தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!

கீழ்வானம் சிவக்கக் கிரணங்களை விரித்தான் ஆதவன். அருமையான அந்த வைகறைப் பொழுதில், பவநாசினி நதியின் ஈரப்பதத்தைச் சுமந்தபடி கருடாத்திரி, வேதாசல முகடுகளில் தவழ்ந்த வெண்மேகங்கள், பன்னீர் மழை சொரிந்து சென்றன. வானுயர்ந்து நிற்கும் விருட்சங்களின் இலைகளிலும் பூக்களிலும் அடைக்கலமான மழைத் துளிகள், காலைக் கதிரொளி பட்டுத் தகதகத்தன, ஸ்ரீராமனின் மணிக்கிரீட மாணிக்கங்களாய்!

##~##
மொத்தத்தில், தெய்வக்களை சூழ்ந்திருந்தது சிங்கவேள் குன்றத்தில். அதன் சிகரங்களெங்கும் 'ராம்... ராம்’ எனும் தாரக மந்திரம் எதிரொலிக்க, இயற்கை, அன்று நிகழப் போகும் இறையாடலுக்காகக் காத்திருந்தது.

ஆமாம், இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தில்... மிகச்சரியாக கருடாத்திரி மலையின் மேற்கில் அமைந்திருக்கும் பவித்திரமான திருவிடத்தில், ஒரு கருங்காலி மரத்தின் அடியில் தவத்தில் ஆழ்ந்திருந்தான் வாயுமைந்தன்.

தன் மனதில் கோயில்கொண்டிருக்கும் கோதண்டபாணியை, யுகம்யுகமாய்த் தனது நெஞ்சில் சுமக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை, மீண்டும் ஒருமுறை மண் மீது தரிசிக்கும் ஆசையில் ஆஞ்சநேயன் மேற்கொண்டிருந்த அருந்தவம் அது.

நீண்ட நெடுங்காலம் தொடர்ந்த அந்த தவத்தை அன்று நிறைவு செய்ய முடிவு செய்தது பரம்பொருள். அது மட்டுமா? தன் அன்புக்குரிய அடியவனாம் அனுமனுடன் கொஞ்சம் விளையாடிப் பார்க்கவும் சித்தம் கொண்டது. சூரியகோடிப் பிரகாசத்துடன் வாயுமைந்தனின் முன் திருக்காட்சி தந்தது.

ஆவலுடன் கண்விழித்தார் ஆஞ்சநேயர். மறுகணம் அவர் புருவங்கள் உயர்ந்தன. தேவர்களும் ரிஷிகளும் தவமாய் தவம் கிடந்தும் கிடைக்காத பகவானின் தரிசனத்தால் மகிழ்வதற்குப் பதிலாகக் குழப்பத்தில் ஆழ்ந்தார் வாயுவின் மகன்.

இருக்காதா பின்னே! ஸ்ரீராமனைத் தரிசிக்கும் ஆவலுடன் கண் திறந்தால்... மிரட்டும் விழிகளும் கோரைப் பற்களும் சிங்கமுகமுமாக ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அல்லவா காட்சி தருகிறார்?! ஸ்ரீராமனைக் காணாத ஏமாற்றத்தால் அனுமனின் முகம் வாடிப்போனது.

'என் ராமன் எங்கே?’ என்பதுபோல் ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியின் திருமுகத்தை நோக்கினார் ஆஞ்சநேயர்.

இறை மலர்ந்தது; 'நானும் ராமனும் ஒருவர்தான்’ என்று அனுமனிடம் சொல்வதுபோல் தலையசைத்துப் புன்னகைத்தது. அந்த இறைமொழி புரிந்தது என்றாலும், அஞ்சனை மைந்தனுக்கு மனம் ஒப்பவில்லை.

'அழகின் உறைவிடமான என் ராமன் எங்கே... கோரைப் பற்களும் கோர முகமும் கொண்ட இவர் எங்கே! கருணை பொழியும் ஸ்ரீராமனின் திருமுகம் பகைவரையும் ஈர்க்குமே! அவரும் இவரும் ஒருவரே என்பதை எப்படி ஏற்க முடியும்?’ _ அனுமனின் குழப்பம் தீரவில்லை.

அசுரர்களையே குலைநடுங்கச் செய்த தலம் இது. அரக்கர் தலைவன் ஹிரண்யகசிபுவின் கதை முடித்த தலம். இங்கு, உக்கிரமான இந்தக் கோலத்தில் அருள்வதே சிறப்பு என்ற பரம்பொருளின் எண்ணம், அனுமனுக்குப் புரியவில்லையோ! ஸ்ரீராமன் எனும் வடிவில் பரம்பொருளை ஆராதித்துப் பழக்கப்பட்ட அவர் மனம், இவரும் அவரும் ஒன்றே என்று ஏற்க மறுத்தது!

'விண்ணும், மண்ணும், இந்தப் பால் வெளியும், பஞ்ச பூதங்களும், சர்வ மார்க்கங் களும், சகல தேவர்களும் எனது அம்சமே! அணு முதல் அண்டபகிரண்டம் அனைத்தும் எனது சாந்நித்தியமே! இது வேறு, அது வேறு என்ற பாகுபாடு இங்கில்லை’ என்பதை அனுமனுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் உணர்த்த எண்ணிய இறை, ஒரு காரியம் செய்தது.

திருக்கரத்தில் வில்லேந்தி காட்சி தந்தது. 'நன்றாக என்னை உற்றுப் பார்’ என்று ஆணையிட்டது.

அனுமனும் உற்றுநோக்கினார்!

ஸ்ரீநரசிம்மரும், ஸ்ரீராமனும் நாராயணரின் அவதாரம்தான் என்பதை ஸ்ரீஆஞ்சநேயருக்கு விளக்கும் விதமாக, சிரத்துக்கு மேல் ஆதிசேஷன் படம் விரித்துக் குடைபிடிக்க... வலக் கரத்தில் சக்கரமும், இடக் கரத்தில் கோதண்டமும் திகழ அற்புதமாய் அருட்காட்சி தந்தார் ஸ்ரீநரசிம்மர்.

அனுமனுக்கு உண்மை புரிந்தது. தான் போற்றும் பரம்பொருளே இவர் என்று உணர்ந்தார். கண்ணீர் மல்க நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தார்.

அனுமனுக்கு அன்று காட்சி கொடுத்த ஸ்ரீநரசிம்மரை  வில்லேந்திய அதே திருக்கோலத்தில், இன்றைக்கும் நாம் அகோபிலத்தில் தரிசிக்கலாம்.

கருங்காலி மரத்தடியில் அனுமனுக்குக் காட்சி தந்ததால், இந்த நரசிம்மருக்கு ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் என்றே திருநாமம். கரஞ்சை என்றால் கருங்காலி என்று பொருளாம்.

அப்பப்பா... அகோபிலம் எனும் இந்த திவ்விய க்ஷேத்திரத்தில்தான் எவ்வளவு அற்புதங்கள்?!

பெரிய திருவடிக்கும் சிறிய திருவடிக்கும் திருவருள் புரிந்த நரசிம்மப் பரம்பொருள், நமக்காகவும்

திருவருள் புரிய நவநரசிம்மர்களாக, ஸ்ரீபிரகலாத வரதனாக காத்திருக்கும் மிக உன்னதமான திருத்தலம் ஆயிற்றே இது!

ஆமாம்... ஸ்ரீஜ்வாலா நரசிம்மர், ஸ்ரீஅஹோபில நரசிம்மர், ஸ்ரீமாலோல நரசிம்மர், ஸ்ரீக்ரோடகார நரசிம்மர், ஸ்ரீகரஞ்ச நரசிம்மர், ஸ்ரீபார்கவ நரசிம்மர், ஸ்ரீயோகானந்த நரசிம்மர், ஸ்ரீசத்ரவட நரசிம்மர், ஸ்ரீபவன நரசிம்மர் என இங்கே ஒன்பது நரசிம்ம மூர்த்திகளைத் தரிசித்து அருள் பெறலாம். இந்த மூர்த்திகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு!

இயற்கை வளம் மிகுந்த கிழக்குத்தொடர்ச்சி மலைகளில், நல்லமலைப் பகுதியில் அமைந்திருக்கிறது அஹோபிலம்.  கீழ் அஹோபிலத்தில் ஸ்ரீபிரகலாத வரதரின் ஆலயம். மேல் அஹோபிலத்தில் மலைச் சாரல்களில், நவநரசிம்மர்கள் அருள்கிறார்கள்.

பேருந்துகளோ, தனியார் வாகனங்களோ மேல் அஹோபிலத்தின் குறிப்பிட்ட பகுதி வரை மட்டுமே நம்மைக் கொண்டுசேர்க்கும். அதன் பிறகு நடைப் பயணம்தான்!

ஆந்திரா, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங் களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள். ஒரு காலத்தில் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததாம். இப்போது நிறைய வசதிகள் செய்து தந்திருக்கிறார்கள். ஆகவே, பக்தர் களும் அதிகம் வருகிறார்கள்.

ஒரே நாளில் ஒன்பது நரசிம்மர்களையும் தரிசிப்பது என்பது இயலாத காரியம். அஹோபிலம் செல்ல முடிவெடுத்துவிட்டால், இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து தரிசித்து வரவேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நரசிம்மரையும் உரிய புராணக் கதைகளுடன், அவர்களுக் கான மகிமைகளையும் அறிந்து, வழிபட்டு வரலாம் (பக்தர்கள் தங்கி வழிபடுவதற்கு வசதியாக, அகோபில மடம் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தைச் சார்ந்த தங்கும் விடுதிகள் இருக்கின்றன).

கீழ் அகோபிலத்தில் லட்சுமிநரசிம்மராக அருள்கிறார் ஸ்ரீபிரகலாதவரதர். ஆதி சேஷன் குடைபிடிக்க, சங்கு- சக்ரதாரியாய், தேவியை இடக்கரத்தால் அணைத்தபடி காட்சி தருகிறார் இவர். திருப்பதி ஸ்ரீவேங்கடேச பெருமாள் திருமணத்துக்கு முன் இங்கு வந்து வழிபட்டு, ஆசி பெற்றுச் சென்றதாக ஐதீகம். ஆகவே, அவருக்கும் இங்கு தனிச் சந்நிதி உண்டு.

அஹோபிலம் வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் கீழ் அஹோபிலத்தைத் தரிசித்துவிட்டு மேல் அஹோபிலத்  துக்குப் பயணிக்கிறார்கள்.

நாம், மேல் அஹோபிலத்தில் அருளும் நவநரசிம்மர்களின் மகாத்மியங்களை அறிந்துவிட்டு, பிரகலாதவரதரைத் தரிசிக்க வருவோம்.நவநரசிம்மர்களில் முதலில் ஸ்ரீஜ்வாலா நரசிம்மரின் திவ்விய தரிசனம்.

கருடாசலம், வேதாசலம் ஆகிய மலைகளுக்கு நடுவே, 'அச்சலச்சாயா மேரு’ எனும் மலைப் பகுதியில்... அதர்மத்தின் உறைவிடமான இரண்யகசிபுவை எந்த இடத்தில் பகவான் வதம் செய்தாரோ, அந்த இடத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீஜ்வாலா நரசிம்மர் சந்நிதி.

ஒரு காலத்தில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தின் வெம்மை யால் தகித்ததாம் இந்தக் குகை. எனவே, இங்கிருக்கும் நரசிம்மருக்கு ஜ்வாலா நரசிம்மர் என்று திருநாமம்.

நம் உள்ளிருக்கும் காம- குரோத- மத- மாச்சரியங்களையும் பகவானின் கோபக்கனல் பொசுக்கட்டும். தீயவை அழிந்து, நல்லவை மேலோங்க அந்த ஸ்வாமி திருவருள் புரியட்டும் எனும் பிரார்த்தனையோடு குகைக்குள் இருக்கும் பகவானைச் சேவிக்கச் செல்கிறோம்.

குகையின் உள்ளே மூன்று மூர்த்தங்கள். மூவரது தரிசனமும் நம் உடம்பையும் உள்ளத்தையும் ஒருசேர உலுக்குகின்றன. சிரம் தாழ்த்தி, கரம் உயர்த்தி, கண்களில் நீர் கசிய, பேச்சற்று நின்றிருந்தோம் அந்தத் திவ்விய தரிசனம் கண்டு!

- அவதாரம் தொடரும்...