Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##
'ஒ
ரு வகையில், இந்த வனவாச காலம்கூட இனிமையானதாகத்தான் இருக்கிறது’ என்று நினைத்துக்கொண்டார் தருமர்.

சூழ்ச்சிகளில் சிக்கி, அரச வாழ்க்கையைத் துறந்து,  அவமானப்பட்டு, அல்லலுற்று, தேசத்தையும் மக்களையும் இழந்து, சகோதரர்களும் மனைவியுமாக, காடு-மேடுகளைக் கடந்து, வனங்களில் குடியேறி, பூச்சிகளுக்கும் பாம்புகளுக்கும் மத்தியில் வாழ்வது என்பது சாதாரணக் காரியமா என்ன?

எந்த நேரமும் காட்டு விலங்குகள் வந்து தாக்கலாம்; அட்டைப்பூச்சிகளின் தொல்லைகளும் ஏராளம். தரையில் படுத்துறங்குகிற வேளையில், விஷ வண்டுகள் பறந்து வந்து, காதுகளுக்குள் புகுந்து இம்சிக்கலாம். அதையும் தவிர, வெளுத்துக்கட்டுகிற மழையில் நனைந்து, சுழற்றியடிக்கிற சூறாவளிக் காற்றில் சிக்கிச் சீரழிந்து... வனவாசம் என்பது கொடுமையிலும் கொடுமை!

ஆனால், அத்தனைப் பேரின் முன்னிலையில் மானத்தையும் மரியாதையையும் இழந்து, கூனிக்குறுகி, அரண்மனைப் படாடோபங்கள் அகன்று, ஆபரணங்களையும் பட்டாடைகளையும் துறந்து, விரிந்து கிடக்கிற தேசத்தையும் பரந்த மனம் கொண்ட மக்களின் பேரன்பையும் இழந்து உயிருடன் வாழ்வது என்பது அதைவிடக் கொடுமை ஆயிற்றே?!

'எதை இழந்தால் என்ன... மனதுள் நம்பிக்கையையும் இறை பக்தியையும் இன்னும் இழக்கவில்லை’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டார் தருமர். அந்தச் சமாதானம், உள்ளுக்குள் இன்னும் இன்னும் பலத்தையும் கடவுள் மீதான நம்பிக்கையையும் அதிகரித்தது.

ஆலயம் தேடுவோம்!

அந்த நம்பிக்கை கொடுத்த உத்வேகத்துடன், பல இடங்களுக்குச் சகோதரர்களுடனும், மனைவி திரௌபதியுடனும் பயணப்பட்டார். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலைத் தலத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். காவிரி பாயும் தேசத்துக்கு வந்தவர்கள், பல தலங்களில் உள்ள தீர்த்தக் குளங்களில் நீராடி னார்கள்; சிவலிங்கத்துக்குப் பூஜைகள் செய்து, மனதார வழிபட்டார்கள்.

ஆலயம் தேடுவோம்!

அப்படியே நாலாப்புறமும் மயான பூமியைக் கொண்ட தலத்துக்கு வந்தவர்கள், நடுவில் உள்ள இடத்தில் ஸ்ரீபிரத்தியங்கராதேவியை மனதுள் நினைத்து, யாகம் வளர்த்து நெடுநாட்கள் வழிபட்டனர். ஐந்து சகோதரர்களும் வந்து வழிபட்டதால், பின்னாளில் ஐவர்வாடி, ஐவர்பாடி என அந்தத் தலம் போற்றப்பட்டது. தற்போது அந்த ஊர், அய்யாவாடி என அழைக்கப்படுகிறது. இங்கே, ஸ்ரீபிரத்தியங்கராதேவிக்கு ஆலயம் அமைந்துள்ளது. அமாவாசை நாளில், இங்கு சிறப்பு யாகங்கள் நடைபெறுகின்றன. இவற்றுக்கெல்லாம், வித்தாக விளங்கியவர்கள், பஞ்சபாண்டவர்கள்!

இதையடுத்து, இன்னொரு தலத்துக்கு வந்தனர். அந்த இடத்தின் சூழலைக் கண்டு, தியானம் செய்ய உகந்த தலம் என்று எண்ணினார் தருமர். 'ஆனால், இங்கு நீராடுவதற்கு குளமோ, ஆறோ இல்லையே, என்ன செய்வது!’ என வருந்தினாள், திரௌபதி. உடனே அர்ஜுனன், தனது அம்பறாத்தூணியில் இருந்து ஓர் அம்பை எடுத்தான். கண்கள் மூடி, ஒரு கணம் சிவனாரையும் ஸ்ரீகிருஷ்ணரையும் மனதாரப் பிரார்த்தித்தான். பிறகு, பூமியை நோக்கி அம்பைச் செலுத்தினான். அது சீறிப் பாய்ந்து, பூமியில் குத்திட்டு நின்றது. அவ்வளவுதான்... அம்பு தைத்த இடத் திலிருந்து, மெள்ளக் கசிந்து வந்தது நீர். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஊற்று வேகமெடுத்து, ஒரு குளத்தின் அளவுக்கு அங்கே தண்ணீர் நிரம்பியது.

ஆனந்தத்தில் திளைத்த ஐவரும் திரௌபதியும், 'சிவாய நம ஓம், சிவாயநம ஓம்’ என்று பெருங் குரலெடுத்துச் சொன்னார்கள். தருமர் முதலில் குளத்தில் இறங்க... அவரைப் பின்தொடர்ந்து, அனைவரும் இறங்கினார்கள்; நீராடினார்கள்; சிவலிங்கத் திருமேனிக்கு வில்வங்கள் பறித்து பூஜை செய்தார்கள்; சிறிது காலத்துக்குப் பிறகு, கௌரவர்களுடன் போரிட்டு வென்று, இழந்த தேசத்தையும் மானத்தையும் கைப்பற்றினார்கள்.

அர்ஜுனன் அம்பு விட்டு உண்டாக்கிய திருக் குளம் இன்றைக்கும் இருக்கிறது. இந்தக் குளம் குறித்த தகவல், அக்கம்பக்கத்தில் உள்ள ஊர்களுக்கெல்லாம் பரவியது. அனைவரும் இந்தக் குளத்தில் நீராடினால் புண்ணியம் எனக் கருதினார்கள். அருகில் அவர்கள் வழிபட்ட இடத்தில், எந்தப் புண்ணியவான் ஆட்சிக் காலத்திலோ, சிவாலயம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் வந்து வணங்கினால், இழந்தவை அனைத்தையும் பெறலாம், எதிலும் வெற்றி பெறலாம் என வாய்வழித் தகவலாக நம்பிக்கை வேர் விட்டது. வழிபாடுகள் நடந்தன.

அர்ஜுனன் உருவாக்கிய குளம் அமைந்துள்ள தலம், அர்ஜுனன்மங்கலம் என்றே வழங்கப்பட்டு, தற்போது அச்சுதமங்கலம் என்றாகிவிட்டது. மூத்த வரான தருமர் தலைமையில் பாண்டவ சகோதரர்கள் வழிபட்ட சிவனாருக்கு, ஸ்ரீதர்மேஸ்வரர் என்றே திருநாமம் அமைந்தது. அம்பாளின் திருநாமம்- ஸ்ரீதர்மபத்தினி.

ஆலயம் தேடுவோம்!

புராணப் பெருமைகள் கொண்ட அச்சுதமங்கலம், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ளது. இங்கே, அனைவராலும் வணங்கி வழிபட்டுப் போற்றப்பட்ட ஸ்ரீதர்மபத்தினி சமேத ஸ்ரீதர்மேஸ்வரர் திருக்கோயிலைத் தரிசிக்க ஆவலுடன் சென்றால், அதிர்ச்சிதான் மிஞ்சியது. மனம் பூரிக்கத் தரிசிக்கலாம் என்றிருந்தால், கனத்துப் போனது இதயம். காரணம்... பன்னெடுங்காலமாகவே வழிபாடுகள் ஏதுமின்றி, உருக்குலைந்த நிலையில் பரிதாபமாகக் காட்சி தருகிறது திருக்கோயில்!

செங்கல் கட்டுமானக் கோயிலாக, மன்னர் காலத்தில் மிகப் பிரமாண்ட மாகக் கட்டப்பட்ட ஸ்ரீதர்மேஸ்வரர் கோயில், மதிலையும் மண்டபங் களையும் முற்றிலுமாக இழந்துள்ளது. நந்திதேவரையும் காணோம்; கொடி மரமும் இல்லை; பலிபீடமும் கிடையாது.

ஏகப்பட்ட துணை தெய்வங்கள்; ஏராளமான சந்நிதிகள் என்றிருந்த கோயில், இன்றைக்கு ஒற்றைச் சந்நிதியாகச் சுருங்கிப் போய்விட்டதை, என்னவென்று சொல்வது?! எப்படித் தேற்றிக் கொள்வது?!

ஆலயம் தேடுவோம்!

அழகிய லிங்கத் திருமேனியுடன் திகழும் ஸ்ரீதர்மேஸ் வரரையும் குறுநகை மாறாமல் காட்சி தருகிற ஸ்ரீதர்ம பத்தினி அம்பாளையும் பார்க்கும்போது, 'இந்த அழகுத் தெய்வங்களுக்கு ஆராதனைகள் நடந்து எத்தனைக் காலங்கள் ஆயிற்றோ... அபிஷேகங்கள் நடைபெற்று எத்தனை மாமாங்கம் ஓடியதோ..!’ என்று துக்கித்துப் போனோம்.

அபிஷேக- ஆராதனைகளும், விழாக்களும் கொண்டாட் டங்களும், கும்பாபிஷேகமும் திருக்கல்யாணம் முதலான உற்ஸவங்களும் குறையின்றி நடந்தால்தானே, ஊரும் பேரும் செழிக்கும்?!

குழந்தைக்கு உணவூட்டுவது தாயின் கடமை எனில், வயோதிகப் பருவத்தில் அந்தத் தாயைப் பராமரித்துக் காப்பது அந்தக் குழந்தையின் கடமை அல்லவா?!

நம்மைப் படைத்துக் காக்கிற கடவுளின் வீடுதானே ஆலயம்! அந்த ஆலயத்தை- இறைவன் குடியிருக்கிற இல்லத்தைப் பராமரித்து, அந்தத் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து, புதிய வஸ்திரம் சார்த்தி, நைவேத்தியங்கள் படைத்து வழிபடுவதுதானே, பக்தர்களாகிய குழந்தைகளின் கடமை?! அதுதானே தர்மம்!

தர்மேஸ்வரர் கோயிலைச் சீரமைக்காமல் இப்படியே விட்டு வைத்திருப்பது தர்மம் இல்லை. 'ஐயா... தர்மம் பண்ணுங்க சாமீ, புண்ணியமாப் போகும் உங்களுக்கு!’  என ஐந்து பைசா யாசகம் கேட்பவன்கூட, அப்படிக் கொடுப்பதைத் தர்மம் என்கிறான். தருமர் வழிபட்ட ஸ்ரீதர்மேஸ்வரர் கோயிலின் திருப்பணியில் நாம் எப்படி பங்கெடுத்துக்கொண்டாலும் சரி... அது நம்முடைய கடமை; நமது தர்மம்; மிகப் பெரிய புண்ணியம்!

நாம் செய்கிற தர்மம், நம்மை மட்டுமின்றி நம் அடுத்தடுத்த தலைமுறை களையும் காக்கும் என்பதை உணர்ந்து உதவுங்கள்; அப்படிச் செய்தால், அச்சுத மங்கலம் ஸ்ரீதர்மேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாள், வெகு தொலைவில் இல்லை!

படங்கள்: ந.வசந்தகுமார்