Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

ன்பது கிரகங்களில், சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும், மந்தன் என்றும் குறிப்பிடுவர். 'சனை’ என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், அந்தப் பெயரே பொருந்துகிறது இவருக்கு! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விண்வெளியில் அவர் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டி இருக்கும். விண்வெளியில் வெகு தொலைவில் இருப்பவர், இவர்! சனி பகவானைக் கடந்து இருப்பது நட்சத்திர மண்டலம். அவரிடமிருந்துதான் கிழமைகளின் தோற்றமும் வரிசைகளும் உருவாயின.

ராசி மண்டலத்தை ஒருமுறை வலம் வருவதற்கு, சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை. அதாவது, ஒருவரது வாழ்நாளில், சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார். முதல் 30 வருடத்துக்குள் ஒருமுறை, 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை, 90 வருடத்துக்குள் மூன்றாவது முறை என சனி பகவானின் வலம் வருதல் நிகழ்கிறது. முதல் வலத்தை மங்கும் சனி; அடுத்ததை பொங்கும் சனி; மூன்றாவதை போக்கு சனி என்பார்கள்!

##~##
இப்படி மூன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தில், முதல் பிரிவு கௌமாரம் எனப்படும். அதாவது, அனைத்தையும் கற்கும் சிறுவயது என்பர். அடுத்து, யௌவனம்; அதாவது இளமைப் பருவம். எண்ணங்களின் வசத்துக்கு உட்பட்டு, அலசி ஆராயும் திறனுடன், நல்லது - கெட்டதை அறிந்து செயல்பட்டு வாழும் காலம் அது. துன்பங்களைத் தாங்கி, அதனை அலட்சியப்படுத்தி, மனோபலமும் சிந்தனைத் தெளிவும் கொண்டு செழிப்புடன் விளங்குகிற பருவம் இது! மூன்றாவது, முதுமை. தேக ஆரோக்கியமும் மனோபலமும் குறைகிற இறுதிப்பகுதி. கௌமாரம், யௌவனம், வார்த்தகம் என வாழ்வின் மூன்று பிரிவுகளை விவரிக்கிறது ஆயுர்வேதம்.    

சிறுவயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில், சகல விஷயங் களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும்போது, சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும். மனதில் பதிந்த எண்ணங்கள், முழு வளர்ச்சியை எட்டாத நிலையில், சனியின் தாக்கம் முடங்கிவிடும். ஆகவே, சனியின் பாதிப்பு மங்கியது என்பர்.

இளமையில் வளர்ச்சியுற்று, எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து, சனி பகவானின் தாக்கம் கட்டுக்கடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்கச் செய்து, பொங்கச் செய்கிறது. ஆகவே, பொங்கு சனி என்கின்றனர். இன்ப - துன்பம் நிறைந்த வாழ்வில், துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று மனதுள் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்கிறார் சனி பகவான். இளமையில் கற்ற கல்வியுடன் விவேகமும், பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க, சனி பகவானின் தாக்கத்தை, விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திசை திருப்ப முடியும். ஆகவே பொங்கு சனியாகச் செயல்படுகிறார் சனீஸ்வரர்.  

முதுமையில், சோர்வைச் சந்தித்த உடலும் உள்ளமும் கொண்டிருக்க, சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. சனியின் விருப்பப்படி தன்னை இணைத்துக்கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால், வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க அவன் செயல்பாடு உதவும். ஆகவே, அவனது வேலையைச் சுட்டிக்காட்டி, போக்கு சனி என்றனர். ஆக, முதற்பகுதி வளரும் பருவம்; 2-ஆம் பகுதி, வளர்ந்து செழிப்புற்று, இன்பத்தை அனுபவிக்கிற பருவம்; இறுதியில், உடலுறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம்.  இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்குத் தக்கபடி, சனி பகவானின் செயல்பாடு இருப்பதை, ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது.

ராசி மண்டலத்தில் வலம் வரும் தருணத்தில், சந்திரன் இருக்கிற ராசியில் இருந்து பன்னிரண்டிலும், சந்திரன் இருக்கிற ராசியிலும், அடுத்து சந்திரனில் இருந்து 2-வது ராசியிலும் இரண்டரை வருடங்கள் தங்கியிருந்து, பயணிப்பார் சனி பகவான். ஆக, மூன்று ராசியிலும் இருந்த காலத்தைக் கூட்டினால் மொத்தம் ஏழரை வருடங்கள் வரும். இதை, ஏழரை நாட்டுச் சனி என்பார்கள். அதாவது ஏழரை ஆண்டுகளை நாடிய சனி எனப் பொருள்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

பிறக்கும் வேளையில் சந்திரன் இருக்கும் ராசி, ஒருவரது நட்சத்திரத்தைச் சொல்லும். அத்துடன், அவனது மனத்தையும் சுட்டிக்காட்டும். சனியுடன் மனம் நெருங்கிவரும் வேளை, 12-ஆம் ராசி; நெருக்கம் வலுப்பெற்றிருப்பது, சந்திரன் இருக்கும் ராசி; அந்த நெருக்கம் தளர்வது- 2-வது ராசி. இந்த நெருக்கத்தின் தன்மையைக்கொண்டே, மங்கும் சனி, பொங்கும் சனி, போக்குச் சனி என்றும் சொல்லலாம். 12-ல் உள்ளபோது மங்க வைப்பார்; சந்திரன் இருக்கும் ராசியில் இருக்கும்போது பொங்க வைப்பார். இரண்டில் இருக்கும்போது, போக வைப்பார்.

மனதோடு இணைந்த எண்ணங்கள், அதன் தாக்கம் நெருங்கும்போது, இன்பமோ துன்பமோ முழுமையாக வரும். விலகியிருக்கும் வேளையில், தாக்கம் செயலற்றுப் போகும். அதாவது, பன்னிரண்டிலும் இரண்டிலும்... நெருக்கம், மனத் துடன் (சந்திரனுடன்) குறைந் திருப்பதால் பாதிப்பானது, அனுபவத்துக்கு வராமலே போகலாம். அந்த ஏழரை வருட காலத்தில், அவனது தசாபுக்தி

அந்தரங்கள் வலுவாகவும் நன்மையை வாரி வழங்கு வதாகவும் இருந்தால், சனியின் தாக்கம் செயலிழந்துவிடும். தனக்கு இருக்கும் மூன்று இயல்புகளில் 'பொங்கும்’ இயல்பு வெளிப்பட்டு, தசாபுக்தி அந்தரங்களின் தரத்தைப் பொங்க வைத்து மகிழ்ச்சியைப் பன்மடங்காக்குவார். மாறாக தசாபுக்தி அந்தரங்கள் துயரத்தில் ஆழ்த்தும் நிலையில் இருந்தால், தரத்தையட்டி மங்கவைப்பதோ அல்லது அதன் உச்சத்தை எட்டவைப்பதோ சனியின் வேலையாக மாறிவிடும்.

தசாபுக்தி அந்தரங்களைப் புறக்கணித்து, தன்னிச்சையாக செயல்படும் தகுதி சந்திர சாரப்படி வளையவருகிற ஏழரை நாட்டுச் சனிக்கு இல்லை. சந்திர சாரப்படி தென்படுகிற

கிரகம், தசாபுக்தி அந்தரங்களின் பலத்தை நிறைவேற்றவே ஒத்துழைக்கும். பிறக்கும்போது இணைந்த நட்சத்திரம், அவனது ஆயுள் முடியும் வரை சந்திக்கவேண்டிய தசாபுக்தி அந்தரங்கனை வரிசையாகப் பட்டியலிட்டுத் தந்துவிடும்; கர்மவினைக்கு உகந்தபடி, இன்ப - துன்பங்களைச் சந்திக்கும் காலத்தையும் வரையறுத்துவிடும். சந்திரசாரப்படி மாறி வரும் அந்தந்த வேளையில், அந்தந்த ராசியில் தென்படும் கிரகங்களின் பலன்கள், தசாபுக்தி அந்தர பலன்களை முடக்கிவைக்க இயலாது. நொடிக்கு நொடி, மனித சிந்தனையில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பதால், மனமாற்றத்துடன் இணைந்த கிரகங்கள், நிரந்தரப் பலனை அளிக்க இயலாது என்பதே உண்மை. நிச்சயமான பலனை அளிக்கவல்லது தசாபுக்தி அந்தரங்கள். தசையினால் திடமான பலத்தை அறியவேண்டும் என்கிறது ஜோதிடம் (விசிந்தயேத் த்ருடம்...). அஷ்டகவர்த்தை முன் வைத்து அதிருட பலத்தை அறியவேண்டும். நிச்சயமல்லாத, அதாவது சந்தர்ப்பம் இருந்தால் தென்படும் பலன்களை அறியவேண்டும் என்கிறது அது. யோகங்களால் இரண்டு வித பலன்களும் ஏற்படலாம். யோக பலம் செயல்பட்டுத்தான் தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் விளக்கம் தருகிறது ஜோதிடம்.

சூரியனுடனும் (ஆன்மா), சந்திரனுடனும் (மனம்) இணைந்திருப்பவர் சனி பகவான். சூரியனின் 'சாரம்’ சனி; சூரியனிடமிருந்து வெளிவந்தவர்; சூரியனின் புதல்வன் என்றும் ஜோதிடம் தெரிவிக்கிறது. அப்பாவின் சாரம், பிள்ளையாக உருவெடுத்தது என்கிறது வேதம். அதேபோல், மனதுடன் தொடர்புகொண்டவர் சனி. மனதுள் உறைந்திருக்கும் சிந்தனையைத் தட்டி எழுப்பிச் செயல்பட வைக்கிற

தமோ குணம் அவரிடம் உண்டு. சூரியனில் (ஆன்மா) இருந்து உருப்பெற்றது சந்திரன் (மனம்). ஆன்மா ஒன்று மனமும் ஒன்று. ஆகவே, 12 ராசிகளில் இருவருக்கும் ஒரு வீடு மட்டுமே உண்டு. புலன்கள் இரண்டாக இருப்பதால், மற்ற ஐந்து கிரகங்களுக்கு இரண்டு வீடுகள் இருக்கும். ஆன்மா மற்றும் மனத்துடன் புலன்களுக்குத் தொடர்பு உண்டு. ஆதலால் ராசிச் சக்கரத்தில், சிம்மத்தில் உள்ள சூரியனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும். அதேபோல், கடகத்தில் உள்ள சந்திரனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும். சூரியனுக்கு சிம்மராசி. அதற்கு அடுத்த ராசியில், புதன். அதையடுத்து, சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று இருப்பார்கள். சந்திரனுக்குப் பின் ராசியில், மிதுனத்தில் புதன்; அடுத்து சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று இருப்பார்கள். இருவருக்கும் கடைசியில் சனி தென்படுவதால், மகரத்துக்கும் கும்பத்துக்கும் சனி அதிபதியாக அமைந்துள்ளார்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

ஆன்மாவுடன் மனம் இணையவேண்டும். அத்துடன் எண்ணங்கள் இணைந் தால் மட்டுமே, அது வளர்ந்து அனுபவத்துக்கு வரும். ஆன்மா, மனத்துடன் இணைகிறது; மனம், புலனுடன் இணைகிறது; புலன்கள் பொருட்களுடன் இணைகின்றன என்கிறது ஜோதிடம் (ஆன்மாமனஸா ஸம்யுஜ்யதே...).

இருக்கிற பொருள், தோற்றமளிக்கும்; வளரும்; மாறுபாட்டைச் சந்திக்கும்; வாட்டமுறும்; மறையும். ஆக... இருத்தல், தோன்றுதல், வளருதல், மாறுபடுதல், வாட்ட முறுதல், மறைதல் ஆகிய ஆறுவித மாறுபாடுகளைக் கொண்ட பொருளுக்கு, எல்லாமே உண்டு. அது மனிதனுக்கும் உண்டு. அதனை ஆறு பாவ விகாரங்கள் என்கிறது சாஸ்திரம் (அஸ்தி, ஜாயதெ, வர்த்ததெ, விபரிணமதே, ம்லாயதெ, நச்யதி, இதி). சூரிய- சந்திரனுடன் இணைந்த இந்த ஐந்து கிரகங்கள், ஜீவராசிகளில் தென்படும் ஆறுவித மாற்றங்களை நடைமுறைப்படுத்துகின்றன எனும் கோணத்தில், ராசிச் சக்கரத்தின் கிரக வரிசைகள் சுட்டிக்காட்டுகின்றன.

மனிதனாகப் பிறந்தவன் முதலில் சந்திப்பது கல்வியை. அடுத்து பொருளாதாரம், செயல்பாடு, தெளிவு பெற்று மகிழ்தல், கடைசியில் மறைதல் என அவனது வாழ்க்கை நிறைவுறுகிறது. இந்த வரிசையில் புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி எனத் தென்படுகிறது. இறுதியில் உள்ள சனி, மறைவைச் சந்திக்கிற வேளையை நடைமுறைப்படுத்துகிறார். அதாவது, சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல; அழிவு வரும் வேளையைச் சுட்டிக்காட்டுபவர்.  

'பிறந்தவனுக்கு இறப்பு உண்டு; இறப்பு இருப்பவனே பிறக்க இயலும்; அதுதான் நியதி’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். விதை முளைக் கிறது; வளர்கிறது. இலை, பூ, காய், கனி என மாறுபாடுகளைச் சந்திக்கிறது; வாட்டமுறுகிறது; மறைகிறது என்பது நமக்குத் தெரியும்.  உடலில், ஆன்மாவுக்குக் குடியிருக்கத் தகுதியில்லாத நிலையில், உடலுக்கு மறைவு வருகிறது. அந்த வேளையை வரையறுக்கும் பணியை சனி பகவான் சுட்டிக்காட்டுகிறார். நம்மை வளர்த்து, நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, இன்ப - துன்பங்களை கர்மவினைப்படி செயல்படுத்தி, வாழவைப்பவர் சனி பகவான். உடல் வாழத் தகுதியற்ற நிலையில், மறுபிறவி தருவார்; பாபமும் புண்ணியமும் அற்றுப் போயிருப்பின், மறைவை இறுதியாக்கி மோட்சம் தருவார்.

'சம் சனைச்சராய நம:’ என்று சொல்லி, சனி பகவானுக்கு 16 வகை உபசாரங்களை அளித்து வழிபடலாம். 'நம: ஸ¨ர்யாய ஸோமாய மங்களாய புதாய ச குருசுக்கிர சனிப்ய: சராஹவே கேதவே நம:’ எனும் ஸ்லோகத்தைச் சொல்லி, 12 நமஸ்காரங்களைச் செய்தால், 12 ராசியில் வீற்றிருக்கும் கிரகங்களை வணங்கி வழிபட்டதாக ஆகிவிடும். உடல் - உள்ளத்தை வாடவைத்து, அடிபணிந்தால்தான் பலன் உண்டு என நினைக்க வேண்டாம். உள்ளத் தெளிவுடனும் ஈடுபாட்டுடனும்

சனி பகவானின் திருநாமத்தைச் சொல்லி வழிபட்டால், அவனருளால் இன்பம் பொங்கும்; மூன்று நிலைகள் இருந்தாலும், நம்மைப் பொறுத்தவரை 'பொங்கும்’ சனியாகவே நமக்குக் காட்சி தருவார்.

சனீஸ்வரரை தினமும் வணங்கி, மனதில் உறைந்தவராக மாற்றினால், விசேஷ பூஜை, தனி வழிபாடுகள் ஏதும் தேவையே இல்லை. வாழ்வின் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்பச் செயல்பட்டு, வளங்கள் அனைத்தையும் நமக்குத் தந்தருளும் சனீஸ்வர பகவானை மனதாரப் பிரார்த்திப்போமாக!

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism