சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!
ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!

யில்ய நட்சத்திரக்காரர்கள் நல்லவர்கள்; செய்யும் தொழிலை தெய்வமாகக் கருதுபவர்கள். இவர்களிடம் முதலாளி விசுவாசம் அதிகம் இருக்கும். அறிவு, தைரியம், நேர்மை, கடவுள் பக்தி, குடும்பத்தாரிடம் அன்பு, எவரையும் பகைக்காத குணம்... இவற்றோடு, எதிரிகளையும் நண்பராகக் கருதிப் பழகும் தன்மை கொண்டவர்கள்.

திங்கட்கிழமைகள், ஜூன் 21 முதல் ஜூலை 22 வரையிலான நாட்களில் பிறந்தவர்கள் ஆயில்ய நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி மற்றும் சந்திர கிரகத்தின் ஆட்சிக்கு உட்பட்டது.  இந்த ராசி, நட்சத்திரம், தினங்களில் பிறந்தவர்களுக்கு உகந்தது புன்னை மரம். இவர்கள், தினமும் அரை மணி நேரம் இந்த மரத்தின் அருகில் இருப்பதும், நிழலில் அமர்வதும் சிறப்பு. இதனால், ஆயில்ய நட்சத்திர தோஷங்களால் உண்டாகும்- இந்த நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகளால் ஏற்படும்- இதயம் மற்றும் மார்பக நோய்கள் உள்ளிட்ட பல பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஆயில்ய நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகளையும் பெறலாம்.

##~##
புன்னை மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட தலங்கள் தமிழகத்தில் பல உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கவை- கும்ப கோணம் அருகிலுள்ள திருப்புறம்பயம், திருப்புள்ளபூதங்குடி, திருவாரூருக்கு அருகிலுள்ள திருப்புகலூர், திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சங்கரன்கோவில், அறந்தாங்கி அருகில் உள்ள திரு விடந்தை ஆகிய ஊர்கள், ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிகமான கதிர் வீச்சுக்கள் விழும் இடங்களாக அமைந்துள்ளன.

இந்த ஊர்களில் திருப்புகலூர், பஞ்ச க்ஷேத்திரங்களில் ஒன்று எனும் சிறப்புடையது (பஞ்ச க்ஷேத்திரங்கள்: திருஅம்பல், திருப்புகலூர், திருராம நந்தீச்சரம், திருச்செங்கட்டாங்குடி, திருமருகல்). நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புகலூர்.

இங்கே, சுமார் 90 அடி உயரமும், ஐந்து நிலைகளும் கொண்ட பிரமாண்ட ராஜகோபுரத்துடன் திகழும் பெருங்கோயிலில், ஸ்ரீகருந் தார்குழலியுடன் அருளாட்சி செய்கிறார் ஸ்ரீஅக்னீஸ்வரர். இவருக்கு ஸ்ரீசரண்யபுரீஸ்வரர், ஸ்ரீபுன்னாக வனநாதர் எனும் வேறு பெயர்களும், அம்பாளுக்கு ஸ்ரீசூளிகாம்பாள் எனும் திருநாமமும் உண்டு.

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!

ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர் ஆகியோரையும், ததீசி, பராசரர், பிருகு, புலஸ்தியர், ஜாபாலி, பரத்வாஜர், வாமதேவர் ஆகிய முனிவர்கள் தனித்தனியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கங்களையும் இங்கே தரிசிக்கலாம். இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம்... கடந்த காலத்தைக் குறிப்பிடும் ஸ்ரீபூதேஸ்வரர்; நிகழ்காலத்தைக் குறிப்பிடும் ஸ்ரீவர்த்தமானீஸ்வரர்; எதிர்காலத்தைக் குறிப்பிடும் ஸ்ரீபவிஷ்யேஸ்வரர் ஆகியோரின் தரிசனம்! திரிமுகாசுரனையும் தரிசிக்க முடிகிறது.

உள் பிராகாரத்தின் ஈசான்யமூலையில் அருளும் ஸ்ரீநடராஜர் சாந்நித்தியமானவர். 25 சுடர்களுடன் கூடிய நீள் வட்ட பிரபையும், பக்கத்துக்கு 16 வீதம் இருபுறமும் 32 சடைகளும் விரிந்து பறக்க, ஆடல் கோலம் காட்டுகிறார். கி.பி. 11 அல்லது 12-ஆம் நூற்றாண்டுச் சிற்பம் என்பது வல்லுநர்களின் கணிப்பு. அருகிலேயே அழகோவியமாய் ஸ்ரீசிவகாமசுந்தரி!

நாற்புறமும் அகழி சூழ்ந்த அழகான கோயில் இது. ஆனால், காலப்போக்கில் அகழி தூர்க்கப்பட்டுவிட்டதாம்.  திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் இங்கு வந்து பாடியிருப்பதிலிருந்து இந்தக் கோயிலின் பழைமையை அறியலாம். அப்பர் சுவாமிகள் தமது 81-வது வயதில் இந்தத் தலத்தில் உழவாரப்பணி செய்தார்; இதே தலத்தில்தான் அவர் முக்தியும் எய்தினார்.

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!

திருவாரூரில், பங்குனி உத்திரத் திருவிழாவில் மகேஸ்வர பூஜை செய்யவும், அடியவருக்கு அமுது படைக்கவும் பெரும் தொகை தேவைப்பட்டதாம் சுந்தரருக்கு. இந்தக் கவலையுடன் திருப்புகலூர் வந்தவர், அன்றிரவு ஆலயத் திருப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த சில செங்கற்களைத் தலைக்கு வைத்துப் படுத்திருந்தார். காலை எழுந்தபோது, அவை தங்கக் கட்டிகளாக மாறியிருந்தனவாம்!

புகல் என்றால் அடைக்கலம் புகுதல் என்று பொருள். திருப்புகலூர் என்ற பெயர் கொண்ட இத்தலத்தை வட மொழியில் சரண்யபுரம் என்பர். வாதாபி, வில்வலன் ஆகிய அசுரர்களுக்கு பயந்து ஓடிவந்த தேவர்கள் அடைக்கலம் புகுந்த ஊர் என்பதால், 'புகலூர்’ எனும் பெயர் வந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. ஆதிகாலத்தில் அக்னி வழிபட்டபோது, புன்னைவனமாகத் திகழ்ந்ததால் 'புன்னாகவனம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. ஆமாம்... இந்த ஆலயத்தின் ஸ்தல விருட்சம் புன்னை மரம் என்பது கூடுதல் விசேஷம்!

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!

பெரிய மரமாக வளரக்கூடியது புன்னை. இதன் இலைகள், கொய்யா மர இலைகளின் அளவில் இருக்கும். இதன் பூக்கள் பதப்படுத்தப்பட்டு, 'நாக் கைஸர்’ எனும் பெயரில் விற்கப்படுகிறது. இதன் காய்களிலிருந்துதான் வாசனைத் திரவியமான 'அத்தர்’ தயாரிக்கப்படுகிறது. இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டு வலி, சொறி, சிரங்கு, தொழுநோய், மேகநோய்ப் புண்கள் ஆகியவற்றைக் குணமாக்கும். பல் வலிக்கும் இது நல்ல மருந்து. புன்னை மர இலைகளைப் பவுட ராக்கி, மூக்குப் பொடி போல் முகர்ந்தால், மண்டைச் சளி வெளியேறுவதுடன், அடிக்கடி ஏற்படும் தலைவலி, கிறுகிறுப்பு நீங்கும். புன்னை இலைகளைக் கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான அந்த நீரில் கண்களைக் கழுவினால் கண் எரிச்சல், கண் வீக்கம் குணமாகும். வெட்டை, மேகநோய் புண்களைக் குணப்படுத்த புன்னை மரப் பூக்களை அரைத்துப் பூசுவர். சோப்புகளின் நறுமணத்துக்காகவும் புன்னை எண்ணெயைச் சேர்ப்பர்.

நூற்றுக்கணக்கான சங்க இலக்கியப் பாடல்களில் புன்னை யைப் பற்றிய குறிப்புகள் உண்டு. குறிஞ்சிப் பாட்டு, 'கடியிரும் புன்னை’ எனக் குறிப்பிடுகிறது. ஐந்திணைக் கருப்பொருளைக் கூற வந்த இறையனாரின் அகப் பொருள் நூல், 'நெய்தல் திணைக்கு மரம் புன்னையும், ஞாழலும், கண்டலும்’ என்று குறிப்பிடுகிறது. புன்னை மரம் பற்றி பத்துப்பாட்டு, பிங்கல நிகண்டு, குறிஞ்சிப்பாட்டு, பரிபாடல், சூடாமணி நிகண்டு, ஐங்குறுநூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, கலித் தொகை ஆகியவற்றிலும் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது.

- விருட்சம் வளரும்
படங்கள்: கே.கார்த்திகேயன்

வெண்பட்டு அலங்காரம்... விசேஜம்!

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!

''திருப்பள்ளி எழுச்சி முதல் அர்த்தஜாமம் வரை தினமும் 6 கால பூஜை நடைபெறும் இந்தத் தலத்தில், தினமும் மாலையில் அம்பாளுக்கு வெண்பட்டு அலங்காரம் விசேஷம்!'' என்று ஆரம்பித்து, இந்தக் கோயிலின் சிறப்பைச் சிலிர்ப்புடன் விவரிக்கிறார், ஆலய அர்ச்சகர் கந்தசாமி குருக்கள்.

''வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கட்டுப்பாட்டிலும், தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கண்காணிப்பிலும் பராமரிக்கப்பட்டு வருகிறது இந்த ஆலயம்.

சுந்தரருக்கு அருளும் வகையில் செங்கல் பொன் கல்லாக மாறிய இடம் என்பதால், இதை வாஸ்து கோயில் என்று  போற்றுகின்றனர் பக்தர்கள். புதிதாக வீடு கட்டுவோர், மூன்று செங்கற்களை எடுத்து வந்து இங்கே வைத்து வழிபட்டுச் செல்கிறார்கள். அந்தக் கற்களைப் புதிய கட்டடத்துக்கான ஆரம்பக் கற்களாக உபயோகிக்கிறார்கள். இதனால், அந்தக் கட்டடப் பணி எந்தத் தடங்கலும் இல்லாமல் பூர்த்தியாகும் என்பது நம்பிக்கை!''