), விளக்கேற்றி வழிபட, திருமணம் முதலான சகல யோகங்களும் கிடைக்கும்; பிரிந்த தம்பதி சேருவார்கள் என்பது ஐதீகம்!

தருமமிகு தருமபுரி


பலன் தருவார் ஸ்ரீபரவாசுதேவர்!

தருமபுரி - கிருஷ்ணகிரி சாலையில், நாலுரோடு பகுதிக்கு அருகில் உள்ளது ஸ்ரீபரவாசுதேவ ஸ்வாமி கோயில். அர்ஜுனன், இங்கு சிலகாலம் தங்கி, தவமிருந்து பெருமாளை வழிபட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்! இங்கே, அமர்ந்த திருக்கோலத்தில் இருந்தபடி, உலக மக்களுக்கு அருள் பொழிகிறார் ஸ்ரீபரவாசுதேவ ஸ்வாமி! தாயாரின் திருநாமம் - ஸ்ரீவர மகாலக்ஷ்மி!

தருமமிகு தருமபுரி

பெருமாள் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில். எனவே இந்தத் தலம், சைவ - வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாகத் திகழும் தலம் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்!

பெருமாள் கோயிலில், கருட சேவையும் நவராத்திரியும் சிறப்புறக் கொண்டாடப்படு கின்றன. அதேபோல், மார்கழி மாதத்தில் சிவனாரையும் பெருமாளையும் வணங்கி வழிபடுவதற்காக, அதிகாலை பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

தாலி வரம் தரும் ஸ்ரீகல்யாண காமாட்சி!

தருமபுரி மாவட்டத்தின் மிக முக்கியமான தலம்; சாகாவரம் தரும் நெல்லிக்கனியை ஒளவைக்கு அதியமான் வழங்கிய தலம்; பெண்கள் 18 படிகளைக் கடக்கும் ஒப்பற்ற தலம் எனப் பெருமைகள் கொண்ட கோட்டை ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில்! ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீமல்லிகார்ஜுனர்.

பெண்களின் அனைத்துப் பிரச்னைகளையும் தாயுள்ளத் துடன் தீர்த்து வைப்பாளாம், ஸ்ரீகாமாட்சியம்மன். இங்கு வந்து அம்பிகைக்கு மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், விரைவில் கல்யாண மாலை நிச்சயம் எனப் பூரிக்கின்றனர், பக்தர்கள்.

தருமபுரி மாவட்டத்தின் காவல்தெய்வம், வழிகாட்டும் தெய்வம், குலதெய்வம், இஷ்ட தெய்வம் என எல்லாமே இவள்தான்!

  கட்டுரை, படங்கள்:  து.அர்ச்சனா