கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்



அமாவாசை மற்றும் சிராத்த நாட்களில் பெண் வீட்டில் தங்கியிருக்க நேரிட்டால், அங்கு வைத்து தர்ப்பணம் அல்லது சிராத்த காரியம் செய்யலாமா?
- எஸ்.கிருஷ்ணன், சென்னை-2
வீட்டில் மனைவி சமைத்து, அவள் கையால் பரிமாற உணவு உட்கொள்வோம். வெளியூரில் தங்கும் சூழலில் மனைவி இல்லையே என்று உணவைத் தவிர்ப்பது இல்லையே! தர்ப்பணம் சிராத்தம் போன்றவை ஒவ்வொருவருக்கும் உரிய கடமை. இடம் மாறி தங்கியிருப்பதால் அதை விட்டுவிடக் கூடாது. தர்ப்பணம், சிராத்தம் செய்வதற்கும் தங்கியிருக்கும் இடத்துக்கும் தொடர்பு இல்லை. இடத்தை வைத்து தர்ப்பணம் எழவில்லை.
உடம்பில் மூச்சுக்காற்று இருக்கும் வரை, எங்கு இருந்தாலும் கடமையைச் செய்ய தவறக்கூடாது.
அறம் செய்ய விரும்பு என்று ஒளவை பிராட்டி தன் ஊருக்கு மட்டுமா அறிவுறுத்தினாள். ஊர் ஊராக அலைந்து திரிந்து இந்த உலகுக்கே அறிவுறுத்திச் சென்றாள். ஆக, எக்காரணம் கொண்டும் முன்னோர் குறித்த நமது கடமையைத் தவறவிடக் கூடாது.
வீட்டில் சுபகாரியங்கள் தடைப் படுவதற்கு பித்ரு சாபமே காரணம் என்கிறார்கள் சிலர். பித்ருக்கள் என்பவர்கள் நம் முன்னோர்தானே? அவர்கள், தங்களின் வம்சாவளியினர் நலம்பட வாழவேண்டும் என்றுதானே விரும்புவார்கள். எனில், பித்ரு சாபம் ஏற்படுவது எதனால்?
- ரா.பாஸ்கரன், பெங்களூரு-60
தன் மகனை தேரின் சக்கரத்தில் பலிகொடுத்தான் மன்னன் ஒருவன் என்பது வரலாறு. தந்தையே தன்னுடைய மகனை அழிப்பானா? தவறு செய்யும் வம்சாவளியை, முன்னோர் தண்டிப்பது தவறாகுமா? தவறிழைத்தவன் மகன் என்பதற்காக அவனைத் தண்டிக்காமல் விடுவது அறமா?
'என்னுடைய உயிர் பிரிந்த நாளில் என் நினைவோடு அன்னதானம் செய். நீயும் உனது குடும்பத்தாரும் செழிப்படைவீர்கள். அதைக் கடமையாகக் கருதி செயல்படவேண்டும்’ என அறிவுறுத்தி மறைந்தார் தந்தை. அவர், தனக்காக அன்னதானம் செய்யச் சொல்லவில்லை. தனது வம்சாவளி செழிப்புற வேண்டும் என்பதற்காக அப்படி பரிந்துரைத்தார். ஆனால், மகனோ அத்தனையையும் மறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்! இப்படித்தான், நம் நன்மைக்காக முன்னோர் சொல்லிச் சென்ற விஷயங்களைக் கடைப்பிடிக்காமல் வாழ்கிறோம்!
தசரதன் இறந்த பிறகும் அவரது வாக்குறுதியைக் காப்பாற்ற கானகத்தில் வாழ்ந்தான் ஸ்ரீராமன். தந்தையின் வாக்குறுதியை தனயன் காப்பாற்ற வேண்டும். இதை அறிவுறுத்தவே அவன் சிந்தையில் புகுந்து, இடையூறு விளைவித்து அவனுக்கு அறிவுறுத்த முற்படுகிறார்கள் முன்னோர்கள்.
தந்தையின் ஜீவாணுக்களில் உருவானவன் தனயன். அது வழி அவனது தொடர்பு, தந்தைக்கு இருக்கும். அவர், சூட்சும வடிவில் தனயனின் நினைவில் இருப்பார். ஆனால், தந்தையின் நினைவு நாளில் அவரை நினைத்து செய்யவேண்டியவற்றை செய்யாமல் விட்டுவிடுகிறார்கள் இன்றைய தனயன்கள்!
பிறகு, குடும்பத்திலோ வாழ்விலோ செயல்பாடுகள் தடைப்படும்போது, சில இடையூறுகள் விளையும்போது, முன்னோருக்கான பணிவிடையைச் செய்யாமல் விட்டதுதான் இதற்கெல்லாம் காரணமோ என்று மனது பரிதவிக்கும். அவனது மனமே குற்றத்தைச் சுட்டிக்காட்டும். மனச்சாட்சி அவனுக்கு அறிவுறுத்தும். மாற்றுவழி தெரியாமல் கலங்குபவர்கள், ஜோதிடரை அணுகுவார்கள். தசாபுத்தியை ஆராய்ந்து, பித்ரு சாபத்தைத் தெரிவிப்பார் அவர். அப்போதுதான் அவனுக்குத் தனது தவறு தெரியவரும். முன்னோருக்கான பணிவிடைகளை முறையே நடைமுறைப்படுத்தியபிறகு, மனதில் நெருடல் இருக்காது. அவனது செயல்பாட்டில் வில்லங்கம் விலகும்.
மகன் மீதுள்ள அன்பினால் அவனை நெறிப்படுத்தாமல் விட்டுவிட்டால், அந்தப் பரம்பரையே துயரத்தைச் சந்திக்க நேரும். அவனது ஜீவாணுக்களில் உருப்பெறும் வாரிசுகளிடம், முன்னோரை வழிபடவேண்டும் என்ற எண்ணமே தோன்றாமல் போகக்கூடும். தனது பரம்பரையை ஒட்டுமொத்தமாக அழிவில் இருந்து காக்க, மகனைத் தண்டிப்பதற்கு தயங்கமாட்டார்கள் முன்னோர்கள்.
ஆகையால் பித்ருக்களின் சாபம் என்று எண்ணாமல், அதை அவர்களின் அருளாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். மகன் அறத்திலிருந்து நழுவி அழிவைச் சந்திக்க சித்தமாகிறானே என்ற கவலையில் மனம் நொந்து வெளிப்படும் அவர்களது அலறலே, சாபம் என்ற பெயரில் சொல்லப்படுகிறது.
தர்மசாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா? 'தந்தைக்கு இழைத்த துரோகம், தனயனிடமும் அவனுடைய புதல்வனிடத்திலும், வம்சத்திலும் வெளிப்படும்’ (ததன்வயேபிச) என்கிறது.

சஹஸ்ர பிராமண போஜனம் என்ற வகையில்... வேத அத்யயனம் செய்த வைதீகர்களுக்கு தைல ஸ்நானம், வஸ்திரம், ஆசனம், தீர்த்த பாத்திரம் கொடுத்து, போஜனம் செய்விக்கிறார்கள். இதைத் தினந்தோறும் செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பூர்த்தி செய்கிறார்கள். இதன் நோக்கம், இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?
- வி.வெங்கட்ராமன், செகந்திராபாத்-9
உயிரினங்களுக்கு உணவளிப்பது உயர்ந்த கொடை. அதிலும், ஏழை - எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்பு. வேதம் ஓதுபவர்களுக்கு அளிக்கப்படும் உணவு அவரது பசியை ஆற்றுவதுடன் நில்லாமல், நமது கலாசாரத்தை காக்கும் பணியிலும் இணைகிறது. வேதம் கற்றுணர்ந்தவர்களுக்கு அன்னம் அளிக்கும்போது, அவருடன் வேதமும் காப்பாற்றப் படுகிறது. அறத்தின் அடிப்படை வேதம்; மொத்தக் கலாசாரத்தின் உறைவிடம். அது காப்பாற்றப்பட்டால் கலாசாரம் அழியாமல் இருக்கும்.
இறைவன் உணவை நேரடியாக உட்கொள்ளமாட்டார். அவர், நாம் அளிக்கும் உணவைப் பார்த்து மகிழ்பவர் (த்ருஷ்ட்வாத்ருப்யந்தி). 'அக்னி வடிவில் உயிரினங்களின் உடலில் உறைந்திருக்கிறேன். நான்கு விதமான உணவு வகைகளை ஜீரணித்து, அவனைப் பசியாற வைத்து மகிழ்விக்கிறேன்’ என்று கண்ணன் சொல்வான் (அஹம் வைச்வாநரோபூத்வா ப்ராணினாம் தேஹமாச்ரித:... பசாம்யன்னம் சதுர்விதம்).
ஆக, உண்பவரின் உடலுக்குள் உறைந்திருக்கும் இறைவன், அதை நேரடியாக ஏற்றுக்கொள்வதால். அன்னதானம் வாயிலாகக் கடவுளுக்கு நேரடியாக உணவளிக்கும் சந்தர்ப்பம் கிடைத்து விடுகிறது. தானத்தில் அன்னதானம் தனிச்சிறப்பு வாய்ந்தது.
அதிதி, சூன்ய திதி- இரண்டுக்கும் வேறுபாடு உண்டா?
- ஜி.ராமதாஸ், ஆடுதுறை
உதாரணத்துடன் ஒரு விளக்கம். கர வருடம், சித்திரை 20-ஆம் தேதி, 2011 மே 3-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று, மதியம் வரை அமாவாசை. அதாவது 17 நாழிகை; 57 வினாழிகை வரை. அபராண்ண காலத்தில் பிரதமை வந்து விடுகிறது. சிராத்தத்துக்கு அபராண்ண காலத்தில் (ஒரு நாளில் 18 நாழிகைக்கு மேல் 24 நாழிகைக்குள் இருக்கும் காலம்) திதி இருக்கவேண்டும். ஆகையால், செவ்வாய்க்கிழமை- பிரதமை திதி.
மே 4-ஆம் தேதி புதன்கிழமை மதியம் (20 நாழிகை; 57 வினாழிகை) வரை பிரதமை. அதற்குப் பிறகு, துவிதியை. இது, அபராண்ணத்திலும் பரவி இருக்கிறது. ஆனால் 5-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று அபராண்ணத்தில் துவிதியையே இருப்பதால், அன்று துவிதியைதான். ஆக, முதல் நாள் அதாவது புதன்கிழமை திதி இல்லாமல் போய்விடும். ஆகையால், அதிதி என்று சொல்லுவார்கள்.
சரி... சூன்ய திதி குறித்து அறிவோம். ஒரு மாதத்தில் இரண்டு திதிகள் தென்படும்போது, நெருடல் இல்லாத திதியை எடுத்துக்கொள்வோம். மற்றது சூன்ய திதியாகிவிடும்.
வைகாசி மாதம் முதல் நாள், 15.5.2011 ஞாயிறு அன்று திரயோதசி திதி இருக்கிறது. அபராண்ணம் வரை நீடித்து இருப்பதால் அன்று திதி என்று சொல்லலாம். ஆனால் அன்று ரிஷபரவி புண்ணிய காலம் (ரிஷப ராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலம்) சேருகிறது. மாதப்பிறப்பு சேர்ந்து இருப்பதால் நெருடல் உண்டு. ஆனால், வைகாசி 30-ஆம் நாள் (13.6.2011) நெருடல் இல்லாத திதி இருப்பதால், 15.5.2011-ல் தென்படும் திதி சூன்ய திதியாகிவிடும்.
- பதில்கள் தொடரும்...
நான் திருமணமாகாதவள்; வயது 57. வாரிசு தத்தெடுக்கும் எண்ணமும் இல்லை. எனவே, எனக்கு ஆத்ம பிண்டம் செய்துகொள்ளும் முறை, அதற்கு முன்னும் பின்னும் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகளை விளக்குங்களேன். - கு.வி.பத்மினி, சென்னை-33 |

இறப்பைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். இருக்கும் வரை நல்ல காரியங்கள் செய்துகொண்டு, கடவுளை வழிபடுங்கள். உங்களின் சிந்தனை பொது அறத்தில் லயித்திருந்தால் போதும். அதுவே தங்களுக்கு மோட்சத்தை அளிக்கும். ஈமச்சடங்குகள் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் கவலையில்லை. ஆன்ம பிண்டம் போடும் எண்ணத்தை மறந்துவிடுங்கள். உண்ணும் உணவைக் கடவுளுக்குப் படைத்த பிறகு ஏற்றுக் கொள்ளுங்கள். அவனுக்கு அளித்த அன்னம், தங்களை அவனிடம் சேர்க்கும். கடைசி அந்தணக் குடும்பம் இருக்கும்வரை, தங்களைப் போன்றோருக்கு உணவளிப்பார்கள்; தாய், தந்தை, உடன்பிறப்பு, பந்துக்கள் இவர்களை இழந்து தனி மரமாக வாழ்ந்து இறந்தவர்களின் திருப்திக்காக இந்தத் தண்ணீரை அளிக்கிறேன் என்று ஒவ்வொருவரும் தர்ப்பண காலத்தில் அளிப்பார்கள். தீர்த்தக் கரையிலும் க்ஷேத்ரபிண்ட காலத்தில் தங்களைப் போன்றவர்களுக்கு பிண்டம் உண்டு. அதுவே ஆன்ம பிண்டத்துக்கு இடமில்லாமல் செய்துவிடும். பீஷ்மர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆகையால் வாரிசும் இல்லை. ஆனால் மக்கள் அத்தனைபேரும் அவருக்குத் தர்ப்பணம் செய்கிறார்கள். உலகில் பிறந்த அத்தனை பேரையும் திருப்திப்படுத்தும் எண்ணத்துடன் சட்டதிட்டத்தை வகுத்திருக்கிறது தர்மசாஸ்திரம். அறம் செய்தால் போதும். இறந்த பிறகு ஜீவனோடு அது தொடரும். அது உங்களைக் கரையேற்றும் என்கிறது சாஸ்திரம் (தர்ம: ஸகா பரமஹோ பரலோக யானே). தர்ப்பணம் சிராத்தம் போன்றவற்றை நடைமுறைப்படுத்தும்போது, நமது முன்னோருடன் நில்லாமல் நமது குலத்தையே மகிழ்விப்பதால் உயர்ந்த அறமாக சாஸ்திரம் சொல்லும். |
