ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

பரிகாரங்களால் பலன் உண்டா?

பரிகாரங்களால் பலன் உண்டா?

பரிகாரங்களால் பலன் உண்டா?
பரிகாரங்களால் பலன் உண்டா?
பரிகாரங்களால் பலன் உண்டா?

பிறந்த நேரம் சரியாகத் தெரியாத நிலையில், ஜாதக அடிப்படையிலான விஷயங்களை எப்படித் தெரிந்து கொள்வது? எனக்கு ஜாதகம் கணிக்க இயலுமா?

- மணி பரமேஸ்வரன், பெங்களூரு

  தன்னுடைய பிறந்த கால நேரம் தெரியாத ஒருவனின் ஜாதகத்தைக் கணிக்க, 'நஷ்ட ஜாதகம்’ என்ற தலைப்பில், அதைக் கண்டுபிடிக்கும் முறையை அறிமுகம் செய்திருக்கிறது ஜோதிடம். ஜோதிடர்கள் அந்த முறையில் ஜாதகம் கணித்துத் தருவார்கள். தமிழில், 'நஷ்ட ஜாதக கணிதம்’ என்ற தலைப் பில் ஒரு நூலை, சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றி யிருக்கிறார். பல மொழிகளில் ஜோதிட நூல்கள் உண்டு. அவற்றைக் காப்பாற்றும் எண்ணம் இல்லாததால் மறைந்து போய்விட்டன. சிந்தனை மாற்றமானது, சிறப்பான ஜோதிடத் தகவல்களை அலட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ளிவிட்டது!

தவிர, 'பிரச்னம்’ என்ற பகுதியின் மூலம் வருங்கால பலன்களையும், நிகழ்கால பலன்களையும் துல்லியமாகத் தெரிந்துகொள்ள வழி இருக்கிறது. மனிதனின் நற்குணங்களை மிளிர வைத்து, தெய்வ நிலைக்கு எட்டவைக் கும் வழிமுறைகளை உள்ளடக்கிய ஏராளமான ஜோதிட நூல்களை காலம் விழுங்கிவிட்டது. தற்போது, வியாபார நோக்கம் உட்புகுந்து அதன் உருவத்தை சிதைத்துவிட்டது. மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் பொருட்டு, முக்காலத்தையும் படம்பிடித்துக் காட்டும் ஜோதிட நூல்களை இயற்றி உதவி புரிந்துள்ளனர் முனிவர்கள். நாம் முயற்சித்து அவற்றைப் பெற்று பயன்பெற வேண்டும்.

ஸ்ரீஹயக்ரீவரை கலைமகளுக்கே குரு என்கிறார்களே... ஏன் அப்படி? இந்த அவதாரத்தின் மகத்துவம் என்ன?

பரிகாரங்களால் பலன் உண்டா?

- சிவா, மும்பை

இறையுருவங்களின் திருமேனி, உருவ அமைப்பு, தோற்றம் ஆகியன இறைவனின் ஸ்தூல வடிவம் ஆகும். இயல்பில் அவன் சூட்சும வடிவானவன். இவை இரண்டும் வெளிப்பட்டு, அதைத் தாங்கி நிற்கும் ஆதாரமான- கண்ணுக்குப் புலப்படாத சக்தியை காரண வடிவம் என்பார்கள். அதுவே பரம்பொருள்; அவரை இறைவன் என்று போற்றுகிறோம். நாம் வணங்கி வழிபடும் எந்தத் திருவுருவை எடுத்துக் கொண்டாலும், அவற்றில் பரம்பொருளின் இயல்பே செயல்படும். அவர், எல்லாத் தேவைகளையும் அளிக்கும் வல்லமை கொண்டவர். பக்தனானவன், தனது விருப்பப்படி எந்தத் திருவடிவத்தையும்  தேர்ந்தெடுக்கலாம். எந்த வடிவில் வணங்குகிறோமோ, அந்த மூர்த்தியாகவே அருள்பாலிப்பார்!

வடிவங்களுக்கு இடையே பாகுபாடு வகுப்பது நம் மனம்தான். பாகுபாட்டைப் பார்க்க ஆரம்பித்தால், நமது இலக்கு நழுவிவிடும்; ஏமாந்து போவோம். ஒரு வடிவை உயர்வாகச் சித்திரிப்பதற்காக, மற்ற திருவடிவங்களை, தரம் தாழ்த்திக் கூறுவது தவறு. ஒருவனை முதல்வன் என்று உயர்த்த வேண்டுமானால் மற்றவர் களை இரண்டாமவர்களாகச் சித்திரிக்கவேண்டி வரும். உண்மை யில் அத்தனைபேரும் முதன்மையானவர்களே! இந்த உண்மையை மறந்து, பாகுபாட்டில் சிந்தனையைத் திருப்புவது அறியாமை. ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீகலைமகள்- இருவருமே குருவும் அன்று; சிஷ்யரும் அன்று. இருவரும் பரம்பொருளின் ஸ்தூல வடிவங்களே!

எங்கள் ஊர் விநாயகர் கோயிலில் காலை ஒருவேளை மட்டும் பூஜை செய்துவிட்டுச் செல்கிறார் குருக்கள். மாலை வேளையில் கோயிலில் விளக்கேற்றுவது அவசியமா?

- ஆர்.சேதுராமன், திருவூர்

காலையிலும் மாலையிலும் கோயிலில் விளக்கேற்றவேண்டும். மாலையில் பூஜை இல்லை என்றாலும், விளக்கேற்றுவதைத் தவிர்க்கக்கூடாது. மக்கள், விளக்கொளியில் இறைவனைத் தரிசிக்கும் வாய்ப்பை அளிக்கவேண் டும். இறை ஆராதனையில் விளக்கேற்றுவதும் ஒன்று. குறிப்பாக, கருவறையில் இருக்கும் இறைவனுக்கு விளக்கொளி வேண்டும். மக்கள் வழிபாட்டுக்காக ஏற்பட்டவை கோயில்கள். அந்தி சாயும் வேளையில் இறைவனை வணங்குவது அவசியம். அதற்கு விளக்கொளி தேவை. சிவலிங்கத்துக்குப் பின்புறம் கண்ணாடியோடு இணைந்த அகல் விளக்கு எரியும். கோயிலுக்கு வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த ஒளியில் சிவலிங்கம் தெரியும்; வழிபட்டுப் பயன்பெறுவர். பூஜை இல்லை என்றாலும், விளக்கேற்ற வேண்டும். அதுவும் ஒரு பணிவிடைதான்.

பிரம்மமுஹூர்த்தம் என்றால் என்ன? இந்தப் பொழுதுக்கு பிரம்மனின் பெயர் வந்தது ஏன்?

- எம்.எல்.ஏ.நாராயணன், மயிலாடுதுறை

பரிகாரங்களால் பலன் உண்டா?

இரவில்- கடைசி யாமத்தின் பிற்பகுதி பிரம்ம முஹூர்த்தம். அதிகாலை 4 மணிக்குப் பிறகு இருக்கும் வேளை என்று சொல்லலாம். பிரம்மனுக்கும் இந்த முஹூர்த் தத்துக்கும் சம்பந்தம் இல்லை. தெய்வங்களை வணங்கும் வேளை என்றும் இதற்குப் பொருள் இல்லை. 'பிரம்ம’ என்ற சொல்லுக்கு வளர்ச்சியடைதல், பெருகிக்கொண்டிருத்தல் என்று பொருள் உண்டு (ப்ருஹீ ப்ரும்ஹீ விருத்தௌ). 'வளர்ச்சியை அளிக்கும் வேளை’ என்று பொருள் உண்டு. அதை, 'பிராம்ம முஹூர்த்தம்’ என்று சொல்ல வேண்டும். பிரம்ம முஹூர்த்தம் என்பது தவறு. அந்த வேளையில் உறங்கக்கூடாது என்று ஆயுர்வேதமும், தர்ம சாஸ்திரமும் கூறுகின்றன (பிராம்மே முஹூர்த்த உத்திஷ்டேத்...). அந்த வேளையில் எழுந்து காலைக் கடனில் கவனம் செலுத்த வேண்டும். பல்துலக்கி, சிறுநீர்- பெரு நீர் கழித்து நீராடி, நெற்றித் திலகம் ஏற்று இறைவனை வணங்கி, அந்தப் பொழுதைப் பயனுள்ளதாக ஆக்கினால், சுகாதாரம் காப் பாற்றப்படும் என்கிறது ஆயுர்வேதம். மாணவர்கள் அந்த வேளையில் எழுந்து படித்தால், மனதில் மிக எளிதாகப் பதியும்; கல்வி விருத்தியாகும். பாட்டு படிப்பவர்கள், படித்தவர்கள் அந்த வேளையில் ஸாதகம் செய்வார்கள். கவிகளும், இந்த வேளையிலேயே தங்களது படைப்பை உருவாக்குவர் (ராத்ரியாம: துரிய: கால:). இந்த வேளையில் உறங்குபவன், செல்வத்தை இழப் பான் என்கிறது தர்மசாஸ்திரம். உறக்கத் துக்குப் பிறகு உடல் சுறுசுறுப்புடன் இயங்கும் வேளை, இளைப்பாறிய உடலுறுப்புகள் நன்றாக இயங்கும் வேளை என்பதால், இந்தப் பொழுதில் செய்யும் காரியங்கள் துரித வளர்ச்சியை எட்டிவிடும். மற்ற வேளைகளில் இரண்டு மணி நேரத்தில் படிக்கும் படிப்பை, இந்தப் பொழுதில் அரை மணி நேரத்தில் முடித்துவிடலாம். இந்த வேளையில் சுறுசுறுப்பான செயல்பாடு, மனவளர்ச்சி தரும்; சிந்தனை வளர்ச்சிக்கும் உதவும்.

விலங்கினமும் பறவைகளும்கூட விழித் துக்கொள்ளும் வேளை இது. தற்காலத்தில், விலைமதிக்கமுடியாத இந்தவேளையை, மாணவர் களும்... ஏன், பெரியோர்களும்கூட விழித்துக்கொள் ளாமல் வீணடிப்பது உண்டு. விஞ்ஞான விளக்கத்தை சுட்டிக்காட்டி தன்னையே ஏமாற்றிக்கொள்பவர்களும் உண்டு. அருமையான இந்த வேளையில் நீராடி, உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தினால், படிப்படியாக செயல்படும் அலுவல்கள் சீராக்கப் பட்டு அசதி இல்லாமல் உடல்வளம் பெருகும் என்கிறது ஆயுர்வேதம்.

காகம் கரைந்து உலகத்தை எழுப்பும் அருமையான இந்தப் பொழுதில் விழித்துக்கொள்வதை குழந்தைகள் பழக்கப்படுத்திக் கொண்டால், பிற்காலத்தில் சிந்தனை வளம் பெற்று சிறப்பான வாழ்க்கையைப் பெற்று மகிழ்வார்கள். மருத்துவரைச் சந்திக்காத அளவுக்கு உடல் நலம் சீராக இருக்கும்.

சுபகாரியங்கள் தடைப்படும் போது, பரிகாரங்கள் செய்யச் சொல்கிறார்கள். அப்படிப் பரிகாரம் செய்து சில நாட்களில் சுப காரியங்கள் நடந்துவிட்டால், பரிகாரம் செய்த பலன் என்கிறோம். பரிகாரத்துக்குப் பிறகும் சுபகாரியம் நடைபெறவில்லை எனில், பரிகாரம் செய்த முறையில் தவறு என்கிறார்கள்.  உண்மையில், பரிகாரங்களால் பலன் உண்டா? பரிகாரம் செய்தும் உரிய பலன் கிடைக்காததற்கு என்ன காரணம்?

- ரா.பாஸ்கரன், பெங்களூரு-60

தேர்வில் பலமுறை தோற்றவன், திரும்பவும் தேர்வு எழுதுகிறான்; வெற்றி பெறுகிறான். வெற்றியை அடைவதற்கு, தேர்வு எழுதுவதும் பரிகாரம்தான்! தகுதி இருந்தும் வேலை கைநழுவிப் போகுமோ எனும் பயத்தில், பிரபலங்களிடம் இருந்து சிபாரிசுக் கடிதம் பெற்று அதையும் இணைத்துக் கொடுப்பார்கள்; வெற்றி பெறுவார்கள்! அதேநேரம்... திரும்பத் திரும்ப தேர்வு எழுதுபவனும், சிபாரிசுக் கடிதம் பெற்றுக் கொடுப்பவரும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு உத்தரவாதம் கிடை யாது; முயற்சியில் தோல்வியைத் தழுவியவர்களும் உண்டு. வியாபார நோக்கம் பரிகாரத்தில் எடுபடாது. மற்ற அலுவல்களில் வெற்றி பெற்று விட்டதை மனதில் கொண்டு, பரிகார விஷயமும் அப்படித்தான் என்று எடுத்துக்கொண்டால், ஏமாற் றமே மிஞ்சும். அனுபவத்தை வைத்து அதன் கார ணத்தை வரையறுக்க இயலாது. அனுபவம் பலவிதம்.

##~##
உறுதியான காரணம், அதன் சரியான செயல்பாடு- இவை நிச்சயமாக வெற்றியளிக்கும். தகுதியைத் தக்க வைத்துக் கொள்ளவும், தடைகளை அகற்றவும் பரிகாரம் பயன்படும். அதை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் தவறு நிகழக்கூடாது. தவறு செய்ததால்தான் பரிகாரத்தை ஏற்கவேண்டிய நிர்பந்தம் வந்தது. அந்தப் பரிகாரத்திலும் தவறு இருந்தால் பலன் ஏற்பட வழியில்லை. பரிகாரத்தைச் சந்திக்காமல், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் ஏராளம். அவர்களின் பட்டியலில் நம்மையும் இணைத் துக்கொள்வது சிறப்பு. பரிகாரத்தை நம்பி அடிக்கடி  தவறு செய்வது பலன் அளிக்காது!

தவறு செய்தவன் தண்டிக்கப்படுகிறான்; நன்மை செய்தவன் பாராட்டப்படுகிறான். காரணம் உறுதியாக இருந்தால், காரியம் நிறைவேறிவிடுகிறது. மனம் வருந்தி, முனைப்புடனும் ஈடுபாட்டுடனும் முறைப்படி பரிகாரம் செய்தால் பலன் உண்டு.

கர்ப்பப்பையை அகற்றியவர்களுக்கு, பரிகாரத்தால் குழந்தை பிறக்காது. பரிகாரத்துக்குக் கட்டுப்படாத தவறுகளும் உண்டு. இதுபோன்றவற்றில், பரிகாரத்தை நடைமுறைப்படுத்தி பலனை எதிர்பார்ப்பது சிறப்பல்ல. மாறா வியாதியில் மருந்து செயல்படுவதில்லை. தவற்றை உணர்ந்தவனுக்குப் பரிகாரம் பலன் அளிக் கும். தவற்றை மறைப்பதற்குப் பரிகாரம் கை கொடுக்காது. தகுதியில்லாத ஒன்றைப் பெறுவதற்கு பரிகாரம் பயன்படாது. அழிவின் விளிம்பில் நிற்பவன் 'கருணை மனு’ அளித்தால் பரிசீலிக்கப்படும். எதிர்த்து வாதாட முயன்றால் பரிசீலனை இருக்காது. பரிகாரம் நமது பிறப்புரிமை இல்லை. பரிகாரம் என்பது தண்டனை போன்றது. தண்டனையை முறைப்படி அனுபவித்தால் விடுதலை உண்டு.

அடிக்கடி தவறு செய்பவர்களைப் பரிகாரம் கை தூக்கிவிடாது. தெரிந்தோ தெரியாமலோ தவறு ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று. அப்போது, பரிகாரம் வாயிலாக விழிப்பு உணர்வு ஏற்படச் செய்து, நல்லவராக மாற்றும் சாஸ்திரத்தின் முயற்சியே பரிகாரம். பரிகாரம் மனம் சார்ந்த விஷயம்; பணம் சார்ந்த விஷயம் அன்று. மனதைத் தூய்மைப்படுத்தி மீண்டும் தவறு செய்யாதவனாக மாற்றுவதே பரிகாரத்தின் குறிக்கோள்.

- பதில்கள் தொடரும்...

பரிகாரங்களால் பலன் உண்டா?