சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

மீபத்தில், என் உறவினர் ஒருவரைப் பார்க்க மனைவியுடன் சென்றிருந்தேன். பெரிய பணக் காரர். சென்னையை விட்டு சற்றுத் தள்ளி, ஓர் ஆடம்பரமான அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்தார். போன காரியம் முடிந்து, மாலை 7 மணிக்குத்தான்  அங்கிருந்து புறப்பட்டோம். இரண்டு மூன்று தெரு தாண்டி, ஆட்டோ இல்லாத ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்று கண்ணில் பட்டது. நாலு சந்தி பிரியும் இடமாக இருந்ததால், நட்ட நடுவில் நின்றுகொண்டு, எல்லா பக்கமும் கவனித்து, வருகிற போகிற ஆட்டோக்களைக் கைதட்டி அழைக்கச் சௌகரியமாயிருந்தது!

சில ஆட்டோக்கள், 'நிற்பதுவே... நடப்பதுவே...’ என்று மெதுவாகப் பக்கம் வந்து விலகின. சில நிற்கவே இல்லை. சிலதுகள் பேரம் படியவில்லை. ஆட்டோ பிடிப்பு இல்லையே தவிர, கொள்கைப் பிடிப்பு எங்களிடம் இருந்தது. 'என்ன ஆனாலும் சரி, நூறு ரூபாய்க்கு மேல் ஒரு பைசா தரக் கூடாது’ என்று பிடிவாதமாக இருந்தோம். ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. ஒரு ஆட்டோவும் படியவில்லை. அப்போது, ''என்ன சார்... இன்னுமா ஆட்டோ கிடைக்கலை?'' என்று அருகில் ஒரு குரல் கேட்டது. திரும்பினால், அந்தப் பணக்கார உறவினரின் மகன்!

##~##
''ஆமாம்... ஹி... ஹி! ஆட்டோ கிடைக்கலை. அநியாயத்துக்குக் கேக்கறான். பகல் கொள்ளையாய் இருக்குது'' என்றேன்.

சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ஓர் ஆட்டோ வட்டமடித்து வந்து நின்றது.

''எங்கே சார் போகணும்?''

''சேத்துப்பட்டு. என்ன கேட்கறே?''

''நைட் ஆயிடுச்சு சார்! 180 குடுங்க!''

''ம்ஹூம்! 100 ரூபாய். இஷ்டம்னா வா!''

''என்ன சார், படிச்சவங்க உங்களுக்கே தெரியும், பெட்ரோல் நேத்திக்கு என்ன விலை வித்துது, இன்னிக்கு என்ன விலை விக்குதுன்னு. படிக்காத ஜனங்கதான் பேரம் பேசுறாங்கன்னா நீங்களும் பேரம் பேசினா எப்படி சார்?'' - சலித்துக்கொண்ட ஆட்டோக்காரர், ''சரி, உக்காருங்க. ஒன் ஃபிஃப்டி கொடுங்க!'' என்றார்.

''நோ சான்ஸ்!'' என்று நான் மறுத்துச் சொல்லிக் கொண்டிருந்த போதே, உறவினரின் மகன் வெகு அலட்சியமாக, ''சார், இங்கே ஆட்டோ கிடைக்கிறது கஷ்டம். பேரம் பேசாம உடனே கிளம்புங்க!'' என்று அவசரப்படுத்தி, எங்களை ஏற்றிவிட்டான். வேறு வழியின்றி, அந்த ஆட்டோவில் ஏறிப் புறப்பட்டாயிற்று.

மனைவி அங்கலாய்த்தாள். ''நாம பேரம் பேசிக்கிட்டு நடு ரோட்டில் நிற்பது, உங்க உறவுக்காரரின் அந்தஸ்துக்கும் மதிப்புக்கும் கேவலமா தெரியுது போலிருக்கு! போங்க போங்கன்னு இந்த விரட்டு விரட்ட றானே!'' என்றாள்.

''வேறொண்ணுமில்லை, பணக்கார புத்தி! யானையின் ஒரு வாய் கவளம் ஆயிரம் எறும்புகளுக்கு உணவு. இவனுக்கு வேணா 150 ரூபா ஒரு பொருட்டா இல்லாம இருக்கலாம். நமக்கு அப்படியா! சே... பணக்கார சவகாசமே இப்படித்தான்!'' என்றேன்.

சட்டென்று ஆட்டோ டிரைவர் பின்பக்கம் திரும்பி, ''அய்யா, சட்டுனு ஒருத்தரைத் தப்பா எடை போட்டுடாதீங்க. உங்ககிட்டே ரூபா வாங்கக் கூடாதுன்னு அந்த ஐயாவே  நீங்க பார்க்காத சமயம் ஆட்டோ சார்ஜை என்கிட்ட குடுத்துட்டாரு!'' என்று சட்டைப் பையிலிருந்து நூறு ஒன்றும், ஐம்பது ஒன்றுமாக எடுத்துக் காட்டினான். சுருக்கென்றிருந்தது!

கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் மான் வயிற்றில்
ஒள்அரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்
பல்லிலைய முத்தும் பிறக்கும் அறிவார் யார்
நல்லாள் பிறக்கும் குடி.

- விளம்பி நாகனார் 'நான்மணிக் கடிகை’யில் விளம்புகிறார் இப்படி.

'அகிற் கட்டை கள்ளி மரத்தின் நடுவில் உண்டாகும். அரிதாரம், மான் வயிற்றில் உண்டாகும். முத்துக்கள் பெரிய கடலிலும் பிறக் கும். நல்மக்கள் பிறக்கும் குடியை முன் கூட்டி அறிபவர் யார்? எக்குடியிலும் நன் மக்கள் தோன்றுவர்!’

நாம் பல நேரம் ஒரு மாமூல்தனத்தில் பேசிவிடுகிறோம்... பணக்கார புத்தி, பணக் கொழுப்பு, அது இது என்று! கெட்டதிலும் நல்லது உண்டு; நல்லதிலும் கெட்டது உண்டு.

வள்ளுவர் சொன்னது போல்,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு!