நாற்பது வருடங்களாக நீருக்குள் மூழ்கியிருந்த அத்திவரதர் தற்போது பக்தர்களுக்குத் தரிசனம் தரத் தொடங்கிவிட்டார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதலே காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகிறார்கள்.
முன்னதாக, கடந்த 27-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு அனந்தசரஸ் குளத்திலிருந்து அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு அத்திவரதர் சிலையைச் சுத்தம் செய்து பூஜைகள் தொடங்கின. நேற்று (30.6.2019) காலையிலிருந்தே புண்ணியாக வாசனம், ஜலசம்ரோஷம், தைலக்காப்பு, ஹோமம் ஆகிய பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. அதற்குப் பிறகு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அத்திவரதர் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுக்கத் தயாரானார்.

நேற்றிரவே காஞ்சிபுரத்துக்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அத்திவரதரை தரிசிக்க அதிகாலை நேரத்தில் வசந்த மண்டபத்துக்கு வந்தார். அப்போதுதான், சுப்ரபாத சேவை முடிவடைந்திருந்த நிலையில் வசந்த மண்டபத்தின் கதவுகள் மூடியே இருந்தன. இதனால் ஆளுநர் சில நிமிடங்கள் வெளியே காத்திருக்க நேர்ந்தது. அதன் பிறகு, உள்ளே சென்ற ஆளுநர், அத்திவரதரைத் தரிசித்துவிட்டுக் கிளம்பினார். அதற்குப் பிறகு பொதுமக்கள் வரிசையாக அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
காலையில் தரிசனம் தொடங்கியபோது நெருக்கடியாக இருந்தது. ஆனால், கட்டண தரிசனத்தைவிடவும் இலவசப் பொது தரிசனப் பாதை விரைவாகவே நகர்ந்தது. பக்தர்கள் சுமார் அரை மணி நேரத்திலேயே அத்திவரதரைத் தரிசித்துவிட்டு வெளியேறத் தொடங்கினார்கள். முதல்முறையாக அத்திவரதரை தரிசித்த பக்தர்கள், சிலிர்ப்போடும் நெகிழ்ச்சியோடும் காணப்பட்டனர்.

அத்திவரதரைத் தரிசித்துவிட்டு வெளியே வந்த பெண் பக்தர் ஒருவர் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்…
“என் பேரு அருக்காணி. விழுப்புரத்துலேருந்து வரேன். ராத்திரி 12 மணியிலிருந்து காத்திருந்து இப்போ அத்திவரதர தரிசிச்சேன். இதுக்கு முன்னாடி அத்தி வரதரை வெளியே எடுத்த 1979-ல எனக்கு 9 வயசு. அப்போ என்னோட தாத்தா, பாட்டிலாம் வண்டி கட்டிக்கிட்டு, கட்டுச்சோறு கிளறி எடுத்துகிட்டு அத்திவரதர பார்க்க வந்தாங்க.
40 வருஷத்துக்கு முன்னாடி என்னோட தாத்தா அத்திவரதர பாத்துட்டுவந்து எப்படி இருக்கிறதா சொன்னாரோ, அதேமாதிரியே வரதர் இப்பவும் அழகா இருக்காரு.விழுப்புரம் அருக்காணி

எனக்கும் அத்திவரதர பாக்கணும்னு ஆசையா இருந்துச்சு. அடம் புடிச்சேன். ஆனா, நான் சின்ன பிள்ளையா இருந்ததுனால எல்லாரும் என்ன வீட்டிலேயே விட்டுட்டு காஞ்சிபுரத்துக்குக் கிளம்பி வந்துட்டாங்க. அதனால், இந்த முறை முதல்நாளே தரிசனம் பண்ணணும்னு ஆசையோடு வந்தேன். என் 40 வருச ஏக்கம் இப்ப தீந்துடுச்சி. 40 வருஷத்துக்கு முன்னாடி என்னோட தாத்தா அத்திவரதர பாத்துட்டு வந்து எப்படி இருக்கிறதா சொன்னாரோ, அதேமாதிரியே வரதர் இப்பவும் அழகா இருக்காரு. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அத்திவரதர் தரிசன வைபவத்தின் முதல்நாள் நிகழ்வுகளில் சில துளிகள்…
1. முதல் நாளைப் பொறுத்தவரை, 50 ரூபாய் சிறப்பு தரிசனத்தைவிடவும் பொது தரிசனப் பாதையே விரைவாகவே நகர்ந்தது. பக்தர்கள் எங்கும் தேங்கி நிற்காமல் நகர்ந்துகொண்டே இருந்தார்கள்.
2. கோயில் வளாகத்தில் தென்னை ஓலைகளுக்குப் பதில் தகர ஷீட்களைப் பந்தல் அமைக்கப் பயன்படுத்தியிருப்பதால், அனல்காற்று வீசியபடியே இருந்தது. பக்தர்கள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள்.

3. அத்திவரதர் மூழ்கியிருந்த அனந்தசரஸ் திருக்குளத்தைப் பார்க்க பக்தர்கள் ஆர்வத்துடன் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள். அனந்தசரஸ் குளத்தைப் பார்வையிட யாருக்கும் அனுமதி இல்லை. சுற்றிலும் திரை மூடி, மறைத்து வைத்திருக்கிறார்கள்.
4. மாவட்ட ஆட்சியர் கடந்த இரண்டு நாள்களாகக் கோயிலிலேயே தங்கி பக்தர்களின் குறைகளைக் கேட்டு, வேண்டிய வசதிகளை செய்துகொடுக்கிறார்.
5. அத்திவரதரைத் தரிசிக்கும் பக்தர்கள் மேற்குக் கோபுரம் வழியாக வெளியேற்றப்படுகிறார்கள். கோயிலுக்குள் சென்று மூலவர் வரதராஜ பெருமாள் மற்றும் தாயார் பெருந்தேவியைத் தரிசிக்கவோ, அங்கு ஓய்வெடுக்கவோ யாருக்கும் அனுமதியில்லை. இதனால், வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் வருத்தத்துடன் செல்கிறார்கள்..

6. ஒருசில அர்ச்சகர்கள் தங்களின் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களை வி.ஐ.பி தரிசனப் பாதையின் வழியாக அழைத்துச் செல்வதால் பல மணி நேரங்கள் காத்திருந்து வரும் பக்தர்கள் அதிருப்தி அடைகிறார்கள்.
7. வரதராஜ பெருமாள் கோயிலைச் சுற்றிலும் உள்ள கடைகளில் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களின் விலைகள் மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

8. சில இடங்களில் சின்டெக்ஸ் தண்ணீர் டேங்குகள் வைக்கப்பட்டிருந்தாலும் அவை காலியாகவே இருக்கின்றன. மேலும், அதில் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர், குடிக்க முடியாமல் அதிகளவு குளோரின் கலந்திருக்கிறது. இதனால் பக்தர்கள் அதிக விலை கொடுத்து தண்ணீர் பாட்டில்கள் வாங்க வேண்டிய சூழல் இருக்கிறது. அரசு குடிநீர் பாட்டில் விற்பனைக்கு வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
9. காவலர்கள் பக்தர்களிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்கள். ஒருசில இடங்களில் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்துகிறார்கள்.