Published:Updated:

உடையவரை பணிவோம்!

ஸ்ரீராமானுஜ தரிசனம்!

உடையவரை பணிவோம்!

ஸ்ரீராமானுஜ தரிசனம்!

Published:Updated:
உடையவரை பணிவோம்!
உடையவரை பணிவோம்!

பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீமந் நாராயணனின் குடையாகவும், ஆசனமாகவும், படுக்கையாகவும் உள்ள ஆதிசேஷன், ஸ்ரீராமாவதாரத்தில் ஸ்ரீலட்சுமணனாக அவதரித்தார்; ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீபலராமனாகத் தோன்றினார். கலியுகத்தில், சுமார் 980 வருடங்களுக்கு முன்பு பிங்கள வருடம், சித்திரை மாதம், திருவாதிரை நன்னாளில் அளப்பரிய மகானாக அவதரித்தார். அவரின் திருநாமம்- ஸ்ரீராமானுஜர். அவர் அவதரித்த ஸ்தலம் ஸ்ரீபெரும்புதூர். சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீபெரும்புதூர் திருத்தலம்.

அடேங்கப்பா... டெல்லி பாதுஷாவின் மகளிடம் இருந்த திருமாலின் திருவிக்கிரகத்தைக் கொண்டு வந்து, திரு நாராயணபுரத்தில் பிரதிஷ்டை செய்தவர்; தனக்கு விஷம் வைத்துக் கொல்ல முயன்றவர்களைக்கூட மன்னித்து ஏற்ற அற்புதமான மகான்; வெறுத்து ஒதுங்கியவர்கள்கூட ஒரு கட்டத்தில் அறிந்து உணர்ந்து, 'உடையவர்’ என்று உள்ளம் பூரித்துக் கொண்டாடிய உத்தமர்; திருக்கோட்டியூர் நம்பி யிடம் செய்த சத்தியத்தையும் மீறி, அவரிடம் இருந்து கற்றறிந்த எட்டெழுத்து மந்திரத்தை உலகுக்குச் சொல்லி, அனைவரும் வைகுந்தத்தை அடைய வழிவகுத்துக் கொடுத்த வள்ளல் அவதரித்த தலத்துக்குள் நுழையும்போதே பூரிக்கிறது மனம்!

##~##
ஸ்ரீபெரும்புதூர் யதிராஜ மடத்தின் கோவிந்த யதிராஜ ஜீயரிடம் பேசினோம். உடையவரைப் பற்றி மெய்சிலிர்த்த படியே பேசினார் அவர்... ''ஆசூரிகேசவ சோமயாஜுலு- காந்திமதி அம்மாள் தம்பதிக்கு மகனாக அவதரித்தார் ஸ்ரீராமானுஜர். அவரின் குரு யாதவப் பிரகாசரிடம், கல்வி பயின்றார் ராமானுஜர். ராஜபல்லவராயரின் மகளுக்கு ஒருமுறை பேய் பிடித்து, இம்சித்தது. அப்போது, குருவாலும் முடியாத காரியத்தைச் செவ்வனே செய்து முடித்தார் ஸ்ரீராமானுஜர். ஆம்... அந்தப் பெண்ணைக் குணப்படுத்தினார். இதில் கோபமுற்ற யாதவப் பிரகாசர், உடையவரை காசிக்கு அழைத்துச் சென்று, கங்கையில் மூழ்கடித்துவிடத் திட்ட மிட்டார். இது ஸ்ரீராமானுஜரின் சீடர் கோவிந்தருக்குத் தெரியவந்தது. அதில் இருந்து தப்பிக்கக் காட்டுக்குள் நுழைந்து, திசை தெரியாது மருகிய வேளையில், அந்தக் காஞ்சி வரதராஜரே வேடுவனாக வந்து, காஞ்சிக்கு அழைத்துச் சென்றார் என்றால், உடையவரின் பெருமையைச் சொல்ல வார்த்தைகளும் உண்டோ?!'' எனச் சொல்லிச் சிலிர்க்கிறார் யதிராஜ மடத்தின் ஜீயர் சுவாமிகள்.

''காஞ்சி ஸ்ரீவரதராஜர், ஸ்ரீரங்கம் அரங்கன், திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதி என, ராமானுஜரின் திருவடி படாத ஆலயங்களே இல்லை அதுமட்டுமா? கோயில்களின் வழிபாட்டு முறைகளை வரையறுத்துக் கொடுத்தவரும் இவரே! திருப்பாவை, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போன்ற தேமதுரத் தமிழ்ப் பாடல்களை, ஆலயங்களில் முழங்கச் செய்தவரும் இவர்தான். பிரம்மோத்ஸவத்தைக் கொண்டாடி, குருவையே சிஷ்யனாக மாற்றிய ஸ்ரீராமானுஜரின் திருச்சந்நிதி, ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யக்கார ஸ்வாமி தேவஸ்தானத்தில் அமைந்துள்ளது'' எனப் போற்றுகிறார் அப்பன் பரகால எம்பார் மடத்தின் ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள்.

உடையவரை பணிவோம்!

''திருக்கயிலாயத்தில் சிவனார் மெய்ம்மறந்து நடனமாடும்போது, அங்கிருந்த பூதகணங்கள் சற்றே ஏளனமாகச் சிரித்தனவாம்! இதில் கோபமுற்ற சிவனார்,  பூலோகத்தில் இருக்கும்படி பூதகணங்களைச் சாபமிட்டார். வேதனையுடன் ஸ்ரீபிரம்மாவைச் சந்தித் தன பூதகணங்கள். 'ஸ்ரீமந் நாராயணரைக் கடும் தவம் இருந்து பிரார்த்தியுங்கள்; சாப விமோசனம் கிடைக்கும்’ என அருளினார் பிரம்மா. அதன்படி, திருமாலை நோக்கி பூதகணங்கள் தவம் இருக்க... ஸ்ரீஆதிகேசவ பெருமாளாகத் காட்சி தந்து அருள்பாலித்தார் திருமால். அதுவும் எப்படி? அனந்தனை, அதாவது பாம்பைக் கொண்டு, அங்கே திருக்குளம் ஒன்றை உருவாக்கினார். அதில் பூதகணங்கள் நீராடியதும் சாப விமோசனம் பெற்றன. பூதகணங்கள் தவமிருந்ததால் அது பூதபுரி எனப்பட்டு, தற்போது ஸ்ரீபெரும்புதூர் எனப்படுவதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்'' என்கிறார் எம்பார் ஜீயர் அவர்கள்.

வேதாந்தத்தை விளக்கி, சீர்திருத்தப் பணிகள் புரிந்த பாஷ்யக்காரராக 12,000 சீடர்கள், 700 துறவிகள், 74 சிம்மாசன அதிபதிகள் ஆகியோர் பின்பற்றும் யதிராஜராக 120 வருடங்கள்வரை   பூவுலகில் வாழ்ந்து, உலகுக்கு வழிகாட்டியவர் ஸ்ரீராமானுஜர்.

சீடர்களின் விருப்பப்படி இவரது திருவுருவத் திரு மேனியை விக்கிரகமாக வடித்து, முதலியாண் டான் மைந்தன் கந்தாடை ஆண்டான், ஸ்ரீராமானுஜ ரிடம் சமர்ப்பிக்க, அந்த விக்கிரகத்தை அப்படியே ஆரத்தழுவி, தனது ஒட்டு மொத்த சக்தியையும் விக்கிரகத் திருமேனிக்குள் இறக்கி அருள்புரிந் தார் உடையவர். இதனால், 'தான் உகந்த திருமேனி’ என அழைக்கப்படலாயிற்று, இந்தத் திருவிக் கிரகம். பிறகு, உலக மக்கள் அனைவரும் தரிசித்துப் பேரருள் பெறும் வகையில், இங்கே ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட... இன்றைக்கும் பக்தர்கள் ஸ்ரீபெரும்புதூர் தலத்துக்கு வந்து வணங்கி, அருள் பெற்றுச் செல்கின்றனர். பின்னே படமெடுத்த நிலை யில் உள்ள பாம்புடன் காட்சி தருகிற ஸ்ரீராமானு ஜரை வணங்கினால், சகல பாவங்களும் நீங்கும்; சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்!  

உடையவரை பணிவோம்!

அழகிய, கிழக்குப் பார்த்த ஐந்து நிலை கோபுரத்துடன் திகழ்கிறது திருக்கோயில். உள்ளே நுழைந்ததும், தங்க மண்டபம், பூத மண்டபம். இங்கே, ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட தூண்கள் பிரமிப்பூட்டுகின்றன. தூண் வரிசைகளுக்கு நடுவே, உற்ஸவர் ஸ்ரீராமானுஜரின் சந்நிதி.  

அருகில், ஸ்ரீஆண்டாளின் சந்நிதி. இந்த இரண்டு சந்நிதிகளுக்கும் நடுவே அடுப்பு வைத்துள்ளனர். மார்கழி மற்றும் தை மாதங்களில், இங்கே விறகுக் கட்டைகளை அடுக்கி, தீ மூட்டி, வெந்நீர் வைத்து, அபிஷேகிக்கின்றனர். வெயில் காலங்களில் சந்தனத்தால் அபிஷேகித்து, உடையவரின் திருமேனியைக் குளிரச் செய்கின்றனர். அதேபோல்,  குளிர் காலத்தில் உடையவருக்குத் தொப்பியும் சால்வையும் அணிவித்து, அழகு பார்க்கின்றனர் பக்தர்கள்.

மற்ற மாதங்களில், அனந்த சரஸ் தீர்த்தக் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, திருமஞ்சனம் செய்கின்றனர்.

உடையவரை பணிவோம்!

''ஸ்ரீராமானுஜர் அவதரித்த சித்திரை- திருவாதிரை நன்னாளை, பத்து நாள் விழாவாகக் கொண்டாடுவது இங்கே வழக்கம். படிக்கட்டில் கற்பூரம் ஏற்றி, ஊஞ்சலில் சுவாமியை ஆட்டுகிற ஏகாந்த சேவை, திருவீதியுலா என  சிறப்புற நடைபெறும். இந்த நாளில், 108 திவ்விய தேசங்களில் இருந்தும், உடையவருக்கு மாலை- மரியாதைகள் என வந்து அமர்க்களப்படும்.

''ஸ்ரீராமானுஜரை வணங்கி, ஒரு விளக்கு ஏற்றினால் மன அமைதி கிட்டும்; மூன்று தீபங்கள் ஏற்றினால், கல்வியிலும் ஞானத்திலும் சிறக்கலாம்; ஒன்பது தீபங்கள் ஏற்றி வழிபட்டால், நவக்கிரக தோஷங்கள் நீங்கும்; 12 தீபங்கள் ஏற்றினால் ஜென்ம தோஷம் நிவர்த்தியாகும்; 27 தீபங்கள் ஏற்றி வணங்கினால், நட்சத்திர தோஷம் யாவும் நீங்கும்; 508 தீபங்களேற்றி மனதாரப் பிரார்த்தித்தால், திருமணத் தடை நீங்கும்; 1008 தீபங்களேற்றி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கைகூடும், வியாபாரம் செழிக்கும் என்பது நம்பிக்கை!'' என்கிறார் எம்பார் மடத்தின் ஜீயர்.

இங்கே, ஸ்ரீஆதிகேசவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார். அருகில் ஸ்ரீராமர், ஸ்ரீவேணுகோபாலன், ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீஆள வந்தார், ஸ்ரீதிருக்கச்சி நம்பி ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. தாயாரின் திருநாமம் - ஸ்ரீயதிராஜநாதவல்லித் தாயார். கருணை பொங்கக் கனிவுடன் காட்சி தரும் தாயாரைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்.

கோயிலுக்கு எதிரில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில், ஸ்ரீராமானுஜர் உற்ஸவத்தின் போது, பால் அமுது படைத்து பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

உடையவரின் திருநட்சத்திர நன்னாளில், ஸ்ரீபெரும்புதூர் தலத்துக்கு வந்து, அவரை வணங்குங்கள்; வளம் பெறுங்கள்!

உடையவரை பணிவோம்!

- க.நாகப்பன்
படங்கள்: பு.நவீன்குமார்