சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
ழுமலையானுக்கு திருக்கல்யாணம்! ஒரு சுபமுகூர்த்த திருநாளில், ஆகாச ராஜனை சந்தித்து சம்பந்தம் பேசி முடித்தார் வகுளாதேவி. மணமகள்- அலர்மேலுமங்கை; மணமகன் ஸ்ரீநிவாசன். வைகாசி மாதம்- சுக்லபட்ச தசமி திதியில் திருக்கல்யாணம்.

ஆகாசராஜனின் தலைநகரமாம் நாராயணபுரத்திலும், மாப்பிள்ளையின் வசிப்பிடமாம் திருமலையிலும் களை கட்டியது. சேஷாத்திரி(மலை)யின் முகப்பு துவங்கி, நீண்ட நெடுந் தொலைவுக்கு பந்தல் அமைத்தார்கள். மணமகன் சாட்சாத் பகவானே அல்லவா... வழிநெடுக, தண்ணீரை அல்ல, பன்னீரையே தெளித்துவைத்தார்கள். ஒவ்வோர் அடி தூரத்துக்கும்... பாக்கு, குமுகு, வாழை மற்றும் தென்னை மரங்களால் மங்கலத் தோரணங்களும் அமர்க் களப்பட்டன. மங்கல நாணும், மணப்பந்தலும், வேள்வி குண்டமும், வாத்தியக் கருவிகளும் சுபமுகூர்த்தத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தன!

பார்வதி-பரமேஸ்வரர், நாமகள்- நான்முகன், இந்திரன் -இந்திராணி முதற்கொண்டு முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் வந்துசேர்ந்தனர் திருமணத்துக்கு. எல்லோ ருக்கும் விருந்தளிக்க உணவு பதார்த்தங்களும் தயார்.

மூலப்பரம்பொருளை முறைப்படி பூஜித்து, நைவேத்தியம் செய்த பிறகே பந்தி பரிமாற வேண்டும். இதுதானே மரபு? ஆனால், அந்தப் பரம்பொருளே அல்லவா இங்கு மணமகனாக அமர்ந்திருக்கிறார். எனில், நைவேத்தியத்தை யாருக்கு சமர்ப்பிக்க?!

தசாவதாரம் திருத்தலங்கள்!

எல்லோரும் ஒருகணம் குழம்பி நிற்க, தாயார் அலர்மேலுமங்கை சொன்னாள்...

அஹோவீர்யம் அஹோசௌர்யம் அஹோபாஹபராக்ரம
நாரசிம்மம் பரம் தெய்வம் அஹோபலம் அஹோபிலம்...

'ஸ்ரீநரசிம்மமே பரதெய்வம். அஹோபிலத்தில் அருளும் அந்தத் தெய்வத்தை தரிசித்து வழிபட்டு, நைவேத்தியமும் சமர்ப்பித்து வருவோம். அவரருளால் சுப காரியம் இனிதே நடந்தேறட்டும்’ என்றாள். இதனை ஏற்று, ஸ்ரீநிவாசன் முதலாக அனைவரும் அஹோபிலம் இறைவனை வணங்கி வழிபட்டார்கள்; ஏழுமலையான் திருக்கல்யாணமும் கோலாகலமாக நடந்து முடிந்தது என்று சிலாகிக்கிறார்கள் ஆன்றோர்கள்.

திருவேங்கடவன் மட்டுமா? சீதையைத் தேடி வந்த ஸ்ரீராமனும் அஹோபிலம் நரசிம்ம ஸ்வாமியை வழிபட்டுச் சென்றதாக  விவரிக்கின்றன புராணங்கள்!

காவிரிக் கரையில் கோயில்கொண்டிருக்கும் திருவரங்கனை 'பெரிய பெருமாள்’ எனப் போற்றுகிறது வைணவம். ஸ்ரீராமன் வழிபட்ட மூர்த்தி என்பதால் இப்படியரு சிறப்பு அவருக்கு! அஹோபிலத்திலோ... ஸ்ரீராமன், திருவேங்கடவன்- இருவரும் வழிபட்டிருக்கிறார்கள். எனவே, அஹோபிலம் ஸ்ரீநரசிம்மரை, 'பெரிய பெரிய பெருமாள்’ என்று போற்றுகிறார்கள் மகான்கள்.

அந்தப் பெரிய பெரிய பெருமாளை, நவநரசிம்மமாய் அருளும் அற்புதத்தை, அஹோபிலத்தில் தரிசிக்க கோடி கோடியாய் புண்ணியம் செய்திருக்கவேண்டும்!

தரிசிப்போமா? முதலில் ஜ்வாலா நரசிம்மர்!

தசாவதாரம் திருத்தலங்கள்!


அவதாரம் நிகழ்ந்த திருவிடம்!

கீழ் அஹோபிலத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது மேல் அஹோபிலம் (ஸ்ரீஉக்ரநரசிம்மர் திருக்கோயில்). முதலில் இங்கு தரிசனம் முடித்து, பிறகு ஸ்ரீவராக நரசிம்மரை சேவிக்க வைத்து, அங்கிருந்து ஜ்வாலா நரசிம்மர் சந்நிதிக்கு அழைத்துச் செல்கிறார்கள் வழிகாட்டிகள். இதனால் தரிசனப் பயணம் எளிதாகும். ஆனாலும் நாம் இங்கே, நவ நரசிம்மர்கள் தரிசனத்தை, முன்னோர் சொல்லிச் சென்ற வரிசை முறைப்படி பார்க்கப்போகிறோம்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

மேல் அகோபிலம் கோயிலில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவு ஜ்வாலா நரசிம்மர் சந்நிதிக்கு. சாம்பிராணி மரங்கள், விள மரங்கள், வில்வ மரங்கள், மூங்கில்கள் முதலான பல்வகை மரங்கள் அடர்ந்த பெரும் வனப்பகுதி யின் ஊடே பயணிக்கவேண்டியிருக்கிறது. இப்போது கோடை காலம் ஆதலால், சிறு சிறு ஓடைகளாக ஓடுகிறது பவநாசினி. மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுமாம். அப்போது நதியை எளிதில் கடக்கும் வகையில், ஆங்காங்கே மரப்பாலம் அமைத்திருக்கிறார்கள்.

மரத்துக்கு மரம் தாவும் குரங்குகள், நம் பாதங்களைத் தழுவும் குளிர்ச்சியான நீரோடைகள், மூலிகை வாசம் நிறைந்த காற்று... என அந்த வனச்சூழல், ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், மறுபுறம்... எப்போதும் உருண்டு விழலாம் எனும் நிலையில் தொங்கி நிற்கும் பெரும் பாறைகள், மரக் கிளைகள், செங்குத்தான மலைப் பாதை என பயம்கொள்ளவும் மலைக்கவும் வைக்கிறது! ஸ்ரீநரசிம்மரின் துணையிருக்க கவலையேது? சிரத்தையும் பக்தியுமாக ஜ்வாலா நரசிம்மர் சந்நிதியை அடைகிறோம்.

முன்னதாக உக்ர ஸ்தம்ப தரிசனம்! கம்பீரமாக ஒரு தூண் போன்று வானுயர நிற்கும் மலை முகட்டையே உக்ர ஸ்தம்பம் என்கின்றனர். ஸ்ரீநரசிம்மம் பிளந்து வந்த தூண் இது என்கிறார்கள். பக்தர்கள் பலரும் பக்தி பிரயத்தனத்துடன், இன்னும் உயரத்தில் ஏறிச் சென்று உக்ர ஸ்தம்பத்தை அருகில் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

ஜ்வால நரசிம்மர் குகை சந்நிதி, வேதாச்சல- கருடாச்சல மலைகளுக்கு இடையே அச்சலச்சாயாமேரு எனும் குன்றுப் பகுதியில் அமைந்துள்ளது.

அருகிலேயே... பவநாசினி, நீர்வீழ்ச்சியாக தனது பயணத்தைத் துவங்கும் திருவிடம். தற்போது தாரையாக விழுகிறது நீர். பக்தர்கள் பரவசத்துடன் பாட்டிலில் பிடித்துச் செல்கிறார்கள், அந்தத் தீர்த்தத்தை. வெள்ளம் ஆர்ப்பரித்து விழும் காலத்தில், தடுப்புச் சங்கிலியை பிடித்தபடி நீர்வீழ்ச்சியைக் கடந்து, ஜ்வாலா நரசிம்மர் சந்நிதிக்குச் செல்ல நேருமாம்!

கிருத யுகத்தில், எந்த இடத்தில் வைத்து, ஹிரண் யனை ஸ்ரீநரசிம்மர் வதம் செய்தாரோ அதே இடத்தில் சந்நிதி கொண்டிருக்கிறார் ஸ்ரீஜ்வாலா நரசிம்மர். இவரின் கோபாவேசம் காரணமாக, வெகுகாலம் வரை இந்தக் குகைச்சந்நிதி தகித்துக் கொண்டிருந்ததாம். அதனாலேயே ஸ்வாமிக்கு ஸ்ரீஜ்வாலா நரசிம்மர் என்று திருநாமம். உள்ளே மூன்று கோலங்களில் அருள்கிறார் நரசிம்மர். மத்தியில் ஹிரண்யனை வதம் செய்யும் கோலம், வலப்புறம்- தூணைப் பிளந்து அவதரிக்கும் கோலம், இடப்புறம்- ஹிரண்யனுடனான போர்கோலம். பக்த பிரகலாதனையும் இங்கே தரிசிக்கலாம்.

பக்கத்திலேயே  பாறைகளின் இடுக்கில் அமைந்துள்ளது ரத்த குண்டம். ஸ்ரீநரசிம்மர் தன்னுடைய ரத்தம் படிந்த கரங்களை கழுவிக்கொண்டது இங்குதான். இந்தத் தீர்த்தத்தைத்  தலையில் தெளித்துக்கொள்ள, பித்ரு சாபங்கள் விலகும் என்பது ஐதீகம். நவக் கிரகங்களில் சனிக் கிரக தோஷம் அகலவும், சத்ரு பயம் நீங்கவும் அருளும் இந்த ஸ்வாமியை, ஸ்ரீமாதா மிருத்யுஞ்சயர் என்றும் போற்றுகிறார்கள்.

தசாவதாரம் திருத்தலங்கள்!


கருடனுக்கு அருளிய சந்நிதி

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2800 அடி உயரத்தில், மேல் அஹோ பிலத்தில் உள்ள பிரதான ஆலயம், ஸ்ரீஉக்ரநரசிம்மர் சந்நிதி. நவநரசிம்ம சந்நிதிகளில் மிக எளிதில் தரிசிக்கக்கூடிய சந்நிதி இது. கருடாத்திரி - வேதாத்திரி மலைகளுக்கு இடையே கோயில் அமைந்திருக்க, கருடாத்திரியின் குகையில் சுயம்புவாக அருள்கிறார் ஸ்ரீஉக்ரநரசிம்மர். ஸ்ரீகருடாழ்வாருக்கு தரிசனம் தந்தவரும், ஸ்ரீராமனால் வழிபடப் பட்டவரும் இந்த நரசிம்மர்தான்.

ஒருமுறை, காபாலிகர்களால் கரம் இழந்த ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம் இயற்றி இவரை வழிபட்டார்; இழந்த கரம் மீண்டும் அவருக்குக் கிடைத்தது என்கின்றனர். ஆதிசங்கரர், இங்கே லிங்கம் ஒன்றும் ஸ்தாபித்து பூஜித்தாராம். அந்த லிங்க மூர்த்தத்தையும், அவர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீநரசிம்ம சுதர்சன சக்கரத்தையும் இங்கே தரிசிக்கலாம். தவிர, ஸ்ரீசெஞ்சுலலட்சுமி தாயாருக் கும் சந்நிதி உண்டு.  

16-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஸ்ரீஉக்ர நரசிம்மர் கோயிலில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது!

கோயிலுக்குள் தனியே ஒரு குகை இருந்ததாம். அதன் உள்ளேயும் ஒரு சந்நிதி இருந்ததாகச் சொல் கிறார்கள். அஹோபில மடத்தின் 6-வது ஜீயரான ஸ்ரீஷஷ்டபராங்குச யதீந்திர மகாதேசிகர், ஒருமுறை இந்தக் குகைக்குள் இறங்கியதாகவும், அதன் பிறகு அவர் வெளியே வரவேயில்லை என்றும் விவரிக்கிறார்கள். பிற்காலத்தில் மூடப்பட்டுவிட்ட இதன் வாயிற்பகுதியைச் சுற்றிலும் தற்போது தடுப்பு அமைத்திருக்கிறார்கள். பக்தர்கள் இந்த இடத்தில் நின்று மனமுருக வழிபட்டு, குருவருளைப் பெற்று செல்கிறார்கள். ஆலயத்தின் நேர் எதிரில் உற்ஸவ மண்டபம். இங்கிருந்து கருடாத்திரி-வேதாத்திரி மலைகளின் அழகை ரசிப்பது, சிலிர்ப்பான விஷயம்!

அடுத்து நாம் தரிசிக்கப்போவது, ஸ்ரீமாலோல நரசிம்மர். விசேஷமான இந்தத் திருப்பெயருக்கு என்ன

பொருள் தெரியுமா?

- அவதாரம் தொடரும்...
படங்கள்: என்.விவேக்