சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

கவான் ரமண மகரிஷி, சிவசொரூபம். மிக அமைதியாக இருக்கவேண்டும். சுற்றுப்புறம் எந்தச் சந்தடியும் இல்லாது இருக்க வேண்டும். தனக்கு அருகே இருப்பவர்கூட, தேவையற்று நடமாடாதிருக்க வேண்டும். செய்கின்ற காரியத்தில் மிகப் பெரிய கவனமும் சிதறாத பாங்கும் இருக்க வேண்டும்.

ஆனால், சேஷாத்திரி சுவாமிகள் சக்தி ரூபம். ஆனந்தக் களி நடனம். உரத்த சிரிப்பு. 'அடடா! என் மீது எத்தனை அன்பு!’ எனத் தனக்குச் சிறிய உதவி செய்தவரையும் கட்டித் தழுவிக் கொள்கிற குணம். 'கிட்டே வராதேன்னு சொல்லியிருக்கேனில்லையா? மீறி வந்தா, பிச்சுப்புடுவேன் படவா!’ என்று எகிறி, தன்னைத் தேடி வரும் அன்பர்களை விரட்டுகிற ஆக்ரோஷம். 'என்கிட்ட ஏன் வர்றே? போ, போ... மேலே போ! மேலே ஒருத்தன் இருக்கான். அவன் பார்த்துக்குவான், போ!’ என்று திருவண்ணாமலை விருபாக்ஷி குகையைச் சுட்டிக்காட்டுகிற குதூகலம்.

##~##
இரண்டு பேருக்கும் சாதி, மதம் வேறுபாடில்லை. இரண்டு பேருமே காவியங்கள் செய்வதில் வல்லவர்கள்; வடமொழியில் தேர்ந்து தெளிந்தவர்கள்; பிறர் வியக்கும் வண்ணம் தத்துவங்கள் பேச வல்லவர்கள்; அதே நேரம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாத சுபாவம் உள்ளவர்கள். இருப்பினும்... ஒன்று சிவம்; மற்றொன்று சக்தி. ஒன்று சிவன் கை உடுக்கை; இன்னொன்று, சிரசின் மேல் பொங்கும் கங்கை. அது ஒரு வழி; இது ஒரு வழி!

சேஷாத்திரி ஸ்வாமிகள் ஒரு மடத்தில் போடப்பட்ட சாப்பாட்டை நாலு பக்கமும் இரைத்தார். சாப்பாடு போட்டவர் அருகே வந்து, 'இப்படிப் போடாதீங்க. யாசகம் வாங்கிக் கொடுக்கிற இந்த உணவை இப்படி வீசலாமா?’ என்று கேட்டார். 'அப்படியா, இனி இரைக்காமல் உண்கிறேன், பார்! ஒரு பருக்கைகூட நகராது’ என்று மிகச் சமர்த்தாக உண்டார். அவரால் இப்படியும் இருக்க முடியும்; அப்படியும் இருக்க முடியும்.

1914-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ஒரு மாதம் சேஷாத்திரி சுவாமிகள், பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் விருபாக்ஷி குகைக்குப் போய் உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அங்கேயும் சோறு உண்ணும்போது, நாலாப்புறமும் சோற்றை இரைத்தார். பகவானின் அன்பர் கந்தசாமி. 'இதோ பாருங்கள், இப்படி சோற்றை இரைத்தால், இனிமேல் உங்களுக்கு உணவு தரமாட்டேன்’ என்று கண்டித்தார். அதிலிருந்து சேஷாத்திரி சுவாமிகள் அங்கு உணவுக்குச் செல்லவில்லை. சேஷாத்திரி சுவாமியிடம் அப்படிப் பேசியது தவறா சரியா என்று பேச்சு வந்தது. அப்போது, 'பின்னே, இப்படி உணவை வீணடித்தால் என்ன செய்வது? அதனால்தான் கண்டித்தோம்’ என்று விருபாக்ஷி குகையில் இருந்த பகவானின் அன்பர்கள் சொன்னார்கள்.

இது சேஷாத்திரி சுவாமிகளின் காதுக்கு எட்டியது. தனது நடத்தை பகவானுக்கு எதிரானதாக இருக்குமோ, அவரை அலட்சியப்படுத்தியதாக நினைத்துவிடுவாரோ என்று பயந்து, ''நான் செய்தது சரியே! ஒருவன் இலையில் இருக்கும் சோற்றை முழுவதும் சாப்பிடக்கூடாது. சுற்றிலும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல ஜீவன்கள் உள்ளன. சூட்சும சக்திகள் உள்ளன. அவர்கள் பசியோடு காத்திருப்பார்கள். அவர்களுக்கும் உணவு வேண்டும். இது பல நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படிச் சாப்பிடுவது சரி என்றும் விவரிக்கப்பட்டிருக்கிறது'' என்று தெளிவுபடுத்தினார்.

சுப்பிரமணி சாஸ்திரி என்ற நண்பர் ஆழ்ந்த தியானத்துக்காக, பூரணாதி லேகியம் எனும் லேகியத்தைச் சாப்பிடுவது வழக்கம். அதில் கஞ்சா கலந்திருக்கும். இது, மனதை அடக்குவதற்குப் பதிலாக, சில தருணத்தில் கிளறி விட்டுவிடும். உண்ணுபவர் பேரவஸ்தைப்படுவார். உளறுவார். தான் உளறுகிறோம் என்று தெரிந்து வருத்தப்படுவார். ஆனால், உளறலைத் தடுக்க முடியாமல் தவிப்பார். ஒருமுறை அப்படித் தவிப்பில் இருந்த சுப்பிரமணி சாஸ்திரி, சேஷாத்திரி சுவாமிகளின் காலில் விழுந்தார். காப்பாற்றும்படி கெஞ்சினார். ''ஏற்கெனவே, இந்த மருந்தைச் சாப்பிடாதே என்று பலமுறை கூறினேன். ஆனால், நீ மீண்டும் அதை எடுத்துக்கொண்டு அவஸ்தைப் படுகிறாய்'' என்றார்.

உண்மையில் சேஷாத்திரி சுவாமிகள், சுப்பிரமணி சாஸ்திரி யிடம் இப்படிச் சொல்லியதே இல்லை. பகவான் ரமண மகரிஷி தான் இப்படிக் கண்டித்திருக்கிறார். அது சேஷாத்திரி சுவாமிகளுக்குத் தெரியாது. ஆனால், இந்த வார்த்தைகளைச் சொன்னதன் மூலம் பகவான் ஸ்ரீரமணரும் தானும் ஒன்றே என்பதை மறைமுகமாக அன்பர்களுக்கு உணர்த்தினார் சேஷாத்திரி சுவாமிகள்.

ஸ்ரீரமண மகரிஷி

1921-ஆம் ஆண்டு, ஒரு குளிர் காலத்தில், அவருடைய அன்பர்கள் பலர் அவருக்கு ஆனந்தமாக அபிஷேகம் செய்தார்கள். அவர் குளிக்காமல், சடையோடு, உடம்பில் சில இடங்களில் நமைச்சலோடு அவஸ்தைப் பட்டதை அறிந்து, இதைச் செய்ய எண்ணினார்கள். ஆனால், பசியாலும் தவத்தாலும் மெலிந்திருந்த உடம்புக்கு, இந்த அபிஷேகம் தாங்கவில்லை. கடும் ஜுரம் கண்டது. ஜுரத்தோடு அண்ணாமலை சந்நிதி போய், கை கூப்பி வணங்கி விட்டு, மறுபடி வந்து, ஒருவரது வீட்டுத் திண்ணையில் படுத்தவர், அப்படியே முக்தி அடைந்துவிட்டார்.

சேஷாத்திரி சுவாமிகள் இறைவனுடன் இரண்டறக் கலந்து விட்டார் எனும் தகவல் திருவண்ணாமலையில் உள்ள எல்லோருக்கும் தெரிந்தது.

ரமணாஸ்ரமத்துக்குக் கிழக்குப் பக்கம், சேஷாத்திரி சுவாமிகளுக்கு திருச்சமாதி வைக்கப்பட்டது. அந்தச் சமாதி வைபவத்தில், ஸ்ரீரமண மகரிஷி அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். ஒரு மகானின் இளம் பிராயத்தில், அவருக்கு நேர இருந்த பல துன்பங்களில் இருந்து காப்பாற்றி, அவருக்கு உறுதுணையாக சிம்மம் போலிருந்த சேஷாத்திரி சுவாமிகளை, ரமண சரித்திரம் படிக்கும் போது மறக்க இயலாது.

தாய் தன் பிள்ளையைத் துன்பத்தில் இருந்து நீக்கி, சுகப்படுத்தி, அதன் போக்கில் விட்டு, எப்படி மலர்விப்பாளோ, அப்படி சேஷாத்திரி சுவாமிகள் நடந்துகொண்டார். குழந்தையின் ஞான சொரூபத்தைக் கண்டு வியந்தார். மற்றவர்களுக்கும் எடுத்துச் சொன்னார். செய்தேன் என்ற கர்வத்தை எவருக்கும் வெளிக்காட்டது மறைந்தார்.

அம்மையார் ஒருவர், சேஷாத்திரி சுவாமிகள் பற்றி அறிந்து, அவரை வணங்கவேண்டும் என ஆவல் கொண்டார். பகவான் ஸ்ரீரமணரைக் காணச் செல்லும்போதெல்லாம் சுவாமியைத் தேடினார். காணக் கிடைக்கவில்லை. திடீரென ஒருநாள், சேஷாத்திரி சுவாமிகளை அவர் பார்க்க நேரிட்டது. மிகுந்த பணிவுடன், அவர் காலில் விழுந்து வணங்கி, ''உங்களைத் தரிசிக்க இத்தனை நாளாயிற்று'' என்று ஏங்கிக் கை கூப்ப, ''இங்கே என்றால் என்ன, அங்கே என்றால் என்ன... இரண்டும் ஒன்றுதான்!'' என்றார் சுவாமி.

ஒரு ஞானியே, இன்னொரு ஞானியை அடையாளம் காண முடியும்.

வேதாந்த நூலான 'கைவல்லிய நவநீதம்’ என்ற புத்தகம், 'உண்மையான ஞானி என்பவர் யார்?’ என்று கேள்வி கேட்கிறது. அதற்கு அந்த புத்தகமே பதிலும் சொல்கிறது. எவர் ஒருவர் எல்லாக் காலத்திலும் நடுநிலையில் நிற்கிறாரோ, அவரே ஞானி! நடுநிலையில் நிற்றல் என்றால் என்ன? தாமரை இலைத் தண்ணீர் போல, இந்த உலகத்துடன் ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்பவர். தன்னை ஒரு சாதாரண மனிதர் என்று வெளிக்காட்டிக் கொள்வார். தன்னுடைய பண்டிதத் திறமையை ஒருபோதும் வெளியே பறைசாற்ற மாட்டார். எந்நேரமும் பலருக்கு உபகாரமாகவே இருப்பார்.

இந்த ஞானிகள் தவம் செய்பவர்களாக இருப்பார்கள்; அல்லது, வாணிபம் செய்பவர்களாக இருப்பார்கள்; உலகத்தை ஆளும் மன்னர்களாக இருப்பார்கள்; இரந்து உண்ணும் பிச்சைக்காரர்களாக இருப்பார்கள். கடந்த காலத்தைப் பற்றி ஒருபோதும் நினைக்கமாட்டார்கள். எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சிந்திக்க மாட்டார்கள். இடையறாது நிகழ்காலத்திலேயே இருப்பார்கள். உணவு ருசியற்று, எந்த உணவு எதிரே வைக்கப்பட்டதோ, அதை மௌனமாக உண்பார்கள். வானம் கீழே விழினும், சூரியன் நிலவாக மாறினாலும், பிணம் எழுந்து வந்தாலும், அதைப் புதுமையாகப் பார்க்கமாட்டார்கள். நன்மைக்கும் தீமைக்கும் நடுவே சாட்சியாக இருப்பார்கள்.

ஸ்ரீரமண மகரிஷி

பகவான் ஸ்ரீரமண மகரிஷியும் இப்படித்தான் ஞானியாக, ஜீவன்முக்தராக வாழ்ந்திருந்தார். இவை பல்வேறு நிகழ்ச்சிகளாக வெளிப்படுகின்றன. ஒருவரது மோசமான குணம், அடுத்தவருடைய வாழ்வைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது. தன்னால் பிறருக்கு என்ன உபயோகம் என்று பார்க்காமல், பிறரால் தனக்கு என்ன உபயோகம் என்று இடையறாது சிந்திப்பது. இப்படி யோசிப்பதில் தன்னுடைய யோக்கியதை என்ன என்பது மறந்துபோகும். தன் யோக்கியதையை வளர்த்துக் கொள்வது என்பது குறைந்து போகும். அப்படிப்பட்ட மனம், இடையறாத தந்திரத்தில் ஈடுபடும். தந்திரத்தில் ஈடுபட்ட மனம், அமைதியாக இருக்காது. அமைதியாக இல்லாத மனம், தன் குற்ற உணர்ச்சியை மறைக்க, ஆரவாரமாகப் பேச ஆரம்பிக்கும். ஆரவாரமாகப் பேசுவது மிக எளிதாக அடுத்தவருக்குப் புரிந்துபோய், அது மிகப் பெரிய ஆபாசமாக காட்சியளிக்கும். தான் ஆபாசமாகக் காட்சியளிக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல், தொடர்ந்து அவர்கள் ஆரவாரமாக இருப்பார்கள்.

மாமனார் வாங்கித் தந்த மோட்டர் சைக்கிளைத் தானே சிரமப்பட்டு வாங்கினது போல் நண்பர்களிடையே பறையடித்துக்கொள்வது; அவர்கள் மோட்டர் சைக்கிளைப் பாராட்ட, அதைக் கொண்டாட, மாமனாரிடம் கார் கேட்கலாமே என்று தோன்றும்; கேட்கவும் செய்யும். கேட்கிறபோது கார் கிடைக்கலாம். கூடவே, 'ஏன் இப்படிக் கேவலமாக இருக்கிறான் இவன்’ என்ற அவச்சொல்லுக்கும் ஆளாகலாம். அவச்சொல்லுக்கு ஆளாகிறோம் என்பது, அமைதியாக இருந்தால்தான் புரியும். அப்போதுதான் அதில் இருந்து மீள முடியும்.

1908-ஆம் வருடம், பகவான் ஸ்ரீரமணர், விருபாக்ஷி குகையில் வாழ்ந்து வந்தார். அந்த குகைக்கு அருகே, பாலானந்தா என்கிற இன்னொரு சாதுவும் இருந்தார். பாலானந்தாவுக்குப் பல மொழி அறிவுகள் உண்டு. பல நூல்கள் கற்றவர். சாமர்த்தியசாலி. தனக்குப் பலவிதமான சக்திகள் இருப்பதாக, எதிராளியை எளிதில் நம்பச் செய்கிற தந்திரசாலி. முக்காலம் அறியும் ஞானம் இருக்கிறது என்பதை, தன்னைத் தேடி வருபவர்களுக்குச் சொல்லி, அவர்களிடமிருந்து காசோ பொருளோ வாங்கிக் கொள்ளுகிற எண்ணம் உடையவர். அதை மிகப் பெரிய சாமர்த்தியம் என்று கருதிக்கொள்பவர்.

விருபாக்ஷி குகைக்கு பகவான் ரமண மகரிஷி வந்தார். அப்போது அவரை பிராமண சாமி என்றுதான் மக்கள் அறிவார்கள். திருவண்ணாமலைக்கு வந்து, ஆலய தரிசனம் முடித்து, மலைக்கு மேலே பக்தர் கூட்டம் வரும். மலையில் உள்ள சாதுக்களை நமஸ்கரித்துவிட்டு, தங்களால் இயன்ற உணவுகளையும் பணத்தையும் கொடுத்துவிட்டுப் போகும். இதற்காக, அந்த மலையில் வாழ்கின்ற பல சாதுக்கள் ஆவலாகக் காத்திருப்பார்கள். மலையேறி வருபவர்களை மடக்கி, 'இங்கு வா, என்னிடம் வந்து பேசு’ என்று வலியப் போய் உட்கார வைப்பார்கள்.

பிராமண சாமி என்று அழைக்கப்பட்ட பகவான் ரமண மகரிஷி வந்த பிறகு, இந்த மாதிரியான சாதுக்களுக்கு வரும் கூட்டம் குறையத் துவங்கியது. தங்களுக்குக் காசு குறைவாக வருகிறதே என்ற வருத்தத்தைவிட, பிராமண சாமிக்கு அதிக வருமானம் வருகிறது என்ற ஆதங்கத்தில் பொசுங்கினார்கள்.

பகவான் ஸ்ரீரமண மகரிஷிக்கோ... வரும் பொருட்கள் பற்றியும், பணம் பற்றியும் எந்தச் சிந்தனையும் இல்லை. இந்தப் பற்றற்ற தன்மையையும், அவருடைய ஆழ்ந்த மௌனத்தையும், பாலானந்தா அருமையாக உபயோகப் படுத்திக்கொள்ளத் தீர்மானித்தார். ''உள்ளே இருக்கிற குழந்தை என்னுடைய சிஷ்யன்தான்; அதற்கு வேண்டுவன கொடுங்கள். குழந்தாய், அவர்கள் கொடுப்பதைத் தட்டாதே! நான் சொல்கிறேன், வாங்கிக் கொள்!'' என்று உத்தரவு இடுவதைப்போல அலட்டுவார்.

பகவானுக்கு வந்த பொருள்களைத் தாராளமாகக் கையாளுவார். பகவானுக்கு இந்தச் சாதுவின் பலகீனம் தெரிந்தே இருந்தது. ஆனாலும், அதைப் பற்றிய எந்த விமர்சனமும் இல்லாமல், அதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல மௌனமாக இருந்து விடுவார். இந்த மௌனத்தை  இன்னும் அதிக அளவில் தனக்குச் சாதகமாக உபயோகித்துக்கொள்ளத் தீர்மானம் செய்தார் பாலானந்தா.

- தரிசிப்போம்...