Published:Updated:

தேவாரத் திருவுலா!

டாக்டர் சுதா சேஷய்யன்

தேவாரத் திருவுலா!

டாக்டர் சுதா சேஷய்யன்

Published:Updated:
தேவாரத் திருவுலா!
தேவாரத் திருவுலா!

ருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருச்சந்நிதி. படிகளில் ஏறித்தான் செல்லவேண்டும். மூலவர் சந்நிதிக்கு அருகில் (தெற்குப் புறமாக) தியாகராஜர் சந்நிதியும் உண்டு. சப்தவிடங்கத் தலங்களில் நாகையும் ஒன்று. இங்கு எழுந்தருளியுள்ள தியாகேசர், அருள்மிகு சுந்தரவிடங்கர். இவரின் நடனம் பாராவாரதரங்க நடனம்; அலை போன்ற ஆட்டம்!

படிகளில், சற்றே வலப்புறமாகச் சென்று, மீண்டும் உள்நோக்கித் திரும்பினால், சுவாமி கருவறை. மகாமண்டபத்தில் வலப் பக்கத்தில் நடராஜர் காட்சி கொடுக்கிறார். அர்த்தமண்டபம் தாண்டி உள்நுழைய... அருள்மிகு காயாரோகணேஸ்வரர். பெரிய பாணம்!

ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள்நல்கிச்
சேணின்றவர்க்கு இன்னஞ் சிந்தை செய வல்லான்
பேணி வழிபாடு பிரியா தெழுந் தொண்டர்
காணுங்கடல் நாகைக் காரோணத்தானே...

##~##
- என ஞானசம்பந்தர் போற்றும் பெருமான் இவர். பக்தர்கள் வணங்கித் தொழுதால், எதையும் தரக்கூடியவர். என்ன ஆதாரம் என்கிறீர்களா? தேவார மூவருள் ஒருவரான சுந்தரரைக் கேட்டால், அத்தாட்சியும் ஆதாரமும் தருகிறார். வாருங்கள், அவரையே கேட்போம்!

திருவொற்றியூரில் பொய் சத்தியம் செய்து சங்கிலிநாச்சியாரை மணந்த சுந்தரர், சத்தியத்தை மீறி ஒற்றியூர் விட்டுப் புறப்பட்டார். கண் பார்வை போயிற்று. இறைவன் அருளால் கோல் பெற்றுத் தட்டுத் தடுமாறி காஞ்சியை அடைந்தார். ஒரு கண்ணில் பார்வை பெற்றார்.

பின்னர், திருவாரூர் அடைந்தார். அங்கு ஆரூர் தியாகேசன் அருளால் முழுமையாகக் கண்பார்வை பெற்றார். அங்கிருந்து புறப்பட்டு, நாகைக்காரோணம் சென்றார். இறைவனாரைக் கண்ணாரக் கண்டார். பாடினார்.

பத்தூர் புக்கு இரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறி பேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார் எம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கொரு நாள் இரங்கீர்
முத்தாரம் இலங்கி மிளிர் மணிவயிரக் கோவை
அவைபூணத் தந்தருளி மெய்க்கினதா நாறும்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருளவேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந்தீரே

- என்று தொடங்கிக் கொல்லிக் கௌவாணப் பண்ணில் பதிகம் பாடினார். இதனைப் பாடிப் பொன்னும், நவமணியும், ஆபரணங்களும், பட்டும், உடைவாளும் குதிரையும் பெற்றார். எனவே, செல்வம் வேண்டுபவர்கள், இந்தத் திருத்தலத்தில், இந்தப் பதிகத்தைப் பாடிக் காயாரோகணேஸ்வரரை வணங்கினால், கட்டாயம் பயன் கிட்டும். இந்தப் பதிகத்தின் இறுதிப் பாடல்:

பண்மயத்த மொழிபரவை சங்கிலிக்கும் எனக்கும்
பற்றாய் பெருமானே மற்றாரை உடையேன்
உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்
ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும்
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டும்
கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீர் என்று
அன்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன
அருந்தமிழ்கள் இயல்வல்லார் அமர் உலகாள்பவரே

- தம்மைக் குறிப்பிட்டு, தம்முடைய நாச்சிமாரையும் குறிப்பிட்டு, மூவருக்கும் பற்றானவர் இறைவனாரே என்று கூறிவிட்டு, முதற்பாடலில் கேட்டவற்றையே மீண்டும் கேட்கிறார். எனவே, இதனை வெள்ளிப்பாடல் என்கிறார்கள். அதாவது, பாடலானது தங்கமாக இல்லாமல், கூறியதையே மீண்டும் கூறுவதால், வெள்ளியானதாம்!

தேவாரத் திருவுலா!

அதுமட்டுமில்லை... வெள்ளிப்பாடல், வேறு யாராலோ பாடப்பட்டு, சுந்தரர் பெயரில் சேர்க்கப் பட்டுவிட்டது என்றும் சிலர் கருதுகின்றனர். இருக்கட்டுமே, பலன் பெற்றவர் யாரோ தன்னு டைய பங்காகச் சேர்த்துவிட்டார் போலும்! 'சுந்தரரைப் போன்று நன்மைகளைச் செய்ய நல்ல செல்வம் தாரும் ஐயனே’ என்று நாமும் வேண்டிக் கொள்ளலாம்.

தேவாரத் திருவுலா!

ஸ்ரீகாயாரோகணேஸ்வரரை வழிபடுகிறோம். ஸ்வாமி சந்நிதியின் பின் மாடத்தில், சிவலிங்கத் திருமேனிக்குப் பின்னால், பார்வதி- பரமேஸ்வரர் திருக்கோலம், சிலா ரூபமாக, புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.

தென்திசை நோக்கிச் சென்ற அகத்தியருக்கு, இறைவனார் திருமணக்கோலம் காட்டிய திருத் தலங்களுள் இதுவும் ஒன்று. மெள்ள அருகில் உள்ள தியாகேசர் சந்நிதியை அடைகிறோம்.

தேவலோகத்திலிருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தி பெற்றுவந்த ஏழு தியாகேசர்களில் இவரும் ஒருவர். பூலோகத்து உளிகளால் செதுக்கப் படாததாலேயே, இந்த எழுவரும் எழுந்தருளிய தலங்கள் சப்தவிடங்கத் தலங்கள் (டங்கம்- உளி; விடங்கம்- உளிக்கு அப்பாற்பட்டு) ஆகின்றன. தியாகேசர் என்றாலே அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதா. அதுவும், இவர் சுந்தர விடங்கர். கனகம்பீரமாக இருக்கிறார். தியாகராஜரின் ஆட்சிபீடம் என்பதாலேயே, இத்தலம் சிவராஜதானி ஆகிறது. தியாகராஜர் சந்நிதி இருக்கும் மண்டபத்தையும் ராஜதானி மண்டபம் என்று அழைப்பார்கள்.

தியாகராஜரை வழிபட்டுவிட்டு, மீண்டும் சுவாமி சந்நிதியை வலம் வருகிறோம். கோஷ்ட மாடங்களில் வழக்கமான இடங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்கை ஆகியோரின் திருமேனிகள். கூடுதலாக, துர்க்கையின் ஒருபுறத்தில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்; இன்னொரு புறம்- ஸ்ரீபிட்சாடனர்.

ஆதிபுரம், ஆதீநகரம், பார்ப்பதீச்வரம், அகத்தீச்வரம், அரவநகரம் என்கிற பெயர்களையும் கொண்ட நாகையின் கல்விச் சிறப்பு, மிகவும் பிரபலமானது.

தேவாரத் திருவுலா!

ஒருமுறை, காளமேகப் புலவர் இவ்வூருக்கு வந்தார். நல்ல பசி. அந்தக் காலத்திலும் சோற்றுக்கடைகள் உண்டு. புதிய ஊரில் அப்படிப்பட்ட கடை எங்கே என்று தெரியாத புலவர், வழியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைக் கண்டார்.

அந்தச் சிறுவர்களிடம் வழி கேட்கும் முயற்சியில், 'சோறு எங்கே விக்கும்?’ என்றார். அந்தச் சிறுவர்களோ, குறும்பின் மறு உருவங்கள்.  'தொண்டையில் விக்கும்’ என்று பரிகாசமாக விடை பகர்ந்தனர். புலவருக்கு ஒருபக்கம் வியப்பு; இன்னொரு பக்கம், கேலியால் வந்த ஆதங்கம்!

பெரியவரைக் கேலி செய்யும் சிறுவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் எண்ணத்துடன், அருகில் இருந்த சுவரில், பாடலொன்றை எழுதத் தீர்மானித்தார். முதல் வரியை எழுதினார். 'பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு...’ அதற்குள் பசியின் தீவிரம் அதிகமாகிவிட, எங்கேனும் போய்ப் பசியாறிவிட்டுப் பின்னர் வந்து அடுத்த வரி எழுதலாம் என்று அவர் எண்ணிச் செல்ல...

அவர் வருவதற்குள் அந்தச் சிறுவர்களே பாடலை நிறைவு செய்திருந்தனர்:

'நாக்குத் தமிழுரைக்கும் நன் நாகை’

இதைக் கண்டு மதிமயங்கி நின்றாராம் கவி காளமேகம். நாகைக் காத்தான் சத்திரம் பற்றியும் அவர் பாடுகிறார்.

பண்டைக்காலம் தொட்டே கல்வித் திருநகரமாக நாகை விளங்குவதற்குக் காரணம், அம்பிகை நீலாயதாக்ஷி.

இது அம்பாளின் சக்தி பீடங்களில் ஒன்று. அம்பிகை யின் தமிழ்த் திருநாமம் அருள்மிகு கருந்தடங்கண்ணி. நின்ற திருக்கோலம்; அபய வரம் காட்டும் திருக்கரங்கள் இரண்டு; மீதமுள்ள இரு கரங்களில் பாசம்- அங்குசம் தாங்கியிருக்கிறாள். அம்பாளின் புன்னகை அன்பைப் பொழிகிறது.

தேவாரத் திருவுலா!

அம்பாள் சந்நிதியை வலம் வரும்போது, சற்றே முகப்பு நோக்கியதாக, அழுகணிச் சித்தர் சந்நிதி அமைந்துள்ளது. அம்மன் கருவறையைச் சுற்றிய இடங்களில் கோயில் வாகனங்கள். இந்த ஆலயத்தின் தீர்த்தங்களான புண்டரீக தீர்த்தமும், தேவ தீர்த்தமும் கோயிலின் தெற்கிலும் மேற்கிலும் உள்ளன.

அதிபத்த நாயனார் விழா ஆவணி மாதம் நடைபெறும். அவர் வாழ்ந்த பகுதி நம்பியாங்குப்பம் என்று வழங்கப்படுகிறது. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இந்தத் தலத்துக்கு இயற்றிய தல புராணத்தில்,

தடிகடல் புகுதல் போலச் சைவமாம் கடலில் புக்கு
முடிவலை வீசல் போல முதிர் பக்தி வலையை வீசி
நெடிய மீன் கவர்தல் போல நிராமய உமையோர் பாகத்து
அடிகளாம் மீன் கவர்ந்த அதிபத்தர்க்கு அன்புசெய்வாம்

- என்று அதிபத்த நாயனாரைப் போற்றுகிறார். அடியாரை வணங்கினால் ஆண்டவனுக்கு மகிழ்ச்சியாம். அடியார் அருளும், ஆண்டவன் அருளும் கிடைக்கும் வகைக்குப் பிரார்த்தித்தவாறே வெளியே வருகிறோம்.

(இன்னும் வரும்) 
படங்கள்: ந.வசந்தகுமார்