Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

Published:Updated:
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

ரண்டு ஞானிகளும் மிக உன்னதமான நிலையில் இருந்தவர்கள். ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டாடியவர்கள். நேரடி யாகச் சந்தித்து, முகமன் கூறிய தருணங்கள் மிகக் குறைவு என்றாலும், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொண்டிருந்தார்கள். அவரை அறிந்தவர் என்று இவரும், இவரை அறிந்தவர் என்று அவரும் மிகச் சிறப்பாக மனத்துக்குள் இருத்தி, பரஸ்பர நலன்களை அக்கறையோடு கவனித்து வந்தார்கள்.

''சேஷாத்திரி சுவாமியைப் பைத்தியம் என்கிறார்களே..?'' என அன்பர் ஒருவர் ஸ்ரீரமண மகரிஷியிடம் விசாரித்தார்.

''ஆமாம், திருவண்ணாமலையில் மூன்று பைத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று, அண்ணாமலையார் என்கிற பைத்தியம்; இன்னொன்று சேஷாத்திரி சுவாமிகள் என்கிற பைத்தியம்; மூன்றாவது இந்தப் பைத்தியம்!'' என்று ரமண மகரிஷி பதில் சொன்னதாக ஒரு செய்தி உண்டு.

##~##
ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷியைப் பற்றி வேறு விதமாகச் சொல்கிறார். அதிலும் சந்தோஷமும் அன்பும் கொப்பளிக் கின்றன. ''எங்கே, மலைக்கா? விருபாக்ஷி குகைக்குப் போகிறாயா? வேண்டாம், போகாதே! அங்கு ஒரு கொலைகாரன் இருக்கிறான்'' என்று போகிறவரை பயமுறுத்தியிருக்கிறார். ''அங்கு போனால், உன்னைக் கொலை செய்துவிடுவான்'' என்றும் சொல்லியிருக்கிறார்.

பகவான் தன் அகந்தையைக் கொன்றதையே கொலை என்று சொல்லி, அங்கு போனால் உன் அகந்தையும் கொலையாகும், அதாவது, அகந்தை அகன்று போகும் என்பதைத்தான் அவர் இப்படி சூட்சுமமாக எடுத்துரைத்தார்.

'சேஷாத்திரி சுவாமிகள் யார்?’ என்று அந்த அன்பர் பகவான் ரமண மகரிஷியிடம் கேட்டிருக்கலாம். அப்போது இன்னும் தெளிவாக, ரமண மகரிஷி சொல்லியிருப்பார். அல்லது, மௌனத்தில் உணர்த்தியிருப்பார். அதை விடுத்து, 'சேஷாத்திரி சுவாமிகள் பைத்தியம் என்கிறார்களே?’ என்கிறபோது, அதை ஒட்டியே அவர் பேச்சும் இருந்தது. புரிந்துகொண்டவர்கள் பாக்கியவான்கள்.

சாக்த உபாசக வழியில் அதாவது சக்தி உபாசக வழியில் பலவித மந்திர ஜபங்களைக் கிரமமாகக் கற்று, ஜபித்து, இடையறாத ஜபத்தின் மூலம் ஒரு பக்குவத்தை அடைந்தவர் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள். இதன் பலனாக அவர் பல ஸித்திகளைப் பெற்றிருந்தார். 'அதோ, விட்டோபா போகிறார், விட்டோபா போகிறார்’ என்று ஒரு மகான் ஸித்தி அடைந்ததை, வானத்தில் நகர்ந்ததை திருவண்ணா மலையில் இருந்து பார்த்து உரக்கக் கத்தினார். திருவண்ணாமலையிலிருந்து தொலைவில் இருந்த போளூரில் இறந்த ஒரு மகானை உடனடியாகக் கண்டு வியக்க அவரால் முடிந்தது.

ஸ்ரீரமண மகரிஷி

எதிரே உள்ளவர்களின் எண்ணங்களை அறியும் மகத்துவமும் அவரிடம் இருந்தது. எதிரே இருப்பவர் மனதில் என்ன மாதிரியான எண்ண ஓட்டங்கள் ஓடுகின்றன என்பதைச் சரியாகச் சொல்லிச் சிரிப்பதும் வழக்கமாக இருந்தது. சேஷாத்திரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷியின் எதிரே வந்து கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார். சில நிமிடங்கள் உற்றுப் பார்த்தும், பகவான் ஸ்ரீரமண மகரிஷி யார் என்று சேஷாத்திரி சுவாமிகளால் அறிய முடியவில்லை. 'இது என்ன நினைக்கிறதோ, தெரியவில்லையே!’ என்று பகவானைப் பார்த்துக் கூறினார். பகவான் பதில் சொல்லவில்லை. மௌனமாக இருந்தார். அந்த மௌனம், சேஷாத்திரி சுவாமிகளுக்குத் தாங்கவில்லை.

'ஒருவன் அருணாசலேஸ்வரரை வழிபட் டால், அருணாசலேஸ்வரர் அவனுக்கு முக்தி கொடுத்துவிடுவார்’ என்று உரக்கச் சொன்னார். அதற்கு பகவான் மெல்லிய குரலில், 'வழிபடுபவர் யார்? வழிபடுவது எதை?’ என்றார். சேஷாத்திரி சுவாமிகள் வாய்விட்டுப் பெரிதாகச் சிரித்தார். 'இதுதானே புரியமாட்டேன் என்கிறது’ என்று பதில் சொன்னார். இரண்டு ஞானிகளும் மிக அற்புதமான ஒரு விஷயத்தை, தங்கள் நிலையை மிக அழகாகப் பரிமாறிக் கொண்டார்கள்.

சேஷாத்திரி சுவாமிகள், பக்தி என்கிற சிகரத்தின் உச்சி யில் இருப்பவர். அவரது பக்தியின் வழிபாடாக, மந்திர ஜபம் அவருக்கு இருந்தது. அலகு குத்திக்கொள்வது, தேர் இழுப்பது, திருவிழாக்களுக்குப் போவது, கோயிலில் வழிபாடு செய்வது, அபிஷேக- ஆராதனைகள் செய்வது, வீட்டுக்குள்ளேயே விக்கிரகம் வைத்து, அதற்கு மூன்று வேளை பூஜை செய்வது, ஸ்லோகங்கள் சொல்வது, தேவார- திருவாசகங்கள் ஓதுவது, ஹோமங்கள், யக்ஞ கதிகளைச் செய்வது... இவையெல்லாம் பக்தி மார்க்கங்கள். இப்படியான மார்க்கங்கள் மாற்றங்களைக் கொண்டு வரும்; உச்சகட்டமாக உள்ளும் புறமும் தெரியும்; நேற்றும், இன்றும், நாளையும் அறிய முடியும். கடவுளைக் காண முடியும்; கடவுள் தன்மையை அடைய முடியும்.

ஆனால், ஸ்ரீரமணர் வேறு வழி. சொடுக்கு நேரத்தில் உள்ளே ஒரு மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அதுதான் இது என்று புரிந்துவிட்டு, இதுதான் எங்குமிருப்பது என்பது தெரிந்துவிட்டது. எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிற ஒன்றே என்பது தெளிவாகப் புரிந்துவிட்டது.

இனி உண்பதும், உடுத்துவதும், உறங்குவதும், பேசுவதும், சிரிப்பதும் வெறும் நாடகமே என்கிற நினைப்பு தங்கி விட்டது. என்றோ ஒரு நாள் நாடகம் முடிந்து, வாழிய வாழியவே எனப் பாடப்போகிறார்கள் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்து, பார்ப்பதைக் கனவு என்று நினைத்து, அமைதியாக இருக்க முடிந்தது.

எல்லோருக்கும் எளிதில் கிடைக்காதது; பூர்வ ஜென்ம தொடர்ச்சி. ஆனால், மிகப் பெரிய சத்தியத்தோடு வாழும் வாழ்க்கை அது. பரம பக்தர்களும், பாகவதர்களும் வணங்க வேண்டிய தெய்வ சொரூபம் அது. கடவுளைத் தேடுகின்ற விஷயமில்லை; கடவுளைக் கண்டுவிட்ட சந்தோஷம் இல்லை;

கடவுளாகவே மாறிய அற்புதமான சொரூபம் அது!

இந்த இரண்டில் எந்த வழியை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்? தேர்ந்தெடுக்கிற சக்தியெல்லாம் உங்களுக்கு இல்லை. விதி வலியது. விதி எந்தப் பக்கம் இழுத்துப் போகிறதோ, அந்தப் பக்கம்தான் போகவேண்டும். போகின்ற பக்கத்தில் கடவுள் வாழ்க்கையாக, கடவுளைத் தேடுகின்ற வாழ்க்கையாக அமையுமானால், அதுவே மிகப் பெரிய பாக்கியம். அது மாதிரி பாக்கியம், இம்மாதிரியான மகான்களை சந்திக்கும்போது வெகு எளிதில் ஏற்படும்.

இவர்கள் பார்ப்பதற்கு மிக எளிமையாக இருப்பார்கள். வெறும் கோவணத்தோடு உட்கார்ந்துகொண்டிருக்கின்ற பகவான் ஸ்ரீரமண மகரிஷி, பரட்டைத் தலையும், அழுக்குத் துண்டும், இடுப்பு வேட்டியுமாய் அலைகின்ற சேஷாத்திரி சுவாமிகள் இருவரும் தோற்றத்தில் ஒருவரே!

தன்னைச் சுற்றியுள்ளவர் களைக் கடிந்து, கேலி செய்து, விரட்டுவதில் சேஷாத்திரி சுவாமிகள் குறியாக இருப்பார். யாருக்கு உண்மையான தாக்கமும், வலியும் இருக் கிறதோ, யாருக்கு உண்மையான தாகம் இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே இந்தத் துரத்தலைத் தாண்டி, இந்த மிரட் டலைத் தாண்டி, அவர் அருகே போய் ஒட்டிக்கொள்வார்கள்.

பகவானும் அதே மாதிரி மௌனமாக இருந்து, மற்றவரைச் சோதனைக்கு உள்ளாக்குவார். அந்த மௌனத்தைப் புரிந்துகொண்டு, அந்த மௌனத்தின் மூலம் பகவானிடம் பேச முடிந்தவரே, அவருக்கு அருகில் இருக்க முடியும்.

ஸ்ரீரமண மகரிஷி

மற்றபடிக்கு இது வேண்டும், அது வேண்டும், இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று வேண்டுகோள்களோடு அங்கு போனால், அவர்கள் அதை விரும்பமாட்டார்கள். ஆனால், சாதாரண மக்களுக்குப் பொருள் தேவையாயிற்றே, என்ன செய்வது?

கடைக்குள் நுழைந்து கொத்துக் காசு எடுத்துத் தெருவில் வீசி எறிகிறபோது, கடைக்காரனின் விதி மாற்றப்பட்டு விடுகிறது. வீசியவரைத் தடுத்து, கோபம் கொண்டு அவரை விரட்ட முற்பட்டால், நஷ்டம் ஏற்படுகிறது. வீசியெறியப்பட்டது தனக்கு வேண்டாத வினைகள்தான் என்பதைப் புரிந்துகொண்டவர் ஜெயித்தார்; பைத்தியம் என்று விரட்டியவர் நஷ்டம் அடைந்தார்.

உச்சி வெயிலில், திருவண்ணாமலை வீதியில் சேஷாத்திரி சுவாமிகள் ஓர் எருமையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தன்னை மறந்து நிற்கிறார். 'என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்?’ என்று, வழியோடு போகும் அந்தணர் ஒருவர் அவரைப் பார்த்துக் கேட்கிறார்.

'அது என்ன?’ - சுவாமிகள் கேட்கிறார்.

'எருமை.’

'அது எருமையா? நீதான் எருமை. அது பரப் பிரம்மமடா, பரப்பிரம்மம்!’

எருமையின் அருகில் சென்று தடவி, தழுவிக் கொள்கிறார் சுவாமிகள். அந்தணர் வாயடைத்துப் போகிறார். சரியான பைத்தியம் என்று நினைத்துக் கொள்கிறார். ஆனால், அது சத்தியப் பிரகாசம். வெளியே பார்க்கத்தான் பைத்தியம்.

'சேஷாத்திரி, இங்கே வா!’

'என்னம்மா?’ - மரணப் படுக்கையில் உள்ள அம்மாவின் அருகே அந்த இளைஞர் உட்கார்ந்து, வாஞ்சையோடு கேட்கிறார்.

'திருவண்ணாமலை, திருவண்ணா மலை, திருவண்ணாமலை நினைக்க முக்தி!’ - அம்மா மெல்லிய குரலில் கண்களில் நீர் வழியப் பேசுகிறார். அது தான் அவளின் கடைசிப் பேச்சு! திருவண்ணாமலையை நினைத்து முக்தி அடைந்துவிட்டாள். பிள்ளைக்கும் உள்ளுக்குள்ளே கத்தி இறக்கிவிட்டாள்.

அந்த மகா வாக்கியம் அந்த இளைஞர் நெஞ்சில் தைத்துவிட்டது; தங்கிவிட்டது. கல்யாணம், குடும்பம் வேண்டாம் என்று இருந்தவர், ஊரும் வேண்டாம் என்று உதறி, திருவண்ணாமலைக்கு வந்துவிடுகிறார்.

காஞ்சிபுரத்தில் கற்ற பாலாதிரிபுரசுந்தரி மந்திரத்தை காமாட்சி அம்மனின் கோயிலில் சொல்லி... ஆற்றங்கரை, புல்வெளி, மயான பூமி எனப் பல இடங்களில் சொல்லிச் சொல்லி, உள்ளே ஓர் உன்மத்தம் ஏற்பட்டுவிட்டது.

'கல்யாணம் பண்ணி வை, சரியாயிடும்!’ - ஊர் அவர் குடும்பத்துக்கு உபதேசித்தது. 'வேணாம்!’ என அவர் தீர்மானமாக மறுத்தார்.

'மயானத்துக்குப் போயிட்டு, அப்படியே வீட்டுக்குள்ளே வரயே, அது தப்பில்லையா?’ - உறவுகள் கண்டித்தன.

'சரி, இனிமேல் வரலை!’ - அவர் வீடு உதறினார். எவராலும் தடுக்க இயலவில்லை. திருவண்ணா மலையில் முன்னும் பின்னும் அலைந்தார். பிச்சைக்காரன் மாதிரி காட்சியளித்தார்.

'பாதாள லிங்கேஸ்வரர் கருவறையில் ஒரு பிள்ளை நினைவில்லாமல் உட்கார்ந்திருக்கு. பொறுக்கிப் பசங்க அதும் மேல கல்லு எறியறாங்க!’ - யாரோ குரல் கொடுக்க, சீறி எழுந்தார்.

''டேய்..!'' | கோயில் அதிர்கிறது. பூப்பந்து போல பிள்ளையைத் தூக்கி வருகிறார். உடம்பெல்லாம் எறும்புகள், கரையான் அரிப்பு; ரத்தமும், சீழும் வழிகிறது. ஆனால், அந்தப் பிள்ளைக்கு எதுவும் தெரியவில்லை. உள்ளே வெகு ஆழத்தில் அமர்ந்து கிடக்கிறது.

சேஷாத்திரி சுவாமிகளுக்கு அது என்ன என்று புரிகிறது. எடுத்துச் சுத்தம் செய்து, வேறு இடம் மாற்றுகிறார். பிள்ளை தொடர்ந்து தவம் செய்கிறது. அந்தப் பிள்ளை பகவான் ஸ்ரீரமண மகரிஷி.

'அன்றைக்கு அப்படிக் காப்பாற்றி னேனே, இப்படி உதவி செய்தேனே’ என்று என்றைக்கும், எந்த இடத்திலும் சுவாமிகள் சொல்லிக் கொண்டது இல்லை.

''ஓய்! முதலியார் மலையில் இருப்ப வருக்குப் பத்தாயிரம் ரூபாய் சம்பளம். எனக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம். நீ நூறு ரூபாயாவது சம்பாதிக்க வேண்டாமா?'' - அதட்டுகிறார்.

இது ரூபாய் அல்ல; இது சம்பளம் அல்ல. மலையில் இருக்கின்ற பகவான் ஸ்ரீரமண மகரிஷியை எடைபோட்டு வைத்திருக்கின்ற கனிவு. தன்னைவிடப் பத்து மடங்கு அதிகம் என்கிற தெளிவு. 'நூறு ரூபாயாவது சம்பாதிக்க வேண்டாமா’ என்று, மகான்களைச் சுட்டிக்காட்டி, தன்னை அண்டியவரை வழிப்படுத்தும் அன்பு.

- தரிசிப்போம்...