Published:Updated:

மாங்கனி நகரில் மகத்தான ஆலயங்கள்!

அருள் தரும் ஆலயங்கள் - 8

மாங்கனி நகரில் மகத்தான ஆலயங்கள்!

அருள் தரும் ஆலயங்கள் - 8

Published:Updated:
மாங்கனி நகரில் மகத்தான ஆலயங்கள்!

மாங்கனி நகரமாம் சேலத்தில், அருள் பொழியும் ஆலயங்களுக்குப் பஞ்சமில்லை. இதோ... எட்டுத்திக்கும் அருள் பரப்புகிற எட்டு ஆலயங்களைப் பார்ப்போமா?

நோய் தீர்ப்பாள் பெரிய மாரியம்மன்

##~##
சே
லம் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது கோட்டை பெரியமாரியம்மன் கோயில். சேலம் நகரின் ஈசான்ய மூலையில் கோயில்கொண்டு, ஊரையே செழிக்கச் செய்கிறாள், மாரியம்மன். சேர தேசத்துச் சிற்றரசர்கள் பலரும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் பல செய்துள்ளனர்.

கோட்டை மாரியம்மன், அம்மாபேட்டை மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், சின்னக்கடை வீதி சின்ன மாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாபேட்டை மாரியம்மன் ஆகிய எட்டு அம்மன்களுக்கும் இவள்தான் மூத்தவள்; சக்தி வாய்ந்தவள் எனப் போற்றுகின்றனர் மக்கள். பூச்சாட்டுதல் நிகழ்ச்சியின் போது, கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் இருந்து தான், அனைத்துக் கோயில்களுக்கும் பூக்களை எடுத்துச் செல்வது வழக்கமாம்! இதயம், கண்கள் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைத் தீர்த்து வைப்பாள், கோட்டை பெரியமாரி என்கிறார்கள் பக்தர்கள்.  

சுகப்பிரம்மருக்கு அருளிய ஸ்ரீசுகவனேஸ்வரர்

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீசுகவனேஸ்வரர் கோயில். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீஸ்வர்ணாம்பிகை.

சுந்தரபாண்டிய மன்னன் கட்டிய கோயில்; சேர, சோழ, பாண்டியர்களால் திருப்பணிகள் நடந்தேறிய ஆலயம்; சுமார் ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த பெருமையும் கோயிலுக்கு உண்டு. ஒளவையார், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்ட திருத்தலம்; சுகப்பிரம்மருக்கு சிவனார் அருளிய அற்புதத் தலம் எனப் பெருமைகள் பல உண்டு. இந்தக் கோயிலில் காட்சி தரும் இரட்டைப் பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் ஒளவைப் பிராட்டி திருக்கயிலாயம் சென்றதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!    

இங்கு வழிபட்டால், நவக்கிரக தோஷங்கள் விலகும்; நல்ல உத்தியோகம் கிடைக்கப்பெறலாம்; திருமண யோகம் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள்.

மாங்கனி நகரில் மகத்தான ஆலயங்கள்!


தொழில் சிறக்கச் செய்யும் ஸ்ரீலட்சுமி நாராயணர்

சேலம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், இரண்டாவது அக்ரஹாரத் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயில். மூவேந்தர்களும் வழிபட்டு, திருப்பணிகள் செய்துள்ளனர் என்கின்றன கோயிலில் உள்ள கல்வெட்டுகள்.

பெரியபிராட்டியாம் ஸ்ரீமகாலட்சுமியை மடியில் அமர்த்தியபடி காட்சி தரும் ஸ்ரீலட்சுமி நாராயணரை, நித்திய கல்யாணத் திவ்யத் தம்பதியைக் கண்குளிரத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்.

ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீவிஷ்வக்சேனர், ஸ்ரீநாகராஜ கணபதி, ஸ்ரீராமானுஜர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர், ஸ்ரீவிஷ்ணுதுர்கை, ஸ்ரீஅனுமன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.  

வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீலட்சுமி நாராயணருக்கு நெய்த் தீபமேற்றி, தொடர்ந்து 21 வெள்ளிக்கிழமைகள் வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கும்; பதவி உயர்வு பெறலாம்; தொழில் சிறக்கும் என்பது நம்பிக்கை!

பிள்ளைச் செல்வம் தருவார் ஸ்ரீஅழகிரிநாதர்

சேலம் மணிமுத்தாறு நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள அழகிய திருத்தலம். நகரப் பேருந்து நிலையம் அருகில் உள்ள இந்தக் கோயில், பாண்டிய மன்னர்கள் மற்றும் ராஜகேசரிவர்மன் ஆகியோரால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஆலயம் என்கிறது ஸ்தல வரலாறு!

பிருகு முனிவரின் சாபம் தீர்த்த தலம் இது. ஸ்ரீஆதி வேணுகோபாலன் குழலூதும் கண்ணனாக, ஸ்ரீஅழகிரிநாதராகத் திகழ்கிறார். தாயார்- ஸ்ரீசுந்தரவல்லித் தாயார். ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீசந்தான கோபாலர், வன்னிமர நாகர் ஆகிய தெய்வங்களும் காட்சி தருகின்றனர்.

வன்னிமர நாகரை பாலபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டால், கல்யாணம் கைகூடும்; ஸ்ரீசந்தானகோபாலரையும் ஸ்ரீஅழகிரிநாதரையும் வணங்கினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

மாங்கனி நகரில் மகத்தான ஆலயங்கள்!


ஸ்ரீராஷகணபதியை வணங்கினால் லாபம்தான்!

சேலத்தின், முதல் அக்ரஹாரம் கடைவீதியில் அமைந் துள்ளது ஸ்ரீராஜகணபதி திருக்கோயில். ஒளவையார் வழிபட்ட விநாயகப் பெருமான் இவர்!

இவரை வணங்கித் தொழுதால், வியாபாரம் செழிக்கும்; லாபம் கொழிக்கும் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள். இந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள், ஸ்ரீராஜ கணபதியைத் தரிசித்துவிட்டுக் கடையைத் திறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவருக்குச் சந்தனக்காப்பு, சிறப்பு பூஜைகள் என அடிக்கடி நடைபெறுகின்றன. இங்கு வந்து 11 விளக்குகளை ஏற்றி, ஸ்ரீவிநாயகரை வணங்கி வழிபட்டால், வீட்டில் விரைவில்  சுபகாரியங்கள் நிகழுமாம்.

கை கொடுப்பார் ஸ்ரீகரபுரநாதர்!

சேலம் நகரின் புராதனமான ஆலயங்களில் முக்கியமான ஆலயம் இது! சேலத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில், உத்தமசோழபுரம் எனும் பகுதியில் உள்ளது இந்தக் கோயில்.

கரன் என்பவன் வழிபட்டுச் சாபம் நீங்கியதால் ஸ்ரீகரபுர நாதர்; சிறுவர்களும் பூஜை செய்வதற்கு வசதியாகச் சாய்ந்து காணப்படுகிற சிவலிங்கம் எனப் பெருமைகள் கொண்ட திருத்தலம் இது. அம்பாளின் திருநாமம்- ஸ்ரீபெரியநாயகி அம்பாள்.

மூவேந்தர்களும் வணங்கிய தலம்; எனவே இங்கு வில், புலி, மீன் ஆகிய சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மூவருக்குமான பிரச்னையைத் தீர்த்து வைத்த ஒளவை பிராட்டியின் திருவுருவத் திருமேனியை இங்கு தரிசிக்கலாம். அங்கவை, சங்கவை ஆகியோரின் திருமணப் பத்திரிகையை ஓலைச்சுவடியில்  எழுதி, ஸ்ரீவிநாயகரிடம் சமர்ப்பித்த தலமும் இதுவே!

இங்கு வந்து வணங்கினால், தீராத நோயும் தீரும்; கடன் முதலான தொல்லையில் இருந்தும் விடுபடலாம்; வீட்டில் கெட்டிமேளம் மற்றும் தொட்டில் சத்தம் கேட்கும்!

மாங்கனி நகரில் மகத்தான ஆலயங்கள்!


வழித்துணைக்கு வருவார் முனியப்ப சுவாமி!

சேர தேசத்துப் படைவீரர்களின் காவல்தெய்வமாகத் திகழ்ந்து, இன்றைக்கும் அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் வெண்ணங்கொடி ஸ்ரீமுனியப்ப சுவாமி!

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சேலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தக் கோயில். ஊரின் எல்லையில் இருந்தபடி காவல் காக்கும் தெய்வம் இவர் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். அனல் பார்வையும், கொடுவாள் மீசையும், கைகளில் ஆயுதங்களும் கொண்டு கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீமுனியப்ப சுவாமி. கோயில் மண்டபத்தில் வெண்ணங்கொடி படர்ந்து, அனைவரையும் மனம் குளிரச் செய்வதால், இவர் வெண்ணங்கொடி முனியப்பன் என அழைக்கப்பட்டதாகச் சொல்வர்.

இந்தச் சாலையில் செல்வோர் தங்களது வண்டி- வாகனங்களை நிறுத்தி, இவரை வணங்கிச் சென்றால், வழித் துணையாக இருந்து காப்பார் என்பது நம்பிக்கை. எனவே, இவருக்கு 24 மணி நேரமும் கற்பூர ஆரத்தி, சிதறு தேங்காய் உடைத்தல் எனப் பூஜைகள் நடந்தபடி இருக்கின்றன. இதேபோல், தினமும் யாரேனும் பக்தர்கள், பொங்கல் படையலிட்டு முனியப்ப சுவாமியை வணங்கிச் செல்கின்றனர்.

பஞ்சம் போக்கும் அன்னதான மாரியம்மன்!  

சேலத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள அன்னதானப்பட்டியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள் இந்த மாரியம்மன்.

ஒருகாலத்தில், இந்த ஊரில் பசி என்று வருவோர்க்கு அன்னதானம் நடந்துகொண்டே இருந்ததாம். அந்த அளவுக்கு, பஞ்சம் ஏதும் வராமல், ஊரைச் செழிப்புடன் வைத்திருந்தாளாம் மாரியம்மன். இதனால் ஊருக்கு அன்னதானப்பட்டி என்றும், அம்மனுக்கு அன்னதான மாரியம்மன் என்றும் பெயர் அமைந்ததாகச் சொல்கின்றனர் ஊர்மக்கள்.

இவளை வணங்கினால் பூமி செழிக்கும்; காடு-கரை நிறையும்; விவசாயம் தழைக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி கண், வயிறு முதலான நோய்களை நீக்கிக் காத்தருள்வாள் அன்னதான மாரியம்மன் என்பது நம்பிக்கை! ஆடித் திருவிழாவின்போது, சேலம் மாவட்ட மக்கள் பலரும் திரண்டு வந்து, அம்மனை தரிசித்துச் செல்வார்கள்.

       - ப.பிரகாஷ்
படங்கள்: ரா.மோகன்