ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

'எனக்கு நிகரானவர் எவருமில்லை’ என்கிற கர்வம்தான், இந்த உலகில் நமக்கு முதல் எதிரி! உடலாலும் புத்தியாலும் வலுவுள்ளவராக இருப்பினும், அவர்கள் 'தான்’ எனும் கர்வத்துடன் இருந்தால், துன்பத்துக்கு ஆளாவதை எவராலும் தடுக்க முடியாது. தேவர்களின் குருவான பிரகஸ்பதியே, அப்படியரு கர்வத்தில் உழன்று, அதனால் சிவ சாபத்துக்கு ஆளாகித் தவித்தார் எனும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம்?

தேவர்களின் குரு என்கிற பதவியுடன் வலம் வந்த பிரகஸ்பதியை முனிவர்களும் ஞானிகளும் வணங்கித் தொழுதனர். 'பேரருள் கிடைக்க தாங்களே அருள்புரிய வேண்டும்’ எனப் பிரார்த்தித்தனர். நாளடைவில் பிரகஸ்பதிக்கு, தனக்கு நிகரானவர் எவரும் இல்லை எனும் இறுமாப்பு வந்தது. எவரையும் மதிக்காமல், எவருடனும் இணக்கமாக இராமல் கர்வத்துடன் திரிந்த பிரகஸ்பதிக்கு, சாபம்தான் பலனாகக் கிடைத்தது. விளைவு... தனது தேஜஸ், பொலிவு என அனைத்தையும் இழந்து, ஒளியிழந்து காணப்பட்டார்.

##~##
இருள் சூழ்ந்து காட்சி தந்த பிரகஸ்பதியை, முனிவர் களும் ஞானிகளும் மதிக்காமல் அவமதித்தார்கள்; புறக்கணித்தார்கள். அக்னி பகவானும், வருணனும், வாயு பகவானும் இன்னபிற தேவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தத் தயாராக இல்லை. அப்போதுதான், கர்வம் மிகப் பெரிய சத்ரு என்பதை உணர்ந்தார் பிரகஸ்பதி. தன் தவற்றை உணர்ந்து ஸ்ரீபிரம்மாவைச் சரணடைந்தார்; கதறினார்; இழந்த பொலிவையும் மரியாதையையும் மீண்டும் பெறுவதற்குத்தான் என்ன செய்யவேண்டும் எனக் கேட்டார். 'பூவுலகம் சென்று, சிவனார் தனது தேவியுடன் மகிழ்ந்து, நெகிழ்ந்து, ஆனந்தக் கூத்தாடிய தலத்துக்குச் சென்று, கடும் தவம் செய்! அங்கே, மகிழ்ச்சி நிறைந்த மனத்துடன் திளைத்திருக்கிற சிவனார், உனக்கும் மகிழ்ச்சியைத் தந்தருள்வார்’ என்று பிரம்மா சொல்ல... உடனே பூவுலகம் வந்தார் பிரகஸ்பதி. அங்கே, அந்தத் தலத்தையும் கண்டறிந்தார். அருகில் தீர்த்தக் குளத்தில் நீராடி, அனுதினமும் சிவனாரை எண்ணிக் கடும் தவம் இருந்தார்.

'குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும்’ என்பார்கள். அப்படிப்பட்ட குருவான பிரகஸ்பதிக்கே பிரச்னை வர... பிறகு பூவுலகில் மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் திருவருள் கிடைப்பது எங்ஙனம் என்பதை அறியாமலா இருப்பார், சிவனார்?!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

உலக மக்களின் நலனுக்காகவும், கர்வம் தலைக்கேறினால் கௌரவத்தை இழக்க வேண்டிவரும் என்பதை உணர்த்துவதற்காகவும் பிரகஸ்பதிக்கு அருள முடிவு செய்த ஈசன், தேவியுடன் திருக்காட்சி தந்தார். 'இந்தத் தலத்துக்கு வரும் என்னுடைய அடியவர்களுக்கெல்லாம் குருவருளைத் தந்து வாழ வைப்பாயாக!’ என்று சொல்லி வாழ்த்தி மறைந்தார். இழந்த தனது தெய்வீகத் தன்மையையும் பொலிவையும் பெற்ற பேரானந்தத்துடன், தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அனைத்தையும் அள்ளித் தந்து காத்தருள்கிறார் குரு பகவான்!

தென் கயிலாயம் எனப் புராண காலத்தில் போற்றப்பட்ட அந்தத் தலத்தின் பெருமையை அறிந்த குலோத்துங்க சோழ மன்னன், அங்கே மிகப் பிரமாண்டமான ஆலயம் எழுப்பினான். அந்த ஊருக்கு 'முன்னூற்று மங்கலம்’ எனப் பெயரிட்டான். 'திருச்சிற்றம்பலத்தில் ஆடிய திருநடனத்தை, இங்கே எனக்குக் காட்டுவாயா?’ என இறைவனிடம் இறைஞ்சினான். அதன்படி, உமையவளுடன் திருநடனம் காட்டி அருளினார் சிவபெருமான். இதனால், இந்தத் தலத்து ஸ்வாமிக்கு ஸ்ரீஆடவல்லீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

முன்னூற்று மங்கலம் என அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட ஊர், இன்றைக்கு முன்னூர் எனப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ளது இந்தக் கிராமம்.

ஆலயம் தேடுவோம்!

இரண்டாம் குலோத்துங்க சோழன், இந்தக் கோயிலின் அருமைபெருமைகளை அறிந்து, ஆலயத்தை இன்னும் பிரமாண்டமாக விஸ்தரித்தான்; ஏராளமான திருப்பணிகள் செய்தான். சிறுபாணாற்றுப்படை போன்ற சங்க இலக்கிய நூல்களில் போற்றிப் புகழப்படும் இந்தக் கோயில் சுமார் 1,330 வருடங்கள் பழைமையானது என்று தெரிவிக்கின்றன, கல்வெட்டுகள்!

திண்டிவனம் பகுதியை ஆட்சி செய்த நல்லியக் கோடன் எனும் மன்னனுக்கு, இந்தத் தலத்தின் முருகப்பெருமான் அருளியுள்ளார் என்கிறது ஸ்தல வரலாறு. காஞ்சி மகா பெரியவர் அடிக்கடி வந்து, இந்தத் தலத்தை சிலாகித்துள்ளார் என்றும், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், முன்னூர் தலத்தையும் முருகப் பெருமானின் பேரழகையும் வியந்து போற்றியுள்ளார் என்றும், திருவலம் ஸ்ரீசிவானந்த மௌனகுரு சுவாமிகள், இந்தக் கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைத் திருமேனிகளின் அழகை வியந்ததுடன், இங்கே தங்கி தவமிருந்துள்ளார் என்றும் முன்னூர் சிவாலயம் குறித்துப் பெருமையுடன் விவரிக்கின்றனர் ஊர்மக்கள்.

ஆனால் என்ன... இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்தே பல வருடங்கள் ஆகிவிட்டன என்பதுதான் கொடுமை! ஒவ்வொரு சந்நிதியிலும் குடிகொண்டிருக்கும் இறைத்திருமேனிகளை நாளெல்லாம் கண்குளிரப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்! ஆனால், அந்த இறைத் திருமேனிகளின் மனம் குளிர வேண்டுமெனில், குளிரக் குளிரக் கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்பதுதானே ஆகமம் சொல்லும் விதி!

அழகிய ஆலயம்; வாசலில் சின்னதாக திருக்குளம், நந்திதேவர். உள்ளே மிகப் பிரமாண்டமான ஸ்ரீவிநாயகர்; ஒரே கல்லால் வடிக்கப் பட்ட ஸ்ரீஆறுமுகப் பெருமானும் அவருடைய வாகனமான மயிலும் கொள்ளை அழகு! ஸ்ரீஆட வல்லீஸ்வரரும் உமையவள் ஸ்ரீபிரஹன்நாயகியும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். இங்கு, தெற்கு பார்த்தபடி சிவனார் அமைந்திருப்பது மிகவும் விசேஷம் என்கின்றனர். எனவே, இங்கு வந்து சிவனாரை வணங்கித் தொழுதால், ஆயுள் தோஷம் நீங்கும்; ஆரோக்கியம் கூடும் என்பது ஐதீகம்!

''முன்னூர், அற்புதமான க்ஷேத்திரம். இது, சாந்நித்தியங்கள் நிறைந்த ஆலயம். வாழ்வில் ஒருமுறையேனும் இந்தத் தலத்துக்கு வருவது, குரு யோகத்தைத் தரவல்லது; முன்னூர் தலத்துக்கு வருபவர்கள் வாழ்வில் சீக்கிரமே முன்னுக்கு வருவார்கள்'' எனக் காஞ்சி மகான் தெரிவித்துள்ளதைச் சொல்லிப் பூரிக்கின்றனர் ஊர்மக்கள்.

முன்னூருக்கு வந்தால்தான் என்றில்லை; முன்னூர் திருத்தலத்துக்கு நம்மால் ஆன கைங்கர்யங்களை, திருப்பணிக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்தாலும் ஸ்ரீஆடவல்லீஸ்வரர் மற்றும் குருவின் அருளால், விரைவில் முன்னுக்கு வரலாம் என்பது உறுதி!

ஆலயம் தேடுவோம்!


வெற்றியைத் தரும் வேல் திருவிழா!

ன்னன் நல்லியக்கோடனுக்கு அருளிய ஸ்ரீஆறுமுகப் பெருமானுக்கு, இங்கே காலங்காலமாக வேல் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில், அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமை அன்று, ஸ்ரீஆறுமுகப்பெருமானுக்கு வேல் திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு கந்தக் கடவுளைப் பிரார்த்திக்க, திருமண யோகம் கை கூடும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்; எடுத்த காரியம் எதிலும் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை!

மாதந்தோறும் திருவாதிரையில்
ம்ருத்யுஞ்சய ஹோமம்!

ந்தக் கோயிலில், மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திர நன்னாளில், ஸ்ரீஆடவல்லீஸ்வரர் சந்நிதிக்கு முன்னால் ம்ருத்யுஞ்சய ஹோமம் சிறப்புற நடைபெறுகிறது. இந்த ஹோமத்தைச் செய்து, சிவனாரை வழிபட... எதிரிகள் தொல்லை ஒழியும்; இல்லறம் செழிக்கும்; மனோபயம் நீங்கித் தெளிவு பெறலாம் என்பது ஐதீகம்!