ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

கவான் ஸ்ரீரமண மகரிஷி, நாயனாவின் வாழ்க்கையில் இன்னொரு அற்புதத் தையும் நிகழ்த்தினார்; புத்திக் கூர்மையும், கல்வி அறிவும், பேச்சுத் திறனும் கொண்டிருந்த அந்த ஆன்மிகவாதியின் வாழ்வில், தன்னை மிக உறுதியாய் பதியவைத்தார்.

'நான்... நான்’ என்று எங்கு நினைப்பு எழுகிறதோ, அங்கேயே மனதைக் கவனித்தால், மனம் லீனமாகும் என்று சொன்னதுடன் மட்டுமின்றி... உற்றுப் பார்த்துத் தனது அற்புத சக்தியை அவருக்குள் இறக்கியதோடு மட்டுமின்றி... அவர் தவத்தில் தவிக்குங்கால் தலையில் கை வைத்து, அந்த உச்சிச் சூட்டை இறக்கியதோடு மட்டுமின்றி... இன்னொரு அற்புதத்தையும் நிகழ்த்தினார்.

1908-ஆம் ஆண்டு, பகவான் ஸ்ரீரமண மகரிஷியிடம் இருந்து விடைபெற்று, காவிய கண்ட கணபதி சாஸ்திரி திருவெற்றியூருக்குப் பயணமானார். அங்கே, விநாயகர் கோயிலில் தங்கிக்கொண்டு, தன் தவத்தைத் தொடர்ந்தார். பிற்பகல் ஒன்றில் விழித்தபடி படுத்திருந்த போது, அவருக்கு அருகே யாரோ அமர்வதுபோல் இருந்தது. யார் என்று பார்க்கையில், பகவான் ஸ்ரீரமண மகரிஷி தனது உள்ளங் கையை, காவிய கண்ட கணபதியின் தலையில் அழுத்தி வைத்திருந்தார்.

##~##
பகவானின் உள்ளங்கை பட்டதும், கணபதி சாஸ்திரிக்கு மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்வு ஏற்பட்டது. 1908-ஆம் வருடம் நடந்த இந்த விஷயத்தை, 1929-ஆம் வருடம் அன்பர் ஒருவர், ''கணபதி சாஸ்திரியாருக்கு திருவெற்றியூர் வந்து அஸ்த தீட்சை கொடுத் தீர்களாமே?'' என்று கேட்கையில், பகவான், ''ஆமாம், ஒரு நாள் திடீரென்று எங்கோ இந்த இடம் விட்டு மேலே பறப்பது போல் தோன்றியது. மேலே எழுந்ததும், காட்சிகள் மறைந்தன. இடம் முழுவதும் வெள்ளையாயிற்று, ஏதோ ஓர் இடத்துக்கு நகர்கிறோம் என்ற உணர்வு இருந்தது. பிற்பாடு மெள்ள காட்சிகள் தெரிந்தன. நான் கீழே இறங்கி நின்றேன். அந்த இடம் ஒரு நெடுஞ்சாலையாக இருந்தது. அந்த இடத்தில், நான் நடந்து போனேன். அங்கே ஒரு விநாயகர் கோயில் இருந்தது. உள்ளே போய் சிறிது நேரம் யாரோடு பேசினேன்,

என்ன பேசினேன் என்று தெரியவில்லை. ஆனால், அந்த இடம் திருவெற்றியூர் என்றும், சிவன் கோயிலுக்கு அருகே இருக்கிற விநாயகர் கோயில் என்றும் மனசுக்குத் தோன்றியது. மறுபடியும் கண் விழித்துப் பார்த்தபோது, திருவண்ணாமலையில் இருந்தேன்'' என்று சர்வ சாதாரணமாக, எந்தவிதக் கர்வமுமின்றி அந்த விஷயத்தை வெளிப்படுத்தினார்.

வான் மார்க்கமாகப் போய், தன் அன்பருக்குக் கொடுத்த அஸ்த தீட்சையைத் தான் தந்ததாக ஒருபோதும் அவர் சாதித்துக்கொள்ளவில்லை. தன்னால் அவ்விதம் செய்ய முடியும் என்று பறைசாற்றிக் கொள்ளவில்லை. அதுபற்றி அவராக வாய் திறக்கவும் இல்லை. காவிய கண்ட கணபதி, இதுபற்றி அன்பர்களிடம் சொல்லி, அந்த அன்பர்கள் வினவிய பின்பு, அதாவது கிட்டத்தட்ட 21 வருடங்களுக்குப் பிறகு, 'ஆமாம், அப்படி நடந்தது’ என்று மறுக்காமல் ஒப்புக்கொள்கிறார். அதை மறைக்கவும் இல்லை; தன்னால் அப்படிச் செய்யமுடிந்தது என்று கொண்டாடிக் கொள்ளவும் இல்லை. என்னவோ அப்படி நடந்தது என்று மிக எளிமையான விஷயமாக அதைச் சொல்கிறார்.

சின்னஞ்சிறு விஷயங்களுக்கெல்லாம் நாம் நம்மை எவ்விதம் கொண்டாடிக்கொள்கிறோம் என்று யோசிக்கிறபோது, ஸ்ரீரமணரின் இந்தச் சம்பவம் ஞாபகம் வருகிறது. அப்படி ஞாபகம் வருகையில், நம்மைப் பற்றி வெட்கமாக இருக்கிறது. சத்தியத்தின் இயல்பு சாந்தம். சாந்தம் என்பது நெல்முனையளவும் கர்வம் இல்லாது இருத்தல். கர்வம் இல்லாது இருக்க, ஒரு மனிதர் தன்னுள்ளேயே, தன் ஆன்மாவிலேயே ஒடுங்கி இருக்கவேண்டும். அப்படி ஒடுங்கி இருந்தவர்தான் பகவான் ஸ்ரீரமண மகரிஷி.

மனிதர்களால் அப்படியரு யோக நிலையை அடைய முடியும் என்று நமக்குச் சமீபமாய் வாழ்ந்து காட்டியவர், ஸ்ரீரமண மகரிஷி. பகவானே தனக்கு எல்லாம்; ஸ்ரீரமணரே தன் வாழ்க்கையின் ஆதாரம் என்று தெள்ளத்தெளிவாக உணர்ந்த காவிய கண்ட கணபதி, இப்படிப்பட்ட குருவை தனக்குக் கொடுத்ததற்காகப் பார்வதிதேவியை நமஸ்கரித்து, ஆயிரம் பாக்கள் எழுத ஆரம்பித்தார். அவர் சாக்த உபாசகர்; சக்தியைக் கொண்டாடுபவர். எழுநூறு பாக்கள் எழுதியாகிவிட்டது. தேதி குறித்து, அரங்கேற்றத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருந்தன. ஆனால், தொடர்ந்து பாக்கள் எழுத முடியவில்லை. ஏனோ தட்டிப் போயிற்று.

மறுநாள் அரங்கேற்றம். ஆயிரம் பாக்கள் எழுதாது, எழுநூறு பாக்களை வைத்துக்கொண்டு எப்படி அரங்கேற்றுவது? காவிய கண்ட கணபதி குழம்பினார். அவர் படிப்பறிவும், புத்தி கூர்மை யும் உதவி செய்யவில்லை. மறுபடியும் ஞானக் கொழுந்தின் கால்களைப் பற்றிக்கொண்டார். 'எடுத்துக்கொண்ட காரியத்தை என்னால் முடிக்க இயலவில்லையே’ என மருகினார். தனது அன்பர் மீது பெருங்கருணையுள்ள பகவான், 'இன்று இரவு உட்காருவோம்’ என்று சொன்னார்.

பகவான் ஸ்ரீரமண மகரிஷியும், காவிய கண்ட கணபதியும் எதிரும் புதிருமாய் உட்கார, காவிய கண்ட கணபதியின் சீடர்கள், தங்கள் கைகளில் நோட்டுப் புத்தகங்களுடன் அமர்ந் தனர். பகவான் ஸ்ரீரமண மகரிஷி காவிய கண்ட கணபதியை ஊடுருவி நோக்கினார். கணபதியின் உள்ளுக்குள்ளே கவிதை பிரவாகம் எடுத்தது. எழுநூறு, எண்ணூறு ஆனது. எண்ணூறு, தொள்ளாயிரம் ஆனது. தொள்ளாயிரம், ஆயிரம் ஆனது. காவிய கண்ட கணபதி சொல்லச் சொல்ல அவருடைய சீடர்கள், அந்த வரிகளை எழுதிக் கொண்டார்கள். எழுதி முடித்ததும், அந்த இடத்தில் ஓர் அமைதி படர்ந்ததை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தார்கள். ''நாயனா, நான் சொன்னதை எல்லாம் எழுதிக் கொண்டாகிவிட்டதா?'' என்று பகவான் வினவினார். நாயனா 'ஆம்’ என்று அடக்கத்தோடு தலையசைத்தார். பிற்பாடு ஒருமுறை, இதைப் பற்றிக் கேட்டதற்கு, ''அந்தப் பாடல்களை எல்லாம் நான் எழுதியதாகவே எனக்குத் தோன்றியது. அதனால்தான் அவ்விதம் கேட்டேன்'' என்று பகவான் பதில் சொன்னார். மீண்டும் அதே விஷயம் நடந்திருக்கிறது. அது கொண்டாடப்படவும் இல்லை;  அதே நேரத்தில் மறுக்கப்படவும் இல்லை. அது அவரால் நடந்தது என்று சொல்லப்பட்டுவிட்டது. அதே நேரம், 'நான் செய்தேன்’ என்ற கர்வம் அங்கு இல்லை.

ஸ்ரீரமண மகரிஷி

அரங்கேற்றம் விமரிசையாக நடந்தது. அரங்கேற்றத்துக்குப் பிறகு நாயனா, தான் முதலில் எழுதிய எழுநூறு பாக்களில் பலவற்றைத் திருத்தி எழுதினார். ஆனால், பின்பு எழுதிய முந்நூறு பாக்களில் ஒரு திருத்தமும் செய்யவில்லை; செய்யும் படியான தேவை இருக்க வில்லை. படித்தவர்களுக்குப் படிப்புதான் பிரச்னை. அந்தப் படிப்பு மீண்டும் மீண்டும் கேள்விகளையே எழுப்பும். படிப்பை மிகவும் அதிகமாக நெருக்கிக் கட்டிக்கொண்டால், சந்தேகங்கள் விதம்விதமாக எழும். தெள்ளத் தெளி வாக, தீர்மானமாக சொல்லிக் கொடுத்த பிறகும், இது சரியா, அது சரியா என்ற சந்தேகங்கள் வந்துவிடும்.

'நான் என்ற எண்ணம் எழும் இடத்தில் மனது இருப்பது முக்கியமா அல்லது மந்திர ஜபத்தைப் பற்றிக்கொண்டு போக லாமா?’ என்று மறுபடியும் பகவான் ஸ்ரீரமணரைக் கேட்டார் நாயனா. 'எது என்னுடைய குறிக்கோளை அடைய எளிய வழி?’ என்று விசாரித்தார். 'மறுபடியும் பாலபாடத்துக்கு நாயனா வந்துவிட்டாரே’ என்று பகவான் கோபிக்கவில்லை. ''நான் என்ற விஷயம் எழும் இடத்தில் மனம் லயித்திருந்தால் போதும்; வேறு எதுவும் செய்யவேண்டியதில்லை'' என்று மறுபடியும் திட்டவட்டமாகச் சொன்னார்.

''உங்கள் பாரத்தையெல்லாம் கடவுளிடம் கொடுத்துவிடுங்கள்; அவர் பார்த்துக்கொள்வார். நடக்கவேண்டியது எல்லாம் இங்கு சரியாக நடக்கும்'' என்று தொடர்ந்து பேசினார். இந்த விஷயம் எழும்பும் இடத்திலேயே மனம் லயித்திருந்தால், குறிக்கோள் அற்ற நிலை அற்புதமாக உருவாகும். 'நான் இருக்கிறேன்’ என்ற விஷயம் கூடக் கரைந்துபோகும். அப்படிக் கரைந்துபோன பிறகு, குறியாவது? கோளாவது? நம்மால் நிறைவேற்ற வேண்டியது அனைத்தும் அப்போது வெகு இயல்பாக, சர்வ சாதாரணமாக, ஒரு பூ மலர்வதைப் போல நிகழும். விஷயத்தை முன்னிலைப்படுத்தினால், தான் கடுமையாக உழைத்தது போலவும், கெட்டிக் காரத்தனமாகச் செய்தது போலவும், சாமர்த்திய மாகச் செய்தது போலவும், உலகம் அதைத் தூக்கிப் பிடித்துக்கொண்டாடுவது போலவும், யாரோ சிலர் அதை எதிர்ப்பது போலவும் தோன்றும். நம்மால் விளைந்தது எதுவுமே நம்மால் விளைந்தது அல்ல என்ற ஒரு விடுதலையான உணர்வு வர, செய்ததைக் கொண்டாடிக் கொள்ளத் தோன்றாது.

நாயனாவும் பகவான் ஸ்ரீரமண மகரிஷியும் சில முறை விவாதத்தில் ஈடுபடுவது உண்டு. 'மூளையே உடம்பில் முக்கியமான ஸ்தானம்’ என்று விவாதித் தார் நாயனா. பகவான் ஸ்ரீரமண மகரிஷி அதை மறுத்து, 'இதயமே மிக முக்கியமான விஷயம்’ என்று சொன்னார். 'புத்தியை விட இதயமே முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்றார். இந்த விவாதத்தைச் சுற்றியிருந்த பலர் கேட்டார்கள்.

அந்தக் கூட்டத்தில் என்.எஸ்.அருணாசலம் என்ற மாணவனும் இருந்தான். ஸ்ரீரமணருக்கும் நாயனாவுக்கும் நடந்த இந்த உரையாடலை ஓர் அழகிய ஆங்கிலக் கவிதையாக எழுதிக்கொண்டு வந்தான்.

சூரியனிலிருந்து கிளம்பிய ஒலி, எப்படி சந்திரனை யும், நட்சத்திர மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங் களையும் ஒளிர்விக்கின்றதோ, அதேபோல இதயம் புத்தியையும், புத்தியின் மூலமாக மற்ற அவயங் களையும் இயங்கத் தூண்டுகிறது. இதயத்தில் உள்ள சக்தியும், ஒளியுமே புத்தி இயங்கக் காரணம்.

புத்தியின் வலிவு புலன்களைத் தூண்டுதல். புலன் களினால் வாழ்க்கை அனுபவங்கள் ஏற்படுகின்றன. வாழ்க்கை அனுபவங்கள் மனதில் பதிந்து, ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றன. இந்தத் தோற்றங்களுக்கு, இந்த அனுபவங்களுக்கு, புலன் களின் சக்திக்கு, புத்தியின் வலுவுக்கு இதயமே காரணம். இப்போது இதயத்திலிருந்து தோன்றுகின்ற சக்தி, ஒளி எங்கிருக்கிறது, என்ன என்று பார்க்கும் போது, மனம் அமைதி அடைகிறது.

எதனால் இந்த வாழ்க்கை மொத்தமும் அர்த்தப் படுகிறதோ, அந்தச் சக்தியை நோக்கி நகர்ந்து, அதை உணரும்போது, மற்றதெல்லாம் கனவுகள் போன்று காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், இங்கே வாழ்வதற்கு இந்தப் புலன்கள் உதவி செய்கின்றன. ஆனால், மாயையில் சிக்கிக்கொள்வதில்லை. புத்தியால் நினைவுகளைத் தேக்கி வைத்துக்கெள்ள முடிகிறது. இன்னார் என்று புரிகிறது. ஆனால், விருப்பும் வெறுப்பும் கொள்வதில்லை. இன்பமும் துன்பமும் ஒரேவிதமாக அனுபவிக்கப்படுகிறது. ஏனெனில், எங்கு சக்தி பீறிட்டு எழுகிறதோ, எங்கு மூளையை இயக்குகிற ஒளி துவங்குகிறதோ, அங்கு மனம் அமைதியாய் உட்கார்ந்துவிட, அதை உணர்ந்துவிட, அதைப் பற்றிக்கொண்டுவிட, அதை அணைத்துக்கொண்டு கிடக்க, மற்றவை அனைத்தும் அர்த்தம் இல்லாமல் போகின்றன.

அருணாசலம் என்கிற அந்த இளைஞன் எழுதிய ஆங்கிலக் கவிதையை ஸ்ரீரமணர் தமிழில் மொழி பெயர்த்தார் யார் எழுதியது, எந்த மொழியில் என்பது முக்கியமில்லை. அந்தச் செய்தியே முக்கியம். அது எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டியது அவசியம். ஸ்ரீரமண மகரிஷியின் வாழ்க்கையில் பங்கேற்ற இன்னொரு அற்புத மான மனிதர் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள்.

திருவண்ணாமலையில், அற்புதங்கள் பல நிகழ்த்திய சித்த புருஷர், இவர்!

- தரிசிப்போம்...