ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்!

ஓம் நமசிவாய

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்!
##~##
கா
வல்துறையினருக்காகப் பயிற்சிக் கல்லூரி அமைக்க முடிவு செய்யப்பட்டு, இடமும் தேர்வு செய்யப்பட்டது.  அந்த இடத்தில் கட்டடம் எழுப்புவதற்காக பூமியைத் தோண்டியபோது, அதிர்ந்து போனார்கள் மக்கள்! அங்கே, பூமிக்கடியில் புதையுண்டு கிடந்தது சிவாலயம்.

பிறகு, அந்தக் கோயிலைப் புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒருகாலத்தில், அந்தப் பகுதி மல்லிகைச் செடிகள் கொண்ட வனமாகத் திகழ்ந்ததாம். அதனால், இந்த ஈஸ்வரனுக்கு ஸ்ரீமல்லிகேஸ்வரர் எனத் திருநாமம் சூட்டி, அந்தப் பகுதி மக்கள் வழிபடத் துவங்கினர்.

சென்னை, அசோக்நகரில் அமைந்துள்ளது காவல்துறைக்கான பயிற்சிக் கல்லூரி. இந்தப் பகுதியில், அற்புதமாகக் கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீமல்லிகேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீமகேஸ்வரி.

குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்கின்றனர் பக்தர்கள். அதேநேரம், தோபா சித்தர் என்பவர், பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட ஆலயம் என்று தனது ஓலைச் சுவடியில் குறித்துள்ளாராம்!

தோபா சித்தர், காசியில் இருந்து சிவலிங்கத்தை எடுத்து வந்து, இந்தக் கோயிலில் வைத்துப் பன்னெடுங்காலம் பூஜைகள் செய்து வந்தாராம். அவரிடம் யார், எது குறித்து கேட்டாலும், 'அதெல்லாம் தோடுடைய செவியன் பாடு’ என்பாராம். காலப்போக்கில், அவரே அதைச் சுருக்கி, 'தோபா’ என்று சொல்லத் தொடங்கினாராம். இதனால், அவருக்குத் 'தோபா சித்தர்’ எனப் பெயர் அமைந்ததாகச் சொல்வர். வருடந்தோறும் பங்குனி மாதம், ரேவதி நட்சத்திர நன்னாளில் இவருக்கு குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது. அந்த நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறும் என்கின்றனர் அன்பர்கள்!

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்!

இங்கே, ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீசக்தி கணபதி, ஸ்ரீவள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீகாலபைரவர் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர்.

ஸ்ரீமல்லிகேஸ்வரரை ஏழு முறை பிராகார வலம் வந்து வணங்கித் தொழுதால், மனக் குழப்பங்கள் யாவும் தீரும்; துன்பமெல்லாம் பறந்தோடிவிடும்; நினைத்த காரியம் அனைத்தும் இனிதே நடந்தேறும் என்று தோபா சித்தர் ஓலைச்சுவடியில் குறிப்பு எழுதி வைத்துள்ளாராம். ஆகவே, இங்கு ஏழு முறை வலம்வந்து, தங்களது மனக்குறைகளை மல்லிகேஸ்வரரிடம் சொல்லிப் பிரார்த்தித்துச் செல்கின்றனர், பக்தர்கள்.

இந்த ஆலயத்தில் ஸ்ரீசனி பகவான், ஸ்ரீசீதாதேவி மற்றும் ஸ்ரீலட்சுமணருடன் ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீநாராயணபெருமாள் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.  

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்!

சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சி காலங்களில் ஸ்ரீசனீஸ்வரருக்குச் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் ஆகியவை நடை பெறுகின்றன. அதேபோல், குருப்பெயர்ச்சி வேளையில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்வாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். அப்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான அன்பர்கள், இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

சித்திரை மாதப்பிறப்பு நாளில், பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி விமரிசை யாக நடைபெறுமாம். அதில் கலந்துகொள்ள, ஏராளமான பக்தர்கள் திரள்வார்களாம். ஸ்ரீராமநவமி, பங்குனி உத்திரப் பெருவிழா, வைகாசி விசாகத் திருவிழா, ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாணம், ஆடியில் அம்பிகைக்கு வளையல் சார்த்துதல், ஆனித் திருமஞ்சனம், புரட்டாசி நவராத்திரி என வருடம் முழுவதும் விழாக்களுக்கும் கொண்டாட்டங்களும் குறைவின்றி நடைபெறும் ஆலயம் இது எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்!  

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்!

மேலும், கார்த்திகை மாத சோமவாரத்தில் (திங்கட்கிழமை) 1008 சங்காபிஷேகமும், மார்கழியில் ஸ்ரீஅனுமன் ஜயந்தி நன்னாளில் ஸ்ரீஅனுமனுக்கு 1008 வடைமாலையும் சார்த்தி விமரிசையாகக் கொண்டாடுவதைக் காணக் கண்கோடி வேண்டும்.

ஸ்ரீமல்லிகேஸ்வரருக்கு மல்லிகைப் பூமாலை சார்த்தி, ஏழு முறை வலம் வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும்; பிள்ளை வரம் கிடைக்கப் பெறுவர் என்கின்றனர் பெண்கள்.

காவல்துறைக்கான பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீமல்லிகேஸ்வரரையும் ஸ்ரீமகேஸ்வரியையும் மனதார வணங்கி வழிபடுங்கள். அனைவரையும் காத்தருள்வார் ஈசன்!

- க.நாகப்பன்
படங்கள்: பு.நவீன்குமார்