ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

பரமக்குடியில் திருவிளக்கு பூஜை

பரமக்குடியில் திருவிளக்கு பூஜை

பரமக்குடியில் திருவிளக்கு பூஜை
பரமக்குடியில் திருவிளக்கு பூஜை

க்தர்களின் குறைகளையெல்லாம் போக்கி, அவர்களுக்கு அருளையும் பொருளையும் வாரி வழங்கும் பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலில், கடந்த 29.3.11 அன்று சக்தி விகடனின் 57-வது திருவிளக்கு பூஜை இனிதே நடந்தேறியது.

''என் ரெண்டு பசங்களும் பேக்கரியில் வேலை செய்யறாங்க. சரியான வருமானம் கிடையாது; வாடகை கொடுக்குறதுக்கே அல்லாடுறாங்க. அவங்களுக்கு நல்ல வேலை கிடைக்கணும்; அவங்களுக்குன்னு சொந்தமா வீடு- வாசல் அமையணும். இதைத் தவிர ஆத்தாகிட்ட வேற என்ன கேக்கப்போறேன்?'' என்று கண்ணீருடன் தெரிவிக்கும், பரமக்குடி வாசகி சொர்ணத்தம்மாளுக்கு வயது 75.

''எனக்கு நாலு பொண்ணுங்க. மூணு பொண்ணுங்களுக்கு குழந்தைச் செல்வத்தைக் கொடுத்த கடவுள், நாலாவது பொண்ணுக்கு மட்டும் அந்தப் பாக்கியத்தை இன்னும் தரலை. அவளோட வீட்ல சீக்கிரமே தொட்டில் சத்தம் கேக்கணும்; என் நாலு பொண்ணுங்களும் சந்தோஷமா வாழணும்! அதுக்கு முத்தாலம்மன்தான் கருணை காட்டணும்'' என்று மனமுருகிச் சொன்னார், பரமக்குடி வாசகி விஜயலட்சுமி.

##~##
''எந்தப் பிரார்த்தனையும் இல்லாம தான் பூஜைல கலந்துக்கிட்டேன். சக்தி விகடன் நடத்தற விளக்கு பூஜைல கலந்துக் கணும்கிறது என் ரொம்ப நாள் ஆசை. அது இப்ப நிறைவேறிடுச்சு. முத்தாலம்மனுக்கும் சக்தி விகடனுக்கும் நன்றி!'' என்று பரவசத்துடன் தெரிவித்தார் ராமநாதபுரம் வாசகி கண்ணாம்பாள்.

''ரொம்ப காலத்துக்குப் பிறகு, இப்பத்தான் என் பொண்ணுக்கு நல்ல வரன் அமைஞ்சிருக்கு. எந்தப் பிரச்னையும் இல்லாம, சீரும் சிறப்புமா அவளுக்குக் கல்யாணம் நடக்கணும்; சந்தோஷமும் நிம்மதியுமா, புகுந்தவீட்டுல அவ வாழணும்'' என்று கண்ணீர் மல்கப் பிரார்த்தித்தார், திருப்புவனம் வாசகி சுவாதி.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மகன் அதிக மார்க் எடுக்கவேண்டும் என்று வாசகி சித்ராவும், மகன் சொந்தமாகத் துவங்கியுள்ள ஹோட்டல், அமோகமாக வளர வேண்டும் என்று வாசகி காயத்ரியும் பிரார்த்தனை செய்தனர்.  

''ரொம்ப வருஷத்துக்கு அப்புறம், எங்க குடும்பத்துல இருந்த சிக்கல்களும் பிரச்னைகளும் தீர்ந்து, எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்திருக்கோம். உறவுகளோடு கைகோத்து இருக்கிற இந்த நிம்மதியும் சந்தோஷமும் காலம் முழுக்க இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்'' என்று சொல்லி நெகிழ்கிறார், மானாமதுரை வாசகி சுபலட்சுமி.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்து சேர்ந்திருக்கும் அந்தக் குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் எப்போதும் குடிகொண்டிருக்கவும், மற்ற வாசகிகளின் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறவும், பிரார்த்தனையே இல்லாமல் கலந்துகொண்ட வாசகி கண்ணாம்பாளின் குடும்பம் எல்லா நலன்களும் பெற்றுச் சிறக்கவும் ஸ்ரீமுத்தாலம்மன் அருள்வாளாக!

- பூ.ஜெயராமன்
படங்கள்: உ.பாண்டி