Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

Published:Updated:
தசாவதாரம் திருத்தலங்கள்!

ச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்த மலை அது. 'டமடம’வென வேடர்கள் பறையடிக்கும் சத்தமும், அவர்கள் வில்லில் நாணேற்றும் ஒலியும் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் அந்தச் சிகரத்தில், விலங்குகளும் ஏராளம்!

##~##
யானைகளின் காலடிச் சுவடுகளைக்கொண்டே அவை இருக்கும் இடத்தைத் தேடிக்கொண்டிருக்குமாம் புலிகள். சிவந்த கண்களைக் கொண்ட சிங்கங்களோ, யானைகளை வேட்டையாடி, அவற்றின் தந்தங்களைப் பரம்பொருளின் திருப்பாதத்தில் சமர்ப்பித்து வழிபாடு நடத்துமாம்!

துவக்கத்தையும் முடிவையும் வரையறுக்கமுடியாத இந்த அண்டவெளியின் ஒவ்வோர் அணுவிலும் தனது சாந்நித்தியம் உண்டு என்பதை நிரூபிக்க, அந்தத் தெய்வம் அவதாரம் நிகழ்த்திய க்ஷேத்திரம் அல்லவா? ஆகவே, அந்த மலையில் இயற்கையின் விளையாட்டும் விநோதம்தான்!

'சில்’லென இரையும் வண்டுகளும், காற்றில் சலசலவென ஒலியெழுப்பும் வாகை மரங்களும், பனை மரங்களும்... கடினமான பாறைகளையும் பிளந்து வேர் விட்டு வளர்ந்திருக்கும் நெல்லி மரங்களும் அடர்ந்த அந்த மலையில், மூங்கில்களும் அதிகம்! வானுயர வளர்ந்திருக்கும் அந்த மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசுவதால் நெருப்புப் பற்றிக்கொள்ள, சுழன்றடிக்கும் பெருங்காற்று, அந்த நெருப்பை வாரிக்கொண்டு வான் முழுவதும் பரவி, ஆகாசத்தையே ரத்தச் சிவப்பாக்குமாம்!

இப்படி, அந்த மலையையும் அதன் மாண்பையும் அணு அணுவாய் அனுபவித்து உருகும் அடியவர் யார் தெரியுமா?

திருமங்கை ஆழ்வார்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

நிஜம்தான்... பரமனும் பிரம்மனும் நாடி வந்து, நாவில் தழும்பேற ஸ்ரீநரசிம்மப் பரம் பொருளைப் பாடித் தொழுத இந்த திவ்விய க்ஷேத்திரத்தை, வனப்புமிகு மலைக் கோயில்களை, தெய்வத் திருவருள் இருந்தாலன்றி தரிசிக்க முடியாது என்பார்கள் ஆன்றோர்கள்.

எனினும், நாடி-நரம்பெல்லாம் நாராயண நாமத்தை உருவேற்றியபடி, கூட்டம் கூட்டமாய் இங்கு வந்து ஸ்ரீநரசிம்மமூர்த்தியை அடியவர்கள் வழிபடுகிறார்கள் எனில், பூர்வ ஜென்மத்தில் அவர்கள் கோடிகோடியாய் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்!

அப்பப்பா... இவ்வளவு மகத்துவங்கள் நிறைந்த அந்தப் புண்ணிய திருத்தலம் எது? அதன் பெயர்தான் என்ன?

புராணங்கள் சிறப்பிக்கும் ஒரு பெயர்- கருடாசலம்!

சிந்தை முழுக்க பகவானையே சிந்தித்திருக்கும் பெரிய திருவடியாம் கருடாழ்வார், வானுயரப் பறந்துகொண்டிருந்தார். கற்பனையால் தன் மனதில் வரித்து வைத்திருப்பது போன்ற ஓர் உன்னத இடம், இந்தப் பூவுலகில் எங்கேனும் உள்ளதா எனத் தன் கூரிய கண்களால் தேடியபடி பறந்தார்.

ஓரிடத்தில்... பரந்தாமனின் பாம்பணையாம் ஸ்ரீஆதிசேஷனே பூமிப்பந்தின்மீது படுத்திருப்பது போன்று, நீண்ட நெடும் மலைத் தொடரைக் கண்டார். அதன் மையமாகத் திகழும் அந்தச் சிகரம் கருடனைக் கவர்ந்தது.

வேக வேகமாகப் பறந்து வந்தவர், அந்தச் சிகரத்துக்கு மேலாக வட்டமிட்டார். பச்சைப் பசேலெனத் திகழும் அந்தச் சிகரத்தின் வனப்பையும், பச்சை மலைகளுக்கு வெள்ளை மாலை போன்று ஆர்ப்பரித்து விழும் பாபநாசினி நதியையும் நீர்வீழ்ச்சியையும் கண்டு பரவசம் அடைந்தார். தான் மனதில் கற்பனை செய்து வைத்திருந்த அதே இடம்தான் இது என்ற குதூகலத்துடன், இறக்கைகளைப் படபடவென அடித்தபடி தரையிறங்கினார்.

பரம்பொருளை நரசிம்ம சொரூபமாகத் தரிசிக்கும் ஆசை அவருக்கு. தான் தோளில் சுமக்கும் நாராயணரை, அல்லும்பகலும் நெஞ்சில் சுமந்தவன் அல்லவா பக்த பிரகலாதன்! அவனுக் காக, அவனது பக்திக்காக தூணைப் பிளந்து வெளிப்பட்ட அந்த திவ்வியத் திருவடிவை ஒரு முறை... ஒரேயரு முறையாவது தரிசித்துவிட வேண்டும் என்று விரும்பினார் கருடன். எளிதில் கிட்டிவிடுமா அந்தப் பாக்கியம்!

'தவமிருப்போம்; மாலவனை மனதில் இருத்தி, இடைவிடாது அஷ்டாட்சர மந்திரம் ஜபிப்போம். நாட்கள் என்ன... எத்தனை யுகங்கள் ஆனாலும் சரி... ஸ்ரீநரசிம்ம தரிசனத்தைக் காணாமல் எழுந்திருக்கப்போவதில்லை என்று சங்கல்பித்துக் கொள்வோம். பரம்பொருள் மனம் கனியும்; நிச்சயம் திருவருள் கைகூடும்’ என்று முடிவு செய்தவர், மலைச்சாரலில் தக்கதோர் இடத்தைத் தேர்வு செய்து, தவம் செய்யத் தொடங்கினார்.

நாட்கள் வாரங்களாயின; வாரங்கள் மாதங்கள் ஆயின; மாதங்கள் வருடங்களாக... காலம் உருண்டோடியது.

தமது பெரிய திருவடியின் சிந்தையை மகிழ்விக்க  முடிவு செய்தது பரம்பொருள். பரமபதம் விட்டகன்று அந்த மலை க்ஷேத்திரத்தை நாடி வந்தது. ஓங்கியுயர்ந்த மலையின் ஒரு குகையில், ஸ்ரீநரசிம்மமாய்க் காட்சி தந்தது.

திருக்காட்சி கண்டு அகமகிழ்ந்தார் கருடன். நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். பரவசத்தில்  ஆடிப் பாடினார். 'அஹோபிலம்... மகாபலம்; அஹோபிலம்... மகாபலம்’ என்று ஆர்ப்பரித்துப் பணிந்தார்; துதித்து வணங்கினார்.  

'பிலம்’ என்றால் குகை என்று பொருள். குகையில் திருக்காட்சி கண்ட கருடாழ்வார், பரவச மிகுதியில் அஹோபிலம் என்று அழைத்ததால், இந்தத் தலத்துக்கு அஹோபிலம் என்றே திருப்பெயர் அமைந்ததாம்.

அதேபோல், கருடாழ்வார் தவம் செய்து அருள்பெற்ற மலை என்பதால், இந்த மலைத் தொடர் இன்றைக்கும் கருடாசலம் என்று அழைக்கப்படுகிறது.

எந்தவித ஆயுதமும் இல்லாமல், விரல்களாலேயே இரண்யகசிபுவின் கதையை முடித்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் பலம் கண்டு வியந்த தேவாதிதேவர்கள், 'ஆஹா... என்ன பலம்!’ என்று ஆரவாரம் செய்தார்களாம். அதனால் இந்தத் திருத்தலம், அஹோபிலம் எனப்படுகிறது என்று இன்னொரு தகவலையும் சொல்கிறது புராணம்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

திருமங்கை மன்னன் இந்தத் தலத்தை எப்படி அழைக்கிறார் தெரியுமா? தேன்மதுரத் தமிழில், 'சிங்கவேள் குன்றம்’ எனப் போற்றுகிறார் அவர்!

கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் நடுநாயகமாக அமைந்திருக்கிறது அஹோபிலம். ஆந்திர மாநிலத்தின் மிக அற்புதமான இந்த க்ஷேத்திரம், ஹைதராபாத்தில் இருந்து சுமார் 330 கி.மீ; கடப்பாவில் இருந்து 112 கி.மீ. தொலைவு; நந்தியாலில் இருந்து சுமார் 65 கி.மீ. தூரம்!

தமிழகத்தில் இருந்து செல்பவர்கள், சென்னை யிலிருந்து கடப்பாவுக்கு ரயில் அல்லது பேருந்து மூலம் செல்லலாம். அங்கிருந்து அல்லகட்டா எனும் ஊர் வழியாக அஹோபிலத்துக்குப் பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம்.

தெய்வ சாந்நித்தியம் மிகுந்த கிழக்குத் தொடர்ச்சி மலையை ஆதிசேஷனாகவே பெரியோர்கள் போற்றுவர். படமெடுத்த அதன் தலைப்பகுதி- திருமலை திருப்பதி என்றால், வால் பகுதி- சிறப்புமிகு ஸ்ரீசைலம். இரண்டுக்கும் மையமாக... ஆதிசேஷனின் உடல்பகுதியாகத் திகழும் திருத்தலம்- அஹோபிலம்!

கிருதயுகத்தில் இரண்யகசிபு வாழ்ந்த இடம், பிரக லாதன் எனும் மாபெரும் பொக்கிஷத்தை- பிள்ளைச் செல்வத்தை அவன் பெற்றெடுத்த திருவிடம்... 'ஓம் நமோ நாராயணா’ எனும் எட்டெழுத்து மந்திரத்தின் மகிமையை உலகுக்கு உணர்த்த சிறப்பான ஓர் அவதாரம் நிகழ்ந்த தலம்...

பிரகலாதனுக்கு மட்டும்தானா? உலக மக்கள் யாவருக்கும் துணையாக நான் இருக்கிறேன் என்று பகவான் சூளுரைத்து, கோயில்கொண்டிருக்கும் க்ஷேத்திரம்!

மேல் அஹோபிலம், கீழ் அஹோபிலம் என இரண்டு தளங்களாக அமைந்திருக்கும் இந்த திவ்வியதேசத்தில்... நவ நரசிம்மர்களின் தரிசனம், உக்ரஸ்தம்பம், பிரகலாதமெட்டு குகைக்கோயில், பவநாசினி அருவி, புனிதமிகுந்த கருடாத்ரி- வேதாத்திரி மலைச்சிகரங்கள்... என நாம் தரிசிக்கவும் வழிபடவும் வேண்டிய அற்புதங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அடர்ந்த கானகம், நெடிதுயர்ந்து நிற்கும் செங்குத்தான மலைப்பாறைகள், ஜில்லென குறுக்கிடும் ஓடைகள், தலை சுற்ற வைக்கும் அதலபாதாளங்கள்... எல்லாவற்றையும் மிகக் கவனமுடன் கடந்து, நவநரசிம்மர்களையும் தரிசிப்பது, சிலிர்ப்பான அனுபவம்!

அந்த அற்புத அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த ஓர் அத்தியாயம் மட்டுமே போதாது!

- அவதாரம் தொடரும்...