குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவையாறு


##~## |
ஸ்ரீஐயாறப்பரை மனதில் நினைத்து, அவருடைய திருநாமத்தை உச்சரித்தால், நம்முடைய பாவங்கள் விலகும்; புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்! அம்பிகையின் திருநாமம் - ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி.
திருவீழிமிழலையில் கண்மலரிட்டு அர்ச்சனை செய்து ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றாராம்! எனவே இந்தத் தலத்தின் தட்சிணாமூர்த்திக்கு, ஸ்ரீசிவயோக ஹரி குரு தட்சிணாமூர்த்தி என்று திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

வலது கரங்களில் கபாலம், அபய முத்திரை; இடது கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கி, அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
இங்கேயுள்ள தியான மண்டபத்தில், வடக்குப் பார்த்து அமர்ந்திருக்கிற ஸ்ரீஆதிவிநாயகரைத் தரிசித்துவிட்டுத்தான், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபடவேண்டும் என்பது இந்தத் தலத்தின் ஐதீகம்! வள்ளலார் சுவாமிகள், தியாகைய்யர் முதலான பலரும் இங்கே பல நாட்கள் தியானம் செய்து, இறைவனின் பேரருளைப் பெற்றுள்ளனர் எனும் சிறப்பு இந்தத் தியான மண்டபத்துக்கு உண்டு!
குரு ஸ்தலம் எனப் போற்றப்படுகிற இந்தக் கோயிலில், மாதந்தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில், குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு, அபிஷேகம் செய்து ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷம் நிலைக்கும் என்கின்றனர் பக்தர்கள்!
மகாவிஷ்ணுவுக்கு உபதேசித்து அருளிய தலத்துக்கு வந்து, ஸ்ரீஐயாறப்பரையும் ஸ்ரீஅறம்வளர்த்த நாயகியையும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்கி வழிபடுங்கள்; ஞானமும் யோகமும் அமையப் பெறுங்கள்!
- இரா.மங்கையர்க்கரசி
படங்கள்: ந.வசந்தகுமார்